சஷ்டியப்த பூர்த்தி என்னும் மணிவிழா!

"சஷ்டியப்தபூர்த்தி!' என்பதில் "சஷ்ட்' என்றால் ஆறு என்ற பொருள் உணர்த்தும். உதாரணமாக, ஆதிசங்கரர் அருளிய நிர்வாண ஷட்கம் முக்தி நிலை உணர்த்தும் ஆறு பதிகங்களில் அவர் தெளிவாக்குகிறார்.
சஷ்டியப்த பூர்த்தி என்னும் மணிவிழா!
Published on
Updated on
2 min read

"சஷ்டியப்தபூர்த்தி!' என்பதில் "சஷ்ட்' என்றால் ஆறு என்ற பொருள் உணர்த்தும். உதாரணமாக, ஆதிசங்கரர் அருளிய நிர்வாண ஷட்கம் முக்தி நிலை உணர்த்தும் ஆறு பதிகங்களில் அவர் தெளிவாக்குகிறார். ஆகவே முக்தி நிலைக்கு பூரணமாக தயாராகும் வயது அறுபது ஆண்டின் பூர்த்தி எனக் கருத வாய்ப்புள்ளது. அறுபது வயதின் பூர்த்தியைக் கொண்டாட வேண்டிய நியதி ஏன் வந்தது என்பதையும், தொடர்ந்து கடைபிடிக்கும் அகவைப் பூர்த்தி விழாக்களையும் பற்றி சிறிது அறிந்து கொள்வோம்.
 எந்த ஓர் இயக்கமும் இரு பிரிவுகள் அமையுமாறே இறைவன் வகுத்துள்ளார். உதாரணமாக, ஆண், பெண் வகைகளைக் கொள்ளலாம். அதனை உணர்ந்த முன்னோர்கள் அறிவியல் பூர்வமாகவும் உணர்ந்து யாவற்றையும் கணக்கிட்டுள்ளனர். சூரியன் நிலையாக இருப்பினும் பூமியின் சுழற்சியால் தினமும் இரவு பகல் உண்டாகிறது. சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு வளர்பிறை 15 தினங்களும், தேய்பிறை 15 தினங்களும் ஆக 30 தினங்கள் என்ற விகிதத்தில் ஒரு மாதத்தில் 2 பட்சங்கள் நிகழ்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ் ஆண்டும் ஆங்கில ஆண்டும் தீர்மானிக்கப் பட்டுள்ளது.
 ஒரு நாளின் சுழற்சி 24 மணி நேரம் என்பதில் பகல் 12 மணி நேரம் என்றும், இரவு 12 மணி நேரம் என்றும் கொள்ளப்படுகிறது. இதிலும் பகலில் முற்பகல், பிற்பகல் என இரு பிரிவும், இரவில் முன்னிரவு, பின்னிரவு எனவும் பிரிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். பட்சம் என்னும் வளர்பிறை, தேய்பிறை ஆகியவற்றை ஒரு மாதத்தில் இரு பிரிவாக கணக்கிடுவது போல பருவ காலங்கள் ஓர் ஆண்டிற்கு ஆறு மாதம் உத்திராயணம், ஆறுமாதம் தட்சிணாயணம் என வகுக்கப்பட்டுள்ளது. பகல், இரவு ஆகியவை 12 மணி நேரம் எனக் கணக்கிட்டது போல ராசிகள் 12 எனவும், அதன் அடிப்படையில் மாதங்கள் 12 எனவும் கொள்ளப்பட்டுள்ளது.
 அதுபோலவே, தமிழ் ஆண்டுகள் அறுபதாக முறைப்படுத்தப் பட்டுள்ளது. இந்த 60 ஆண்டுகள் என்பதை எப்படி கணக்கிட்டு இருப்பார்கள் என சிந்திக்கும் போது, ஆண்டின் நாட்களை 12 -ஆல் வகுபடின் 30 நாட்கள் கொண்ட ஒருமாதம் கணக்கிட்டதுபோல மனித முழுமையான வயது 120 ஆண்டுகள் என்று கணக்கிட்டுள்ளதும் அதில் பாதியான 60 ஆண்டு வயதினை பகலுக்கு ஒப்பாகவும் அடுத்த 60 ஆண்டு இரவுக்கு ஒப்பானதாகவும் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, பகலாகும் ஒளியாண்டு வளர்ச்சி காலமாகவும், இரவாகும் அடுத்த தளர்ச்சியாண்டுகள் 60 எனவும் பிரித்துக் கொள்ளப்பட்டது. ஆக, மனித ஆயுள் ஆண்டின் கணக்கீட்டில் ஒருபகுதி அறுபது ஆண்டுகள் எனவும்; மறுபகுதி அறுபது ஆண்டுகள் எனவும் கொள்ளப்பட்டது.
