
அன்றைய "சென்னை ராஜதானி' என்பது இன்றைய முழு தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் பகுதிகள் அடங்கிய மிகப்பெரிய பிரதேசமாக இருந்தது. இன்றைய தமிழக ஆளுநர் மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு செய்வதே மிகப்பெரிய விவாதப் பொருளாக இருக்கும் போது "மேன்மை தங்கிய பிரிட்டிஷ் அரசி'யால் நியமிக்கப்பட்ட கவர்னர் அடிமைப்பட்ட இந்திய மாவட்டம், ஒன்றுக்கு ஆய்வுக்காக வந்தால் எப்படியிருக்கும் கற்பனை செய்து பாருங்கள். அப்படி ஓர் ஆளுநர்ஆய்வுக்காக மதுரை வந்து கலெக்டர் உட்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து கொண்டிருக்கும்போது ஒரு ஜமீன் சம்பந்தமாகவும் இந்துக்கள் சட்டத்திலும் அவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. உடனடியாக கலெக்டரிடம் அரசாங்க வக்கீலை அழைத்து வரும்படி உத்தரவிட்டார். கலெக்டர் தாசில்தாரைப் பார்க்க அவர் அன்றைய மதுரை அரசு வழக்கறிஞர் வீட்டிற்கு சென்று கவர்னரைச் சந்தித்து வர வேண்டுமென வினயமாக அழைத்தார்.
அரசு வழக்கறிஞர் ஆச்சர்யத்துடன் ""கவர்னருடன் பிரமுகர்கள், சந்திப்பு மாலையில் தானே இருக்கிறது. இப்பொழுது என்ன அவசரம்?'' என்று கேட்டார். தாசில்தார் கவர்னருக்கு சட்டத்தில் ஏற்பட்ட சந்தேகம் பற்றி சொல்லி அதற்கு விளக்கம் கேட்க உங்களை அழைத்து வரச் சொன்னார் என்று கூறினார். சிவந்த நிறமும், கூரிய மூக்கும் தீர்க்கமான அழகான முகமும் குட்டையான உருவமும் கொண்ட அந்த அரசு வக்கீலின் முகம் மேலும் சிவந்து விட்டது. ""அரசு அலுவலர்களுக்கு சட்ட சம்பந்தமான விளக்கம் வேண்டுமென்றால் அவர்கள் அரசு வக்கீலை அலுவலகத்தில் வந்து சந்திக்க வேண்டும். கட்சிக்காரர்கள் வக்கீலை சந்திக்க வரவேண்டுமே தவிர, வக்கீல்கள் கட்சிக்காரரை சென்று சந்திப்பது மரபல்ல. அதிகாரி கவர்னராக இருந்தாலும், தாசில்தாராக இருந்தாலும் விதி ஒன்று தான்'' என்றார் அழுத்தமாக. நடுங்கிக் கொண்டே தாசில்தார் திரும்பிச் செல்ல தகவல் கவர்னரை எட்டியது.
என்ன செய்தார் கவர்னர் தெரியுமா? என்னையும் அரசு வக்கீலையும் நியமித்தவர் மேன்மை தங்கிய அரசியார் தான். வக்கீலை கட்சிக்காரர்கள் சென்று பார்க்க வேண்டும் என்பது தான் முறை என்று சொல்லி விட்டு வக்கீலை நேரில் சந்தித்து சட்ட விளக்கம் கேட்டார். அது மட்டுமல்ல, அந்த வக்கீலால் கவரப்பட்ட கவர்னர் அந்த மதுரை அரசு வக்கீலை தொழில் செய்ய மதராஸபட்டணம் வர அழைத்தார். இன்று மதுரை மக்கள் மறந்து விட்ட அந்த மாபெரும் மனிதன் யாரென்று தெரிகிறதா
பிறக்கும் பொழுது ஏழையாகப் பிறந்து கடும் உழைப்பால் தெரு விளக்கில் படித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியானவர் முத்துஸ்வாமி ஐயர். அவர் 1895 இல் மரணமடைந்தவுடன் அவர் இடத்திற்கு நீதிபதியாக நியமிக்கப்பட்ட இரண்டாவது இந்திய வக்கீல் யாரென்று தெரிகிறதா?
