கேட்டது  கிடைக்கவில்லை; கிடைத்ததும் சரியில்லை: திக்குத் தெரியாமல் காங்கிரஸ், தமாகா தவிப்பு

மதுரை மாவட்டத்தில் காங்கிரஸுக்கு என குறிப்பிடத்தக்க அளவு வாக்குகள் உள்ள தொகுதிகளாக மேலூர், மதுரை மத்திய தொகுதிகளையே
கேட்டது  கிடைக்கவில்லை; கிடைத்ததும் சரியில்லை: திக்குத் தெரியாமல் காங்கிரஸ், தமாகா தவிப்பு
Updated on
2 min read

மதுரை மாவட்டத்தில் காங்கிரஸுக்கு என குறிப்பிடத்தக்க அளவு வாக்குகள் உள்ள தொகுதிகளாக மேலூர், மதுரை மத்திய தொகுதிகளையே கூறலாம். கடந்த 1962 -ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் முதல் கடந்த 2011 -ஆம் தேர்தல் வரை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் சட்டப்பேரவைத் தேர்தல்களில் இம்மாவட்டத்தில் கூட்டணி பலத்தை வைத்தே பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியானது அதிமுக, திமுக என எந்தக் கூட்டணியில் நின்றாலும், மதுரை மத்தி, மேலூர் தொகுதிகளைப் போராடிப் பெற்று வெற்றி பெற்று வந்துள்ளது.

 காங்கிரஸுக்கு சாதகமான தொகுதியாக முதலில் மேலூரைக் கூறலாம். அங்கு இதுவரை காங்கிரஸ் 8 முறை போட்டியிட்டு, 5 முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸில் பிளவு ஏற்பட்டு தமாகா உருவானபோதுகூட அந்தக் கட்சி 2 முறை போட்டியிட்டுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் இரண்டாமிடம் பெற்றது. ஆனால், தற்போது அங்கு காங்கிரஸ் போட்டியிடவில்லை.

திமுக வேட்பாளர் களமிறங்கியுள்ளார்.

 மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநிலக் காங்கிரஸின் வேட்பாளராக பாரத் நாச்சியப்பன் களமிறங்குகிறார். இவர் கடந்த மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ் வேட்பாளர். அப்போது மேலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டுமே 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை இவர் பெற்றிருந்தார்.

 திருமங்கலத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் 7 முறை போட்டியிட்டு 4 முறை வென்றுள்ளது. ஆனால், காங்கிரஸுடன் சேர்ந்தாலே வெற்றி பெற முடியும் என்ற நிலையானது கடந்த 1989 ஆம் ஆண்டுக்குப் பிறகு மாறிவிட்டது. திமுக, அதிமுக இன்றி காங்கிரஸால் குறிப்பிடத்தக்க வாக்குகள் கூட பெற முடியாது என்ற நிலையே தற்போதுள்ளது. அங்கு திமுக போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், தொகுதி காங்கிரஸுக்கு கைமாறியது. இதனால் அப்பகுதி திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 மதுரை மத்தி தொகுதியைப் பொறுத்தவரை 1957 முதல் கடந்த 2011 வரை காங்கிரஸ் கட்சியானது 7 முறை போட்டியிட்டு, 4 முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸில் பிளவு ஏற்பட்டு, தமாகா தோன்றி இரு முறை போட்டியிட்டும் வெற்றி பெற்றுள்ளது. ஆக மத்திய தொகுதியில் காங்கிரஸுக்கு வாக்கு வங்கி உள்ளது.

 தற்போது திமுக-காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக திமுகவைச் சேர்ந்த பேரவை முன்னாள் தலைவர் பழனிவேல்ராஜனின் மகன் தியாகராஜன் களமிறங்கியுள்ளார். இங்கு காங்கிரஸ் போட்டியிடும் என திமுகவினரே எதிர்பார்த்திருந்தனர். மதுரை வடக்குத் தொகுதியைப் பொறுத்தவரை, கடந்த 1951 ஆம் ஆண்டு தேர்தலிலேயே மார்க்சிஸ்ட் வேட்பாளரிடம் காங்கிரஸ் வேட்பாளர் 3332 வாக்கு வித்தியாசத்தில் தோல்விடையந்துள்ளார். அதன்பின் கலைக்கப்பட்ட இத்தொகுதி மீண்டும் 2011 -இல் தான் உருவாக்கப்பட்டது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளரிடம், திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் 46 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். காங்கிரஸுக்கு என தனி வாக்கு வங்கியில்லாத இத்தொகுதியில் தற்போது அக்கட்சி சார்பில் கார்த்திகேயன் நிறுத்தப்பட்டுள்ளார்.

 திமுக முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், மறைந்த பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் ஆகியோர் இத்தொகுதி வாசிகள். இத் தொகுதி மேற்குத் தொகுதியுடன் இணைந்திருந்தபோது திமுகவுக்கு சாதகமானதாகவே இருந்தது. ஆனால், தற்போது அங்கு காங்கிரஸ் போட்டியிடுவது திமுக பிரமுகர்கள், தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 காங்கிரஸைப் பொறுத்தவரையில் விரும்பிக் கேட்ட மத்தி, மேலூர் தொகுதிகள் அல்லது தெற்குத் தொகுதி கிடைக்கவில்லை. ஆனால், கிடைத்த வடக்கு, திருமங்கலம் ஆகிய தொகுதிகளிலும் கட்சி வலுவாக இல்லை. திமுகவினரையே முழுக்க முழுக்க நம்பி களமிறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திமுகவினரைப் பொறுத்தவரை காங்கிரஸ் செலவழித்தால், ஒத்துழைக்கத் தயார் என்ற நிலையிலே உள்ளனர்.

 மேலூரில் களமிறங்கும் தமாகா வேட்பாளருக்கு பழைய பாசத்தில் காங்கிரஸார் மறைமுகமாக "கை' கொடுத்தால்தான் உண்டு. மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக என யாருக்கும் வலுவான வாக்கு வங்கி இல்லாத நிலையிலே அங்கு தமாகா தனது பலத்தை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆக, காங்கிரஸும், தமாகாவும் இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை கண்ணைக் கட்டி காட்டில் விட்டவர்கள் போலவே அலைபாய்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com