தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

அந்தணர்க்கு இருபிறப்பாளர் என்னும் பெயரும் உண்டு. அவர்க்குத் தாயின் கருவறையிலிருந்து வருவது ஒரு பிறப்பு என்றும் பூணூல் அணிந்த பின் வருவது மற்றொரு பிறப்பு என்றும் கூறுவர். அதுபோலப் பழந்தமிழ் நூல்களுக்கும் இரு பிறப்பு இருந்துள்ளது. ஓலைச்சுவடியில் உருவாவது அவற்றிற்கு முதற் பிறப்பு. அச்சு வடிவம் பெறுவது இரண்டாம் பிறப்பு.

ஓலைச்சுவடியில் எழுதப்பட்டவற்றைப் படித்து அறிதல் அரிய முயற்சி. சுவடிகளில் மெய்யெழுத்துகளின் மேல் புள்ளி இல்லாமல் இருக்கும். அதனால் ஒரு சீரை ஒருவர் ஒரு வகையாகவும் மற்றொருவர் இன்னொரு வகையாகவும் படித்தறியும் நிலை உருவாகிறது. இப்படி ஏட்டினைத் தவறாகப் படித்ததால் நேர்ந்த பிழைகள் பல.

குறுந்தொகை 85-ஆம் பாட்டின் முதல் அடி "யாரினு மினியன் போன பின்னே' என்று திருக்கண்ணபுரம் அரங்கனார், இராமரத்நம் ஐயர் ஆகிய இருவர் பதிப்புகளிலும் காணப்படுகிறது. "யாரினு மினியன் பேரன் பின்னே' என்று அருணாசல தேசிகர் பதிப்பில் உள்ளது. "யாரினு மினியன் பேரன் பினனே' என்று உ.வே.சா. பதிப்பிலும், "யாரினும் இனியன்; பேர் அன்பினனே' என்று சொற் பிரிப்போடு மர்ரே பதிப்பிலும் அமைந்துள்ளது. இவை ஓலைச்சுவடியில், "யாரினு மினியன போன பினனே' என்று ஒற்று இன்றி இருந்ததனைப் படிப்பதில் நிகழ்ந்த பாடவேறுபாடுகள். இவற்றுள் உ.வே.சா. கொண்ட பாடமே செம்மையான பாடம்.

உ.வே.சா.வின் குறுந்தொகைப் பதிப்பினை ஒருவர் முதலிலிருந்து இறுதிவரை முற்றும் ஒரு முறை கற்று உள்வாங்கிக்கொண்டால் அவருக்குச் சங்க இலக்கியத்தில் முக்கால் பங்கு விளங்கிவிட்டது என்று கூறலாம். முன்னைய பதிப்புகளோடு உ.வே.சா. பதிப்பினை ஒப்பிட்டுப் பார்க்கும் போது அவரால் குறுந்தொகை எத்தனை திருத்தங்கள் பெற்றுள்ளன என்பதனை அறியலாம். அவர் செம்மையான பாடங்களைத் தேர்ந்த திறனும், ஒப்புமைப் பகுதிகளைக் காட்டியுள்ள அழகும், பாடல்களுக்குப் பொருள் கண்ட புலமைச் சிறப்பும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. எனினும் அதன்பின் வந்த பதிப்புகளால் மேலும் சில செம்மையான பாடங்கள் அமைந்து குறுந்தொகை அழகு பெற்றுள்ளது என்பதும் உண்மை.

தலைமகள் ஒருத்தியைக் கண்டு காதல்கொண்ட தலைமகன் ஒருவன் அவளை விரைந்து மணம்செய்து கொள்ளாமல் காலம் கழித்து வருகிறான். இது தலைமகளுக்கு மிக்க வருத்தம் தந்தது. ஒருநாள் தலைவன் அவளைக் காண வந்து வீட்டிற்கு வெளியே நிற்கிறான். அவள் வீட்டின் அருகே ஆறு ஒன்று ஓடுகிறது. அவன் வந்திருப்பதை அறியாதவள் போன்று அதனை நோக்கிப் பேசுகிறாள்: "'ஆறே! இவள் நம் அருகிலுள்ள மனையில் வாழ்பவள். மடப்பம் உடையவள். இவ்வாழையைப் போன்று மென்மையானவள். நம்மால் இரக்கங் காட்டுதற் குரியவள்' என்று நீ கருதவில்லை. தலைமகனுக்குரிய மலையில் வளர்ந்த வாழைமரத்தை அம்மலை பொலிவை இழக்கும்படி பெயர்த்து எடுத்துக் கொண்டு ஓடி வந்தாய்.

