இந்திய அரசுச் சட்டம் - 1914
இந்திய அரசுச் சட்டம் 1914-ன்படி, சென்னை, பம்பாய், வங்காள மாகாணங்களின் நிர்வாகச் சபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமன உறுப்பினர்களுடன் அட்வொகேட் ஜெனரலும் இருந்தார். தேர்தல் மற்றும் நியமனத்துக்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் அந்தந்த மாகாணங்களின் சூழலுக்கேற்ப நடத்த அனுமதிக்கப்பட்டது. நில உடைமையாளர்களுக்கே சீட்டு கொடுக்கப்பட்டது. பெண்கள், மைனர்களுக்கு, மனநலம் குன்றியவர்களுக்கு வாக்குரிமை கிடையாது.
இந்திய அரசுச் சட்டம் - 1915
இந்திய அரசுச் சட்டம் 1915–ன்படி, இந்திய கவுன்சிலில் 10 முதல் 14 உறுப்பினர்கள் வரை இருக்க வழிவகை செய்யப்பட்டது. உறுப்பினர்களின் பதவிக்காலம் 7 ஆண்டுகள் ஆகும். உறுப்பினர்கள், இந்தியாவில் 10 ஆண்டுகள் பதவியில் இருந்திருக்க வேண்டும். எந்த உறுப்பினரும் எழுத்துப்பூர்வமாக எழுதி, ராஜிநாமா செய்துகொள்ளலாம். பாராளுமன்றத்தில் அறிவிப்பதன் மூலம், எந்த உறுப்பினரையும் மன்னர் நீக்கலாம். உறுப்பினர்களின் வருட சம்பளம் 1000 பவுண்ட் ஆகும். எந்த கவுன்சில் உறுப்பினரும் பாராளுமன்றத்தில் உட்கார முடியாது.
*
1914-ல் தொடங்கிய முதல் உலகப் போரில், இந்தியாவின் உதவி தேவைப்பட்டது. அதன்படி, சுமார் 12 லட்சம் சிப்பாய்கள் அனுப்பப்பட்டனர். அவர்கள், பிரான்ஸ், மத்திய மற்றும் கிழக்காசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் பணி செய்து நாட்டுக்கு நற்பெயர் ஈட்டினர்.
இந்த நிலையில், 1916-ல், செம்ஸ்போர்டு கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். 1917-ல், எட்வின் மாண்டேகு, இந்தியாவின் அரசுச் செயலர் ஆனார். அதே ஆண்டில், இந்திய அரசாங்கத்தில் இந்தியர்களும் பங்குகொள்ளும் வகையில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
1918-ம் ஆண்டு, எட்வின் மாண்டேகு, செம்ஸ்போர்டு இருவரும் சேர்ந்து, அரசியல் சாசன சீர்திருத்தங்களுக்கான திட்டத்தை உருவாக்கினர். அந்தத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டதற்கும் மேலான சலுகைகளை இந்திய தேசியவாதிகள் எதிர்பார்த்தனர். இந்தச் சீர்திருத்த முன்மொழிவைப் பற்றி விவாதிக்க, 1918-ல் ஹசன் இமாம் தலைமையில் இந்திய தேசிய காங்கிரஸின் சிறப்பு மாநாடு கூடியது.
*
மாண்டேகு மற்றும் சக அதிகாரிகள் மூர், சர் வில்லியம் டியூக், பாசு, சார்லஸ் ராபர்ட் போன்றோர் சேர்ந்து, அரசியலமைப்பு மற்றும் வகுப்புவாதங்களைக் களைதல் குறித்து 300 பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கையை 1918-ல், இங்கிலாந்து பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அதன் அடிப்படையில், இந்திய ஐக்கிய நாடுகள் (United States of India) உருவாக்க முயற்சிக்கப்பட்டது.
*
மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்
மாண்டேகு
செம்ஸ்போர்டு
1. பிரசுரச் சட்டம், 1910 (Press Act, 1910), ரெளலட் சட்டம், 1919 (Rowlet Act, 1919) ஆகிய சட்டங்கள் நீக்கப்பட்டன.
2. சட்டமன்ற மாகாண சபைகள் விரிவுபடுத்தப்பட்டன. இரட்டை ஆட்சி முறையின் கீழ், மாகாண அரசுகளுக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. மத்தியில் இரண்டு அவைகள் இருந்தன. மேலவையில் 144 உறுப்பினர்களும், கீழவையில் 41 உறுப்பினர்களும் இருப்பார்கள்.
3. அரசு கவுன்சில் எனப்படும் மேல் சபையில், 26 நியமன உறுப்பினர்களும், 34 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் இருப்பர்.
4. சட்டமன்றத்தின் மீது கவர்னர் ஜெனரலுக்கும், அவரது நிர்வாகக் குழுக்கும் எவ்விதக் கட்டுப்பாடும் கிடையாது. ஆனால், மாகாண அரசாங்கத்தின் மீது தடையற்ற கட்டுப்பாடு இருக்கும்.
