மத அரசியல்-38: ஆசீவகம்-நிறக் கோட்பாடு, ஏழுநிலைக் கோட்பாடு, இறுதி எட்டுக் கோட்பாடு

மத அரசியல்-38: ஆசீவகம்-நிறக் கோட்பாடு, ஏழுநிலைக் கோட்பாடு, இறுதி எட்டுக் கோட்பாடு

ஆசீவக நிறக் கோட்பாடு (Aseevagam-Colour Level Concept)

ஆசீவகச் சித்தர்களின் துறவு வாழ்க்கையில் அறுவகையான நிறக் கோட்பாடு பின்பற்றப்பட்டது. துவக்க நிலையில் இருப்பவர்களுக்கு ஒரு வண்ணச் சீருடையும் படிப்படியாக காட்சியியலில் (மெய்யியல்) முன்னேறும் போதெல்லாம் வேறு வேறு வண்ணச் சீருடைகளும் அணிவர். ஒரு ஆசீவக அறிவர் பள்ளி பல நிலையிலுள்ள துறவு மாணவர்களை அவர்தம் சீருடையின் வண்ணத்தைக் கொண்டே அவரது காட்சியியல் படிநிலையினை (philosophical Stage) அறிந்து கொள்ளலாம்.

இதில் முதலாவதாக வரையறுக்கப்படும் வண்ணம் கருப்பு வண்ணமாகும். இந்தக் கருப்பு வண்ண உடையணிந்தவர்கள் கரும் பிறப்பு நிலையில் உள்ளவராகக் கூறப் படுவர். இந்த நிலை மெய்யியலின் துவக்க நிலையாகும். இந்த நிலையில் உள்ளவர்களுக்கு உணவுப் பழக்கங்களிலும், துறவறப் பயிற்சிகளிலும் பெரிய பட்டறிதல் இல்லை. ஏனெனில் இதுதான் துவக்க நிலை. கரும் பிறப்பு நிலையைக் கடந்த பின் அதாவது அடிப்படை ஒழுக்கங்களையும் துவக்க நிலைப் பயிற்சிகளையும் செம்மையாகக் கற்றபின் கருநீல வண்ண உடையால் அடையாளப் படுத்தப் படுவர். அதன் பின்னர் அடுத்த படிநிலைக்கு உயர்த்தப்பட்டு அதற்கேற்ற வண்ண உடையால் அவர் அடையாளப் படுத்தப் படுவார்.

இவ்வாறு ஆறு படிநிலைகளை ஒருவர் கடந்த பிறகே இறுதி நிலையான நல்வெள்ளை நிலைக்கு அவர் சென்று வீடுபேறடைவார். இவ்வாறு அறுவகை நிலையிலும், ஒவ்வொரு வண்ணத்திலும் மூவகைப்பட்ட படிநிலைகள் அதாவது 6 x 3 மொத்தம் 18 படிநிலைகளை ஒருவர் கடந்த பிறகே அவர் வீடடைய முடியும் என்பது வரைவு.

ஆசீவகப் பள்ளியில் பயிற்சி பெற்ற பின்னரே இல்லறத்திற்குச் செல்லும் வழக்கமிருந்தது. வாழ்வியல் சிக்கல்களுக்கு விடைதேடி அலைவதினை இது குறைக்கும் என்பதும் அதன் சிறப்பு. துறவி கூட உழைத்தே உண்ண வேண்டும் என்பது ஆசீவகப் பொருளியல். ஆசீவகத்தினர் அறுவகை நிறங்களால் வகைப்படுத்தப் பட்டனர். இந்த வகைப்பாடு அவரவர்தம் சிந்தனை, செயல், தகுதி, அறிவுநிலை, ஊழ்கப் பயிற்சி, காட்சியியல் அறிவு இவற்றை அடிப்படையாகக் கொண்டது. 

ஆறு நிறங்களும், 18 படிகளும் ( Six colors and 18 Steps)

  • கருமை & சாம்பல் - துவக்க நிலை - இரவு விண்ணின் நிறம்
  • நீலம் - இரண்டாம் நிலை - விடியற்காலை கதிரவன் உதிக்கும் முன் விண்ணின் நிறம்
  • பசுமை - மூன்றாம் நிலை - கதிரவன் உதிக்கத் துவங்கும் பொழுது சிறிய நேரத்திற்கு இருக்கும் நிறம்
  • செம்மை - நான்காம் நிலை - கதிரவன் உதித்தப் பிறகு விண்ணின் நிறம்
  • மஞ்சள் - ஐந்தாம் நிலை - கதிரவன் உதித்தப் பிறகு கதிரவனின் நிறம்
  • வெள்ளை - இறுதி நிலை - கதிரவன் உச்சிக்கு வந்த பிறகு கதிரவனின் நிறம்

இந்த அறுவகை வண்ணத்திலும் மும்மூன்று படிநிலைகள் உண்டு. அவை:

  • துவக்க நிலை - இது வண்ண ஒழுக்கத்தின் துவக்க நிலை. இந்த வண்ணத்திற்குரிய ஒழுக்கங்களையும் கடமைகளையும் அறியத் துவங்கும் புகுநிலை மாணாக்கர் முதல் படிநிலையிலிருப்பவர்.
  • இடைநிலை - இது வண்ண ஒழுக்கத்தையும் பயிற்சிகளையும் செயல்படுத்தி முறைப்படுத்தி ஒழுகினாலும் ஐயந்தெளியா நிலையில் உள்ள மாணவர்கள்.
  • கடைநிலை - இது வண்ண ஒழுக்கத்தையும் பயிற்சிகளையும் செவ்வனே தேர்ந்து அடுத்த நிறத்திற்கு உயர்வு பெறத் தகுதியுடைய நிலை. ஐயந்திரிபற உணர்ந்தவர்.

ஒரே நிறத்தில் இந்த மூன்று படிநிலைகளையும் உணர்த்த படிநிலை உயர உயர நிறத்தின் அழுத்தம் குறைக்கப்படும்.

18 படிகள் (18 steps)

 
கரும்பிறப்பில்
கருமை முதல் படி
கருமை இரண்டாம் படி
சாம்பல் மூன்றாம் படி

நீலப் பிறப்பில்
கருநீலம் முதல் படி
நீலம் இரண்டாம் படி
வான்நிறம் மூன்றாம் படி

பசும் பிறப்பில்
அடர்பச்சை முதல் படி
பச்சை இரண்டாம் படி
வெளிர்பச்சை மூன்றாம் படி

செம்பிறப்பில்
செம்மை முதல் படி
இளம்சிவப்பு இரண்டாம் படி
காவி மூன்றாம் படி

மஞ்சள் பிறப்பில்
அடர் மஞ்சள் முதல் படி
இளமஞ்சள் இரண்டாம் படி

பொன்மை மூன்றாம் படி
வெண்பிறப்பில் வெண்மை மூன்று படிகளிலும்.

இவற்றைக் கடந்த பிறகே (மேலே கூறப்பட்ட 18 படிகளையும்) நல்வெள்ளை எனும் நிறமிலி நிலையினை அடைவர் என்பதே நிறக்கோட்பாடு. அதாவது கருமையிலிருந்து நல்வெள்ளை நிலை வரையிலும் தகுதி உயர உயர நிறத்தின் அடர்வு குறைவதனைக் காணலாம். அதாவது பயிற்சியாளரின் குறைகளும் குறையும். அவரது அறிவைச் சூழ்ந்துள்ள மாசு குறைவதனையே (அறியாமை இருள் நீங்குவதனை) இந்த நிற வேறுபாடு குறிக்கும்.

படிநிலை உயர உயர நிறம் குறையும். இதுவே ஊழ்கப் பயிற்சியிலும் 18 படிநிலைகளைக் கடந்த ஐயனாரை அடைவது எனும் கோட்பாடு. சேர நாட்டு ஐயனாரே தற்போது ஐயப்ப வழிபாட்டால் தொழப்படுகிறார். ஐயப்பன் பெயரால் செய்யும் ஐயனார் வழிபாட்டில் தற்போது சரியான குருமார்களின் வழிகாட்டல் இன்மையால், பிறழ நடத்தும் குளறுபடிகள் ஏராளம்.

இந்த வழிபாடு செய்ய மாலை அணிவோர் தொடர்ந்து 18 ஆண்டுகள் செல்வர். இதில் முதல் மூன்றாண்டுகளும் கருப்பு உடையினையும், அடுத்த மூன்றாண்டுகளில் நீல உடையினையும், அடுத்த மூன்றாண்டில் பச்சை உடையினையும், அடுத்த மூன்றாண்டுகளில் சிவப்பு உடையினையும் அதற்கடுத்த மூன்றாண்டுகளில் மஞ்சள் உடையினையும் இறுதி மூன்றாண்டில் ஒளிர் வெண்மை உடையினையும் அணிந்து நோன்பிருப்பர். 18ஆம் ஆண்டிறுதியில் தென்னை வைத்து நோன்பு முடிப்பர். இது ஆசீவக மரபின் ஐயனார் ஊழ்கத்தைத் தழுவிய ஒரு வழிபாடேயாகும். இதில் இறுதியில் கூறப்படும் தென்னை வைத்தல் எனும் நிகழ்வு தேங்காயின் உட்பருப்பு நல்வெள்ளை எனும் கருத்துப் படவே கையாளப் படுகிறது.

நல்வெள்ளை (Pure white)

கருமையில் பிறவி துவங்கி அறியாமை இருளுடன் வாழ்வைத் துவங்கும் ஆசீவக மாணவன் தனது பயிற்சியினாலும் ஒழுக்கத்தினாலும் அறுநிறப் பதினெண் படி கடந்து நிறமிலி நிலையினை அடைவதே ‘வீடடைதல்’ எனப்படும். அப்படி ஒளியடைதலே ஆசீவக மெய்யியலின் நோக்கம். இந்த அறிவு மரபில் வந்த அறிவர்களுள் ஒருவரான வள்ளல் பெருமான் கூட ‘ஒளிதேகம்’ என்று குறிப்பிடுவதும் இந்த நல்வெண்மை நிலையையே.

