காங்கிரஸ்-திமுக கூட்டணி என்றாலே ஊழல் கூட்டணி என்பது தான் பொருள்: ஜெயலலிதா
By DN | Published On : 01st May 2016 08:56 PM | Last Updated : 01st May 2016 08:56 PM | அ+அ அ- |

காங்கிரஸ்-திமுக கூட்டணி என்றாலே ஊழல் கூட்டணி என்பதுதான் பொருள் என்று முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கூறினார்.
கோவை `கொடிசியா வளாகம் அருகில், அவினாசி ரோடு, பீளமேடு, கோவை' என்ற இடத்தில் நடைபெற உள்ள தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, கழக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தார்.
இன்று மே தினம். உழைக்கும் மக்கள் தங்கள் உரிமைகளைப் போராடிப் பெற்ற பொன் நாள் ஆன, இந்த மே தினத்தில் தொழிலாளர் உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ``உழைப்பவரெல்லாம் உயர்ந்தவரே'' என்பது அனைத்திந்திய அதிமுகவின் கொள்கை. தொழிலாளர்களின் நிலை உயர எனது ஆட்சிக் காலத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியத்தை உருவாக்கி ஓட்டுநர் பணி செய்யும் அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பு அளித்தது எனது அரசு தான். அனைத்து வகையான தொழிலாளர்களும் பயன்பெறும் வகையில் 568 கோடி ரூபாய் அளவிற்கு நல உதவிகள் கடந்த ஐந்தாண்டுகளில் எனது அரசால் வழங்கப்பட்டுள்ளன. இது போன்று பல்வேறு திட்டங்களை எனது அரசு நிறைவேற்றி இருக்கிறது. இனி வரும் காலங்களிலும் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக மேலும் பல திட்டங்களை நிறைவேற்றிடப் பாடுபடுவேன் என்பதை இந்த மே தின நன்னாளில் தொழிலாளர் உடன்பிறப்புகளுக்கு தெரிவித்து மகிழ்கிறேன்.
இந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தின் வாயிலாக, 16.5.2016 அன்று நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க; உங்களையெல்லாம் சந்திக்க இன்று இங்கே வந்திருக்கிறேன்.
தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும்; தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்; தமிழகத்தில் நல்லாட்சி அமையப் பெற வேண்டும்; ஏழை எளியோர் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என்று தமிழக மக்களாகிய நீங்கள் 2011-ஆம் ஆண்டு எனது தலைமையிலான அதிமுகவிற்கு அமோக ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்தீர்கள். உங்கள் ஆதரவால் நான் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்.
இந்த நல்லாட்சி தொடர, நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் நீங்கள் அனைத்திந்திய அதிமுக மற்றும் தோழமைக் கட்சி வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெறச் செய்ய வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்புடன் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.
2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தமிழகத்தை ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பாதையில் நடைபோட வைக்கவும்; கல்வி, மருத்துவம், விவசாயம், நதிநீர், அடிப்படைக் கட்டமைப்பு, வீடு, மின்சாரம் மற்றும் தொழில் துறைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து தமிழகத்தை தலை நிமிரச் செய்வது தான் அதிமுகவின் லட்சியம் என பிரகடனம் செய்து, இவற்றை நிறைவேற்ற செயல்படுத்தப்படும் திட்டங்களைப் பற்றி எங்களது தேர்தல் அறிக்கையில் 54 தலைப்புகளின் கீழ் தெரிவித்திருந்தோம். அவைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு உள்ளன. நான் சொன்னதைச் செய்தேன். அதோடு நான் சொல்லாத பலவற்றையும் செய்திருக்கிறேன்.
கடந்த சட்டப்பேரவைத் பொதுத் தேர்தலின் போது நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல், நீங்கள் எதிர்பார்க்காத பல திட்டங்களை, நீங்களே நினைத்துப் பார்க்காத பல திட்டங்களை, ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டங்களை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம். அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட், அம்மா விதைகள், அம்மா மருந்தகங்கள், பண்ணை பசுமை காய்கறி விற்பனை நிலையங்கள் என பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறோம்.
மேலும் மக்களை நாடி சேவை புரியும் ``அம்மா திட்டம்'', 24 மணி நேரம் செயல்படும் ``அம்மா சேவை மையம்'', ``அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்'', ``அம்மா குழந்தைகள் நலப் பெட்டகம்'', ``அம்மா மகப்பேறு சஞ்சீவி'' மற்றும் மகளிருக்கு விலையில்லா சானிட்ரி நாப்கின்கள் வழங்கும் திட்டம் போன்ற பல திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளோம்.
