சர்வதேச சட்டத்தின் இயல்பும் - அடிப்படையும்

சர்வதேச சட்டத்தின் இயல்பும் - அடிப்படையும்

சர்வதேச சட்டத்தின் இயல்பும் அடிப்படையும்

(Nature and Basis of International Law)

சர்வதேச சட்டத்தின் இயல்பு (Nature)

சர்வதேச சட்டம் என்றால் என்ன என்பது பற்றி பல்வேறு அறிஞர்கள் பல்வேறு விதமாக வரையறுத்துள்ளனர். சாதாரண வழக்கிலும் சட்டம் என்பது பல வழிகளில் புரிந்து கொள்ளப்படுகிறது.  சர்வதேசச் சட்டத்தின் இயல்புகளை விவாதிக்கப் புகுந்தால் முதலில் எதிர் கொள்ள வேண்டிய வினா சர்வதேசச் சட்டம்  உண்மையில் ஒரு சட்டமா என்பதாகவே இருக்கிறது.

உள்நாட்டுச் சட்ட அமைப்பு முறையில் (Domestic legal system) பொதுவாக சட்டம் என்றால் குடிமக்களின் நடத்தைகளை கட்டுபடுத்துவதற்காக அரசு (இறையாண்மை) வெளியிடும் சட்ட விதிகளின் தொகுப்பாகவே நாம் பார்கிறோம். அத்தகைய விதிகள் பொதுவாக நாட்டின் சட்டமியற்றும் மன்றங்களால் உருவாக்கப்படுகின்றன. நீதிமன்றங்களால் பொருள் விளக்கம் தரப்படுகின்றன: அவை குடிமக்களால் மீறப்படும் போது தேவைப்பட்டால் காவல்துறை வலிமையின் மூலம் நிர்வாகத்துறையில் அமல்படுத்தப்படுகின்றன.

ஆனால் சர்வதேசச் சமுதாயத்திற்கென்று சட்டமியற்றும் மன்றங்கள் எதுவும் கிடையாது. நீதித்துறையோ காவல்படையுடன் சட்டங்களை அமல்படுத்தும் நிர்வாகத்துறையோ கிடையாது.

சர்வதேசச் சட்டம் ஒரு சட்டமா?

(Is International Law, a Law?)

சர்வதேசச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியது சாதாரண குடிமக்கள் அல்ல. இறையாண்மை அரசுகளே. எனவே சர்வதேசச் சட்டத்தை மீறினால் தண்டிக்கப்படுவோம் என்ற பயத்தின் காரணமாக எந்தவொரு அரசம் சர்வதேசச் சட்டத்தை மதித்து நடப்பதில்லை. ஏனெனில் உலகின் இறையாண்மை அரசுகளைத் தண்டிக்கும் அதிகாரம் உடைய உலக அரசு என்று எதுவும் இல்லை.

சர்வதேசச் சட்டம், ஒரு இறையாண்மை பெற்ற அரசின் அதிகாரத்தில் இருந்து பிறப்பது அல்ல. மாறாக அது ஒன்றுக்கு மேற்பட்ட இறையாண்மை அரசுகள் ஒன்றுக்கொன்று இணக்கம் அளிக்கும் ஒத்திசைவின் மூலம் உருவாவது ஆகும். எனவே சர்வதேசச் சட்டம் ஒரு சட்டமல்ல. அது அறவொழுக்கமே என்று ஒரு சாராரும் அதுவும் ஒரு சட்டமே என்று மற்றொரு சாராரும் இருவேறு கோணங்களில் இருந்து வாதிடுகின்றனர். இரண்டும் இல்லை, அது சர்வதேச ஒப்பந்தங்களின் சட்டம் என்று மற்றொரு சாரார் நிறுவுகின்றனர்.

சர்வதேசச் சட்டம் உண்மையில் ஓர் சட்டமல்ல

ஜான் ஆஸ்டின்

ஜான் ஆஸ்டின் ‘சர்வதேசச் சட்டம் என்பது இறையாண்மை பெற்ற அரசு அதன் கீழ்ப்பட்ட குடிமக்களுக்காக இயற்றும் நிகழ்நிலைச் சட்டமல்ல” என்றுகிறார். இறையாண்மை அரசுகளுக்கு  இடையிலான உறவை ஒழுங்குபடுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட சர்வதேசச் சட்டம் அந்த இறையாண்மை அரசுகள் மீது மேலாண்மை பெற்ற ஒரு உலகப் பொது இறையாண்மை அரசால் உருவாக்கப்பட்டது அல்ல. சர்வதேசச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடு, இறையாண்மை பெற்ற அரசுகள் ஒவ்வொன்றும் அவை சிறியதோ பெரியதோ வலிமையானதோ பலவீனமானதோ சர்வதேசச் சட்டத்தை பொறுத்தவரை சமமானவை என்பதே ஆகும். உண்மை நடப்பில் எப்படியோ, குறைந்தபட்சம் கொள்கை அளவில் சம உரிமை கொண்ட அரசுகளாகவே கருதப்படும். எனவே எல்லா அரசுகளுக்கும் மேலான அதிகாரம் பெற்ற பொது அரசு என ஒன்று சாத்தியமில்லை. எனவே ஒரு இறையாண்மையின் ஆணையில் இருந்து பெறப்படாத சர்வதேசச் சட்டம் உண்மையில் நிகழ்நிலைச் சட்டம் அல்ல என்பது ஆஸ்டினின் வாதம்.