இன்றைக்கு சென்னை மெரினா என அழைக்கப்படும் காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியை அமைக்க அரசிடம் அன்றே ஒரு லட்சம் போய் பெற்றுக் கொண்டு தனது கடற்கரை இல்லம் என பெயரிடப்பட்ட வீட்டை விட்டுக் கொடுத்த மதுரை வழக்கறிஞர் யாரென்று தெரிகிறதா?
அரசி விக்டோரியாவின் சார்ட்டர் படி 26.06.1862 இல் நிறுவப்பட்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட முதல் இந்திய நீதிபதி முத்துஸ்வாமி அய்யர் நமக்கு தெரியும். சுதந்திர இந்தியாவில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றவர்
ராஜமன்னார் நமக்கு தெரியும். அதற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஒருமுறை அல்ல மூன்று முறை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்த மதுரை தந்த மாமனிதர் யாரென்று தெரிகிறதா? சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 70 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேந்தராக 1904-இல் பதவி வகித்த மதுரை மண்ணின் மைந்தன் யார் என்று தெரிகிறதா?
வயது முதிர்வின் காரணமாக கண் பார்வையில் குறைவு ஏற்பட்டதால், இன்னும் எட்டு மாதம் பதவியில் இருந்தால் முழு ஓய்வு ஊதிய தொகையான 1200 பவுண்டு மாதம் கிடைக்கும். (இன்றைய மதிப்பில் சுமார் 1 லட்சம் ரூபாய்) என்ற நிலையிலும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவியை துறந்த நேர்மையான மதுரை வக்கீல் யாரெனத் தெரிகிறதா?
சென்னை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகப் பணியாற்றியது மட்டுமல்லாமல், அங்கு மிக அற்புதமான சிலை வடிவில் காலில் செருப்பில்லாமல் அமர்ந்திருக்கும் மதுரையின் மாணிக்கமாக திகழ்ந்த மனிதர் யாரென்று தெரிகிறதா?
மதுரையின் மகுடமாக தன் பெயரில் "மணிநகரம்' என பெயரிடப்பட்ட பெருமைக்கு சொந்தக்காரர் யாரென்று தெரிகிறதா?
விண்டாகுட்மேன் எழுதிய "சன்சைன் என்ற புத்தகத்தில் அக்டோபர் மாதம் பிறந்தவர்கள் ("லிப்ரா' எனும் ராசிமண்டலத்தில் பிறந்தவர்கள்) சிறந்த வக்கீல்களாகவோ, நீதிபதிகளாகவோ கலைஞர்களாகவோ இருப்பார்கள் என கணித்திருப்பார். 1842-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி (2018-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி அவருக்கு வயது 176) மதுரையில் சூறாவளி சுப்பையர்க்கு இரண்டாவது மனைவி மூலம் பிறந்த குழந்தைதான் பின்னாளில் "மணி ஐயர்' என அழைக்கப்பட்ட திவான் பகதூர் சர்.எஸ்.சுப்பிரமணிய ஐயர் BL., LLD., K.C.I.E பிறக்கும் பொழுதே வாயில் வெள்ளி கரண்டியுடன் பிறந்தவர். ஆனாலும் 3 வயதில் தந்தையை இழந்த அவரை சகோதரர் அன்புடனும் பாசத்துடனும் வளர்த்தார்; தந்தை இராமநாதபுரம் மன்னரின் திவானாக இருந்ததால் வசதிக்குக் குறைவில்லை. லெட்சுமி இருக்கும் இடத்தில் சரஸ்வதி குடிவரமாட்டாள் என்ற மூட நம்பிக்கையைத் தகர்த்து இளம் வயதில் இருந்து கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். முதலில் மதுரை மிஷன் பள்ளியிலும் பின்பு கிருஷ்ணசாமி செட்டியார் பள்ளியிலும் படித்த மணி, சிறு வயதில் இருந்தே தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் என்ற மூன்று மொழிகளிலும் சிறந்து விளங்கி தன் திறமையால் ஸ்காலர்ஷிப் பெற்று படிப்பைத் தொடங்கினார். 1859-இல் தன் பள்ளி படிப்பை முடித்தார்.