5. வாக்குரிமை கடுமையாக்கப்பட்டது. 1920-ல், கீழ் சபைக்கு 9,09,874 பேரும், மேல் சபைக்கு 17,364 பேரும் வாக்காளர்களாக இருந்தனர்.
6. அனைத்து நிர்வாகச் சபைகளிலும் இந்தியர்கள் பாதி எண்ணிக்கையில் இருப்பர். அனைத்து சட்டமன்றங்களிலும் இந்தியர்கள் பெரும்பான்மையுடன் இருப்பர்.
7. சுப்ரீம் கவுன்சிலில் 150 உறுப்பினர்களும், பெரிய சபையில் 100 உறுப்பினர்களும், சிறிய மாகாணங்களில் 50 உறுப்பினர்களும் இருப்பர்.
8. உள்ளூர் வாரியங்கள், நகராட்சிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மையினரால் நடத்தப்பட வேண்டும்.
9. ஒவ்வொரு மாநிலமும், விரிவான வாக்குரிமை அடிப்படையில், நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மையினரைக் கொண்டிருக்க வேண்டும். இனவழி வாக்குரிமையை எதிர்த்தபோதிலும், இஸ்லாமியர்களுக்கு வாக்குரிமை தர வேண்டும். சீக்கியர்களுக்குத் தனிச் சலுகைகள் அளிக்கப்படும்.
10. இந்திய உள்நாட்டு அரசுகளைப் பொறுத்தவரை, அரசர்களின் மன்றம் அமைக்கப்பட்டு தலைமை ஆளுநர் தலைமையில் அது நடைபெற வேண்டும்.
*
இரட்டை ஆட்சி (Dyarchy)
மாநிலத்தின் நிர்வாகக் பொறுப்பு இரு கூறுகளாக பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டதால், அந்தப் புதிய மாற்றம் ‘இரட்டை ஆட்சி’ (Dyarchy) எனும் பெயர் பெற்றது. பிரிக்கப்பட்ட பொறுப்புகள், மாற்றப்பெற்ற பொருள்கள், ஒதுக்கப்பட்ட பொருள்கள் என அழைக்கப்பட்டன. பொருள்கள் என்பது துறைகளைக் குறிக்கும்.
ஒதுக்கப்பெற்ற துறைகளில் நீதி, நிர்வாகம், காவல் படை, செய்தித் துறை, நீர்ப்பாசனம், நிலவரி, வேளாண்மைக்கடன், பஞ்சநிவாரணம், சிறைச்சாலைகள் போன்றவை இருந்தன. அவற்றை ஆளுநரின் நிர்வாகக் குழுவினர் நிர்வகித்தனர்.
உள்ளாட்சி, மருத்துவம், கல்வி, பொதுப்பணி போன்றவை மாற்றப்பெற்ற துறையின் கீழ், சட்டசபைக்குக் கட்டுப்பட்ட அமைச்சர்களால் நிர்வாகம் செய்யப்பட்டது.
முஸ்லிம்கள், சீக்கியர்கள், ஐரோப்பியர்கள், ஆங்கிலோ-இந்தியர்கள் ஆகியோர் தங்கள் வாக்காளர்கள் வாயிலாக உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தனர். மாநிலச் சபைகளின் ஆயுட்காலம் 3 ஆண்டுகள். இதனை நீட்டிக்கவோ கலைக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இருந்தது.
1921, ஏப்ரல் 1-ம் தேதி முதல், எட்டு மாநிலங்களில் இரட்டை ஆட்சி நடைமுறைக்கு வந்தது. அதன்பின், மேலும் இரண்டு மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இம்முறை, 1937 வரை நடைமுறையில் இருந்தது. சென்னை மாகாணத்திலும் இரட்டை ஆட்சி சிறப்புடன் நடைபெற்றது என்றே கூறலாம்.
இச்சட்டத்தின்படி நடைபெற்ற தேர்தலோ, உறுப்பினர் தேர்வோ மக்களாட்சி முறைப்படி நடைபெற்றவில்லை என்றாலும், அரசியல் சீர்திருத்தத்திலி இது இன்றியமையாத ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும், நிர்வாகத்தை இரு துறைகளாகப் பிரித்தது அரசியல் கோட்பாட்டுக்கு எதிரானது என்றும் கருதப்பட்டது.
*
நீதிக் கட்சி இயக்கம்
1915-ல், இந்து மகாசபை தொடங்கப்பட்டது. வகுப்புரீதியாகத் தேர்தல் நடைபெற்றது.