மேலும், புத்த நெறியிலும் ஜைன நெறியிலும் ஆசீவக நெறியின் நிறக் கோட்பாட்டின் வெண்மை நிற உடையை மட்டுமே படிநிலை பேதமின்றி அனைவரும் அணிவர். ஆனால், ஜைன நெறியின் கொடியில் ஆசீவகத்தின் நீல நிறத்தைத் தவிற மற்ற நிறங்கள் முறை மாற்றி இருக்கும். அவர்கள் நீல நிறத்த்துடன் கருப்பு நிறத்தையும் சேர்த்து கருப்பு நிறமாக அவர்கள் கொடியில் கூறுகின்றனர். ஆனால், இந்நிறங்களுக்கு அவர்கள் கொடுக்கும் விளக்கம் ஆசீவக நெறியின் நிறக் கோட்பாடுகளின் பொருளாக இருந்தாலும் அவர்கள் வெண்மை நிற உடையை மட்டுமே படிநிலை பேதமின்றி அனைவரும் அணிவர்.

நிர்வாணம் எனும் இறுதி நிலை நிறமிலி (Nirvana / Colorless)

ஆசீவகத்தின் ஏழாம் நிறமான நீர்வண்ணம் பரிநிர்வாணம் அடைந்த சித்தர்களின் அடையாளமாகும்.
நீர்வண்ண(நீர்+வண்ணம் = நிர்வாணம் ) நிலையை அடைய தொடர்ந்து தவம் இருந்து ஐம்புலன்களை வெல்லவேண்டும்!!!!

இங்கு ஆய்தற்குரிய மற்றொரு ஒரு விடயம் என்னவென்றால், கிறித்துவ நெறியில் உள்ள “Bracelet of Christianity” எனும் கோட்பாடும் இதே நிறங்களைக் கொண்டவை. அங்கும், இறுதியில் மோட்சம் எனும் வீடுபேறு கோட்பாடு தான் உள்ளது.

இத்தகு ஆசீவகம் ஏன் வீடுபேற்றை வலியுறுத்தியது? அப்படியானால் வீடடையாதவர்களின் நிலை பற்றி ஆசீவகம் என்ன நிலைப்பாடு கொள்கிறது? வீடு பேறடையாதவர்கள் மறு பிறவிக்குள்ளாவார்கள் என்று ஆசீவகம் நம்புகிறதா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடையாவது யாதெனில் மாந்த உடலின் பிணி, மூப்பு, சாக்காடு எனும் இழவூழ்களை வெல்லவும் உடலின் பயனாய ஊழ்கத்தின் உயர் நிலையினை அடையவுமே அவ்வாறு நல்வெள்ளை நிலையினை அடைவது சிறப்பு. அடையாவிடினும் அந்நிலை அடையும் வரை மீண்டும் மீண்டும் பிறப்போமென்றோ அதனால் பெருங்கேடு விளையுமென்றோ ஆசீவகம் கூறவில்லை.

பெரியவர் / அண்ணர் / அண்ணல்

சித்தன்னவாசல் (அண்ணல் வாயில், சித்தர் அண்ணல் வாயில்), திருவண்ணாமலை(திரு அண்ணர் மலை), அண்ணமங்கலம்(அண்ணல் மங்கலம்), கருப்பண்ண சாமி(தன்னைவிட அறிவில் முதிர்ந்தோரையும் வயதில் முதிர்ந்தோரையும் அண்ணன் என்று அழைக்கும் வழக்கமும் இதனடியே தோன்றியதேயாகும்.
அண்ணர் எனும் சொல்லும் இதன் அடிப்படையில் எழுந்ததே. ஈற்றுப் போலியாக அண்ணல் எனவும் மருவி இத்தகு அறிவர் வாழ்ந்த இடங்கள் திரு அண்ணர் மலை, அண்ணல் மங்கலம் எனும் பெயர்களுடன் வழங்கப் பட்டு இன்று திருவண்ணாமலை, அண்ணமங்கலம் எனும் பெயர்களால் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்விடங்களில் இன்றும் ஆசீவகப் பள்ளிகளின் எச்சங்கள் காணக் கிடக்கின்றன. 


ஏழுநிலைக் கோட்பாடு (Seven stage Concept)
             
எழுபிறப்பு (Seven Births)

கரும்பிறப்பு, கருநீலப்பிறப்பு, பசும்பிறப்பு, செம்பிறப்பு, பொன் பிறப்பு, வெண்பிறப்பு ஆகிய அறுவகை பிறப்புகளையும் கடந்து கழிவெண்பிறப்பு என்னும் ‘நீர்வண்ணத்தை’ அடைவதென்பதே பிறப்புகளுக்கு வண்ணங்களை ஊட்டிய ஆசீவகரின் நிலைப்பாடு. அதுவே ‘எழுபிறப்பு’ எனப்பட்டது.

