தேர்தலுக்காக மக்களை சந்திப்பவர் ஜெயலலிதா: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
By DN | Published On : 13th May 2016 08:44 AM | Last Updated : 13th May 2016 08:44 AM | அ+அ அ- |

தேர்தலுக்காக மக்களை சந்திப்பவராக முதல்வர் ஜெயலலிதா உள்ளார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் குற்றம்சாட்டினார்.
பாபநாசம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் டி.ஆர். லோகநாதனுக்கு ஆதரவாக, கபிஸ்தலம் பாலக்கரை கடைவீதியில் அவர் மேலும் பேசியது:
தமிழகத்தில் 9 ஆண்டுகள் முதல்வராக இருந்த காமராஜர் நாட்டின் விடுதலைக்காக 10 ஆண்டுகள் சிறையில் இருந்தார். ஆனால் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா ஊழல் செய்து விட்டு சிறைக்குச் சென்று வந்தவர். தமிழக முதல்வர் யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம்கள் நடத்துகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் மழை,வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 3 மாவட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறாத ஜெயலலிதா தேர்தல் வந்தவுடன் சென்னை மாநகரைச் சுற்றி வந்து தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
காமராஜர் ஆட்சியில் ஊருக்கு ஊர் பள்ளிக்கூடங்கள் திறந்து கல்வி புகட்டினார். ஜெயலலிதா ஆட்சியில் ஊருக்கு ஊர் மதுக்கடைகள் திறந்து அனைவரின் வாழ்கையையும் சீரழித்து வருகிறார். இந்நிலை மாறி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல் படுத்திட பாபநாசம் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் டி.ஆர். லோகநாதனுக்கு கை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.
பிரசாரத்தின் போது தமாகா கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஆர். பூபதி ராஜாவுக்கு இளங்கோவன் சால்வை அணிவித்து கெüரவித்தார். முன்னதாக கபிஸ்தலத்துக்கு வந்த இளங்கோவனுக்கு திமுக வடக்கு மாவட்ட செயலாளர் சு. கல்யாணசுந்தரம்,மாவட்ட காங்கிரஸ் கட்சி துணை தலைவர்கள் மாங்குடி கனி.ரெங்கராஜன்,ராஜன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.