அவருடைய சகோதரருக்கு, செல்லத்தம்பி, மணியை தொலைவில் உள்ள சென்னைக்கு(!) அனுப்பி படிக்க வைக்க விருப்பம் இல்லை. இவருடைய உச்ச மார்க்கை கேட்ட கலெக்டர் தன் கீழ் உதவி கலெக்டராகப் பணியாற்றிய உதவி கலெக்டர் ராமராவ் அலுவலகத்தில் சேர்த்து விட்டார். இளங்கன்று மணியின் ஆங்கிலப்புலமை ராமராவுக்கு மிகப்பெரிய உதவியாக அமைந்தது. ஆனால் கலெக்டர் ஆபீஸில் கிளார்க்காக குப்பைக்கொட்ட பிறந்தவரில்லை மணி. அவருக்கு வக்கீல் ஆக வேண்டும் என்ற தாகம். சென்னையில் சட்டக் கல்லூரி ஆரம்பிக்கப்படாத நிலையில் அன்று கலை கல்லூரிகளிலேயே ஓராண்டு படித்தால் ப்ளீடர் (PLEADER) ஆகவும் இரண்டாண்டு படித்தால் வக்கீலாகவும் பதிவு செய்யலாம். அந்நாளில் பார்கவுன்சில் தோன்றவில்லை. வக்கீல் சன்னத்தை மாவட்ட நீதிபதியும், உயர்நீதிமன்ற நீதிபதியும் தான் வழங்கினார்.
அன்றைய மதுரை மாவட்ட நீதிபதி காட்டன், இந்தியர்களை ஏளனமாக நடத்தி வந்தார். அவர்களிடம் வக்கீலாக சன்னத் பெற வரும் இந்தியர்கள் மண்டியிட்டு வணங்கி சன்னத் பெற வேண்டும் என்ற விதியை ஏற்படுத்தினார். தன்மானமும் தேசபக்தியும் மிகுந்த சுப்பிரமணிய ஐயர் நீதிபதி முன்பு மண்டியிட மறுத்து வெளியேறினார். பின்பு உயர்நீதிமன்றம் மூலமாக வக்கீல் சன்னத் பெற்றார்.
"விளையும் பயிர் முளையிலேயே தெரியும்'என்ற முதுமொழிக்கேற்ப வக்கீல் தொழிலில் கொடி கட்டிப் பறக்கத் தொடங்கினார். அவருடைய சட்ட அறிவும் ஆங்கிலப் புலமையும், தமிழ், சமஸ்கிருத திறன்களும் உண்மை கண்டறியும் நுண்ணறிவும் அவரை வக்கீல் தொழிலில், இளம் வயதிலேயே உச்சத்துக்கு எடுத்துச் சென்றது. அன்று வக்கீலின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் போட்டி அதிகம். திறமை எனும் படிக்கட்டில் தாவி ஏறி உச்சத்தில் ஆசனம் போட்டு அமர்ந்தார். 1862-இல் அமலுக்கு வந்த குற்றவியல் நடைமுறை சட்டத்தின் (Cr.P.C) கீழ் அரசு குற்றவியல் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவருக்கு மாவட்ட நீதிபதி காட்டன் நீதிமன்றத்திலேயே பணியாற்ற நேரிட்டது இயற்கையின் நகை முரண். மாவட்ட நீதிபதி எதிர்பார்த்திருக்க மாட்டார், பின்னாளில் உயர்நீதிமன்ற நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று! அவர் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றிய போது Deputy Collector அவரை நிற்க வைத்தே பேச முற்பட்ட போது அவரே ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்து துணை கலெக்டரை திகைக்க வைத்தவரா மாவட்ட நீதிபதியை கண்டு அஞ்சுவார்?
