என்றைக்கு ஒரு பெண், நகைகள் அணிந்து கொண்டு, தன்னந்தனியாக, நள்ளிரவில், யார் துணையுமின்றி வெளியில் போக முடிகிறதோ அன்றுதான் இந்தியா உண்மையில் சுதந்திரம் அடைந்ததாகப் பொருள்' என்றார் காந்தியடிகள். அவர் குறிப்பிட்டது நகைகளைக் கவரும் கள்வர்களைப் பற்றி. ஆனால், இன்றோ ஒரு பெண், அது சிறு குழந்தையானாலும் சரி, மூதாட்டியானாலும் சரி, நள்ளிரவென்ன, நண்பகலில்கூடத் தனியே போக முடியாத நிலை உருவாகியிருக்கிறது.
இதைவிடக் கொடுமை, பெற்றோரை இழந்து பாதுகாப்பும், அன்பும் கிடைக்கும் என நம்பி காப்பகங்களில் வாழும் இளந்தளிர்கள், பெண் பொறுப்பாளர்களின் ஒத்துழைப்போடு பாலியல் வன்முறைக்கு உள்ளாகியிருப்பது. அரசு நடத்தும் காப்பகங்களிலேயே இந்த அவலம் என்றால், தனியார் நடத்தும் காப்பகங்களின் நிலை என்னவோ!
ஆயிரம் சட்டங்களும், அவற்றை நடைமுறைப்படுத்த நீதிமன்றங்களும் இருந்தும் உத்தரப் பிரதேசத்திலும், பிகாரிலும், அரசு உதவி பெற்று வந்த காப்பகங்களே பால் மனம் மாறாத சிறுமியரையும், புகலிடம் தேடி வந்த பெண்களையும் காம வெறி பிடித்தக் கயவர்களுக்கு இரையாக அனுப்பி இருக்கின்றன. இதற்கு ஒரு மருத்துவமனையும் அதிலிருந்த மருத்துவர்களும், செவிலியர்களும் உடந்தை. ஆடுகளுக்கும், மாடுகளுக்கும் ஹார்மோன் ஊசி போட்ட காலம் போய் இப்போது சிறு தளிர்களுக்கும் ஹார்மோன் ஊசி போட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள்.
இக்கொடுமை பல காலமாகத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இது அரசுக்கோ, ஆட்சியாளர்களுக்கோ, காவல் துறைக்கோ தெரியவில்லையா அல்லது தெரிந்தும் ஆதரவற்ற பெண்கள்தானே என்ற மெத்தனமா? தாய்நாடு' என்கிறோம், பாரத மாதா' என்கிறோம். அந்தத் தாயின் வடிவங்களான சிறுமிகளின் அவலநிலையைப் பற்றி அறிந்த பின்னரும் நாம் உண்மையிலேயே சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று எண்ணினால் நாம் அனைவரும் அறிவிலிகள் மட்டுமல்ல, நெஞ்சில் ஈரமே இல்லாத அரக்கர்களுமாவோம்.
உன்னாவ், கதுவா கொடுஞ்செயல்களிலிருந்து நாம் மீண்டு வருமுன் முசாபர் நகர், பாட்னா சம்பவங்கள் நம்மை அதிர்ச்சியடைய வைத்திருக்கின்றன. பொள்ளாச்சியில் சில ஆண்டுகளுக்கு முன்னர், காப்பகம் ஒன்றில் நடந்த வன்கொடுமைச் சம்பவங்களை நாம் மறந்துவிட்டோம். சிறுமியர்க்கும், பெண்களுக்கும், மூதாட்டிகளுக்கும் நடந்து கொண்டிருக்கும் இத்தகைய கொடுமைகளுக்கு என்ன காரணம்? என்ன தீர்வு?
நம் சமுதாயத்தில் ஆண்கள், பெண்களைவிட ஒருபடி மேலே என்ற எண்ணம் வேரூன்றிப் போயிருக்கிறது. கல்வி, பணம், அந்தஸ்து இவை எதுவுமே ஆண்-பெண் சமத்துவத்துக்கு அடிகோலவில்லை. பெண்களுக்கு உரிமையுமில்லை, பாதுகாப்புமில்லை. இதற்கு முக்கிய காரணங்கள் ஆண்களின் மனோபாவம், மக்களின் சகிப்புத்தன்மை மற்றும் பயம், அரசின் மெத்தனம் ஆகியவையே.