அந்த எழுபிறப்புக் கோட்பாடு ஆசீவக காட்சியியல் தோன்றுவதற்கு முன்பே இருந்திருக்க வேண்டுமெனக் கருதத் தூண்டுகிறது. உயிர்களை ஆறு வகையாக உருவகப்படுத்தும் தொல்காப்பியம் (நூற்பா 1526) ஊறு, நா, மூக்கு, கண், செவி, மனம் எனும் புலனுணர்வுகளை அவ்வவ் உயிர்களுடன் உறவுப்படுத்துகிறது. மனத்திலிருந்து பிறக்கும் அறிவை அகத்தியத் தருக்க நூற்பா என்னும் நூல் ‘உள்ளம்’ எனச் சொல்லி ஏழாவதாக வைக்கிறது (“அறிவுப் பண்பிற் றான்மா வென்க” 19:1). அதை ‘உயிர்’ என்றும் அது குறிப்பிடுகிறது (“உயிர்தா னுடறொறும் வெவ்வே றாகும்” 19:3). அதுவே ‘ஆன்மா’ என்றும் கூறப்படுகிறது. ‘மனம்’ என்பது ஐம்புலன்களின் வழியாகக் கிடைக்கின்ற காட்சியளவை (Perceptual Knowledge); ‘உள்ளம்’ என்பது மனத்தின் வழியாகப் பிறக்கின்ற கருத்தளவை (Conceptual Knowledge). ‘மனம்’ வேறு, ‘உள்ளம்’ வேறென மீமிக நுட்பமாக வேறுபடுத்திக் காட்டுகிறது, தமிழரின் காட்சியியல்.

இதை ஆசீவகத் துறவி வள்ளுவரும்...

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு

(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:27)

என்பார். மேலும், ‘எழுபிறப்பு’ எனும் கருத்து திருக்குறளில் (62, 107, 398, 538, 835) வருவதை காணலாம். திருக்குறள் சொல்லும் எழுமையும் எழுபிறப்பும் ஆசீவகத்தின் வண்ணக் கோட்பாட்டை நினைவுறுத்துகிறது.

எழுமை (Hepta)

• முளை, துளிர், தளிர், கொழுந்து, இலை, பழுப்பு, சருகு என நிலத்திணை(செடி)யின் திரிவாக்கத்தில் காணப்படும் எழுமை;
• கவை, கொம்பு, கிளை, சினை, போத்து, குச்சி, இனுக்கு என மரத்தில் எழுமை;
• புல், தாள், மடல், தோகை, ஓலை, தழை, இலை என இலையில் எழுமை;
• நாற்று, கணு, குருந்து, மடலி, பிள்ளை, குட்டி, பைங்கூழ் எனப் பயிரில் எழுமை;
• செய், தோப்பு, தோட்டம், காடு, சோலை, கானல், அடவி என மர அடர்த்தியில் எழுமை;
• புனம், புலவு, கொல்லை, வானவாரி, புன்செய், நன்செய், மிசை என உழுவுநிலத்தில் எழுமை;
• அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல் எனப் பூவில் எழுமை;
• பூப்பிஞ்சு, பிஞ்சு, கருங்காய், பழக்காய், காய்ப்பழம், பழம், கனி எனக் காயில் எழுமை;
• தவசம், பயறு, கடலை, விதை, முத்து, கொட்டை, நெற்று எனப் உணவுக்கூலத்தில் எழுமை;
• பொட்டு, உமி, தொலி, தோல், கோது, தோடு, ஓடு என உணவுக்கூலத்தின் மேல்தோல்களில் எழுமை;
• சாறு, சோறு, சுளை, சதை, முத்து, அரிசி, பருப்பு என விளைப்பொருள்களில் எழுமை;
• வளி, சூறாவளி, புயல், கொண்டல், கோடை, தென்றல், வாடை எனக் காற்றில் எழுமை;
• குட்டை, குளம், பொய்கை, ஊருண்ணி, ஏரி, கண்வாய், தடாகம் என நீர்நிலைகளில் எழுமை;
• ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ எனும் உயிர்நெடில்களை வைத்துக் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என முறையே அமைந்த இசையின் (சுரங்களின்) எழுமை;
• வில்யாழ், பேரியாழ், சுறவியாழ், சகோடயாழ், முண்டகயாழ், செங்கோட்டியாழ், சீறியாழ் என யாழில் எழுமை;
• பாலன், மீளி, மறவோன், திறலோன், காளை, விடலை, முதுமகன் என ஆடவரின் பருவங்களில் எழுமை;
• பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனப் பெண்ணின் பருவங்களில் எழுமை
• ஐம்புலன்கள்+மனம்+உள்ளம் என்பதில் எழுமை
• ஏழு முனிவர்கள்
• ஏழு கன்னியர்கள்.
• ஏழு சுரங்கள்
• ஏழுமுனிகள்-இவர்கள் அண்ணன் தம்பிகள் –மூத்தவர் “மெய் ஐயனார்” எனும் மெய்யப்பன். இவருக்கு திருமெய்யத்தில் கோவில் உண்டு.