தலைமகனோ தான் அருள்புரிந்தால் வாழும் வறியோரிடம் அன்பு காட்டாமல் இருத்தல் நல்லது என்று இருக்கும் கொடியவன். அவன் கொடுமையைக் காட்டிலும் நின் செயல் பெரிதும் கொடிது'' என்று தன் வருத்தத்தைப் புலப்படுத்துகிறாள்.

நல்கின் வாழும் நல்கூர்ந் தோர்வயின்

நயன்இலர் ஆகுதல் நன்றென உணர்ந்த

குன்ற நாடன் தன்னினும் நன்றும்

நின்னிலை கொடிதால் தீய கலுழி

நம்மனை மடமகள் இன்ன மென்மைச்

சாயலள் அளியள் என்னாய்

வாழைதந் தனையால் சிலம்புபுல் லெனவே.

என்பது ""கிழவன் கேட்கும் அண்மையனாக அவன் மலையினின்றும் வரும் யாற்றிற்கு உரைப்பாளாய் உரைத்தது'' என்னும் துறையில் அமைந்த அம்மூவனாரின் குறுந்தொகைப் பாட்டு.

இப்பாட்டின் நான்காம் அடியின் இறுதி இருசீர்களின் உண்மையான வடிவம் புலப்படாத நிலையில் பதிப்பாளர்கள் இடர்ப்பட்டுள்ளார்கள். முதல் பதிப்பாசிரியராகிய அரங்கனார் "தீங்க லுழுத' என்று விளங்காத பாடத்தைக் கொண்ட போதிலும் துறைக் குறிப்பில் வரும் ஆறு என்னும் குறிப்பைக் கொண்டு ஆற்றை நோக்கிக் கூறுவதாகப் பொருள் கொண்டுள்ளார். பின்வந்த பொ.வே.சோமசுந்தரனார் போன்றோர் உ.வே.சா. கொண்ட "தீய கலுழி' என்னும் பாடத்தையே கொண்டு உரையிட்டுள்ளனர்.

1940-ஆம் ஆண்டு வையாபுரிப்பிள்ளையும்

ம. பாலசுப்பிரமணிய முதலியாரும் அரும்பாடுபட்டுக் கொண்டு வந்துள்ள "சங்க இலக்கியம்' பதிப்பில் "தீங்கலுழ் உந்தி' என்னும் பாடம் காணப்படுகிறது. 1957-இல் வந்த மர்ரே பதிப்பிலும், 1985-இல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் வழி வந்த மு.சண்முகம்பிள்ளை பதிப்பிலும் இப்பாடமே போற்றிக் கொள்ளப் பட்டுள்ளது. கலுழி என்பது கலங்கல்நீர் என்று பொருள் தருவது. நேராக ஆறு என்று பொருள்படுவதன்று. உந்தி என்பதற்கு ஆறு என்பது பொருள்.

இச்சொல் இப்பொருளில், "மாலைப் பெய்த மணங்கமழ் உந்தி' என்று குறுந்தொகையிலேயே வேறொரு பாட்டில் (362) பயன்படுத்தப்பட்டுள்ளது.

அரங்கனார் பதிப்பில் நான்காம் அடியின் மூன்றாம் சீரும் நான்காம் சீரும் "தீங்க லுழுத' என்றும், அருணாசல தேசிகர் பதிப்பில் "தீங்க லுழிநீ' என்றும் உ.வே.சா. தந்துள்ள பாட வேறுபாடுகள் இரண்டில் ஒன்று "தீங்கலுழுதி' என்றும் இருப்பதைக் கூர்ந்து நோக்கின் மூன்றாம் சீர் "தீங்கலுழ்' என்றும் நான்காம் சீர் "தி' என்னும் எழுத்தில் முடியும் உந்தி என்றும் இருந்திருக்கின்றன என்பது தெளிவாகிறது.

"தீய கலுழி' என்னும் பாடத்தினும் "தீங்கலுழ் உந்தி' என்னும் பாடமே இன்னோசையும் பொருட்சிறப்பும் உடையதாய் அமைந்துள்ளது. எனவே பாட்டின் நான்காம் அடி "நின்னிலை கொடிதால் தீங்கலுழ் உந்தி' என்று இருத்தலே தக்கதாகும். இதனால், பழந்தமிழ் நூல்களை ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து பதிப்பிக்கும்போது, அவை பதிப்புத்தோறும் செம்மையடைந்துள்ளமை புலனாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com