ஆண்கள், பெண்களை ஒரு போகப் பொருளாகத்தான் கருதுகிறார்கள். திரைப்படங்களும், ஊடகங்களும் இந்தப் போக்கை ஊக்குவிக்கின்றன. ஒரு பெண்ணைப் பின் தொடர்தல், சீண்டுதல், தொடுதல், கேலி செய்தல் போன்றவையெல்லாம் தண்டனைக்குரிய குற்றங்கள் என்று சட்டம் இருந்தும், திரைப்படங்கள் காலங்காலமாக இப்படித்தான் ஆண்-பெண்ணைச் சித்திரிக்கின்றன. ஆண்மையின் அடையாளம், பாலியல் வன்முறைதான் என்று திரைப்படங்கள் போதிக்கின்றனவே, இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமல்லவா? இப்படி நடிக்க மாட்டோம் என்று நடிகர்கள் மறுக்கலாமல்லவா?
கேரளத்தில் ஒரு பிரபல நடிகை பாலியல் வன்முறைக்கு ஆளானபோது ஒரே ஒரு நடிகர் மட்டும் எனது சக நடிகையின், தோழியின் வலியை உணர்கிறேன். இதுவரை பெண்களை இழிவுபடுத்தும் விதமாக நான் நடித்திருந்தால் மன்னிப்புக் கோருகிறேன். இனி அவ்வாறு நடிக்க மாட்டேன்' என்று கூறினார். அத்தகைய மனோபாவம் எல்லா ஆண்களுக்கும் வர வேண்டும். பெண்களுக்கு இழைக்கப்பட்ட குற்றங்களைக் கண்டு மனம் வருந்தி, இனி எப்பெண்ணுக்கும் அப்படி நிகழாவண்ணம் பெண்களைப் பாதுகாக்க வேண்டும்.
ஆனால், திரைப்படங்களில் காட்டப்படும் வக்கிரமான காட்சிகளைப் பார்த்து, ஆகா, நாமும் பெண்களை இப்படி இழிவுபடுத்தலாம்' என்ற மனோபாவம் ஆண்களுக்கு, குறிப்பாக, இளைஞர்களுக்கு ஏற்படுகிறது. ஒரு பெண் பூப்பெய்தி, திருமணம் செய்து கொண்டு, குழந்தைகளைப் பெற்றெடுத்து, குடும்பத்தை நிர்வகித்து, வாழ்நாள் முழுவதும் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் மிகுந்த சிரமங்களை எதிர் கொள்கிறாள். பெண்களின் வலியை ஆண்கள் உணரவேண்டும். உணர்ந்து பெண்மையை மதிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஆண்-பெண் குழந்தைகளை வளர்க்கும்போதே சமமான பொறுப்புகளையும், உரிமைகளையும் கொடுத்து பெற்றோர்தான் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும்.
மக்களின் சகிப்புத்தன்மையும், தட்டிக் கேட்கத் துணிவின்றிப் பயம் கொள்ளுதலும் பெண்கள் மீதான வன்முறைக்குத் துணைசெய்கின்றன. பிகாரில் தொடர்ந்து பலகாலமாக காப்பகத்துச் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகி வந்திருக்கின்றனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இரவுகளில் சிறுமிகளின் அழுகைக் குரல் கேட்டதாகக் கூறியுள்ளனர். கேட்டும் அவர்கள் அமைதியாக இருந்திருக்கிறார்கள் என்று எண்ணும்போது நெஞ்சு கொதிக்கிறது.
எல்லோரும் சேர்ந்து காவல்துறையில் புகார் செய்திருக்கலாம். அப்படிச் செய்தும் காவல்துறை கண்டும் காணாமல் இருந்திருக்கலாம். அதன் பிறகு மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்திருக்கலாம். அங்கும் அரசியல் தலையீடு காரணமாக ஒன்றும் நடக்காமல் போயிருக்கலாம். அதன் பிறகாவது எல்லோரும் ஒன்று திரண்டு அந்தக் கயவர்களை அடித்து உதைத்து, அச்சிறுமியரைக் காப்பாற்றி இருக்க வேண்டாமா?
தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு இப்படி நடந்தால் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பார்களா? யாருக்கோ ஏதோ நடந்தால் நமக்கென்ன?' என்ற அலட்சியமும் நடப்பது நடக்கட்டும், நாம் செய்யக்கூடியது ஒன்றுமில்லை'என்ற சகிப்புத்தன்மையும், நம்மை ஏதும் செய்து விடுவார்களோ?' என்ற பயமும் அந்தச் சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமைக்குத் துணை செய்திருக்கின்றன.
