தமிழக சட்டப்பேரவை வரலாறு!

ஆழமிக்க மொழியுணர்வையும், கலை, கலாச்சார பண்பாட்டையும் உள்ளடக்கிய சட்டப்பேரவையின் வரலாறு சுவாரஸ்யமும் மதிநுட்பமும் மிக்கது எனலாம்.x
Updated on
5 min read

ஆழமிக்க மொழியுணர்வையும், கலை, கலாச்சார பண்பாட்டையும் உள்ளடக்கிய சட்டப்பேரவையின் வரலாறு சுவாரஸ்யமும் மதிநுட்பமும் மிக்கது எனலாம்.

தற்போதுள்ள தமிழக சட்டப்பேரவை அமைப்பானது முன்பிருந்த சென்னை மாகாணத்தின் தொடராகக் கருதப்படுகின்றது.

இந்தியக் கவுன்சில் சட்டம் 1892 இன்படி மெட்ராஸ் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலின் உறுப்பினர் எண்ணிக்கையும் பொறுப்புகளும் அதிகரித்தன. 1909 ஆம் ஆண்டு முதல் இதன் உறுப்பினர்கள் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1920 - 1937 வரை சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறை நடைமுறையில் இருந்தபோது இது ஒரு அவை கொண்ட சட்டமன்றமாகச் செயல்பட்டது.

இந்திய அரசுச் சட்டம் 1919 இயற்றப்பட்டபின் சென்னை மாகாணத்தில், 1921 இல் முதன் முதலாக தேர்தல் நடத்தப்பட்டு சட்டப்பேரவை அமைக்கப்பட்டது. இதன் முதல் கூட்டம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் 1921, ஜனவரி 9 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது ஆளுநராக இருந்த வெலிங்டன் பிரபுவின் வேண்டுகோளுக்கிணங்க இங்கிலாந்து கன்னாட் கோமகன், சென்னை மாகாண சட்டமன்றத்தை ஜனவரி 12 ஆம் தேதி துவக்கி வைத்தார்.

சட்டமன்றங்களின் பரிணாம வளர்ச்சியில் இந்திய அரசுச் சட்டம் 1935 முக்கிய இடம் பெறுகிறது. இச்சட்டம் 1937 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி அமலுக்கு வந்தது. அதன்படி 1937 இல் மாகாணத்தில் சுயாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்திய அரசுச் சட்டம் 1935 இன் படி 216 உறுப்பினர்கள் கொண்ட சட்ட மன்றமும் 56 உறுப்பினர்கள் கொண்ட சட்ட மேலவையும் உருவாக்கப்பட்டது. இச்சட்டப்படி நடத்தப்பட்ட தேர்தலுக்குப் பிறகு, 1937 ஜூலையில் முதல் சட்டப்பேரவை பதவியேற்றது.

இரண்டாம் உலகப்போரில் ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கேட்காமலேயே நாட்டை போரில் ஈடுபடுத்தியதையடுத்து 1939 அக்டோபரில் சென்னை மாகாண அமைச்சரவை பதவி விலகியது.

போர் முடிந்ததும் இந்திய அரசுச் சட்டம் 1935 இன் அடிப்படையில் 1946, மார்ச்சில் தேர்தல் நடைபெற்றது. இந்த இரண்டாம் சட்ட மன்றத்தின் முதல் கூட்டம் 1946, மே 24 இல் நடைபெற்றது.

சுதந்திரத்துக்குப் பின்:

இந்திய அரசுச் சட்டம்1947 இன்படி பிரிட்டீஷ் ஆட்சி அதிகாரங்கள் மறைந்தன என்றாலும், இந்திய அரசுச் சட்டம் 1935 இன் அடிப்படையில் உருவான மாகாண சட்டசபைகள் தொடர்ந்து செயல்பட அதிகாரம் வழங்கப்பட்டது.

முதல் சட்டப்பேரவை: 1952 - 1957

1952 ஜனவரியில் நடைபெற்ற பொதுத் தேர்தலை அடுத்து தற்போதைய தமிழ்நாடு மாநிலத்தின் முதல் சட்டப்பேரவை 1952, மார்ச் 1 இல் அமைக்கப்பட்டது. (1962 ஜனவரியில் பொதுத் தேர்தல்) இதன் முதல் கூட்டம் 1962, மே 3 ஆம் தேதி நடைபெற்றது. சட்டப்பேரவையின் பதவிக் காலம் 5 ஆண்டுகள்.