என்றெல்லாம் எழுமை என்னும் கோட்பாடு தமிழரின் வாழ்வியலில் பற்றிப் பரவிக் கிடப்பதை  நீக்கமறக் காணலாம்.

ஊழ்கமும் காட்சியியலும் (Destiny and Philosophy)

ஊழ்கம் செய்வதற்கு ஆசீவகத் துறவிகள் தனிப்பள்ளிகள், நிலாப்பாறை, வானியல் ஆய்வுப் பாறைகள் எனப் பல்வேறிடங்களைத் தம் பள்ளி வளாகங்களில் கொண்டிருந்தனர். இவை யாவும் உயிர்வளி மிக்க செறிவுடன் விளங்கும் இடங்களே. ஊழ்கத்தின் மூலம் உயிர்வளியினைத் தங்கள் உடலிற்றேக்கி வைத்து தனது உடலணுக்களைச் செம்மைப் படுத்தி விழுமிய ஆற்றல் நிலைகளை ஏற்படுத்தினர். இதன் மூலம் உடலணுக்களில் வளிநிலை மூல அணுக்களின் தேக்கத்தினைக் கூட்டிப் பிறவணுக்களின் இயக்கங்களையும் நிகழ்வுகளையும் சுருக்கி இறுதியில் ஒளியுடல் பெறுவதே (நல்வெள்ளை) ஊழ்கத்தின் நோக்கமாகும். இவ்வாறு ஒளியடைந்தவர்களுக்கு உலகியலில் ஏற்படும் புறத் தொல்லைகள் இருக்காது. மேலும் வாழ்வியல் மெய்ப்பாட்டின் இறுதி நிலையாகவும் இருக்கும். ஆசீவகம் கோரும் நிலைப்பாடும் அதுவே யாகும். மறுபிறவியை ஆசீவகம் பேசவில்லை.

ஊழ்கமும் உடலும்

உடலின் அணுக்களிடையே உயிர்வளியினைத் தேக்கி வைத்து ஒளியுடல் பெறும் நுட்பத்தினைப் பின்வருமாறு அறிவர்கள் பயிற்சியின் வாயிலாகப் பெறுவர். வளியோட்டத்தினை உடலுக்குட் செலுத்த இரண்டு நாசிப் புழைகளுள்ளன. இவற்றின் வழியாகக் காற்றினை நாம் உள்வாங்கி வெளியிடுகிறோம் என்பது யாவருமறிந்ததே. ஆனால் உட்செல்லும் காற்றும், வெளியேறும் காற்றும் எந்தப் புழை வழியாகச் சென்று எந்தப் புழை வழியாக வெளியேறுகிறது என்பதனை உற்று நோக்க வேண்டும்.

வலப்புழையில் காற்று கூடுதலாகவும், இடப்புழையில் குறைவாகவும் இயக்கம் நிகழுமாயின் இது வலநாடியாகப் பிங்கலை நாடி என்றும், ஆண்நாடி என்றும், சூரிய கலை என்றும் சொல்லப்படும். இடப்புழையில் இயக்கம் அதிகமிருப்பின் இடகலை என்றும், பெண்நாடி என்றும், சந்திர கலை என்றும் வழங்கப்படும். இரு புழைகளிலும் சம இயக்கம் நிகழின் இதனைச் சூழுமுனை என்றும் அலிநாடி என்றும் அக்கினி நாடி என்றும் சொல்லப்படும். இவை முறையே கதிர், மதி, சுடர் என வழங்கப்படும்.

இடகலை நாடி வாதமென்றும்
பிங்கலை நாடி பித்தமென்றும்
சூழுமுனை நாடி ஐயமென்றும் சொல்லப்படும்.

வாதநாடி பயிற்சிக்கும் வளர்ச்சிக்கும்
பித்தநாடி போட்டிக்கும் வெல்வதற்கும்
ஐயநாடி உலகியனீங்கிய ஊழ்க மெய்யியலுக்கும்

சிறப்பானவை. வாதத்திலும் பித்தத்திலும் சிதறியோடும் மூச்சினை ஐயத்தில் நிற்க வைத்து உடலின் மாசுக்களை நீக்கி ஐயத்தில் நிறுத்தி மெய்யூழ்கம் பெறும் பயிற்சியே ஊழ்கப் பயிற்சியாகும். இந்த மூச்சோட்டத்தினை முறைப்படுத்த ஆசீவகர்களின் கற்படுக்கைகள் பல்வேறு சாய்வுகளில் அமைக்கப்பட்டிருப்பது நல்ல ஏந்தாகும். எந்தப்புறம் உடல் எடையினால் அழுத்தப்படுகிறதோ அதன் எதிர்ப்புறத்திலுள்ள புழையில் மூச்சோட்டம் நிகழும். நாளடைவில் ஐய நாடியில் நின்று ஊழ்கப் பயிற்சி கைவரப் பெற்றவர் பல்வேறு ஆற்றல்கள் கைவரப் பெறுவர். மெய்யியல் படிநிலை வளர்ச்சியும் கூடும். அவ்வாறு ஐயநிலை கைவரப் பெற்றவர்களே ஐயன் என்றும், ஆர் என்னும் சிறப்பு விகுதி சேர்த்து ஐயனார் என்றும் வழங்கப் பெறுவர்.