திமுக-வினர் 2006-ஆம் ஆண்டு அவர்களது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றவில்லை. அவர்கள் நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை நான் ஏற்கெனவே பேசிய பொதுக் கூட்டங்களில் எடுத்துச் சொல்லியுள்ளேன். மேலும் சில நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளைப் பற்றி இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.
தமிழகத்தில் மண்டல தாவரவியல் வாரியம் மற்றும் தேசிய அளவிலான தாவரவியல் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவே இல்லை. கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கிய விவசாயிகள் இயற்கை மரணம் அடைந்தால் அவர்கள் கூட்டுறவு வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடனும், வட்டியும் தள்ளுபடி செய்யப்படும்
என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. கூட்டுறவு சங்க தேர்தல் உடனே நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். 2007-ஆம் ஆண்டு தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, பெரும் அராஜகத்தை நடத்தி தேர்தலை ரத்து செய்து விட்டனர். அதன் பின்னர் திமுக ஆட்சியை விட்டு வெளியேறும் வரை கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை நடத்தவே இல்லை. திமுக ஆட்சி இருந்தவரை கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்தப்படவே இல்லை. ஆனால் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை நடத்தியது எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தான். குக்கிராமங்கள் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் சூரிய ஒளி மூலம் இயங்கும் வீட்டு விளக்குகள், தெரு விளக்குகள் நிறுவப்படும் என்ற திமுக-வின் வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டது.
எல்லா மாநகராட்சிகளிலும் நிலத்தடியில் மின்சார கம்பிகள் அமைக்கப்படும்
என்ற திமுக-வின் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் படி பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு கல்விக் கட்டணம் விடுதிக் கட்டணம் ஆகியவை வழங்கப்படும் என்ற திமுக-வின் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கான கட்டணம் வழங்கும் திட்டத்தை எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தான் செயல்படுத்தி இருக்கிறது; செயல்படுத்தி வருகிறது.
உதகமண்டலம், ஏற்காடு, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதி சுற்றுலா தலங்களில் கேபிள் கார் அமைக்கப்படும் என்ற திமுக-வின் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகளை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். வாக்குகளை கவருவதற்காக எந்த வாக்குறுதியை வழங்கவும்
திரு. கருணாநிதி தயங்க மாட்டார். ஆனால், தனக்கும் தன் குடும்பத்திற்கும் பயன் தராத எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவும் மாட்டார். கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவது நான் தான். கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றியது இந்த ஜெயலலிதா தான். (பலத்த கைதட்டல்)
காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி என்றாலே ஊழல் கூட்டணி என்பது தான் பொருள்.
நிலக்கரி ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் வீட்டுவசதி ஊழல் என பல்வேறு ஊழல்களைச் செய்து மக்களால் தண்டிக்கப்பட்ட கூட்டணி காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி. காமன்வெல்த் விளையாட்டிலே கூட விளையாடியவர்கள் என்றால் அந்தக் கூட்டணி எப்படிப்பட்ட ஊழல் கூட்டணி என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி, மத்தியில் பதவியில் இருந்த போது இத்தாலியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர்கள் வாங்குவதில் ஊழல் நடைபெற்றது பற்றி தற்போது ஊடகங்களில் வெளி வந்துள்ளது. இப்படித் தான்
எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என ஊழல் ஆட்சியையே திமுக-வும், காங்கிரஸும் சேர்ந்து மத்தியிலும் மாநிலத்திலும் நடத்தி வந்தனர். ஆனால் திரு. கருணாநிதியும், திமுக-வினரும் தற்போது உத்தமர் போல் பேசி மக்களை ஏமாற்றி விடலாம் என பகல் கனவு காண்கின்றனர். இவர்களது ஊழல் பற்றி அனைத்தும் தெரிந்த தமிழக மக்களிடம் இவர்களது மாய்மாலம் எதுவும் எடுபடாது. இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி
திரு. கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சி தான்.
"விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதில் வல்லவர்" என்ற பட்டத்தை நீதியரசர் சர்க்காரியாவிடமிருந்து அந்தக் காலத்திலேயே பெற்றவர் தான் திரு. கருணாநிதி. வீராணம் ஊழல், பூச்சிக்கொல்லி மருந்து ஊழல், மஸ்டர் ரோல் ஊழல், கள்ள லாட்டரி சீட்டு விற்பனை,
நில அபகரிப்புகள், மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, ரேஷன் பொருட்கள் கடத்தல் என அனைத்திலும் பரந்து விரிந்து ஊழல் இருந்தது திமுக ஆட்சியில் தான்.
1,76,000 கோடி இழப்பை ஏற்படுத்திய 2ழு ஸ்பெக்ட்ரம் என்ற இமாலய ஊழலை புரிந்தது திமுக-வைச் சேர்ந்த மத்திய அமைச்சர். இந்த ஊழல் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் இதைப் பற்றி திரு. கருணாநிதி என்ன சொன்னார்? காங்கிரஸ் கட்சி தங்களை பழி வாங்குகிறது என்றார் திரு. கருணாநிதி. காங்கிரஸ் எதற்காக திமுக-வை
பழி வாங்க வேண்டும்? பழி வாங்குகிறது என்றால் காங்கிரஸுக்கான உரிய பங்கு கொடுக்கப்படவில்லை என பொருள் கொள்ளலாமா? அப்படி பழி வாங்கிய காங்கிரஸுடன்
தற்போது எதற்காக திமுக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது? இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ற வகையில் ஏழை மக்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக தொலைதொடர்பு துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியதாக அந்த மத்திய அமைச்சரும்,
திரு. கருணாநிதியும் கூறியுள்ளனர். எந்த ஏழை மக்கள் பயனடைய இவர்கள் புரட்சியை ஏற்படுத்தினார்கள்? திரு. கருணாநிதியும் அவர் குடும்பமும் என்ற ஏழை மக்களுக்கா?
`ஊழல் என்றாலே திரு. கருணாநிதி; திரு. கருணாநிதி என்றாலே ஊழல்' என்று சொல்லும் அளவுக்கு ஊழலுடன் பின்னிப் பிணைந்துள்ள திரு. கருணாநிதி, ஊழலற்ற ஆட்சி வழங்குவாராம்! இதை கேட்பவர்கள் என்ன ஏமாளிகளா? ஊழலையே தொழிலாகக் கொண்டுள்ள திமுக-காங்கிரஸ் கூட்டணி வாக்கு சேகரிக்க உங்களைத் தேடி வரும் போது அவர்களது ஊழல்களை எடுத்துச் சொல்லி அவர்களை விரட்டி அடியுங்கள். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரரோஷம்.)
வாக்காளப் பெருமக்களே! கடந்த 5 ஆண்டுகளில் எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளது. அந்த சாதனைகளில் எல்லாம் மிகப் பெரும் சாதனை தமிழகத்தை மின்வெட்டே இல்லாத மாநிலமாக மாற்றிக் காட்டியது தான்.
வாக்காள பெருமக்களே! முந்தைய திமுக ஆட்சியில் எப்படிப்பட்ட மின்வெட்டுக்கு நீங்கள் ஆளாக்கப்பட்டு இருந்தீர்கள் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. 10 மணி நேரத்திற்கும் மேலான மின் வெட்டு. மின்சாரம் எப்போது வரும் என்றே தெரியாத நிலைமை. படிக்கும் மாணாக்கர்கள் மின் வெட்டு காரணமாக படிப்பில் கவனம் செலுத்த இயலாத இடர்ப்பாடு. மின்சாரம் கிடைக்காததால் பம்பு செட்டுகளை இயக்கி விவசாயிகள் பாசனம் செய்ய இயலாது பரிதவித்த நிலை. விசைத்தறி நெசவாளர்கள் வாழ்வாதாரத்தையே இழந்த பரிதாபம்.
சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொழில் செய்ய இயலாமல்
முடங்கிப் போனதால் வேலை வாய்ப்பின்றி தொழிலாளர்கள் வேறு மாநிலங்களுக்கே சென்று விட்டனர். பெரும் தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பாதிப்பு மற்றும் தொழிலாளர்களுக்கு வேலையில்லாத நிலைமை என அனைத்துத் தரப்பு மக்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனர். குறிப்பாக, படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டிய மாணாக்கர்கள் மின்சாரம் இல்லாததால் படிக்க முடியாமல் அவதிப்பட்டனர்.