முதல்வர்: சி.ராஜகோபாலாச்சாரி, கே.காமராஜ்

சபாநாயகர்: சிவசண்முகம் பிள்ளை, என். கோபால மேனோன்

எதிர்கட்சி தலைவர்: டி.நாகி ரெட்டி, பி.ராமமூர்த்தி

இரண்டாம் சட்டப்பேரவை: 1957 - 1962

1957 ஏப்ரல் 1 ஆம் தேதி அமைக்கப்பட்டது. இந்தக் கால கட்டத்தில் 1959 இல் சென்னை - ஆந்திரப்பிரதேச எல்லைப் பாகுபாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஆந்திர சட்டப்பேரவையிலிருந்து ஒரு உறுப்பினர் சென்னை சட்டப்பேரவைக்கு மாற்றப்பட்டார். இதன் மூலம் சென்னை சட்டப்பேரவையின் உறுப்பினர் எண்ணிக்கை 205 இலிருந்து 206 ஆக உயர்ந்தது.

முதல்வர்: கே,காமராஜ், எம்.பக்தவச்சலம்

சபாநாயகர்: யு.கிருஷ்ணராவ்

எதிர்கட்சி தலைவர்: வி.கே.ராமசாமி முதலியார்

மூன்றாம் சட்டப்பேரவை: 1962 - 1967

1962 மார்ச் 3 இல் அமைக்கப்பட்டது. 1965 இல் வெளியான நாடாளுமன்ற, சட்டப்பேரவை தொகுதிப் பங்கீடு ஆணையை அடுத்து சென்னை சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 234 ஆனது.

முதல்வர்: கே,காமராஜ், எம்.பக்தவச்சலம்

சபாநாயகர்: செல்லபாண்டியன்

எதிர்கட்சி தலைவர்: வி.ஆர்.நெடுஞ்செழியன்

நான்காம் சட்டப்பேரவை: 1967 - 1971

1967, மார்ச் 1 ஆம் தேதி அமைக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில்தான் சென்னை மாநிலத்தை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் பரிந்துரைக்கப்பட்டது. (1967, ஜூலை 18). இதைத்தொடர்ந்து 1967 இல் சென்னை மாநிலச்சட்டம் (பெயர் மாற்றுச் சட்டம்)  நிறைவேற்றப்பட்டது. இதே வேளையில் சென்னை சட்டசபை எனும் பெயர் தமிழ்நாடு சட்டப்பேரவை எனப் பெயர் மாற்றம் பெற்றது. 1967 இலிருந்து சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 234 ஆகவே இருந்து வருகிறது. (ஒரு நியமன உறுப்பினர் தவிர்த்து)

முதல்வர்: சி.என். அண்ணாதுரை, மு. கருணாநிதி

சபாநாயகர்: சி.பா. ஆதித்தனார், புலவர். கே.கோவிந்தன்.

எதிர்கட்சி தலைவர்: பி.ஜி.கருத்திருமன்

ஐந்தாம் சட்டப்பேரவை: 1971 - 1976

1971 மார்ச் 15 இல் இருந்து அமைக்கப்பட்டது. இந்த சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே 1976, ஜனவரி 31 இல் இது கலைக்கப்பட்டு  குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தின் முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி இதுவே.

முதல்வர்: மு.கருணாநிதி

சபாநாயகர்: கே.மதியழகன், புலவர் கே.கோவிந்தன்

எதிர்கட்சி தலைவர்: பொன்னப்ப நாடார்

ஆறாம் சட்டப்பேரவை: 1972 - 1980

1977, ஜூனில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களையடுத்து ஆறாம் சட்டப்பேரவை 1977 ஜூன் 30 ஆம் தேதி அமைக்கப்பட்டது. ஆனால் இதுவும் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே கலைக்கப்பட்டது. 1980, பிப்ரவரி 17 இல் இருந்து தமிழகம் குடியரசுத் தலைவர் ஆட்சியின்கீழ் கொண்டுவரப்பட்டது.

