மண்டையில் உதித்த மந்திரமூர்த்தி

இறைவன் அனைத்து உயிர்களுக்கும் அருள் செய்ய எப்போது வேண்டுமானாலும், எந்நேரத்திலும், எதிலும், எப்படியும் தோன்றுவான் என இறை வரலாறுகள் நமக்குப் பல நேரங்களில் உணர்த்தியிருக்கின்றன. பிரகலாதனை காக்க பிரத்யேகம
மண்டையில் உதித்த மந்திரமூர்த்தி
Published on
Updated on
2 min read

இறைவன் அனைத்து உயிர்களுக்கும் அருள் செய்ய எப்போது வேண்டுமானாலும், எந்நேரத்திலும், எதிலும், எப்படியும் தோன்றுவான் என இறை வரலாறுகள் நமக்குப் பல நேரங்களில் உணர்த்தியிருக்கின்றன. பிரகலாதனை காக்க பிரத்யேகமாக எடுத்ததே நரசிம்ம அவதாரம். ஆனால் அதே மூர்த்தம், வேறு பல சந்தர்பங்களிலும் தோன்றியுள்ளது; வெவ்வேறு பக்தர்களைக் காப்பாற்றியுள்ளது. இறைவனது திவ்விய சரீரம், வேத மந்திரங்களின் தூல வடிவம்! எனவே பகவானுக்கு, "மந்திர மூர்த்தி' என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

பரிக்கல்

அவ்வகையில், "வசந்த ராஜன்' என்ற பக்தனுக்காக, மந்திர மூர்த்தியாக நரசிம்ம பகவான் வெளிப்பட்ட தலமே "பரிக்கல்' என்பதாகும். இத்தலத்தில் தன் பக்தனை காப்பாற்ற கண நேரத்தில் வெட்டுப்பட்ட பக்தனின் மண்டையிலிருந்து நரசிம்மர் உதித்தார். அவ்வாறு உதித்த தலம் விழுப்புரத்திற்கு அருகில், திருச்சி நெடுஞ்சாலையிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில், உளுந்தூர்பேட்டைக்கு அருகில் சற்று உள்ளடங்கியுள்ளது.

திரிபுர தகனத்தில் தப்பியவன்

சிவபெருமான் திரிபுரங்களை எரித்தபோது தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய மூன்று அசுரர்களை அழித்தார்; அவர்களது கோட்டைகளையும், படை சேனைகளையும் தகனம் செய்தார். அப்போது அவ்வசுரர்களின் தளபதியாக இருந்தவன் "பரிக்கலாசுரன்' என்பவன் ஆவான். இவன் குதிரை முகமும், மனித உடலும், கொடூர மனமும் உடையவன். அசுரர்கள் மூவரும் அழிந்தபோது தப்பித்துச் சென்ற பரிக்கலாசுரன், தற்போதைய விருத்தாசலம் பகுதிக்குள் பதுங்கினான்; அனைவருக்கும் அல்லல் கொடுத்து வந்தான். நல்லது எதுவும் நடக்கவிடவில்லை. நல்லோரும், மக்களும் நாராயணனை வேண்டி நின்றனர்.

வசந்தராஜன் யாகம்

அப்போது பரிக்கல் பகுதியில் குறுநில மன்னனாக இருந்தவன், இறை நம்பிக்கையுடைய வசந்தராஜன் என்பவன். கணத்தில் தோன்றி கருணை செய்யும் நரசிம்ம அவதாரத்தின் மீது அவனுக்கு அளவு கடந்த பற்று! நரசிம்மருக்கு என ஒரு கோயில் கட்டத் துவங்கினான் மன்னன். அதற்கு முன் அவனது குரு வாம தேவர் வழிகாட்ட, யாகம் ஒன்றை துவக்கினான். யாகத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, வாமதேவரின் அறிவுரைப்படி கூப்பிடு தூரத்தில் உள்ள ஒரு புதருக்குள் அமர்ந்து யாக மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தான்.