சர்வதேசச் சட்டத்தை மீறும் ஒரு அரசைத் தண்டிக்கும் அதிகாரம் பெற்ற மேலாண்மை அரசு எதுவும் கிடையாது. எனவே, ‘அரசுகளுக்கு இடையிலான பொதுக் கருத்தின் மூலமே சர்வதேசச் சட்டம் உருவாகிறது. அதன் அடிப்படையில் எழும் கடமைகள் அறவொழுக்கத் தண்டனை (moral sanction)  மூலமாகவே நிறைவேற்றப்படுகிறது” என்கிறார் ஆஸ்டின். எனவே, சர்வதேசச் சட்டம் நிகழ்நிலைச் சட்டமல்ல அது நிகழ்நிலை அறவொழுக்கமே என்பது ஆஸ்டின் மற்றும் அவரை சார்ந்த சட்டவியலாளர்களின் கருத்தாகும்.

சல்மாண்டின் கருத்துப்படி, உள்நாட்டு நீதிமன்றத்தால் பின்பற்றப்படும் சர்வதேசச் சட்டத்தின் ஒரு பகுதியாகிய கடற்போர்க் கொள்பொருள் சட்டம் (Prize  law) மட்டுமே சட்டம் என ஏற்றுக் கொள்ளப்பட முடியும். அது தவிர சர்வதேசச் சட்டத்தின் பிற பகுதி எதுவும் சட்டத்தின் ஆக்கக் கூறுகளை பூர்த்தி செய்யாது.

எனவே, சல்மாண்ட் சர்வதேசச் சட்டத்தை சர்வதேச ஒப்பந்தங்களின் சட்டம் எனும் புது வகையாக வகைப்படுத்துகிறார். அவரது கருத்துப்படி, சர்வதேசச் சட்டம், நாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கைகள், சர்வதேச பொது ஒப்பந்தங்கள் மூலமாகவே உருவாகின்றன. அவற்றின் மூலமாக அவற்றில் ஒப்பமிட்ட நாடுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. எனவே, வெளிப்படையான அல்லது உட்கிடையான சர்வதேச பொது ஒப்பந்தங்களின் சட்டமே சர்வதேசச் சட்டம் என சல்மாண்ட் (Salmond, Jhon) வரையறுக்கிறார்.

சல்மாண்ட் இன் கருத்தில், சர்வதேசச் சட்டங்கள் சர்வதேச வழக்காறுகள் மரபுகளில் இருந்து உருவாவதில்லை. சர்வதேசச் சட்டம் சர்வதேச பொது ஒப்பந்தங்களில் இருந்தே உருவாகின்றன. சர்வதேச வழக்காறுகள். சர்வதேசச் சட்டத்தின் இருப்பை நமக்கு உணர்த்தும் சாட்சியங்கள் மட்டுமே ஆகும்.

ஹாலந்த்:  சர்வதேசச் சட்டம் சட்ட வியலின் மறைவுப் புள்ளி

(Holland: International Law is the Vanishing Point of Jurisprudence)

நவீன ஆஸ்டினிய குழாமைச் (Neo Austinian School) சார்ந்த சட்டவியலாளரான ஹாலந்த், சர்வதேசச் சட்டத்தை சட்டம் என்று நாம் அழைப்பது ஒரு மரியாதைக்காகவே ஒழிய, அது உண்மையில் ஒரு சட்டமல்ல என்கிறார். அவரது கருத்தில் சர்வதேசச் சட்டம் மீறப்பட்டால் தண்டனை வழங்கும் அதிகார அமைப்பு எதுவும் கிடையாது. எனவே உள்நாட்டுச் சட்டத்தை போல் சர்வதேசச் சட்டத்தை ஒரு சட்டமாக ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால் தான் ஹாலந்த் சர்வதேசச் சட்டம், சட்டவியலின் மறைவுப் புள்ளி என்று குறிப்பிட்டார்.

பொதுவாக மறைவுப்புள்ளி என்பது ஒரே தளத்தில் அமைந்திருக்கும் இணை கோடுகள் தூரத்தில் ஓரிடத்தில் சந்திப்பது போல் தோற்றமளிக்கும் புள்ளியாகும். மறைவுப்புள்ளி (Vanishing Point) என்ற வார்த்தைகளின் மூலம் ஹாலந்த் சர்வதேசச் சட்டத்தையும் உள்நாட்டுச் சட்டத்தையும் ஒப்பிட்டே கூறுகிறார். அவரது கருத்தில், சர்வதேசச் சட்டமும் உள்நாட்டுச் சட்டமும் ஒன்றுக்கொன்று இணையான இருவேறு சட்ட அமைப்பு முறைகளாகும். இவ்விரண்டு சட்ட அமைப்பு முறைகளும் ஒன்று சேரும் மறைவுப் பள்ளியில் இவ்விரண்டும் ஒன்றே போல் தோற்ற மயக்கம் காட்டினாலும் சர்வதேசச் சட்டமும் உள்நாட்டுச் சட்டமும் வெவ்வேறு தனித்தனிச் சட்ட அமைப்பு முறைகளாகும்.