முதல்வர்: எம்.ஜி.ராமச்சந்திரன்

சபாநாயகர்: முனு ஆதி

எதிர்கட்சி தலைவர்: மு.கருணாநிதி

ஏழாம் சட்டப்பேரவை: 1980 - 1984

1980, ஜூன் 9 ஆம் தேதி அமைக்கப்பட்டது. இதற்கான பொதுத் தேர்தல் 1980, மே மாதம் நடைபெற்றது. மொத்தமுள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளில் மூன்று இடங்கள் பழங்குடியினருக்கும், 42 இடங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

முதல்வர்: எம்.ஜி.ராமச்சந்திரன்

சபாநாயகர்: கே.ராஜாராம்

எதிர்கட்சி தலைவர்: மு.கருணாநிதி, கே.எஸ்.ஜி.ஹெச். ஷரீஃப்

எட்டாம் சட்டப்பேரவை: 1985 - 1988

1985, ஜனவரி 16 இல் அமைக்கப்பட்டது. இதற்கான பொதுத் தேர்தல் 1984, டிசம்பர் மாதம் நடைபெற்றது. எட்டாவது சட்டப்பேரவையின்போது, சட்டமேலவையை நீக்கும் அரசுத் தீர்மானம் ஒன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது (1986, மே.14). இதன் மூலம் தமிழக சட்டமேலவை 1986, நவம்பர் 1 ஆம் தேதி முதல் அடியோடு ரத்து செய்யப்பட்டது.

எட்டாவது சட்டப்பேரவை கலைக்கப்பட்டு 1988, ஜனவரி 30 முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

முதல்வர்: எம்.ஜி.ராமச்சந்திரன்(19985 - 1987), ஜானகிராமச்சந்திரன் (1998)

சபாநாயகர்: பி.எச். பாண்டியன்

எதிர்கட்சி தலைவர்: ஓ.சுப்பிரமணியன்

ஒன்பதாம் சட்டப்பேரவை: 1989 - 1991

1989, ஜனவரியில் நடைபெற்ற தேர்தல்களை அடுத்து, 1989, ஜனவரி 27 ஆம் தேதி அமைக்கப்பட்டது. இதன் பதவிக்காலம் முடியும் முன்பே 1991, ஜனவரி 30 இல் கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இச் சட்டப்பேரவை காலத்தின்போது சட்ட மேலவையை மீண்டும் கொண்டு வரும் அரசுத் தீர்மானம் சட்டப்பேரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது (1989, பிப்ரவரி 20). இதனைத் தொடர்ந்து 1990, மே 10  ஆமே தேதி தமிழகத்திலும், ஆந்திரப்பிரதேசத்திலும் மீண்டும் சட்ட மேலவையை உருவாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது 1990 மே மாதம் 28 ஆம் தேதி மாநிலங்களவையின் ஒப்புதலை பெற்றது; ஆனால் சில நடைமுறைச் சிக்கலின் காரணமாக இது நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறவில்லை.

முதல்வர்: மு.கருணாநிதி

சபாநாயகர்: தமிழ்குடிமகன்

எதிர்கட்சி தலைவர்: ஜெ.ஜெயலலிதா, எஸ்.ஆர். இராதா, ஜி. கருப்பய்யா மூப்பனார்.

பத்தாம் சட்டப்பேரவை: 1991 - 1996

பொதுத் தேர்தலையடுத்து 10 ஆம் சட்டப்பேரவை 1991, ஜூன் 24 ஆம் தேதி அமைக்கப்பட்டது. ஒன்பதாம் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மேலவையை மறுபடியும் அமைக்கும் தீர்மானம் பத்தாவது சட்டப்பேரவைக் கூட்டத்தில் (1991, அக்டோபர் 18) கைவிடப்பட்டது.