ஒட்டு மொத்த தமிழகமே மின் பற்றாக் குறை காரணமாக சின்னா பின்னமாகி இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் 2011-ஆம் ஆண்டு எங்களது தேர்தல் அறிக்கையில் இருண்ட தமிழகம் ஒளிமயமாக்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்தேன். அதன்படியே தமிழகம் ஒளிமயம் ஆக்கப்பட்டுள்ளது. இன்று மின் வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. வீட்டு மின் உபயோகிப்பாளர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், சிறு தொழில் நிறுவனங்கள், பெரும் தொழில் நிறுவனங்கள், அதிக அளவு மின்சாரம் தேவைப்படும் பெரிய தொழிற்சாலைகள், வணிக இடங்கள் என அனைவருக்கும் எவ்வித தங்கு தடையின்றி தரமான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
2011-ஆம் ஆண்டு எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்த பின், பல்வேறு மின் திட்டப் பணிகளை விரைந்து முடித்ததோடு, வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரம் வாங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இங்கே நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மத்திய அரசு திட்டங்களிலிருந்து நமக்கான பங்கு நீண்ட கால மற்றும் நடுத்தர கால மின் கொள்முதல் ஒப்பந்தங்களின் மூலம் மொத்தம் 7485.5 மெகாவாட் மின்சாரம் கடந்த 5 ஆண்டுகளில் கூடுதலாக நாம் பெற்று வருகிறோம். வாக்காளப் பெருமக்களே, 5 ஆண்டு காலத்தில் 7,485 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக பெறப்பட்ட ஒரு வரலாற்று சாதனையை நாங்கள் நிகழ்த்தியுள்ளோம். எனவே தான் 2015-ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் மின் வெட்டு என்பது அறவே இல்லை என்ற நிலையை நாம் எய்தியுள்ளோம்.
வாக்காள பெருமக்களே! திமுக-வினர் வாக்கு கேட்டு உங்களிடம் வருவார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு எதையுமே செய்யவில்லை
என நாவு கூசாமல் பொய் சொல்லுவார்கள். அப்போது அவர்களிடம் மீண்டும் மின்வெட்டால் துன்பப்படுவதற்காகவா உங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டு அவர்களை துரத்தியடியுங்கள். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?
இந்தியாவில் தொழில் துவங்க ஏற்றதாக உள்ள முதல் மூன்று மாநிலங்களில் தமிழ் நாடு உள்ளது. மொத்த உள் நாட்டு உற்பத்தியில் இந்தியாவிலேயே மகாராஷ்டிராவை அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழ் நாடு உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தமிழகத்தை விட இரண்டு மடங்கு பெரிய மாநிலமாகும். அதற்கு அடுத்த மாநிலமாக தமிழ் நாடு இருப்பது மிகப் பெரிய சாதனை. தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் தமிழகம் இந்தியாவிலேயே முதல் மாநிலம். தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழ் நாடு முதல் மாநிலம். புதிய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டதில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலம். மொத்த ஏற்றுமதியில் தமிழகம் மூன்றாம் இடம். வெளிநாட்டு நேரடி முதலீடுகளைப் பெறுவதில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.
2000-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான 11 ஆண்டுகளில், தமிழ்நாட்டிற்கு கிடைத்த வெளிநாட்டு நேரடி முதலீட்டுத் தொகையை விட, இரு மடங்கு அளவில் கடந்த 5 ஆண்டுகளில் எனது ஆட்சியில் கிடைத்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் 5,32,819 குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளன. இந்த தொழில் நிறுவனங்களில் 88,354 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. ஆனால், கடந்த திமுக ஆட்சியில் முதலீடு செய்யப்பட்டது வெறும் 15,906 கோடி ரூபாய் மட்டும் தான். முந்தைய திமுக ஆட்சியின் 5 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் 1,78,160 தான். கடந்த
5 ஆண்டுகளில் எனது ஆட்சியில் 14 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம், குறைந்தழுத்த மின் மானியம், மின்னாக்கி மானியம், மதிப்புக் கூட்டுவரி மானியம் என பல்வேறு சலுகைகளை எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு வழங்கி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 417 கோடி ரூபாய் அளவிற்கு எனது அரசால் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் 1 லட்சத்து
58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4,059 தொழில் நிறுவனங்கள் தொழில் துவங்க அனுமதி அளித்துள்ளது. தமிழ் நாட்டில் முதன் முதலாக உலக முதலீட்டாளர் மாநாடு சில மாதங்களுக்கு முன் நடத்தப்பட்டது. இதில் 2,42,160 கோடி ரூபாய் முதலீடு செய்ததற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதில் 45 நிறுவனங்கள் மூலம் 22,595 கோடி ரூபாய் முதலீடுகள் செய்யப்பட்டு பலர் வேலைவாய்ப்புகள் பெற்றுள்ளனர்.