பல வகைகளில் சர்வதேசச் சட்டம், ஒரு சட்டத்தைப் போல் தோற்றமளித்தாலும், இது இறையாண்மை அதிகாரத்தில் இருந்து பிறந்த சட்டமுமல்ல. அதன் விதிகள் மீறப்பட்டால் தண்டனை வழங்கும் சர்வதேச அமைப்பும் கிடையாது என்பதால் அதனை சட்டம் என்ற வகைப்பாட்டில் வகைப்படுத்த முடியாது என்பது ஹாலந்த்-இன் கருத்தாகும். எனவே தான் அவர் சர்வதேசச் சட்டத்தை ஒரு மரியாதைக்காக சட்டம் என்று அழைக்கிறோமேயொழிய உண்மையில் அது ஒரு சட்டமல்ல. ஆகவே சர்வதேச் சட்டம் துவங்குமிடத்தில் சட்டவியல் மறைந்து விடுகிறது.

ஆனால் இன்று ஹாலந்தின் கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. ஏனெனில், இன்றைய சர்வதேசச் சட்டத்தில், அதன் விதிகளை மீறும் நாட்டை தண்டிக்கும் அதிகாரம் நாடுகளின் சமுதாயத்திற்கு இல்லை என்று கூற முடியாது. இன்று ஐ.நா.சபை போன்ற சட்டமியற்றும் உடன்படிக்கைகள், கடப்பாடுகளை உருவாக்கும் பிற உடன்படிக்கைகள் போன்றவற்றின் மூலம் நாடுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. சர்வதேச விதிகளை மீறும் நாடுகள் பல்வேறு வழிகளில் தண்டிக்கப்படுகின்றன. அதனால் தான் டயஸ் (Dias), ‘சர்வதேசச் சட்டத்திற்கு நாடுகள் கட்டுப்படுவதற்கான முதன்மையான காரணங்கள், அவற்றின் அச்சமும் சுயநலமுமே ஆகும். போர் கண்டனங்கள் பொருளாதாரத் தடைகள், போர் அணி வகுப்புகள் போன்றவையே நாடுகளின் அச்சத்திற்கு காரணங்களாக இருக்கின்றன” என்று கூறுகிறார். இன்று சர்வதேசச் சட்ட விதிகளை மீறும் நாடுகளின் மீது, நாடுகளின் சமுதாயம் கூட்டு நடவடிக்கை எடுப்பதற்கு ஐ.நா.சபையின்  பொதுசபைக்கும் பாதுகாப்பு சபைக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சர்வதேசச் சட்டம் உண்மையில் ஓர் சட்டமே

சர்வதேசச் சட்டம் என்பது உருப்பெற்ற காலத்தில் கோலோச்சிய சட்டக்கருத்தாக்கங்கள் யாவும் இறையாண்மை (Sovereignty) யினையும் அதிலிருந்து வெளிப்படும் உள்நாட்டுச் சட்டங்களையும் அடிப்படையாகக் கொண்டவையாகவே இருந்தன. சட்டம் என்றால் என்ன என்பதற்கான வரையறையும் கூட உள்நாட்டுச் சட்டத்தை மனதில் வைத்தே வகுக்கப்பட்டன. எனவே உள்நாட்டுச் சட்டத்துடனும் இறையாண்மைக் கண்ணோட்டத்துடனும் சர்வதேசச் சட்டத்தை ஒப்பிடும் போது, சர்வதேசச் சட்டம் ஒர் சட்டமே அல்ல எனும் கருத்து ஆஸ்டின் போன்றோரால் முன்வைக்கப்பட்டன.

ஆனால் தற்காலத்தில் அந்த ஒப்புமையே தவறான ஒப்புமை என்று சட்டவியல் அறிஞர் பலரும் ஒப்புக் கொண்டுள்ளனர். ஒரு நாட்டிற்குள் செயல்படும் உள்நாட்டுச் சட்டம் இயங்கும் தளம் வேறு, உலக நாடுகளிடையே சர்வதேச சமுதாயத்தில் செயல்படும் சர்வதேசச் சட்டம் இயங்கும் தளம் வேறு ஆகும். மேலும் ஆஸ்டினின் சட்டம் பற்றிய வரையறை அரசின் இறையாண்மையை அடிப்படையாகக் கொண்ட 19ஆம் நூற்றாண்டிற்குப் பொருத்தமானதாக வேண்டுமானால் இருந்திருக்கலாம். இறையாண்மை எனும் கருத்தாக்கமே அவசியமற்றமதாக ஆகிவிட்ட இன்றைய நிலையில் ஆஸ்டினின் கருத்து பொருத்தமற்றதாக ஆகிவிட்டதை கவனத்தில் கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

ஒப்பன்ஹீம் (Oppenheim) ‘சர்வதேசச் சட்டம்  என்பது நாடுகளின் குடும்பம் எனும் சர்வதேசச் சமுதாயத்தின் சட்டம்” என்கிறார். ‘சட்டம் என்பது, ஒர் சமுதாயத்தின் பொது சம்மதத்தின் பேரில் சமூகத்தினின்று தனித்தவொரு அதிகாரத்தால் செயல்படுத்தப்படும் மனித நடத்தைகளுக்கான விதிகளின் ஒரு தொகுப்பே” என்று வரையறுக்கிறார்.

