முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் 132-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் வியாழக்கிழமை ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
திருத்தணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 6 அடியில் வைக்கப்பட்டுள்ள டாக்டர் ராதாகிருஷ்ணனின் சிலைக்கு, திருத்தணி எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன், மாவட்டக் கல்வி அலுவலர் பழனிசேகர், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் குப்புசாமி, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பில், மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழாயொட்டி, மாணவிகள், தங்களது ஆசிரியைகளுக்கு மலர் கொத்து மற்றும் ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர். மேலும், ஆசிரியைகள் காலில் விழுந்து வணங்கியும் ஆசி பெற்றனர்.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கேபிள் எம்.சுரேஷ், பொருளாளர் குமரவேல் ஆகியோர் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில், உதவித் தலைமை ஆசிரியர்கள் ஜெயசந்திரன், சேஷாசலம் பட்டதாரி ஆசிரியர்கள் சக்கரபாணி, வெங்கடேசன், முஸ்தபா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் திருத்தணி ஆலமரம் தெருவில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள ராதாகிருஷ்ணனின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், திருத்தணி கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் சிறந்த 120 ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த சொந்த ஊரான வெங்கடாபுரம் கிராம மக்கள் கேக் வெட்டி, அவரது பிறந்த நாளைக் கொண்டாடினர்.
ஊத்துக்கோட்டையில்..
ஊத்துக்கோட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், அமைந்துள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் சிலைக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ஜி. சுரேஷ் மாலை அணிவித்தார்.
பின்னர், பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவர் படையினர் மரியாதை செலுத்தினர். இதில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கோ.சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.