மற்ற நிறுவனங்கள் நிலம் கையகப்படுத்துவது, நிதி ஆதாரங்களைப் பெறுவது
போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். விரைவிலேயே இவைகளும்
தங்கள் தொழில்களை நிறுவ நடவடிக்கைகள் எடுத்து விடும். இந்த முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவதற்கு முன்பே 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 31,706 கோடி ரூபாய் முதலீடுக்கு வகை செய்யயப்பட்டுள்ளது. வழி காட்டும் மையம் மூலம் 57 திட்டங்களில்
12,233 கோடி ரூபாய் ஈர்க்கப்பட்டுள்ளது.
தொழில்கள் எவ்வாறு வளர்ச்சி அடைந்துள்ளன; தொழிற்சாலைகளின் எண்ணிக்கை எவ்வாறு உயர்ந்துள்ளது; எவ்வளவு பேர் வேலைவாய்ப்பு பெற்றிருக்கிறார்கள் என்பது பற்றியெல்லாம் நான் தற்போது எடுத்துக் கூறியுள்ளேன். ஆனால் திரு. கருணாநிதியும், அவரது தனயனும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தொழில் வளர்ச்சியே இல்லை என்று சொல்லி வருகின்றனர். திமுக ஆட்சியில் தான் தொழில் வளர்ச்சி இருந்தது என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். 10 மணி நேரம் மின் வெட்டு என இருந்த திமுக ஆட்சியில், எப்படி தொழில் வளர்ச்சி அடைய முடியும்?
திரு. கருணாநிதியும், அவரது தனயனும் சொல்லி வரும் தொழில் வளர்ச்சி அவர்களது குடும்ப தொழில் வளர்ச்சி பற்றி தான்.
2,000 ரூபாய் மதிப்பிலான வண்ணத் தொலைக்காட்சி பெட்டியை கொடுத்து விட்டு ஒவ்வொரு குடும்பத்திடமும் கேபிள் டிவி கட்டணமாக ஆண்டொன்றுக்கு
3,000 ரூபாய் என்ற அளவில் பணம் வசூலித்த குடும்பம் தான் திரு. கருணாநிதியின் குடும்பம். இந்த வகையில் ஓர் ஆண்டில் கிட்டத்தட்ட 5,000 கோடி ரூபாய் வரை
வசூலித்தவர்கள் தான் திரு. கருணாநிதியின் குடும்பம். 5 ஆண்டுகளில் 25,000 கோடி ரூபாய் அளவிற்கு அவர்களுக்கு வருமானம் கிடைத்திருக்கும். தற்போது, எனது ஆட்சியில் அரசு கேபிள் டிவி மூலம் 70 ரூபாய் என்ற மிகக் குறைந்த கட்டணத்தில் கேபிள் இணைப்பு வழங்கப்படுவதால் இவர்களது வருமானம் போய்விட்டது. இதனால் தான் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி இல்லை என்று திரு. கருணாநிதி சொல்கிறாரோ?
தமிழகத்தில் கிரானைட் கொள்ளையில் ஈடுபட்டு கோடி கோடியாக சுருட்டியவர்கள்
திரு. கருணாநிதியின் குடும்பத்தினர். தற்போது கிரானைட் கொள்ளையில் ஈடுபட முடியவில்லை என்பதால் அவர்கள் குடும்பத்தின் இந்த தொழில் வளர்ச்சி இல்லை என்று சொல்கிறாரோ? அன்றைய திமுக ஆட்சியில் புதிய மதுபான தொழிற்சாலைகள் துவங்க
அனுமதி வழங்கப்பட்டது. அது போன்ற அனுமதி தற்போது வழங்கப்படாததால் தொழில்கள் வளர்ச்சி அடையவில்லை என்கிறாரோ? தொழில்கள் வளர்ச்சி என்பது நாட்டில் புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதும், அதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகளும் ஏற்படுவதும் தான். தனிப்பட்ட குடும்பத்திற்கு ஏற்படுகின்ற வளர்ச்சி தொழில் வளர்ச்சி ஆகாது.