முதல்வர்: ஜெ.ஜெயலலிதா

சபாநாயகர்: ஆர். முத்தையா

எதிர்கட்சி தலைவர்: எஸ்.ஆர். பாலகிருஷ்ணன்

பதினோராம் சட்டப்பேரவை: 1996 - 2001

பதினோறாவது சட்டப்பேரவைக்கு 1996, ஏப்ரல் 27, மே 2 ஆம் தேதிகளில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதையடுத்து சபையின் முதல் கூட்டத்தொடர் மே 22 ஆம் தேதி துவங்கியது. இதன் பதவிக்கலாம் 2001 மே 21 ஆம் தேதி வரை இருந்தபோதிலும், பன்னிரெண்டாம் சட்டப்பேரவைத் தேர்தல் 2001, மே 10 ஆம் தேதி நடைபெற்றதையடுத்து, இந்த அவை 2001, மே 14 ஆம் தேதி கலைக்கப்பட்டது. இச் சபையில்தான் சட்ட மேலவையை மீண்டும் கொண்டுவரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதல்வர்: மு.கருணாநிதி

சபாநாயகர்: பி.டி.ஆர். பழனிவேல்ராஜன்

எதிர்கட்சி தலைவர்: எஸ். பாலகிருஷ்ணன்

பன்னிரெண்டாம் சட்டப்பேரவை: 2001 - 2006

2001 மே 14 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இதன் முதல் கூட்டம் நடைபெற்ற நாள் 2001, மே 22 ஆமே தேதி. இந்த அவையின்  காலாவதி 2006, மே 12 ஆம் தேதி முடிவுற்றது.

முதல்வர்: ஜெ.ஜெயலலிதா (2001 - 2001, 2002 - 2006), ஒ. பன்னீர்செல்வம் (2001 - 2002)

சபாநாயகர்: காளிமுத்து

எதிர்கட்சி தலைவர்: கே. அன்பழகன்

பதிமூன்றாம் சட்டப்பேரவை: 2006 - 2011

2006, மே 13 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இன் முதல் கூட்டம்  2006, மே 17 ஆமே தேதி நடைபெற்றது.

முதல்வர்: மு.கருணாநிதி

சபாநாயகர்: ஆர். ஆவுடையப்பன்

எதிர்கட்சி தலைவர்: ஒ.பன்னீர்செல்வம், ஜெ.ஜெயலலிதா

பதிநான்காம் சட்டப்பேரவை: 2011 - 2016

2011, ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலையடுத்து மே 23 ஆம் தேதி அமைக்கப்பட்டது. இதன் முதல் கூட்டத்தொடர் ஜூன் 5 தேதி ஆளுநர் உரையுடன் துவங்கியது. பேரவையின் கடைசி கூட்டத்தொடர் பிப்ரவரி. 20 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

முதல்வர்: ஜெ.ஜெயலலிதா, ஒ.பன்னீர்செல்வம்

சபாநாயகர்: டி. ஜெயக்குமார், தனபால்

எதிர்கட்சி தலைவர்: விஜயகாந்த்

2011, ஏப்ரல் 13 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 28 இடங்களில் தேமுதிக வெற்றி பெற்றது. இதையடுத்து கட்சியின் தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். இந்த நிலையில் தேமுதிகவைச் சேர்ந்த 8 உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, தேமுதிக உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 ஆகக் குறைந்தது.

இதனால், பேரவை விதிப்படி, எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிப்பதற்குரிய தகுதியை விஜயகாந்த் இழந்துள்ளார்.

இதுவரையிலான சட்டப்பேரவை வரலாற்றில் முதல்வர் பதவியில் மிக அதிகபட்சமாக 10 வருடம், 5 மாதம், 24 நாட்கள் நீடித்த பெருமை அதிமுக-வை தோற்றுவித்த எம்.ஜி.ராமச்சந்திரனையே சாரும். இதுபோன்று மிகக் குருகியகாலம் முதல்வராக இருந்தவர் ஜானகி ராமச்சந்திரன் ஆவார். இவர் பதவி வகித்த காலம் வெறும் 14 நாட்கள் மட்டுமே.

2016 ஆம் ஆண்டு 15-வது சட்டப்பேரவைத் தேர்தலுக்காக காத்திருக்கிறோம்.....

நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல் 1952 ஆம் ஆண்டு முதலான வரிசையில் 15-வது சட்டப்பேரவைத் தேர்தல் ஆகும். இந்த தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேரவை செயல்பட்ட காலமும் - இடமும்:

1921-1937 - கவுன்சில் அறைகள், செயின்ட் ஜார்ஜ் கோட்டை.

