திருடுவதற்காக திட்டம் போட்ட திமுக தற்போது திட்டத்தையே திருட ஆரம்பித்துவிட்டது: நடிகை விந்தியா
By dn | Published On : 30th April 2016 01:09 PM | Last Updated : 30th April 2016 01:09 PM | அ+அ அ- |

சுந்தரராஜன் : சிதம்பரம்: இவ்வளவு காலம் திமுகவினர் திருடுவதற்காக திட்டம் போட்டார்கள். தற்போது திட்டத்தையே திருட ஆரம்பித்துள்ளனர் என அதிமுக பேச்சாளர் நடிகை விந்தியா பேசினார்.
சிதம்பரம் மேலரதவீதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் கே.ஏ.பாண்டியனை ஆதரித்து அதிமுக பேச்சாளரும், நடிகையுமான விந்தியா பங்கேற்று பேசினார். அவர் பேசியது: தில்லை நடராஜரையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும் பீரங்கி வைத்து பிளக்கும் நாள் எந்நாளோ, அந்நாளோ எனக்கு திருநாள் என்று சொன்னவர் கருணாநிதி. எனவே நடராஜரை உடைக்க நினைக்கிற கருணாநிதிக்கு ஒட்டு போடுவீர்களா, மக்களுக்காக நல்லாட்சி தரும் ஜெயலலிதாவிற்கு ஓட்டு போடுவீர்களா என கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் பேசுகையில் நிஜமான ஜனநாயக ஆட்சி, ஜெயலலிதா ஆட்சி, நிஜமான ஜனநாயக கட்சி அதிமுக. எந்த பதவியும் இல்லாத கடுமையாக உழைக்கு தொண்டன் எந்த நேரத்திலும் எம்எல்ஏவாகவோ, எம்பியாகவோ ஆக முடியும் என்றால் அது அதிமுகவால் மட்டும்தான் முடியும். அதிமுகவில் வேட்பாளராக வேண்டுமென்றால் ஒன்று நல்லவராக இருக்கணும், இரண்டு அதிமுகவினராக இருக்க வேண்டும். ஆனால் திமுகவில் வேட்பாளராக வேண்டுமென்றால் பணம் (Cash) இருக்கணும், வழக்கு (case) இருக்கணும், இல்லையெனில் வாரிசாக இருக்க வேண்டும், வாரிசின் நன்பர்களாக இருக்க வேண்டும். அம்மா உணவகத்தை விமர்சித்த திமுகவினர் அண்ணா உணவகத்தை தொடங்கப் போவதாக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர். இவ்வளவு காலம் திமுகவினர் திருடுவதற்காக திட்டம் போட்டார்கள். தற்போது திட்டத்தையே திருட ஆரம்பித்துள்ளனர் என்று விந்தியா பேசினார்.