வந்தான் பரிக்கலாசுரன்

அங்கு வந்த பரிக்கலாசுரன், நரசிம்ம யாகத்தை நிறுத்திவிட்டு, தன்னைப் போற்றி துதித்து யாகம் செய்ய வேண்டும் எனக் கேட்டான். வாமதேவர் மறுக்கவே யாக குண்டங்களைக் காலால் எட்டி மிதித்தான்; யாகசாலையை அழித்தான். வாமதேவர் உள்ளிட்ட யாகம் செய்யும் முனிவர்கள் அனைவரையும் கொன்றான். அவனது எந்தச் செயலையும் கண்டு கொள்ளாது, வாம தேவரின் உத்தரவுப்படி புதருக்குள் இருந்தவாறே யாக மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தான் வசந்தராஜன்.

எல்லாம் இரண்டானது

மன்னனையும் கவனித்த பரிக்கலாசுரன், கொதித்தெழுந்தான். தன்னை மதிக்காத வசந்தராஜனின் தலையின் நடுவில் அருகில் இருந்த யாகசாலை கோடரியை எடுத்து வெட்டினான். வசந்தராஜன் நரசிம்மனை நோக்கி அபயக் குரல் கொடுத்தான். உடனே இரண்டாகப் பிளந்த அரசனின் தலையிலிருந்து உக்கிரத்துடன் நரசிங்கப் பெருமாள் தோன்றினார்; மின்னல் வேகத்தில் எதிரில் இருந்த பரிக்கலாசுரன் உடலை இரண்டாகக் கிழித்தெறிந்து வதம் செய்தார்.

வரம் பெற்ற வசந்தராஜன்

உடனே நரசிம்ம பெருமானை போற்றிப் பரவி, ஆனந்தக் கூத்தாடினான் அரசன். அவனது தலையில் பட்ட படுகாயம் மறைந்தது. நரசிம்மரின் கோர விசுவ ரூபத்தைக் கண்டு வணங்கினான். தன் பக்தனின் தவத்தை போற்றிய நரசிங்கப் பெருமாள், ""உனக்கு வேண்டும் வரங்கள் கேள்'' எனத் தெரிவித்தார்.

வரங்கள்

""முதலாவது, என் குரு வாமதேவர் உள்ளிட்ட முனிவர்கள், உடனடியாக உயிர்த்தெழ வேண்டும்! இரண்டாவதாக உங்களது உக்கிர உருவம் நீங்கி, இன்முகத்தோடு சாந்த சொரூபராக, அன்னை திருமகளுடன் தோன்றி இத்தலத்தில் நிரந்தரமாக இருந்து அருள் செய்ய வேண்டும். மூன்றாவதாக இத்தலத்தில் வந்து உன்னை வணங்குவோர் அனைவர் மனதிலும் இந்தக் கோயில் நிற்கும் வகையில் அமைய வேண்டும்'' என மூன்று வரங்கள் கேட்டான் வசந்தராஜன். ""பக்தர்களுக்கு காட்சி நல்க ஒரு காரணமாக பரிக்கலாசுரன் இருந்ததால் இத்தலத்திற்கு "பரிக்கல்' எனப் பெயர் வழங்க வேண்டும்'' எனக் கூடுதலாகவும் ஒரு வரம் கேட்டான். அவன் கேட்டதனைத்தையும் வழங்கி, மறைந்தருளினார் அழகிய சிங்கப் பெருமாள்.

தலத்தின் சிறப்பு

பரிக்கல் எனப்படும் இத்தலம் ருணம் (கடன்), ரோகம் (நோய்), சத்ரு (எதிரி) ஆகிய மூவகைத் துன்பங்களை நீக்க வல்லது.

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் உள்ள கட்டிட கலை அமைப்புடைய இத்திருக்கோயிலில், 15.5.2011 முதல் "நரசிம்ம ஜெயந்தி' உற்சவங்கள் துவங்குகின்றன. 25-ம் தேதி வரை தினசரி வாகனப் புறப்பாடோடு விமரிசையாக ஜெயந்தி உற்சவம் கொண்டாடப்படவுள்ளது.

மேலும் விவரங்கள் வேண்டுமென்றாலோ, நன்கொடைகள் அளிக்க விரும்பினாலோ, "செயல் அலுவலர், அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில், பரிக்கல், உளுந்தூர்பேட்டை வட்டம் 607 204' என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com