இப்போது, அத்திக்கடவு-அவினாசி திட்டம் பற்றி சில விவரங்களை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். பவானி ஆற்றின் உபரி நீரை பல நீர் ஆதாரங்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் அத்திக்கடவு-அவினாசி கால்வாய் திட்டம் 1,862 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயார் செய்யப்பட்டு வெள்ள மேலாண்மை திட்டத்தின் கீழ், நிதி உதவி பெற திமுக அங்கம் வகித்த முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எனது அரசால் அனுப்பப்பட்டது. மத்திய அரசு இதை நிராகரித்து விட்டது. பாசனக் கட்டுமானங்களை நவீனப்படுத்துவதன் மூலம் சேகரிக்கப்படும் நீரை பயன்படுத்தி பாசனத் திட்டமாக மாற்றி அமைக்கலாம் என மத்திய அரசு தெரிவித்தது.
பவானி வடிநிலத்தில் அமைந்துள்ள காளிங்கராயன் வாய்க்காலின் தலைப் பகுதிகள் 91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தடப்பள்ளி
வாய்க்கால் மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால்களின் தலைப் பகுதிகள் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனப்படுத்தப்பட்டுள்ளன. பவானி வடிநிலத்தில் உள்ள பிற பாசன கட்டுமானங்களை நவீனப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை செயல்படுத்தும் வகையில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகங்களின் ஒப்புதல் பெறுவதற்கும், நிலம் கையகப்படுத்தத் தேவையான ஆய்வுகள் மேற்கொண்டு ஆவணங்கள் தயாரிக்கவும் தேவையான பணிகளை மேற்கொள்ள ஒரு ஆலோசனை நிறுவனத்தை நியமித்து
நடவடிக்கைகளை மேற்கொள்ள, 3 கோடியே 27 லட்சம் ரூபாய் கடந்த பிப்ரவரி மாதம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வாக்காளப் பெருமக்களே, அத்திகடவு-அவினாசி திட்டம் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியை இந்த நேரத்தில் நான் உங்களுக்கு அளிக்கிறேன்.
இப்பொழுது பல அரசியல் கட்சித் தலைவர்களும் மதுவிலக்கு பற்றி பேசி வருகிறார்கள். எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தவுடன், மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும். முதலில் சில்லறை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும். கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். பின்னர் சில்லறை மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும். குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி உள்ளோரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும். இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக பூரண மதுவிலக்கு என்னும் லட்சியத்தை நாம் அடைவோம்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் மதுவிலக்குக்கு சட்டம் கொண்டு வருவோம் என்றும், அரசு மதுபான விற்பனையிலிருந்து விலகும் என்றும் சொன்னது பற்றி நான் கேள்வி கேட்டதும், திரு. கருணாநிதி ஒரு கூட்டத்தில் முதல் கையெழுத்தே மதுவிலக்குக்குத் தான் என்று ஒரு வெற்று வாக்குறுதியை அளித்தார். அதை மாற்றி தஞ்சாவூர் கூட்டத்தில் ஒரே நாளில் சட்டம் இயற்றுவோம் என மீண்டும் சொல்லியுள்ளார். அதே கூட்டத்தில் மதுவிலக்கு என்றால் மதுக்கடைக்கு யாரும் செல்லக் கூடாது. மதுக்கடைக்கு செல்கின்றவர்களை தீண்டத் தகாதவர்களாக பார்க்க வேண்டும் என ஒரு புதிய விளக்கத்தையும் கொடுத்துள்ளார். இப்படி முன்னுக்குப் பின் முரணாக
திரு. கருணாநிதி பேசுவதிலிருந்து ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது. மதுவிலக்குக் கொள்கையில் திமுக-வுக்கு எந்தவித அக்கறையும் இல்லை. மதுவிலக்கைப் பயன்படுத்தி வாக்குகளைப் பெற முடியுமா என்று தான் மதுவிலக்குப் பற்றி அவர்கள் பேசி வருகிறார்கள்.
