
சென்னை: மாற்றம், முன்னேற்றம் என்ற கோஷத்தை முன்வைத்து தேர்தலில் களம் கண்ட பட்டாளி மக்கள் கட்சி 66 இடங்களில் மூன்றாமிடம் பிடித்துள்ளது. மேலும், 3 தொகுதிகளில் அக்கட்சி இரண்டாம் இடத்துக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில், தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகளுக்கு மாற்று என்ற கோஷத்தோடு அனைத்து தொகுதிகளிலும் தனியாக களம் இறங்கியது பாட்டாளி மக்கள் கட்சி. கட்சியின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ், முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார்.
தமிழகத்தில் வடமாநிலங்களில் செல்வாக்காக இருக்கும் பட்டாளி மக்கள் கட்சி 1989 ஆம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு வருகிறது. ஆரம்ப காலங்களில் தனித்துப் போட்டியிட்ட அக்கட்சி 1998 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது ஜெயலலிதா அமைத்த மெகா கூட்டணியில் இணைந்தது.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற தேர்களில் எல்லாம் அக்கட்சி திமுக அல்லது அதிமுக கட்சியோடு இணைந்து தேர்தலைச் சந்தித்தது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக, தேமுதிக, மதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது. தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றார்.
இதையடுத்து நடைபெற்ற தமிழகத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்த பாட்டாளி மக்கள் கட்சி, அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தது. 232 தொகுதிகளிலும் பாமக தனித்துப் போட்டியிட்டது.
இந்த தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் அனைத்து இடங்களிலும் பாமக தோல்வியடைந்தது.
எனினும், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, எடப்பாடி ஆகிய தொகுதிகளில் இரண்டாமிடம் பெற்றது.
இதுதவிர 66 இடங்களில், குறிப்பாக வட மாவட்டங்களில் பாமக மூன்றாமிடம் பெற்றது. இதில் 30 இடங்களில் அதிமுக வேட்பாளர்களின் வெற்றி வாக்குகளைவிட பாமக அதிகம் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.