 மனித பிறப்பின் ஒளியாண்டு 60 என்பதால் அந்த அறுபது ஆண்டுகள் முடிந்ததும் அதற்கான சாந்தி ஹோமங்கள் செய்தனர். குழந்தை பிறந்து ஓராண்டில் ஆயுஷ் ஹோமம் என்னும் ஆயுள் வளர்ச்சிக்கான யாகம் செய்வது போன்று தளர்ச்சி ஆண்டின் துவக்கத்தில் சாந்தியாகங்கள் செய்து ஆயுள் விருத்திக்கு வழிவகுத்தனர். அறுபதுக்குப்பின் எழுபது, எண்பது, நூறு என்பதான சாந்தி யாகங்கள் செய்யவும் வழிகள் காட்டினர்.
 அறுபது வயதில் செய்யவேண்டியது உக்ரக சாந்தி
 வயதில் இது பகல் முடிந்து துவங்கும் அந்திமாலை நேரமாகும்
 அறுபத்தி ஒன்றில் செய்யவேண்டியது சஷ்டியப்தபூர்த்தி யாகம்
 இது இரவு காலத்தின் துவக்கமாகக் கருதவேண்டும்.
 இருள் சூழத்துவங்குகையில் ஒளிசூழ விளக்கேற்றுதலுக்கு ஒப்பாகும்.
 எழுபதாம் ஆண்டில் செய்வது பீமரத சாந்தியெனும் யாக சாந்தியாகும்
 இது கூடுதல் வளர் ஒளிச் செய்கையாகும்.
 எழுபத்தி ஏழு ஆண்டு ஏழு மாதம் ஏழு நாட்களில் செய்யவேண்டியது
 ஆயுள்விருத்தி ஹோமம் என்னும் விஜயரத சாந்தி.
 முன்னிரவு நேரத்தில் உணவு கொண்டு உயிர்வாழ செயல்படுதலுக்கு ஒப்பானது
 எண்பது ஆண்டு முடிந்து செய்விப்பது சதாபிஷேகம்
 ஆயிரம்பிறைகண்டு ஆனந்தித்து செய்வதாகவும் கருதுவோரும் உண்டு,
 நூறாவது ஆண்டில் சுவர்ணாபிஷேகம் செய்விப்பர்
 இதனை கனகாபிஷேகம் எனக் கொள்வாருமுண்டு.
 பேரனுக்கு மகன் பிறந்திருப்பானாகில் அவனது கரங்கள் கொண்டு பொன் மலர்களால் அர்ச்சிக்க, பிறப்பின் நிலை முடிந்து பேரின்ப நிலை கிட்டும் என்பது பெரியோர்களின் நல்வாக்கு.
 இந்த பூசைகள் யாவும் ஆயுள் விருத்தி, வளமை விருத்தி, நல விருத்தி, உறவின் நெருக்கம், வலிமை பெருக்கம், புகழின் பெருக்கம் ஆகியவற்றை அளிக்க வல்லது. ஆகையால், முறையான சிவாச்சார்யர்களைக் கொண்டு மகா கணபதி ஹோமம் செய்தும், ருத்ரருக்கு அபிஷேகங்கள் செய்தும், ஆயுஷ்ய ஸþக்தங்கள் ஓதியும், ம்ருத்யஞ்செய ஹோமம், வாஸ்து ஹோமம், நவக்ரஹ ஹோமம் முதலான பூசைகள் செய்தும், அன்னதானம் செய்தும், அன்பர்களுக்கும், ஆச்சார்யர்களுக்கும் வஸ்த்ர தானங்கள் அளித்தும் கொண்டாடி மகிழுங்கள்.
 - ஈச நேசன் மகஸ்ரீ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com