புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளம் தவிர்த்து கலந்தேலோர் எம்பாவாய்
பாடியவர் பவ்யா ஹரி

விளக்கம்

இந்த பாடலில் குறிப்பிடப்படும் சிறுமி அழகான கண்களை உடையவள் போலும். தனது கண்களின் அழகில் மயங்கி கண்ணன் தன்னைத் தேடி வருவான் என்ற நம்பிக்கையில் திளைக்கும் இந்தச் சிறுமி, படுக்கையில் கிடந்தவாறே, வெளியில் இருந்த சிறுமிகளை நோக்கி, நீங்கள் அனைவரும் கண்ணனைப் புகழ்ந்து பாடுகின்றீர்கள், இராமபிரானைப் புகழ்ந்து பாடவில்லையா என்று வினவினாள் போலும். அதற்கு விடை கூறும் முகமாக, வெளியே இருந்தவர்கள் நாங்கள் கண்ணனைப் புகழ்ந்தும் பாடினோம். இராம பிரானைப் புகழ்ந்தும் பாடினோம் என்று அளித்த பதிலுடன் இந்த பாடல் தொடங்குகின்றது.

பொழிப்புரை

பறவையின் உருவம் எடுத்து வந்த பகாசுரனின் வாயினைக் கிழித்து அவனை அழித்தவனும், பொல்லாத அரக்கனாகிய இராவணனின் பத்து தலைகளையும் தனது அம்பினால் அறுத்து எறிந்தவனும் ஆகிய நாராயணனின் கீர்த்திகளை பாடியவாறு, சிறுமிகள் பலரும் பாவை நோன்பு நோற்கப்படும் இடத்தில் குழுமி உள்ளார்கள். வானில் விடியலில் தோன்றும் சுக்கிரன் தோன்றி உச்சிக்கு வந்துவிட்டது, அதன் முன்னர் இருந்த வியாழம் மறைந்துவிட்டது; பறவைகள் தாங்கள் இரை தேடிச் சென்ற இடங்களில் செய்யும் ஆரவாரங்கள் எங்களுக்கு கேட்கின்றன. குவளை மலர் போன்று அழகிய கண்களை உடைய பெண்ணே, கண்ணனோடு சேர்ந்து இருக்கும் பாக்கியத்தைப் பெறுவதற்காக நோன்பு நோற்கப்படும் இந்த நல்ல நாளில், உடலும் உள்ளமும் குளிர்ந்து சுனையில் முழுகி நீராடாமல் படுக்கையில் கிடந்தது புரளுதல் தகுமா. படுக்கையில் படுத்துக்கொண்டு, தனியாக கண்ணனைப் பற்றிய சிந்தனைகளில் ஆழ்ந்து கிடக்கும் உனது கள்ளத் தனத்தை விட்டொழித்து, எங்களுடன் வந்து கலந்து, பாவை நோன்பு நோற்பதற்கு வருவாயாக. நாம் அனைவரும் சேர்ந்து கண்ணனின் புகழினைப் பாடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.