அவரது கருத்தின்படி, ஒரு நாட்டின் தனிநபர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு சமுதாயமாக உருவாவது போல், உலக நாடுகள் ஒன்றிணைந்திருக்கும் நாடுகளின் குடும்பமும் ஒரு சர்வதேசச் சமுதாயமே ஆகும். இச்சர்வதேசச் சமுதாயத்தின் உறுப்பினர்களாகிய அரசுகளுக்கு இடையிலான உறவுகளையும் நடத்தைகளையும் பற்றி நன்கு முதிர்ச்சியடைந்த விதகிள் உருவாக்கப்பட்டுள்ன. இந்த விதிகள் பகுதியளவு, நீண்ட வழக்காறுகள், மரபுகள் மூலமாகவும் பகுதியளவு, சர்வதசப் பொது இணக்க ஒப்பந்தங்கள் (Conventions) மற்றும் உடன்படிக்கைகள் (Agreements) மூலமாகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய விதிகளின் தொகுப்பே சர்வதேசச் சட்டம் ஆகும்.

ஆஸ்டின் கூறுவது போல் சர்வதேசச் சட்டத்தை மீறும் அரசுகளைத் தண்டிக்க அதிகார அமைப்பே இன்று இல்லை எனக் கூற முடியாது. ஒரு அரசு சர்வதேசச் சட்டத்தை மீறுகிறது எனில், உலக நாடுகளின் கூட்டமைப்பாகிய ஐக்கிய நாடுகள் சபை (UNO)யின் தீர்மானத்தின் மூலம் அந்நாட்டின் மீது பகுதி அல்லது முழுமையான பொருளாதாரத் தடை, பிற நாடுகளின் ஒத்துழைப்பை நிறுத்துவது போன்ற சர்வதேசச்  சமுதாயப் புறக்கணிப்பு செய்யப்படுகின்றது. இது அந்நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்த வல்லவையாகும். இந்த சர்வதேச அழுத்தத்தை சமாளிக்க வேண்டுமானால் சர்வதேசச் சட்டத்தை விதித்து நடப்பதை தவிர அந்நாட்டின் அரசுக்கு வேறு வழியிருக்காது.

ஸ்டார்க் (Starke): சர்வதேசச் சட்டம் ஒரு சட்டமே என்று கூறும் ஸ்டார்க் அதற்கான அடிப்படைகளாக பின்வரும் நான்கு காரணிகளைக் காட்டுகிறார்.

1. வரலாற்றில் பல சமுதாயங்களில் முறையான சட்டமியற்றும் மன்றங்கள் இல்லாவிட்டாலும் சட்டங்கள் இருந்துள்ளன என்பதை வரலாற்றுச் சட்டவியல் (Historical Jurisprudence) நிரூபித்துள்ளது.

2. இன்றைய சர்வதேச அமைப்பு முறையில், சட்டமியற்றும் உடன்படிக்கைகள் (Law making treaties) என்பது உள்நாட்டுச் சட்ட அமைப்பு முறையில் இருக்கும் சட்டமியற்றும் அமைப்புகளுக்கு நிகராக செயல்படுகின்றன. எனவே, சர்வதேசச் சட்ட அமைப்பு முறைக்கு சட்டமியற்றம் அமைப்பு இல்லை என்று இப்போது கூற முடியாது.

3. உண்மை நடப்பில் சர்வதேச உறவுகளைப் பராமரிக்கும் சர்வதேச அதிகார அமைப்புகள் எதுவும் சர்வதேசச் சட்ட விதிகளை வெறும் அறவொழுக்க விதிகள் மட்டுமே என்று கருதுவதில்லை. அவை நடைமுறையில் செயல்படுத்தப்படும் சட்ட விதிகளாக கருதி அமல்படுத்தவும்படுகின்றன.

பாக்யுட் ஹவானா (Paquete Habana) (1899) 175 US.677) என்ற வழக்கில் சர்வதேசச் சட்டம், அமெரிக்கச் சட்டத்தின் ஒரு பகுதியாகும். எனவே, அமெரிக்க நீதிமன்றங்களால் சர்வதேசச் சட்டங்கள் உறுதிபடுத்தப்படவும் அமல்படுத்தப்படவும் வேண்டும்” என்று அமெரிக்க நீதிபதி கிரே தீர்ப்பளித்துள்ளார்.

சர்வதேசச் சட்டத்தின் பலவீனங்கள் (Weaknesses)

சர்வதேசச் சட்டம் ஓர் சட்டமே என்று பொதுவில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தாலும், அது ஓர் பலவீனமான சட்டம் (Weak Law) என்பதையும் நாம் மறந்துவிட முடியாது. குறிப்பாக உள்நாட்டுச் சட்டத்துடன் ஒப்பிடும் போது அதன் பலவீனம் வெளிப்படையானதாகும். பின்வருவன சர்வதேசச் சட்டத்தின் பலவீனங்களுள் சிலவாகும்.

1. சர்வதேசச் சட்டத்தை நிர்வகிப்பதற்கென வலிமை மிக்க நிர்வாக அமைப்பு ஒன்று இல்லாதது அதன் மிகப்பெரிய பலவீனமாகும்.