இரண்டாண்டு வக்கீல் படித்தவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்காடலாம் என்ற விதி வரவும் கவர்னர் அழைக்கவும் கலெக்டர் ஆபீஸ் வேலையுடன் சட்டம் படித்து "மதுரை மணி' சென்னை மணியானார். சென்னையில் சட்ட வார இதழ் ஆசிரியரிடம் உதவி வழக்கறிஞராகச் சேர்ந்தார்.
அதற்கு முன்னர் அவர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும் பணியாற்றி அதன் தொடர்ச்சியாக தன் தந்தை பெயரில் "சூறாவளி சுப்பையர் அறக்கட்டளை'யைத் தொடங்கினார். 1875-இல் அவர் மதுரை நிர்வாக அமைப்பில் தலைவராகச் செயல்பட்டு மன்னர் எட்வர்டு வேல்ஸ் இளவரசராக மதுரைக்கு வந்த பொழுது மதுரை மக்கள் சார்பாக வரவேற்றார். இவரது பொதுத் தொண்டுகளைப் பாராட்டி 1884-இல் அன்றைய சென்னை சட்ட மன்றத்தில் அலுவல் சாரா உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதனால் பெற்ற அனுபவத்தால் விரியும் அறிவுடன், தாதாபாய் நவ்ரோஜி, தின்ஷா வாச்சா ஆகியோர் 28.12.1885-இல் பம்பாயில் ஆரம்பித்த "காங்கிரஸ் கட்சியில் சென்னைப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு இந்தியர்களுக்கு சுய ஆட்சி வேண்டும் என விரிவாகவும் விளக்கமாகவும் பேசினார். இதனால் பின்னாளில் அன்னிபெசன்ட் அம்மையாரின் "ஹோம்ரூல்' இயக்கத்தின் முன்னோடி ஆனார். மணி ஐயர் தேசிய விடுதலைக்கு போராடிய முன்னோடி ஆவார்.
சுப்பிரமணிய ஐயர் சென்னையில் வக்கீலாக இருக்கும்போது பாசம் ஐய்யங்காரும், நார்டனும் அவருடைய மதிப்புறு எதிர் வழக்கறிஞர்களாக பணியாற்றினார். அவர் மூத்த வழக்கறிஞர்களையும் இளம் வக்கீல்களையும் சரிசமமாக நடத்தி அனைவரின் அன்புக்கும் பாத்தியம் ஆனார். குறிப்பாக இளம் வழக்கறிஞர்கள் மீது மிகுந்த அன்புடன் அவர்களை உற்சாகப் படுத்துவதில் முன்னிலை வகித்தார்.
1888-இல் சுப்பிரமணிய ஐயர் "சென்னை ராஜதானி' அரசால் முதல் இந்திய அரசு வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டார். அவர் நடத்திய வழக்குகளில் குறிப்பிடத்தக்கது. "திருப்பதி மஹந்த்' வழக்காகும். அந்நாளில் சுதந்திர போராட்டங்கள் ஆரம்பமாக கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து ஆட்சி இங்கிலாந்து அரசியின் கீழ் வர ஆங்கில அரசு இந்தியர்கள் கொள்கைகளில் தலையிடுவது இல்லை என முடிவெடுத்து இதன் தொடர்ச்சியாக தன்பொறுப்பில் இருந்த திருப்பதி கோயில் நிர்வாகத்தை ஒரு மஹந்த்திடம் ஒப்படைத்தது. அன்று மஹந்த் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அவர் திருப்பதி கோயிலில் கும்பாபிஷேகம் செய்வதாகச் சொல்லி, அதன் தொடர்ச்சியாக ஒரு கொடி மரம் ஸ்தாபிக்கப் போவதாகவும், அதன் அடியில் ஒரு கலசம் நிறைய தங்கக் காசுகளைப் புதைக்கப் போவதாகவும் அறிவித்தார். திருப்பதி கோயில் அல்லவா! பணம் கொட்டியது. கொடி மரம் நிமிர்ந்து நின்றது. அத்தோடு கொடிமரத்தின் அடியில் புதைக்கப்பட்டது தங்ககாசுகள் அல்ல செம்பு காசுகள் என்ற புகாரும் எழுந்து நின்றது. மேஜிஸ்ட்ரேட் முன்பு வழக்கு வந்தது. அரசு சாட்சிகள் "புதைக்கப்பட்டது செம்பு என்று சத்தியம் செய்ய, மஹந்த் "இல்லை புதைக்கப்பட்டது தங்கம் தான் என்று ஒற்றைக்காலில் நின்றார். உண்மை தெரிய எளிய வழி கொடிமரத்தை தோண்டி எடுத்து பாருங்கள் என்று உத்தரவிட்டார் மேஜிஸ்ட்ரேட்.