இயல்பாகவே மாந்த உடலில் எந்தக் கால் மடக்கப்பட்டு அழுத்தப் பெறுகிறதோ அதற்கு எதிர்ப்புறம் உள்ள புழையில் மூச்சோட்டம் நிகழும். காலுடன் உள்ள தொடர்பாலேயே மூச்சோட்டம் கால் ஓட்டம் என்றும், மூச்சினைக் கால் என்று சிறப்பு இடுகுறியாகவும் வழங்கப்படுகிறது. இதனைக் குறிக்கவே ஐயனார் (ஐயப்பன்) உருவச் சிலைகளில் இருகாலையும் சமப்படுத்தி ஒரு கட்டுப் போடப்பட்டிருக்கும். இது இரு மூச்சும் சமமான ஐய நிலை என்று குறிப்பால் உணர்த்தவே. அன்றி இடக்காலையோ வலக்காலையோ தனியாகக் கட்டுப் போட்டுக் கட்டினால் எதிர்ப்புழையில் மூச்சோட்டம் செல்லும் நிலை என்றறிய வேண்டும்.

சிலர் ‘என்னைக் காலைக் கட்டும் வரை நான் இதற்கு உடன் படேன் என்று சொல்வர்’. அப்படியாயின் தனது மூச்சு நிற்கும் வரை அல்லது மரணம் நேரும் வரை உடன் படேன் என்பதாகும். மயங்கினாரினின்று இறந்தாரைப் பிரித்தறிய இறந்தாரின் இருகாலையும் சேர்த்துக் கட்டியிருக்கும். இதற்கு நாடிக் கட்டு என ஆசீவகம் குறிக்கும். அவனது நாடி அதாவது மூச்சு நிறுத்திக் கட்டப்பட்டு விட்டது என்பதே அதன் பொருள். அதன் பிறகே இறந்தாருக்கான ஒன்பது கடன்கள் செய்யப்படும். அவ்வாறு உயிர் பிரிந்த உடலுக்கும் ஊழ்கத்திலுள்ள உடலுக்கும் உள்ள வேறுபாடுகள் எளிய மாந்தர்க்குத் தெரியாது. உயிரடக்கம் என்பது வேறு; மரணம் என்பது வேறு. இதனைப் பிரித்தறியச் சில நுட்பமான வழிமுறைகள் உண்டு. ஆனால் இயல் மாந்தர்க்கு இது கடினம். இழவூழ் குறைந்து ஆகூழ் மிஞ்சினால் உயிர்ப்பு அடங்கிய உடலில் மீண்டும் இயக்கம் ஏற்பட வழியுண்டு. ஒருவேளை அவ்வாறு இயக்கம் ஏற்படுமானால் அந்த உடல் சிதையாமல் காப்பாற்றப்பட்டு வந்தால்தான் மீண்டும் உயிருடன் எழ முடியும். மேலும் ஆகூழ் கூடுவதற்காக அந்த உடல் சில வகைகளில் பாதுகாக்கப்படும். (ஆசீவக மரபின் ஆசு மருத்துவத்தில் உயிர் அடக்கமும், உயிர் மரணமும் பற்றிப் பல்வேறு விந்தையான உண்மைகள் கூறப்பட்டுள்ளன.)

உடல் அழுகாமல் ஆகூழ் கூடுவதற்காகப் பின்வரும் வகையான கடன்கள் செய்யப் படுகின்றன. இறந்தவரின் உடலின் இரு பாதியும் (வலம், இடம்) ஒன்றை யொத்ததாகவே மறுபாதியும் கிடத்தப்படும்.