கண்ணெதிரே ஓர் அநியாயம் நடக்கும்போது அதைத் தட்டிக் கேட்கவேண்டும். அப்படித் தட்டிக் கேட்பதற்குஎல்லோருக்கும் தைரியம் வராதுதான். துணிவோடு ஒருவர் தட்டிக் கேட்கும்போது பலர் அவருக்குத் துணையாக நிற்க வேண்டும்.
அரசு தன் கடமையிலிருந்து முற்றிலும் தவறி விட்டது. ஆதரவில்லாத சிறுமிகளையும், அபலைப் பெண்களையும் காப்பாற்ற வேண்டிய அரசு, அவர்களை மொத்தமாகக் கைவிட்டு விட்டது. காப்பகங்கள் ஏற்படுத்தினால் மட்டும் போதாது. அங்கு என்ன நடக்கிறது, அங்குள்ளவர்களுக்கு தரமான உணவு, உடை, கல்வி ஆகியவை வழங்கப்படுகின்றனவா, அவர்களுக்குக் குறைகள் ஏதும் உள்ளதா என்றெல்லாம் அவ்வப்போது சோதனையிட்டுப் பார்க்க வேண்டும். காப்பகங்களை ஊர்க்கடைசியில் ஏற்படுத்தாமல் நகருக்குள் பொதுமக்களின் பார்வையில் இருக்கும்படிஅமைத்தல் நல்லது. பெண் குழந்தைகளும், பெண்களும் இருக்கும் காப்பகங்களுக்குப் பெண்களையே எல்லாப் பொறுப்புகளிலும் அமர்த்த வேண்டும். அப்பெண்கள் நன்னடத்தை உள்ளவர்கள், சேவை மனப்பான்மை கொண்டவர்கள் என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
காப்பகங்களைக் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இக்குழுவில் சமூகத்தில் மதிக்கப்படும் நபர்கள் இருக்கவேண்டும். அவர்களுக்கு எந்நேரம் வேண்டுமானாலும் காப்பகங்களைச் சோதனையிட அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். காப்பகங்களுக்குத் தக்க காவல் தரப்பட வேண்டும். அண்மையில் நடைபெற்ற சம்பவங்களில் பெண் பொறுப்பாளர்களே தவறிழைத்திருக்கிறார்கள். அவர்களை மிகக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். பிற்காலத்தில் எந்தவொரு பொறுப்பும் அவர்களுக்கு வழங்கப்படாத வண்ணம் அவர்களைக் கொடுங்குற்றவாளிகளாக அறிவிக்கவேண்டும். அவர்களது சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வுக்கு வழங்கப்பட வேண்டும். அவர்களுக்குத் துணைபோன காவல்துறையினர், பிற அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் அனைவரும் சிறையில் அடைக்கப்படவேண்டும்.
பனிரெண்டுவயதுக்குட்பட்டசிறுமியரிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை வழங்கப்படும்' எனஅரசு அறிவித்துள்ளது. ஒரு பெண், எந்த வயதினராக இருந்தாலென்ன, பாலியல் வன்முறைக்கு ஆளானால் அவரது உடல், மனம், வாழ்க்கை, எதிர்காலம் எல்லாமே மொத்தமாகச் சிதைக்கப்படுகின்றன. பாலியல் வன்முறை வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அதிக எண்ணிக்கையில் ஏற்படுத்த வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனை விதிக்கப்படவேண்டும்.
ஒவ்வொரு நாளும் சிறுமியரும், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களும் காணாமல் போகிறார்கள்; கடத்தப்படுகிறார்கள். பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும், திருவிழாக்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி அவற்றைக் காவல் நிலையங்களோடு இணைக்க வேண்டும். காவல் துறையிலேயே பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கென்று ஒரு தனிப்பிரிவை அமைக்க வேண்டும். இப்பிரிவில் பெண் காவலர்களே நியமிக்கப்படவேண்டும். அரசும், நாமும் விழித்துக்கொண்டு, பொறுப்புடன், துணிவாகச் செயல்பட்டால் தான், பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும். இல்லையெனில் சுதந்திர இந்தியாவில் பெண்கள் அடிமைகளே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.