பதறிப்போன மஹந்த், நார்டனை வக்கீலாக வைத்து, ""மந்திரம் சொல்லி நிறுவப்பட்ட கொடிமரத்தை தோண்டி எடுப்பது பாவம்; ஆகமங்களுக்கு விரோதம்'' என்று சுட்டிக்காட்டி உயர்நீதிமன்றத்தில் மூன்று மணி நேரம் வாதிட்டார். பதில் சொல்ல எழுந்து நின்ற அரசு வழக்கறிஞரான சுப்பிரமணிய
ஐயர் மீது அனைவரின் பார்வை விழுந்தது.
ஐயர் பழுத்த ஆஸ்திகர். சாஸ்திரங்களில் நம்பிக்கை உடையவர். அவர் நார்டனின் வாதத்தை எப்படி எதிர்கொள்ள போகிறார்? மக்கள் நம்பிக்கையா மத கோட்பாடா அல்லது இரண்டையுமே உதறித் தள்ள போகிறாரா? நீதிமன்றமே ஏன் ஆங்கில நீதிபதியும் உடன் அமர்வில் இருந்த நீதி அரசர் முத்துசுவாமி ஐயரும் பார்க்க கம்பீரமாக ஆனால் மிக பணிவுடன் எழுந்து நின்றார் சுப்பிரமணிய ஐயர். நீதிமன்றங்களில் இன்று ஆங்கிலம் கோலோச்சுவது போல ஆதியில் லத்தீன் மொழி கொடிகட்டி பறந்தது. "காதல் மொழி ஆங்கிலம், வியாபார மொழி பிரஞ்ச், கடவுள் மொழி சமஸ்கிருதம், பக்திமொழி தமிழ்' என சொல்வார் உண்டு. சுப்பிரமணியய்யர் எடுத்த எடுப்பிலேயே ஒரு லத்தீன் பழமொழியை சொன்னார். ‘ஊண்ஹற் ஒன்ள்ற்ண்ஸ்ரீண்ஹ' ‘தன்ஹற்-இஹங்ப்ன்ம்' என்று அதாவது சொர்க்கமே இடிந்து விழுந்தாலும் நீதி செய்யப்பட வேண்டும் என்பது அதன்; பொருள்.
ஐயர் சிரித்துக் கொண்டே கேட்டார். நீதி செய்ய சொர்க்கமே இடிக்கப்படலாம் என்றால் ஒரு கொடி மரத்தை இடிக்கக் கூடாதா? தீர்ப்பு என்னவாயிருக்கும்? சொல்லியா தெரிய வேண்டும்?