1. வாயில் பாலூற்றுதல்.
2. அழுக்கு நீங்க நீரால் கழுவுதல்.
3. உள்ளங்காலுக்கு அருகில் (வெம்மையைக் கூட்ட) தீச்சட்டி வைத்தல்
4. நெய்த்திரிகளை எரியூட்டி சூழ நின்று பிடித்தலால் புறவெப்பத்தினைச் சீர்செய்தல். (கரிவளி உமிழாதிருக்கவே நெய்த்திரி)
5. நல்லெண்ணையினைத் தாழியில் ஊற்றி அதற்குள் உடலை வைத்து வெப்பச் சம நிலையினைப் பாதுகாத்தல் (நல்லெண்ணெயின் தன் வெப்பம் மாந்த உடலுக்கு ஆகூழ் தரும் என்பதாலேயே வாரம் ஒரு முறை நல்லெண்ணெய்க் குளியல் நடைமுறைப் படுத்தப் பட்டது.)
6. தலையில் மருந்து எண்ணெயினைத் தேய்த்தல். இதில் ஒவ்வொரு மரபிலும் அதே மரபைச் சேர்ந்தவர்கள் கமுக்கமான தனித்தனி மருத்துவ முறைகள் வைத்திருந்ததனால் அம் மரபைச் சார்ந்தவர்கள் மட்டுமே இதனைச் செய்ய அனுமதிக்கப் பட்டனர். (இன்றும் கூட உயிர் நீத்தாரின் மகன்கள் மட்டுமே இதனைச் செய்ய உரிமை உள்ளவர்களாகக் கருதப் படுகின்றனர்.)
7. தீச்சட்டியில் பசுவின் வரட்டியினை எரித்து மூச்சுக் காற்றில் நெடி சேர்த்தல்.
8. உடல் வீங்கி அழுகாதிருக்க புதுத்துணியினால் சுற்றி வைத்தல்.
9. நீர்க்குடத்தினை சிறு துளையிட்டு உடலினைச் சுற்றி நீர்த்துளிகள் சிதறும்படி செய்தல்.

இன்னவற்றுடன் நுண்ணுயிர்ச் சிதைவினைத் தவிர்க்கும் பொருட்டுத் துளசி முதலிய மூலிகைகளும், கருப்பு வெற்றிலையும் வாயில் வைத்துப் பொதிதல். இவ்வாறு உடலைப் பாதுகாத்தல் பாடம் செய்தல் எனப்படும். ஓலைச்சுவடி போன்றவை சிதைந்து அழியாமல் இருக்கக் கரிசாலை, மஞ்சள் முதலியன கொண்டு பூச்சு செய்வதற்குப் பாடம் செய்தல் அல்லது பாடம் போடுதல் என்று பெயர். ஒரு ஆசீவக ஊழ்கியின் உடலுக்கு அவர் சார்ந்த ஆசீவகப் பள்ளியினரால் மட்டுமே இக்கடமைகள் செய்யப்பட வேண்டும். அப்பள்ளியின் மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தப் பாடம் இடும் நிகழ்ச்சியை ஒரு பாடத்திருவிழாவாகவே கொண்டாடுவர்.

ஊழ்கம் செய்யும் போது துவக்கத்திலேயே ஐய நாடி கைவரப் பெறாதாகையால் சூரிய, சந்திர நாடிகளை (கதிர், மதி) சமமாக ஓட்ட வேண்டும். ஐந்து நாழிகைக்கு ஒரு முறை கதிரும், மதியும் மாறி நடக்க வேண்டும். இவ்வாறு ஒரு நாளில் ஆறு முறை பெண் நாடியும், ஆறுமுறை ஆண் நாடியும் ஆகப் பன்னிரு முறை மாறி நிகழும். இதனையே ஒரு நாளில் இலக்கினம் ஆறு ஆண் இராசி மண்டலத்தையும், ஆறு பெண் இராசி மண்டலத்தையும் மாறிக் கடந்து பன்னிரு இராசிகளைக் கடந்து வருவதாக ஆசீவக அறிவியலான கோளியல் கணியம் சுட்டிக் காட்டும். இந்த ஐந்து நாழிகைப் போதில் ஒவ்வொரு இராசியிலும் நிகழும் மூச்சோட்டம்,

நிலப்பூதியத்தில் 11/2
நீர்ப்பூதியத்தில் 11/4
நெருப்புப்பூதியத்தில் 1
வளி பூதியத்தில் 3/4 
வெளிபூதியத்தில் 1/2

ஆக மொத்தம் 5 நாழிகைப் பொழுது செல்ல வேண்டும். இதனைப் பயிற்சியால் அறியலாம்.

இந்த ஒழுங்குக்கு உட்பட்டுச் செய்யப்படும் ஊழ்கம் ஆகூழ் எனப்படும். அதாவது உடலியலில் நன்மை தரத்தக்க வளர்ச்சி நிலைகளைக் காட்டும். இன்றேல் ஒழுங்கு தப்பின் அது உடலணுக்களுக்குக் கேடாய் முடிந்து அணுக்களின் அழிவுக்குக் காரணமாகும். இந்தக் கேடு தரும் ஊழ் போகூழ் எனப்படும். இதனை இழவூழ் என்றும் கூறுவர். இழவூழ் தொடர்ந்து நடக்கின் உடலழிந்து மரணம் நேரும். எனவேதான் மரணம் நடந்த இடத்திற்குச் செல்வோர் தாம் இழவூழுக்குப் போவதாகக் கூறுவர். தற்போதைய வழக்கில் இழவுக்குப் போகிறேன் (இழவூழ் > இழவு) என்கின்றனர்.

ஆகூழும் போகூழும் சமமாயிருக்கும் நிலைக்கு அறிவூழ் என்று பெயர். ஆசீவகக் கணிய அறிவியல்,
ஆகூழை > அமிழ்த ஊழ்கம் என்றும் (அமிர்தயோகம்)
போகூழை > மரண ஊழ்கம் என்றும் (மரணயோகம்)
சம ஊழை > அறிவூழ்கம் என்றும் (சித்தயோகம்)
கூறுகின்றது.

