மக்கள் நலக் கூட்டணி 160 தொகுதிகளைக் கைப்பற்றும்: பிரேமலதா
By DN | Published On : 13th May 2016 06:46 PM | Last Updated : 13th May 2016 06:46 PM | அ+அ அ- |

ஸ்ரீபெரும்புதூர் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி 160 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் மா.வீரக்குமாரை ஆதரித்து, சுங்குவார்சத்திரம் பகுதியில் அவர் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியது:
கடந்த 50 ஆண்டுகளாக திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சி அமைத்து, தமிழகத்தை ஊழல் நிறைந்த மாநிலமாக மாற்றி விட்டன. இந்த நிலை மாற வேண்டும் என்பதற்காகவே தேமுதிக தலைமையிலான மெகா கூட்டணி உருவாகி உள்ளது. இக்கூட்டணி உருவானபோது மூன்றாவது அணி என்று சொன்னார்கள். ஆனால் தற்போது எங்கள் அணிதான் முதல் அணியாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போகும் அணியும் இதுதான்.
கருத்துக் கணிப்புகளைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் அவை உண்மையானதாக இருந்ததே இல்லை. ஆளும் கட்சி, ஆண்ட கட்சி ஆகியவற்றிடம் காசு வாங்கிக் கொண்டு ஊடகங்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் சுமார் 700 தொழிற்சாலைகளுக்கு மேல் இயங்கி வருகின்றன. இத்தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதில்லை. பணிப் பாதுகாப்பு இல்லை. நமது கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் உரிய வேலை வாய்ப்பும், பணிப் பாதுகாப்பும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது புலனாய்வுத் துறை மூலமாக கிடைத்துள்ள தகவலின்படி, தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி 130 - 160 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றார்.