குஷ்புவின் கூட்டத்துக்கு வந்தவர் மயங்கி விழுந்து சாவு
By ஸ்ரீபெரும்புதூர், | Published On : 29th April 2016 02:49 AM | Last Updated : 29th April 2016 08:10 AM | அ+அ அ- |

காஞ்சிபுரத்தில் குஷ்புவின் பிரசாரக் கூட்டத்துக்கு வந்தவர் மயங்கி விழுந்து இறந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் செல்வப்பெருந்தகை போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நடிகை குஷ்பு பிரசாரம் செய்தார். அவர் குன்றத்தூர், மணிமங்கலம், படப்பை, ஒரகடம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படப்பை பகுதியில் மாலை 6.30 மணி அளவில் பிரசாரம் செய்வதாக இருந்தது.
இதற்காக 5 மணிக்கே தொண்டர்கள் அழைத்து வரப்பட்டனர். இவர்கள் 6.30 மணி வரை அங்கேயே காத்திருந்தனர். அப்போது கீழ்ப்படப்பை பகுதியைச் சேர்ந்த பூபதி (55) என்ற திமுக பிரமுகர் திடீரென்று கூட்டத்தில் மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர் வழியிலேயே இறந்தார். இதனைத் தொடர்ந்து குன்றத்தூர், மணிமங்கலம் பகுதியில் பிரசாரம் செய்த குஷ்பு, படப்பை பகுதியில் பிரசாரம் செய்யாமல் ஒரகடம் சென்றார். இந்த சம்பவத்தால் படப்பை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.