2. சர்வதேசச் சட்டத்திற்கென்று தனியான சர்வதேசச் சட்டமியற்றும் அதிகார அமைப்பு இல்லாததும் அதன் பெருங்குறைகளில் ஒன்றாகும்.

3. சர்வதேசச் சட்ட விதிகளை அமல்படுத்துவதற்குரிய சக்திவாய்ந்த சர்வதேச அதிகார அமைப்புகள் எதுவும் இல்லாமல் இருப்பது அதன் மிகப் பெரிய பலவீனமாகும்.

சர்வதேசச் சட்ட விதிகளை மீறும் நாடுகள் மீது ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் பொருளதாரத் தடைகளும் சில சமயங்களில் இராணுவ நடவடிக்கையும் பொருளாதாரத் தடைகளும் பலவீனமான அரசுகள் சர்வதேசச் சட்டவிதிகளை மீறும் போது மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. வலிமையான வல்லரசு ஒன்று சர்வதேசச் சட்டத்தை மீறும் போது அச்சட்டம் வலிமையற்று வளைந்து போய்விடுகிறது என்பதே உண்மை நடப்பாகும். அத்தகைய சூழ்நிலைகளில் சர்வதேசச் சட்டம் ஒரு பலவீனமான சட்டமாகவே காட்சியளிக்கிறது.

4. எனவே, சர்வதேசச் சட்டத்தை அமலாக்கும் அமைப்புகள் மிகவும் பலவீனமான அமைப்புகளாக இருக்கின்றன. அதுவும் சர்வதேசச் சட்டத்தை மேலும் பலவீனமான சட்டமாக ஆக்குகிறது.

5. சர்வதேசச் சட்டத்தை அமலாக்கும் அமைப்புகள் பலவீனமானதாக இருப்பதால் அவ்வப்போதைய சர்வதேச அரசியல் நிலைமைகளுக்கு ஏற்ப சர்வதேசச் சட்ட விதிகள் பல நாடுகளால் அடிக்கடி மீறப்படுகின்றன.

6.  சர்வதேச நீதிமன்றத்திற்கு கட்டாய அதிகார வரம்பு இல்லாததது சர்வதேசச் சட்டத்தின் பெருங்குறையாகும். பிரச்சனைக்குரிய நாடுகள் தரமாக முன்வந்து சர்வதேச நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டு பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதாக தங்களுக்குள் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டிருந்தால் மட்டுமே அதனை விசாரித்து முடிவு செய்யும் அதிகாரம் சர்வதேச நீதிமன்றத்திற்கு வரும்.

7.  நாடுகளின் உள்நாட்டு அதிகார வரம்பிற்குள் சர்வதேசச் சட்டம் தலையிட முடியாது எனும் சட்ட நிலை அதன் மற்றொரு பலவீனம் ஆகும்.

8. உள்நாட்டுச் சட்டங்களுடன் ஒப்பிடும் போது சர்வதேசச் சட்ட விதிகள் நிலையற்றதாகவும் அடிக்கடி மாறக்கூடிய சட்ட நிலைகளை கொண்டதாகவும் இருக்கின்றன.

9. சர்வதேசச் சட்டத்தின் உள்ளார்ந்த பலவீனங்களின் காரணமாக பல சமயங்களில் அது உலக நாடுகளிடையே ஒழுங்களையும் அமைதியையும் பராமரிக்கத் தவறியுள்ளது என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மையாகும்.

சர்வதேசச் சட்டத்திற்கு பலவீனங்கள் பல இருந்தாலும், அத்தனை பலவீனங்களுடன் கூடிய சர்வதேசச் சட்டம் என்று ஒன்றே இல்லாவிட்டால் உலக நாடுகளின் உறவுகள் அதைக் காட்டிலும் மோசமடையக் கூடும் என்ற உண்மையே, சர்வதேசச் சட்டத்தின் அவசியத்தை உணர்த்தக் கூடியதாகும். எனவே, பலவீனமான சட்டமாக இருந்தாலும் சர்வதேசச் சட்டம் அவசியமானதொரு சட்டமாகவே சட்டவியலாளர்களால் கருதப்படுகின்றது.

நாடுகளின் பொருளாதார நலன்களே சர்வதேசச் சட்டத்தின் இயக்கு விசை

(Ecinomic Interests of Staes are the Driving Force of International Law)

சர்வதேசச் சட்டத்தின் இயல்பையும் அடிப்படையும் உருவாக்குவது நாடுகளின் பொருளாதார நலன்களே ஆகும். சர்வதேச நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றம் நலன்களுக்கு ஏற்பவே சர்வதேச அரசியல் வடிவம் எடுக்கின்றது. சர்வதேச அரசியலின் விளைவாகவே சர்வதேசச் சட்டம் வளர்கிறது. உதாரணத்திற்கு 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகள் தங்கள் பொருளாதார வளர்ச்சிக்காக கடல் வணிகத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படாமல் போயிருந்தால் சர்வதேசக் கடல் சட்டம் உருவாகியிருக்காது. அதுபோல ஏகாதிபத்திய நாடுகள் தங்களது பொருளாதார வளத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக உலகப் போர்களில் ஈடுபடவில்லை எனில் சர்வதேசப் போர்ச் சட்டங்களும் ஐ.நா.சபை போன்ற சர்வதேச அமைப்புகளும் தோன்றியிருக்க வாய்ப்பே இருந்திருக்காது.