மெரினா கடற்கரையில் வீடு வாங்கிய சுப்பிரமணிய
ஐயர் அனைத்து வழக்கறிஞர்களையும் அழைத்து அந்த வாரம் வெளியான அனைத்து தீர்ப்புகளையும் வாதிப்பார். புகழ்பெற்ற அந்த சனிக்கிழமை கூட்டம் இளம் வழக்கறிஞர்களும் ஒரு சட்ட கலாசாலையானது. இந்த கூட்டங்களின் முடிவு தான் எம்.எல்.ஜே (மெட்ராஸ் லா ஜர்னல்) என்ற சட்ட இதழானது. ஐயர் 1891-இல் நீதிபதியான பிறகு தலைமை அரசு வழக்கறிஞர் பதவிக்கு பாஷ்யம் ஐயங்காரை சிபாரிசு செய்தார். நீதியரசர் முத்துஸ்வாமி நீதித்துறையில் படிப்படியாக முன்னேறி, உயர்நீதிமன்ற நீதிபதியானார். அவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாக மணிஐயர் இரண்டாவதாக அந்த பணியை அடைந்தாலும் நேரடியாக நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வக்கீல் என்று பெருமை அவருக்கு உண்டு. இதை விட முக்கியமானபெருமை என்னவென்றால், அவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய 1895-1907, 12 ஆண்டுகளில் குறிப்பாக அவர் 1899, 1903 மற்றும் 1906 ஆகிய மூன்று ஆண்டுகளில் அவர் சென்னை உயர்நீதிபதியாக, இடைக்கால தலைமை நீதிபதியாக இருந்த பெருமை அவருக்கு உண்டு. அவருடைய தீர்ப்புகள் ஒவ்வொன்றும் அவருடைய கூர்மையான சட்ட அறிவிற்கும் ஆங்கிலப் புலமைக்கும் எடுத்துக் காட்டாக விளங்கின.
அவர் முழு பென்சனுடன் ஓய்வு பெற 8 மாதங்களே இருந்தது. பார்வை குறைபாட்டால் நீதிபதி பதவியை முழுமையாகச் செய்ய முடியாது என்பதைக் காரணம் காட்டி பணியை ராஜினாமா செய்தார். தலைமை நீதிபதியும், அவருடைய நண்பரான தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் அவர்களும் மறுத்துச் சொல்லியும் அவர் ராஜினாமாவை வாபஸ் பெற மறுத்து விட்டார். ஓய்வுக்கு பிறகு மணியய்யர் சும்மாயிருக்கவில்லை. சென்னை ஒய்எம்ஐஏ (வஙஐஅ) தொடங்கினார் அவர் அன்னிபெசன்ட் அம்மையாருடன் ஏர்ம்ங் தன்ப்ங் இயக்கத்தில் ஈடுபட்டார். இந்திய விடுதலை
அவருடைய லட்சியமாக இருந்தது. ஆங்கில அரசு அன்னிபெசன்ட் அம்மையாரையும், ருக்மணி அருண்டேலையும் ஆங்கில அரசு சட்ட விரோதமாக கைது செய்த போது, அதனைக் கண்டித்தும் உடன் விடுதலை செய்ய வேண்டுமெனவும் அதற்கு அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சன் உதவ வேண்டும் என கடிதம் எழுதினார். அன்று அது மிகப்பெரிய பரபரப்பான சம்பவமாக விளங்கியது. உலக பாராளுமன்றத்தின் தாய் என வர்ணிக்கப்படும் லண்டன் பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. அரசின் பென்ஷன் பெறுபவர் அரசுக்கு எதிராக வேறு நாட்டுக்கு கடிதம் எழுதுவதா என கூக்குரல் எழுப்பினார். ஆனால் ஐயரின் கடிதத்தால் அன்னிபெசன்ட்டும்.
சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் சங்கத்தின் தலைவராக 1891 முதல் 1895 வரை மணி ஐயர் ஐந்து ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றினார். ஆர்வமும் திறமையும் உள்ள இளம் வழக்கறிஞர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கியும் பொருள் உதவி செய்தும் உற்சாகப்படுத்தினார். அவர் வேறு கோர்ட்டுக்கு வழக்காடச் சென்ற போது தனது ஜூனியரை தனக்காக வாதாடச் சொல்லி அவர்களுக்குத் தான் வாங்கும் வக்கீல் கட்டணத்தில் பாதியைக் கொடுத்து விடுவார். அவர் செய்த சமூகச் சேவைகள் அளப்பரியது. அவரிடம் படிப்புக்கு உதவி கேட்டு வந்த எவரும் ஜாதிமத வேறுபாடில்லாமல் வெறும் கையுடன் சென்றதில்லை.