இந்திய சமூக அமைப்பில், வட இந்தியப் பிராமணர்களுடன் ஒப்பிடுகையில், சென்னை மாகாணத்தில் தென் இந்தியப் பிராமணர்கள் உயரிய இடத்தைப் பெற்றிருந்தனர். மொத்த மக்கள் தொகையில் 3.2 சதவீதமே இருந்த இவர்கள், 1850-களில் இந்தியர்கள் வகிக்கக்கூடிய அரசுப் பதவிகளில் பெருமளவில் இடம்பெறத் தொடங்கினர். இதன்மூலம் அவர்களது அரசியல் செல்வாக்கு பெருகியது.
19-ம் நூற்றாண்டிலும், 20-ம் நூற்றாண்டு துவக்கத்திலும், இந்திய நிர்வாகப் பணிகள் மற்றும் நகர்ப்புறங்களில் புதிதாக உருவான தொழில்களிலும் பிராமணர்களே ஆதிக்கம் செலுத்தினர். பிராமணர் சாதியில் கல்வியும் ஆங்கில அறிவும் அதிகமாக இருந்ததே இந்த முன்னேற்றத்துக்கு முக்கியக் காரணம். இதனால், பிராமணர் அல்லாதோருக்கும் பிராமணருக்கும் இடையே இருந்த அரசியல், சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகமாயின. அன்னி பெசன்டின் ஹோம் ரூல் இயக்கத்தால், இந்தப் பாகுபாடு மேலும் அதிகரித்தது.
*
டாக்டர் நடேசன்
டாக்டர் நடேசன் உருவாக்கிய திராவிட மாணவர் சங்க விடுதியில் தங்கிப் படித்து பட்டம் பெறுவோருக்கு விழா நடத்தப்பட்டது. (1912-ல் மெட்ராஸ் யுனைடெட் லீக் என்பதுதான், பின்னர் 1913-ல் திராவிடர் சங்கமாக மாறியது.
ஹோம் ரூல் இயக்கம் பழைய வர்ணாசிரமத்துக்குப் புத்துயிர் அளித்து, பிராமண ஆதிக்கத்தை வளர்க்கிறது என்கிற எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, 1916-ல் பார்ப்பனர் அல்லாத முக்கியப் பெரியவர்கள் கலந்துகொண்டு, பார்ப்பனர் அல்லாத மக்களின் நலன்களை மேம்படுத்த தென்னிந்திய மக்கள் சங்கம் (SIPF) என்ற பெயரில், கூட்டுப் பங்கு நிறுவனம் துவங்கப்பட்டது. அதன் தலைவர் ராவ்பகதூர் பி. தியாகராய செட்டியார் கையெழுத்துடன் ஒரு “பிரகடனம்” இயற்றப்பட்டு, அனைத்து பார்ப்பனர் அல்லாத பிரமுகர்களுக்கும் அனுப்பப்பட்டது.
*
1917-ல், மேண்டேகு – செம்ஸ்போர்டு இருவரும் சென்னை வந்தனர். சென்னை மாகாணச் சங்கத்தின் சார்பாக திரு. கேசவ பிள்ளையும், தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் சார்பாக திவான்பகதூர் பி. தியாகராய செட்டியாரும், சென்னை திராவிடர் சங்கத்தின் சார்பாக பி. ராமராய நிங்காரும் (பனகல் அரசர்), பார்ப்பனர் அல்லாத சமூகங்கள் சார்பாக ராவ்பகதூர் ஆர். வெங்டரத்தினம் நாயுடு மற்றும் ஏ.பி. பாத்ரோ, தென்னிந்திய கத்தோலிக்க இந்தியர் சங்கம் சார்பாக ஆர்ச் பிஷப் புனித ஜான் மற்றும் பல அமைப்புகளிடம் கருத்து கேட்டனர்.
*
திராவிடர்களுக்குப் பதவி, வேலை, கல்வி ஆகியவற்றில் உரிய பங்கு கிடைக்க வலிமையான அமைப்பு வேண்டும் என்று டாக்டர் நடேசன் உணர்ந்திருந்தார். காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வந்த டாக்டர் டி.எம். நாயர் (தார்வாட் மாதவன் நாயர்), மருத்துவத் தொழிலில் கிடைத்த வருமானத்தில், ஒரு பகுதியை கட்சிக்குச் செலவழித்தார். சென்னை நகரின் மற்றொரு பிரமுகர் திவான் பகதூர் பி. தியாகராய செட்டியார், சென்னை மாநகராட்சியில் 40 ஆண்டுகாலம் உறுப்பினராகப் பணியாற்றினார். ஒரு பவுன் 10 ரூபாய்க்கு விற்ற காலத்தில், 5000 ரூபாய் நிதியை கபாலீஸ்வரர் கோயிலுக்கு வழங்கியவர். ஆனால், கோவில் கும்பாபிஷேகத் தினத்தன்று கோவிலுக்குச் சென்ற இவரை, குறிப்பிட்ட பகுதிக்கு மேல் பிராமணர்கள் மட்டுமே செல்லமுடியும் என்று கட்டுப்பாடு காரணமாக இவரை மேற்கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.