14 ஜூலை 1937 - 21 டிசம்பர் 1938 - செனட் ஹவுஸ், சென்னை பல்கலைக்கழக வளாகம், சேப்பாக்கம்.

27 ஜனவரி 1938 - 26 அக்டோபர் 1939 - விருந்து மண்டபம் (ராஜாஜி மண்டபம்), அரசுத் தோட்டம் (ஓமந்தூரார் வளாகம்), மவுண்ட் ரோடு

24 மே 1946 - 27 மார்ச் 1952 - கவுன்சில் அறைகள், செயின்ட் ஜார்ஜ் கோட்டை

3 மே 1952 - 27 டிசம்பர் 1956 - கலைவானர் அரங்கம், அரசு தோட்டம் (ஓமந்தூரார் வீடு)

29 ஏப்ரல் 1957 - 30 மார்ச் 1959 - சட்டமன்ற கூடம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை

20-30 ஏப்ரல் 1959 - அரன்மொர் அரண்மனை, உதகமண்டலம் (ஊட்டி)

31 ஆகஸ்ட் 1959 - 11 ஜனவரி 2010 - சட்டப்பேரவை கூடம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை

16 மார்ச் 2010 - 15 மே 2011 - புதிய சட்டப்பேரவை வளாகம், ஓமந்தூரார் அரசு வளாகம், அண்ணா சாலை

16 மே 2011 - செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வருகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356:

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெறுகின்ற கட்சியின் தலைவர் ஆளுநரால் ஆட்சி பொறுப்பேற்க அழைக்கப்பட்டு பதவி பிரமாணம் வழங்கப்படுகிறது. இதனுடன் ரகசிய காப்பு தீர்மானமும் நிறைவேற்றப்படும்.

கட்சியின் தலைவரால் பரிந்துரைக்கப்படும் அமைச்சர்கள் துறைவாராயான பொறுப்பேற்று, அவர்களுக்கு ஒதுக்கப்படும் குறிப்பிட்ட துறையில் பணியாற்றுவர். சட்டப் பேரவையின் நம்பிக்கையில்லா தீர்மானம் அரசுக்கு எதிராக நிறைவேற்றப்படும்பட்சத்தில் முதல்வர் பதவி விலகும் சட்ட திட்டமும் உள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 356 இன்படி மாநில அரசினை கலைக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவும் இந்த சட்டப் பிரிவு வகை செய்கின்றது.

அரசியலமைப்பின் மற்றொரு விதிமுறைப்படி இரண்டு முக்கிய அம்சங்களை பெற்றிருந்தால் மட்டுமே பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட அனுமதி வழங்கப்படும். முதல் அம்சமாக, ஆளுங்கட்சிக்கு அடுத்தப்படியாக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றித்தல் அவசியம். இரண்டாவது அம்சமாக, அக்கட்சி குறைந்தபட்சமாக 24 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

தவறாமல் வாக்களிப்போம்!

சுயநலமில்லாத, உண்மையிலேயே மக்கள் பணியில் ஆர்வமுள்ள, அப்பழுக்கற்ற, தொலைநோக்குப் பார்வை கொண்ட, அணுகுவதற்கு எளிமையாக உள்ள மக்கள் பணியாளர்களை அடையாளம் காணுவதும், அங்கீகரிப்பதும், அதிகாரத்தை ஒப்படைப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

நாம் விரும்பும் மாற்றத்தை நாமே ஏற்படுத்திக்கொள்ள உதவும் ஒர் எளிய வழிமுறைதான் வாக்குரிமை. நமது எதிர்காலம் நம் கைவிரல் மையில்தான் உள்ளது. எனவே, 15-வது சட்டப்பேரவைத் தேர்தலுக்காக காத்திருக்கும் நாம், 

நம் சிந்தனைகளை செயலாக்குவோம்,

மாற்றங்களை உண்டாக்குவோம்,

நல்லவர்களைத் தேர்ந்தெடுப்போம்...

தவறாமல் வாக்களிப்போம்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com