1891-இல் அவர் நீதிபதியாக நியமிக்கப்பட்ட போது ஹிந்து பத்திரிகை அவரது திறமைகளையும் நற்குணங்களையும் சிலாகித்து எழுதியது. அவரது ஆங்கிலப்புலமை ஆங்கிலேயர்களாலே பிரமிக்க வைத்தது. நீதிமன்றத்திற்கு அவருடைய மன ஓட்டத்தை அவருடைய உடல் மொழியாலேயே தெரிந்து கொள்ளலாம். அவர் ஒரு வாதத்தைக் கூர்ந்து கவனிக்கிறார் என்றால் தன்னுடைய இரு கைகளையும் இணைத்துக் கொண்டு சேரின் நுனிக்கு வந்து டேபிளில் முன்னோக்கிச் சாய்ந்தபடி கவனமாகக் கேட்பாராம். அவருக்கு ஒரு வக்கீலின் வாதம் பிடிக்கவில்லை என்றால், நாற்காலியின் பின்னே சாய்ந்து கொண்டு வக்கீலின் பேச்சை நிறுத்தாமல் கவனமாக, அதே சமயம் ரிலாக்ஸாக கேட்பாராம். அவருடைய நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர், இளம் வழக்கறிஞர் என்ற வித்தியாசமில்லை. வாதிடும் தன்மை மட்டுமே மதிக்கப்பட்டது. பணியாளர்களை மிகுந்த அன்போடு நடத்தினார். ஆங்கில நீதிபதி ஓர் ஏழை பணியாளர் உடை சரியாக அணியவில்லை என பதவி நீக்கம் செய்ய முயன்ற போது அவரை தன் பணியாளராக ஏற்று உதவினார். அவருடைய சேவைகளைப் பாராட்டி 1903-ஆம் ஆண்டு அன்றைய ஆளுநர் லாரட் ஆம்பிட்ஹில் அவருக்கு இந்தியப் பேரரசின் குதிரைப்படை கமாண்டர் என்ற கெளரவப் பட்டத்தை வழங்கினார். ஓய்விற்குப் பிறகு தேச விடுதலைக்காக பாடுபட்ட ஐயர், அருண்டேல் மற்றும் நண்பர்களை ஆங்கில அரசு கைது செய்ததைக் கண்டித்து அரசு கொடுத்திருந்த ஓஇஐஉ பட்டத்தை துறந்த தென்னிந்தியாவின் முதுபெரும் கிழவர், (க்ராண்ட் ஓல்ட்மேன் ஆப் சவுத் இண்டியா) என அழைக்கப்பட்டார். அவர் அருண்டேலின் கைதைக் கண்டித்து அமெரிக்க ஜனாதிபதி உட்ரோவில்ஸனுக்கு கடிதம் எழுதியது பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் கடுமையான கண்டனங்களை எதிர்கொண்டது. ஒரு அடிமை நாட்டில் அரசியின் ஓய்வூதியம் வாங்கும் ஒரு நபர் நம் நாட்டைக் குற்றம் கூறி அமெரிக்க ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதுவது சரியா எனக் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதனால் அவருக்கு முழுப்பென்சன் கிடைக்காமல், மூன்றில் ஒரு பங்கை (ரூ.400) இழக்க நேர்ந்தது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக பணி ஆற்றினார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் இந்திய துணைவேந்தராகப் பணியாற்றிய பெருமையும் அவருக்கே உண்டு. அவர் இறந்த பிறகு 1935-ஆம் ஆண்டு மிகச் சிறப்பாக வடிக்கப்பட்ட அவருடைய சிலை சென்னை சர்வகலா சாலையின் வாயிலில் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் தியோஸாபிகல் சொசைட்டியின் துணைத்தலைவராகப் பணி செய்த அவரது நினைவைப் போற்றும் வகையில் அங்கும் அவரது சிலை இருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் உள்ள முத்துஸ்வாமி ஐயரின் சிலைக்கும், சுப்ரமணிய ஐயரின் இரண்டு சிலைகளுக்கும் ஒரு மிகப் பெரிய ஒற்றுமை உண்டு. இந்த மூன்று சிலைகளிலுமே காலில் செருப்பு இருக்காது. இதிலிருந்து நீதிச் சாலையையும்கல்விச் சாலையையும் அவர்கள் புனித தலங்களாகக் கருதினார்கள் என்பது தெளிவாகிறது. அதே போல நம்முடைய முந்தைய தலைமுறை விவசாயிகளும் வயலுக்குள் செருப்பணிவதைத் தவிர்த்தனர் என்பது நமது மரபு.