வாக்காளப் பெருமக்களே, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் நிறைவேற்றப்பட்ட சில முக்கியப் பணிகளைப் பற்றி இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். நீலகிரி மாவட்டத்தில் சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம் செயல்படுத்திட சில்லஹல்லா அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை மற்றும் ஒப்பந்தப் புள்ளிகள் தயாரிப்பதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது. மின் நிலையம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் தமிழ்நாடு மின் வாரியத்தால் திறக்கப்பட்டுள்ளன. காற்றாலை மின் நிலையங்களிலிருந்து மின்சாரத்தை வெளியேற்ற 1,300 கோடி ரூபாய் மதிப்பில் 3 துணை மின் நிலையங்கள், உயர் மின் அழுத்தப் பாதை ஆகியவற்றை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது விரைவில் முடிவடையும்.
கோயம்புத்தூரில் மூன்றாவது டைசல் பயோ பார்க் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. கோயம்புத்தூர் டைடல் பார்க்கில் சிறிய மற்றும் நடுத்தர தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உடனடியாக தொழில் துவங்க ஏதுவாக, அபிவிருத்தி மையம் ஒன்று நிறுவப்பட்டு வருகிறது. முதற்கட்ட பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு
300 சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்படும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 7 பேரூராட்சிகள் மற்றும் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த 134 ஊரகக் குடியிருப்புகள் பயன் பெறும் வகையிலான
ஒரு கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் 130 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகின்றன.
இன்னும் பத்து மாத காலத்திற்குள் இந்தப் பணிகள் முடிவடையும். காரமடை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 185 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் முடிவடையும் நிலையில் உள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சியின் எல்லை விரிவாக்கத்திற்கு முன்பிருந்த பகுதிகளுக்கான பில்லூர் இரண்டாவது குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் தண்ணீர் கிடைக்கும் வகையில் 556 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டத்திற்கு விருப்பம் கோரும் ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டுள்ளன. இத்திட்டம் விரைவில் துவங்கப்படும்.
நீலாம்பூரில் ரயில்வே மேம்பாலம்; போத்தனூர்-மதுக்கரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே மேம்பாலம்; நொய்யல் ஆற்றின் குறுக்கே மேம்பாலங்கள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. காந்திபுரம் பகுதியில் இரண்டடுக்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பல்லடம் நகராட்சி, 23 பேரூராட்சிகள் மற்றும் 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் குடிமங்கலம் மற்றும் உடுமலைப்-பேட்டைக்கான குடிநீர் மேம்பாட்டு திட்டம் ஆகியவை 279 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன. பொதுப் பணித் துறை வாயிலாக 20 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. 7 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. பரம்பிக்குளம் ஆழியாறு உட்பட 8 அணைகளின் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தைப் போலவே கேரள மாநிலத்திலும் மக்கள் நலப் பணிகள் பலவற்றை நிறைவேற்றும் நல்லெண்ணத்தோடு, அங்கே 7 சட்டமன்றத் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்கள் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குச் செல்லும் பொழுது, இடுக்கி மாவட்டத்தில் உள்ள High Range-ஐ சுற்றுலா மையமாக மாற்றவும், விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைக்கவும், சிறந்த மருத்துவ வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மூணாறில் ரோப் வே போக்குவரத்து கொண்டு வரவும், தேவிகுளம் தொகுதியில் உள்ள தேயிலைத் தொழிற்சாலைகளின் தொழிலாளர்களுக்கு தொழில் பாதுகாப்பு வழங்கவும், தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்லூரிப் படிப்பை மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். சின்னாறு ஏழிமலை கோவில் பகுதிகளில் காய்கறி சந்தைகள் அமைக்கவும், சித்தூர் மூலத்துறை அணை தூர்வாரப்படவும், அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வலதுகரை வாய்க்கால் வேலந்தாவளம் வரை நீட்டிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மலம்புழா தொகுதியின் நடக்காவு என்ற இடத்தில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்தப் பணிகள் எல்லாம் சிறப்புற நடைபெற்றிட, கேரள மாநிலத்தில் அதிமுக-வின் சார்பில் போட்டியிடும் 7 வேட்பாளர்களுக்கும் ``தொப்பி'' சின்னத்தில் வாக்களித்து இவர்கள் அனைவரையும் மகத்தான வெற்றி பெறச் செய்திட வேண்டும் என்று, கேரள மாநில வாக்காளப் பெருமக்களை, இந்தப் பொதுக்கூட்டத்தின் வாயிலாக அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.