
ஸ்பெயினின் காடலோனியா மாகாணத்தை தனி நாடாக அறிவித்து தீர்மானம் நிறைவேற்றிய முன்னாள் முதல்வர் கார்லஸ் புஜ்தமோன்ட் பெல்ஜியமில் தலைமறைவாகிவிட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெல்ஜியமில் அரசியல் அகதியாக தஞ்சமடைய அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் ஐரோப்பிய யூனியன் அரசியல் சாசனப்படி மற்றொரு உறுப்பு நாடான ஸ்பெயினைச் சேர்ந்த அவருக்குப் புகலிடம் அளிக்க முடியாது என்று பெல்ஜியம் பிரதமர் கூறிவிட்டார்.
இதனிடையே கார்லஸ் புஜ்தமோன்ட்டை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு ஐரோப்பிய யூனியன் முழுவதும் செல்லுபடியாகும் பிடி ஆணையை ஸ்பெயினின் மாட்ரிட் மாவட்ட நீதிபதி பிறப்பித்தார்.
இந்நிலையில், பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் இருந்த புஜ்தமோன்ட் திடீரென தலைமறைவாகிவிட்டார். செய்தியாளர்களை சந்தித்து தனது தரப்பு அரசியல் நியாயத்தைக் கூறி வந்த அவர், பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டதும் தலைமறைவானார்.
எனினும் அவர் நாட்டைவிட்டு தப்ப முடியாது என்று அந்நாட்டு அதிகாரிகள் உறுதிபடத் தெரிவித்தனர். புஜ்தமோன்ட் பெல்ஜியமில் கைதானாலும், அவரை ஸ்பெயினுக்கு நாடு கடத்தும் நடவடிக்கைகள் பூர்த்தியாக 2 மாதங்களாகும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.