உள்நாட்டுக் கொள்கையும் வெளியுறவுக் கொள்கையும்

(Domestic Policy and Foreign Policy)

சர்வதேச விவகாரங்களில் ஒவ்வொரு நாடும் தனது நிலைப்பாடுகளை தங்கள் நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் மூலமே தீர்மானிக்கின்றன. ஆனால் அந்த வெளியுறவுக் கொள்கை நாம் ஏற்கனவே பார்த்தது போல் அந்தந்த நாட்டின் உள்நாட்டுப் பொருளாதார நலன்களைச் சார்ந்ததே வகுக்கப்படுகின்றது. அதனால் தான் ஒரு நாட்டின் உள்நாட்டுக் கொள்கையின் நீட்சியே அந்நாட்டின் வெளியுறவுக் கொள்கை என்பர். எனவே சர்வதேசச் சட்டத்தையும் சர்வதேசப் பிரச்சனைகளையும் ஆராயும் போது அதில் சம்மந்தப்பட்ட நாடுகளின் உள்நாட்டுக் கொள்கையினையும் அதன் அடிப்படையில் வகுக்கப்பட்ட அந்நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளையும் கணக்கில் கொள்ள வேண்டியது அவசியமாகும். இல்லாவிட்டால் அப்பிரச்சனையில் நாடுகள் நடந்து கொள்ளும் போக்கை நம்மால் புரிந்து கொள்ள முடியாது.

சர்வதேசச் சட்டத்தின் அடிப்படை (Basis)

சர்வதேசச் சட்டத்தின் அடிப்படை இயல்புகள் பற்றிய பல்வேறு அறிஞர்களின் கோட்பாடுகளில் பின்வரும் மூன்று கொள்கைகள் மிக முக்கியமானவையாகும். அவை:

1.       இயற்கைச் சட்டம் கொள்கை 

2.       நிகழ்நிலைச்சட்ட கொள்கை

3.       க்ரோஷியர்களின் கொள்கை

1. இயற்கைச் சட்ட கொள்கை (Theory of Law of Nature)

சாமூவேல் பரோன் வான் புஃபென்டர்ஃப்

சட்டவியலில் தோன்றிய இயற்கைச் சட்ட குழாமை அடியொற்றி சர்வதேசச் சட்டவியலில் உருவான கொள்கை இயற்கைச் சட்டக் கொள்கையாகும். முற்கால கிரேக்க இயற்கைச் சட்டக் கருத்துக்கள், மத்திய காலத்தில் மதக்கோட்பாடுகளுடன் பிணைக்கப்பட்டன. நவீன இயற்கைச் சட்டவியலாளர்கள் இயற்கை சட்டத்தை மதக் கோட்பாடுகளின் பிடியில் இருந்து விடுவித்தனர். இயற்கைச் சட்டத்தை மதத்தில் இருந்து பிரித்து மதச் சார்பற்றதாக மாற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர் க்ரோஷியஸ் ஆவார். இயற்கைச் சட்டக் கொள்கையாளர்களில் முதன்மையானவர் புஃபென்டர்ஃப் (Pufendorf) ஆவார்.

இயற்கைச்சட்டக் கொள்கையின்படி நாடுகளின் சட்டம் என்பது இயற்கைச் சட்டத்தின் ஒரு பகுதியாகும். இதன்படி, சர்வதேசச் சட்டத்திற்கு நாடுகள் கட்டுப்படுவதற்கான காரணம், அவற்றுக்கு இடையிலான உறவுகள் மிக உயர்ந்த சட்டமாகிய இயற்கைச் சட்டத்தால் ஒழுங்குபடுத்தப்படுவதே  ஆகும். இயற்கைச் சட்டத்தைப் பொருத்துவதன் மூலம் கட்டுபப்படுத்தும் வலிமையினையே சர்வதேசச் சட்டம் பெறுகிறது. புஃபென்டர்ஃப்  நாடுகளின் இயற்கைச் சட்டத்துடன் கூடவே சுயமான அல்லது நிலைச் சட்ட விதி ஒன்றும் செயல்படுகிறது. அதுவே உண்மையான சட்டத்தின் வலிமையை சர்வதேசச் சட்டத்திற்கு வழங்குகிறது என்கிறார்.

18-ஆம் நூற்றாண்டுகளில் இயற்கைச் சட்டக் கொள்கை மேலும் குறிப்பான வளர்ச்சியை அடைந்தது. உதாரணத்திற்கு வாட்டல் (Vattal) தனது நூலில் (1758) இயற்கைச் சட்டத்தையும் நாடுகளின் சட்டத்தையும் தொடர்புப்படுத்தி பின்வருமாறு வரையறுக்கிறார்.