சிங்கார சென்னையில் தீவுத்திடலின் எதிரே உள்ள குதிரையின் மேல் அமர்ந்திருக்கும் மன்றோ சிலையில் "சிமிட்டா' என்ற குதிரை ஒட்டுபவன் காலை வைக்குமிடம் தொங்கல் அமைக்கப்படாதது சிற்பியின் குற்றம். ஐயர்கள் காலில் செருப்பு இல்லாமல் இருப்பது ஐயர்களின் மாண்பு.
சென்னைப் பல்கலைக்கழகம் மணி ஐயருக்கு 1908 ஆம் வருடம் ககஈ (கங்ஞ்ன்ம் ஈர்ஸ்ரீற்ர்ழ் அ ஏர்ய்ர்ன்ழ்ங்க்ங் க்ங்ஞ்ழ்ங்ங் ண்ய் க்ர்ஸ்ரீற்ர்ழ்ஹற்ங் ண்ய் ப்ஹஜ்) வழங்கியது. அன்றைய சென்னை பல்கலைக்கழகத்தில் அறிவாளிகளை தேடிப்பிடித்து அங்கீகரித்தது. அதற்கு உதாரணம் சுப்பிரமணிய ஐயரும், தமிழ் தாத்தா உ.வே.சுவாமிநாத ஐயரும். மயிலாப்பூர் ட.ந. ஏண்ஞ்ட் நஸ்ரீட்ர்ர்ப் - ஐ திறப்பதற்கு ஏற்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றியதோடு 1905-ஆம் ஆண்டு அதை திறந்தும் வைத்தார். 1914-ஆம் ஆண்டு நடந்த "சென்னை காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தின் வரவேற்பு குழுவின் தலைவராக இருந்து முக்கிய பங்காற்றினார்.
மணியய்யரின் மனது பின் நாட்களில் ஆன்மிகத்தை நாடிச் சென்றது. தியோசபிக்கல் சொசைட்டியுடைய துணைத் தலைவர் பதவியேற்று அன்னிபெசன்ட் அம்மையாருடன் இணைந்து ஆன்மிகப் பணியாற்றினார். அப்பொழுது ஆன்மிகப் புத்தகங்களை எழுதியுள்ளார். சிறிது காலம் ஒரு சந்நியாசி போலவே உடையணிந்து மெரினா பீச்சில் தன்னுடைய பழைய திட்டின் எதிரே அதாவது இப்பொழுது காந்தி சிலையிருக்கும் பகுதியில் அமர்ந்து கொண்டு அனைவரிடமும் அளவளாவிக் கொண்டிருப்பார்.
தன் அறிவாலும் செயல்பாட்டாலும் அழுத்தமான கொள்கையினாலும் அவர் மதுரை தந்த மாணிக்கமாக விளங்கினார். மிகுந்த காலதாமதமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவருடைய படம் 1964-இல் திறக்கப்பட்டது. அந்த மணியான மதுரை மைந்தனுக்கு எதிர்வரும் அக்டோபர் முதல் நாள் அகவை 176.
கட்டுரையாளர்: வழக்குரைஞர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.