ஈழத்தமிழர் பிரச்னையை விவாதிக்காத அரசியல் கட்சிகளைப் புறக்கணிக்க வேண்டும்: பழ.நெடுமாறன்
By பெங்களூரு | Published On : 02nd May 2016 12:18 AM | Last Updated : 02nd May 2016 08:08 AM | அ+அ அ- |

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஈழத்தமிழர் பிரச்னையை விவாதிக்க முன்வராத அரசியல் கட்சிகளை மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை தினமணி நிருபரிடம் அவர் கூறியது: ஈழத்தமிழர்களின் பிரச்னை முன்பைக் காட்டிலும் இப்போதும் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. தமிழர்களின் வாழ்விடங்களில் சிங்களர்களின் குடியேற்றம் அதிகமாக்கப்பட்டுள்ளது. தமிழர் பகுதியில் மேற்கொள்ளப்படும் வணிகம், தொழில் உள்ளிட்டவை முழுமையாக சிங்களர்களின் கைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் சிங்களர்களை அண்டிப் பிழைக்க வேண்டிய பரிதாபநிலைக்கு ஈழத்தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 10 தமிழர்களுக்கு ஒரு ராணுவவீரர் என்ற கணக்கில் தமிழர் பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு, ராணுவத்தின் மேலாதிக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அபாயகரமான சூழலால் இப்போதும் ஈழத்தமிழர்கள் அச்சத்தில் வாழ வேண்டிய பரிதாப நிலையே உள்ளது. ஈழத்தமிழர்களின் அவலநிலை குறித்து தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் எந்த அரசியல் கட்சியும் வாய்திறக்காதது அதிர்ச்சி அளிக்கிறது. ஈழத்தமிழர் பிரச்னையை விவாதிக்க முன்வராத அரசியல் கட்சிகளை அடையாளம்கண்டு, வருகிற சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
தமிழ்நூலகம் சூறை: பெங்களூரில் செயல்பட்டு வந்த திருக்குறள் மன்றத்தின் தமிழ்நூலகம் சூறையாடப்பட்டு, அங்கிருந்த தமிழ்நூல்கள் வீதியில் வீசப்பட்டு நாசப்படுத்தப்பட்டுள்ளன. இச்சம்பவம் உலகத் தமிழர்களை வேதனை அடையச் செய்துள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நூலகத்தை அழிப்பது உயர்ந்த பண்பாட்டைச் சிதைப்பதற்கு ஈடாகும். எனவே, தமிழ்நூலகத்தை பழையபடி செயல்படவைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தநூலகத்திற்கு நான் எழுதிய நூல்கள் தவிர 150 நூல்களை அன்பளிப்பாக அளிக்கிறேன் என்றார் அவர்.