தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் தொழில் துறை வளர்ச்சி அடையவில்லை: கனிமொழி எம்.பி.
By DN | Published On : 22nd April 2016 08:06 AM | Last Updated : 22nd April 2016 08:06 AM | அ+அ அ- |

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் தொழில் துறை வளர்ச்சி அடையவில்லை என, திமுக மகளிர் அணி மாநிலத் தலைவரும், மாநிலங்களை உறுப்பினருமான கனிமொழி பேசினார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டப் பேரவை தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து அருள்புரத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் கனிமொழி பேசியதாவது:
கடந்த 5 ஆண்டு காலமாக மக்களை நேரில் சந்தித்துப் பேசாத ஜெயலலிதா, தற்போது ஓட்டு கேட்டு மக்களைத் தேடி வருகிறார். திமுக ஆட்சியில் மட்டும்தான் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதிமுகவின் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் புதிய தொழிற்சாலைகள் எதுவும் தொடங்கப்படவில்லை. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. விவசாயம் மேலும் சரிவைத்தான் சந்தித்தது. தமிழகத்துக்கு வர வேண்டிய ரூ. 50 ஆயிரம் கோடி தொழில் முதலீடு வராமலேயே போய்விட்டது. திமுக ஆட்சியில் தமிழகம் தொழில் துறையில் 3-ஆவது இடத்தில் இருந்தது. தற்போது 20-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
தமிழகத்தில் தொழில் துறை வளர்ச்சி அடையவில்லை. ஆனால், மதுபான விற்பனையில் மகத்தான் சாதனையை அதிமுக அரசு ஏற்படுத்தியுள்ளது.
கருணாநிதி ஆட்சியில் ரூ. 14 ஆயிரம் கோடிக்கு விற்ற மதுபானம் ஜெயலலிதா ஆட்சியில் ரூ. 36 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. மதுக்கடைகளை மூட மாட்டேன் என சட்டப் பேரவையில் சொன்ன ஜெயலலிதா இப்போது ஓட்டுக்காக, படிப்படியாக மதுக்கடைகளை மூடுவேன் என்று சொல்லி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்.
ரேஷன் பொருள்கள் இல்லை என்ற நிலை திமுக ஆட்சியில் இருக்காது. அதேபோல, புதிய ரேஷன் கார்டு ஸ்மாட் கார்டாக வழங்கப்படும் என்றார்.