‘இயற்கை சட்டத்தை நாடுகளுக்கு பொருத்தியதன் விளைவாக உருவான சட்டத்தையே நாங்கள் நாடுகளின் சட்டம் என்கிறோம். அதன் காரணமாகவே நாடுகள் அச்சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கக் கடமைப்பட்டவையாகின்றன. அது இயற்கைச் சட்டம் நாடுகளுக்குப் பணிக்கும் கோட்பாடுகளைக் கொண்டதாகும். அச்சட்டம் தனிநபர்களைக் கட்டுபப்படுத்துவதைக் காட்டிலும் குறைவாகவே நாடுகளைக் கட்டுப்படுத்தும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் நாடுகள் மனிதர்களால் ஆனவை அவர்களது அரசியல் மனிதர்களால் தீர்மானிக்கப்படகிறது. எனவே இந்த மனிதர்கள் எந்த தகுதியின் கீழ் செயல்பட்டாலும் அவர்கள் இயற்கைச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்களே ஆவர்”.

இயற்கைச் சட்டக் கொள்கையின் பகுத்தறிவுத் தன்மையும் முன்மாதிரிச் சட்டத்தை முன்வைக்கும் தன்மையும், சர்வதேசச் சட்டத்தின் ஆரம்பகால வளர்ச்சிக்கு மிக முக்கியமான பங்களிப்பை வழங்கின என்பதை மறுக்க முடியாது. இயற்கைச் சட்டக் கொள்கையை இறையாண்மைக் கோட்பாட்டையும் அரசுகளின் வரம்பற்ற  அதிகாரத்தையும் பிரித்தது. இறையாண்மை அரசும் சட்டத்திற்குக் கட்டுப்பட்டதே என்பதை நிலைநாட்டியது. சட்டத்தை மதத்தில் இருந்து பிரித்தது. ஆனால் அதன் பின் வந்த காலங்களில் சர்வதேசச் சட்டம் சர்வதேச உடன்படிக்கைகள் மூலமும் மாநாடுகளின் மூலமும் வளரத் தொடங்கிய போது இயற்கைச் சட்டக் கொள்கை அதன் செல்வாக்கை இழந்தது எனலாம்.

இருந்த போதிலும் 20 ஆம் நூற்றாண்டிலும் இயற்கைச் சட்டக் கொள்கைக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க முயற்சி செய்யப்பட்டது.   அடிப்படை உரிமைகள் பற்றிய வரைவுப் பிரகடனங்கள், நாடுகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய வரைவுப் பிரகடனங்கள், சர்வதேச மனித உரிமைகள் பற்றிய கோட்பாடுகள், அகதிகள் வாழ்வுரிமை பற்றிய கண்ணோட்டங்கள், போர்க் குற்றங்கள் போன்றவற்றில் இயற்கைச் சட்ட கொள்கையின் செல்வாக்கு பிரதிபலிப்பதைக் காணலாம்.

2. நிகழ்நிலைச் சட்டக் கொள்கை (Theroy of Positivism)

சட்டவியலில் இயற்கைச் சட்ட குழாமிற்கு மாற்றாக உருவான நிகழ்நிலைச் சட்டக் குழாமை (Positive Law school) அடிப்படையாகக் கொண்டு சர்வதேசச் சட்டவியலில் உருவானதே நிகழ்நிலைச் சட்ட கொள்கையாகும். எனவே நிகழ்நிலைச் சட்டக் கொள்கை, நாம் முன்னர் கண்ட இயற்கைச் சட்டக் கொள்கையில் இருந்து அடிப்படையில்  வேறுபட்டபட்டதாகும். இயற்கை சட்டக் கொள்கை மனிதர்களின் இயற்கைத் தன்மை. பகுத்தறிவு, நீதி ஆகியவற்றை சர்வதேசச் சட்டத்தின் அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஆனால் நிகழ்நிலைச் சட்டக் கொள்கை இதற்கு மாறாக சர்வதேச உடன்படிக்கைகள், சர்வதேச வழக்காறுகள் போன்றவற்றை சர்வதேசச் சட்டத்தின் அடிப்படையாக கொள்கின்றது.

கார்னீலியஸ் வான் பைன்கெர்ஷாக்

நிகழ்நிலைச் சட்டக் கொள்கையின்படி, சர்வதேசச் சட்டமானது நாடுகளின் விருப்பம் (Will), சம்மதம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே வளர்ச்சியடைகின்றது. நாடுகளின் விருப்பம் மற்றும் சம்மதத்தின் பேரிலேயே சர்வதேச உடன்படிக்கைகளும் வழக்காறுகளும் ஏற்படுகின்றன. 18 ஆம் நூற்றாண்டின் சர்வதேசச் சட்டவியலாளரான பைன்கெர்ஷாக் (Bynkershoek) என்பரே இக்கொள்கையாளர்களில் முதன்மையானவர் எனலாம்.