டாக்டர் டி.எம். நாயர்
தியாகராய செட்டியார்
இந்த நிலையில், பார்ப்பனர் அல்லாதார் முதல் மாநாடு, 1917-ல் கோவையில் நடைபெற்றது. பி. ராமராய நிங்கார் தலைமையில், ஊத்துக்குளி ஜமீன்தார் ராவ்பகதூர் எம்.ஆர். காளிங்கராயர், ராவ்பகதூர் எம்.ஜி. ஆரோக்கியசாமி பிள்ளை, ஏ.டி. திருவேங்கடசாமி முதலியார் ஆகியோர் முன்னிலையில் இந்த மாநாடு நடைபெற்றது.
இரண்டாவது மாநாடு, கோதாவரி ஜில்லா பிக்காவோலில், செல்லப்பள்ளி குமாரராஜா தலைமையில், திவான்பகதூர் பி. தியாகராய செட்டியார், ராவ்பகதூர் ஆர். வெங்டரத்தினம் நாயுடு போன்றோர் முன்னிலையில் நடைபெற்றது.
மூன்றாவது மாநாடு, கடப்பா மாவட்டம் புலிவெந்துலாவில், திரு. ஏ.சி. பார்த்தசாரதி நாயுடு, திரு. டி. சிங்கார முதலியார், திரு. டி. சபாபதி முதலியார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
நான்காவது மாநாடு, விஜயவாடாவில் திவான்பகதூர் பி. தியாகராய செட்டியார் தலைமையில், தெலுங்கு சமுதாயத் தலைவர்களைக் கொண்டு நடைபெற்றது.
ஐந்தாவது மாநாடு, திருநெல்வேலியில் திவான்பகதூர் பி. தியாகராய செட்டியார் தலைமையில், செல்லப்பள்ளி குமாரராஜா, சிங்கப்பட்டி ஜமீன்தார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மாநாட்டில் எர்ட்லி பிரபு மற்றும் ஆஸ்பர்ன் பிரபு கலந்துகொண்டனர்.
ஆறாவது மாநாடு, சேலத்தில் புதுக்கோட்டை பிரின்ஸ் திரு. கே.எஸ். துரைராஜா தலைமையில் நடைபெற்றது.
சென்னையில், பார்ப்பனர் அல்லாதார் கூட்டமைப்பின் மாநாடு, 1917-ல் வெங்கடகிரி அரசர் தலைமையில் நடைபெற்றது.
*
சாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது, கல்வி மற்றும் சமய சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தது ஆகியவை, நீதிக்கட்சி அரசுகளின் குறிப்பிடத்தக்க செயல்கள். நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில், ஆந்திரப் பல்கலைக்கழகமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் தொடங்கப்பட்டன. சென்னை நகரின் தற்கால தி.நகர்ப் பகுதி, நீதிக்கட்சி அரசுகளால் உருவாக்கப்பட்டது. எதிர்க்கட்சியாக இருந்தபோது, 1937–40-களில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியது.
1967 முதல், தமிழ்நாட்டை ஆட்சிபுரிந்துகொண்டிருக்கும் திராவிடக் கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டுக்கும் நீதிக்கட்சியும் திராவிடர் கழகமும்தான் கொள்கை மற்றும் அரசியல்ரீதியான முன்னோடிகளாகக் கருதப்படுகிறது.
பிராமணர் அல்லாத அனைத்துப் பிரிவினரின் நலனுக்காகச் செயல்படுவதாக நீதிக்கட்சி கூறினாலும், விரைவில் அது முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளின் ஆதரவை இழந்தது. பிராமணர் அல்லாத வெள்ளாள சாதியினரான முதலியார்கள் மற்றும் பிள்ளைமார்கள், பலிஜா நாயுடுகள், பெரி செட்டிகள், காப்புகள், கம்மாக்கள் ஆகியோரின் நலனுக்காக மட்டுமே அது செயல்படுவதாக, முஸ்லிம்களும் தலித்துகளும் குற்றம் சாட்டினர்.
ஆதார நூல்கள்
1. “Indian Constitutional Documents” Vol.II - Panchanandas Mukherji
2. “Indian Constitutional Documents” Vol.III - A.C. Banerjee
3. “Summary of Constitutional Reforms of India” - Prof. W. Macheile Dixon
4. “Principles of Dyarchy” - L. Curtis
5. “நவீன இந்தியா” - பிபன் சந்தரா
6. “நீதிக்கட்சி இயக்கம் 1917” - டி. வரதராஜுலு நாயுடு
7. “நீதிக்கட்சி வரலாறு” - பண்டித எஸ். முத்துசாமி
***
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.