திருவாரூரில் வைகோவுக்கு கருப்புக் கொடி காட்டிய 100 பேர் மீது வழக்குப்பதிவு
By திருவாரூர் | Published On : 02nd May 2016 03:39 AM | Last Updated : 02nd May 2016 08:02 AM | அ+அ அ- |

திருவாரூரில் வைகோவுக்கு கருப்புக் கொடி காட்டிய 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூருக்கு சனிக்கிழமை இரவு மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.எஸ். மாசிலாமணிக்கு ஆதரவாக வாக்கு கேட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்தார். மயிலாடுதுறையிலிருந்து திருவாரூருக்கு வேன் மூலம் வந்த போது சேந்தமங்கலம் நாலுகால் மண்டபம் அருகே திமுகவினர் சிலர் கருணாநிதியைத் தவறாக சாதிப் பெயரைக் கூறி விமர்சித்த வைகோவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருப்புக் கொடியைக் காட்டினர்.
அவர்களைப் பார்த்து வைகோ வணக்கம் தெரிவித்துவிட்டு பிரசாரம் நடைபெற்ற திருவாரூர் பேருந்து நிலையம் அருகே வந்து பேசினார். இறுதியாக வைகோ பேசும்போது, எனக்கு கருப்புக் கொடியைக் காட்டினார்கள் எனக் கூறினார். இதைத் தொடர்ந்து மக்கள் நல கூட்டணிக் கட்சியினரும் திமுகவினருக்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் பேருந்து நிலையத்தில் கருணாநிதியின் படத்தைக் கொளுத்தி சிறிது நேரம் சாலை மறியல் செய்தனர்.
இதுதொடர்பாக திருவாரூர் நகர காவல் ஆய்வாளர் ராஜா அளித்த புகாரின் பேரில், கருப்புக் கொடி காட்டியதாக திமுகவைச் சேர்ந்த நகர்மன்றத் துணைத் தலைவர் டி.செந்தில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரஜினி சின்னா, தாடிமோகன் உள்ளிட்ட 100 பேர் மீதும், பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதாக மக்கள் நலக் கூட்டணியைச் சேர்ந்த கூடூர் சீனிவாசன் உள்பட 50 பேர் மீதும் நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.