நிகழ்நிலைச் சட்டக் கொள்கை அரசைப் பற்றியும் அதன் விருப்பத்தைப் பற்றியும் சில அடிப்படைக் கருதுகோள்களை (Premises) ஏற்றுக் கொண்டு அதனடிப்படையிலேயே சர்வதேசச் சட்டத்தின் இயல்புகளை மதிப்பிடுகிறது. முதலில் இக்கொள்கையின்படி, அரசு என்பது அதை பிரதிநிதித்துவப்படுத்தும் தனிநபர்களையும் தாண்டி பொதுப் பண்பியல் சார்ந்த (Meta Physical) உண்மையாகும். அதற்கு தனியான குணமும் மதிப்பும் உண்டு. அந்த அரசு தனக்கென தனியான முக்கியத்துவமும் தனக்கென விருப்பமும் உடையது. அரசின் விருப்பத்திற்கு முழு இறையாண்மையும் அதிகாரத்துவமும் உண்டு. எனவே, சர்வதேசச் சட்டம் என்பது பல்வேறு நாடுகள் தங்கள் விருப்பங்கள் மூலம் தன்னிச்சையாக தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ளும் விதிகளை உள்ளடக்கியதாகும். அதன்படி ஒரு நாட்டிற்கு வெளியே அந்நாட்டைக் கட்டுப்படுத்தும் பொதுச் சட்டம் என்ற முறையில் சர்வதேசச் சட்டமும் உள்நாட்டுச் சட்டத்தின் ஒரு கிளைப்பிரிவே என்கிறது இக்கொள்கை.

நிகழ்நிலைச் சட்டக் கொள்கையாளர்களின் கருத்தில் சர்வதேசச் சட்டம் என்பது நாடுகள் தங்கள் சுய விருப்பத்தின் பேரில் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்ளும், விதிகளைக் கொண்ட தொகுப்பாகும். எனவே நாடுகளின் அத்தகைய சுயவிருப்பம் இல்லாவிட்டால் சர்வதேசச் சட்டவிதிகள் நாடுகளைக் கட்டுப்படுத்தாது.

டையோனிஷியோ அன்ஜிலோட்டி

நிகழ்நிலைச் சட்டக் கொள்கையாளர்களில் குறிப்பிடத்தக்கவரான இத்தாலி நாட்டுச் சட்டவியலாளர் அன்ஜிலோட்டி (Dionisio Anzilotti) நாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கைகள் மதிக்கப்பட வேண்டும் என்பது சர்வதேசச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடு என்கிறார். இக்கோட்பாடு ‘உடன்படிக்கைகள் தரப்பினரால் கடைபிடிக்கப்பட வேண்டும்” (Pacta Sunt Servanda) எனும் ஒப்பந்த சட்டத்தின் கீழுள்ள கோட்பாடாகும். தனிநபர்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் இக்கோட்பாட்டை சர்வதேசச் சட்டத்திற்கும் பொருத்துகிறார் அன்ஜிலோட்டி. எனவே சர்வதேசச் சட்ட அமைப்பு முறையில் சர்வதேசச் சட்ட விதிகள் அனைத்திலும் ஏதேனுமொரு வகையில் இக்கோட்பாடு உட் பொதிந்திருப்பதைக் காணலாம். இதற்கேற்பவே அன்ஜிலோட்டி, சர்வதேச உடன்படிக்கைகளுக்கு மட்டுமல்லாது சர்வதேச வழக்காறுகளுக்கும் இக்கோட்பாட்டைப் பொருத்துகிறார். அதற்காக அவர் சர்வதேச வழக்காற்று விதிகள் நாடுகளின் மறைமுக சம்மதத்தின் அடிப்படையில் உருவான உட்கிடையான உடன்படிக்கைகளே (Implied agreements) என்கிறார்.

 3.க்ரோஷியர்களின் கொள்கை (Theory of Grotians)

க்ரோஷியர்களின் கொள்கை இயற்கைசட்டக் கொள்கைக்கும் நிகழ்நிலைச் சட்ட கொள்கைக்கும் இடைப்பட்டதாகும். இக்கொள்கையை வகுத்தவர் க்ரோஷியஸ் இல்லை. ஆனால் க்ரோஷியஸ்-இன் இயற்கைக் சட்டக் கோட்பாடுகளின் அடிப்படையில் சர்வதேசச் சட்டக் கொள்கையை வகுத்தவர்களால் உருவாக்கப்பட்ட கொள்கையை பொதுவாக க்ரோஷியர்களின் கொள்கை என்று அழைக்கப்படுகிறது.

க்ரோஷியர்களின் கொள்கைப்படி, சர்வதேசச் சட்ட விதிகளின் அடிப்படையை இயற்கைச் சட்டக் கொள்கை அல்லது நிகழ்நிலைச் சட்ட கொள்கை ஆகிய இவற்றில் எதனைக் கொண்டும் முழுமையாக விளக்க முடியாது. உண்மையில் சர்வதேசச் சட்டத்தின் அடிப்படை என்பது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு இயற்கைச் சட்டம் சார்ந்ததாகவும் இருக்கிறது. எனவே, சர்வதேசச் சட்டத்தின் அடிப்படை இயற்கை சட்டம் மற்றும் நிகழ்நிலைச் சட்டம் ஆகிய இரண்டினையும் சமவிகிதத்தில் கலந்ததாகவே இருக்கிறது.

க்ரோஷியர்களின் கருத்தில், நாடுகளின் சம்மதம் (Consent) சர்வதேசச் சட்டத்தின் ஒரு அடிப்படையே என்றாலும் அது மட்டுமே ஒரே அடிப்படை என்று கூற முடியாது. சம்மதம் இல்லாவிட்டாலும் நாடுகள் கடைபிடித்தே ஆக வேண்டும் என்ற விதிகளும் சர்வதேசச் சட்டத்தில் உள்ளன.

தொடரும்...

L.r.C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com