இவை யாவும் ஆசீவக மரபின் ஆசு கணியர்கள் பின்பற்றும் நுட்பமென்றறிக. ஐங்கூறில் கிழமை, உடு, உவா, ஊழ்கம், கருவி செயல் வகை என்ற ஐந்தும் இடம் பெறும். இவ்வாறு, பொருட்களின் அணுவியல் செயல்பாடுகள் ஊழ் எனவும், இது நிகழத் தற்செயல் கூறுபாடுகள் முதன்மைக் காரணிகள் எனவும், இந்நிகழ்வு இவ்வாறுதான் நிகழ முடியும் என்பதே நியதி என்றும், இதில் பாவம், புண்ணியம் மற்றும் இவற்றுக்குக் காரணம் என்று எதனையும் கற்பித்து மயங்காதிருத்தலே வினைமறுப்பு எனவும், மாற்றம் என்பது ஒன்றே மாறாதது எனவும், பொருளியல் சார்ந்த உழைப்பில் யாருக்கும் தனிப்பட்ட விலக்குமில்லை எனவும் ஆசீவகம் வலியுறுத்தும்.

இறுதி எட்டு (Last Eight Concept)

அறப்பெயர் சாத்தானாகிய மற்கலி, தாம் வீடு வேறு அடைவதற்கு முன்பாக எட்டு உறுதிப் பெருள்களை வெளியிட்டுள்ளார், அதன் பின்னரே அவர் பெரியவர் என்றழைக்கப்பட்ட தீர்த்தங்கரராக உயர்ந்தார். இவ்வாறு ஊழ்க நிலையில் உயர் நிலையினை அதாவது ஆறு வண்ணங்களின் 18 படிநிலைகளையும் கடந்து ஊழ்கத்தினால் அணுக்கள் ஆற்றல் செறிவுற்று ஆகூழ் மிஞ்சி அணுக்கள் ஒன்றுடன் ஒன்று இறுகி யிணைந்து உடலழியா நிலையும், ஒளியுடலும் பெறும் நிகழ்வே மிக இறுதி இலக்காகக் கருதப் படுகின்றது. அவ்வாறு இறுதி நிலைப் பேறு பெற்றவர்கள் எண்வகை உறுதிப் பொருள்களைக் கடக்க வேண்டி இருக்கின்றது.
அவையாவன:

1. கடைமிடறு (last Drink)

இறுதி நிலையிலுள்ளவர்கள் நாவரட்சியினை நீக்கும் பொருட்டும் ஊழ்கம் வெற்றி பெறவும் வேண்டி அவருடனிருப்போரால் அளிக்கப் பெறும் இந்த இறுதி நீர்மமே ‘இறுதிப் பானம்’ என்று சொல்லப்படும் இந்தக் கடை மிடறு. இந்த ஆசீவக அறிவு மரபினை உள்வாங்கித் தோன்றிய மாலியத்தில் கூட இறுதி நிலையிலுள்ளவர்களுக்குத் துளசி கலந்த நீர் வாயில் ஊற்றப்படுகிறது. சிவனியர் வில்வ இலையினைத் தண்ணீரில் போட்டு இறுதி நிலையாளரின் வாயில் ஊற்றுவதும் இதன் தழுவலே. ஆசீவகத் துறவியர் தம் குகைகளைச் சுற்றிலும் நத்தைச்சூரி, அருகுபத மூலி ஆகிய செடிகளை வைத்திருப்பதும் இந்தத் தேவை கருதித்தான்.

2. இறுதிப் பாடல் (Last Song)

இறுதி நிலையாளரைச் சுற்றி யமர்ந்து ஆசீவகர்கள் தம் குரு மரபினை வாழ்த்தியும் ஊழ்கம் நல்லபடியாகப் படி கடக்க வேண்டு மென்றும் வாழ்த்திப் பாடுவது. தற்போது கூட உயிர் துடிப்பவர்கருகிருந்து மாலியர் திவ்வியப் பிரபந்தம் பாடுவதும், சிவனியர் தேவாரம், சிவபுராணம் பாடுவதும் கண்கூடு. இது இறுதி நிலையாளருக்குப் புத்துணர்வும் நம்பிக்கையும் ஊட்டும் என்பது கருத்து.

3. இறுதி ஆடல் (Last Dance)

கடைப்படி கடக்க வேண்டி ‘நிருத்தம்’ எனக் குறிக்கும் வகையினை ஒத்த ‘சூரிய நாடி’ ஓடச் செய்யும் ஓர் நடனம். இது உடலில் வெம்மையைக் கூட்டி ஊழ்கியின் நாடிச் சவ்வினை இளக்கி அச்சவ்வினைக் கிழித்து உயிர்வளி மேலேறப் பயன்படும்.

4. இறுதி வரவேற்பு (Last Reception) 

ஊழ்கியின் உறுதியையும், பயிற்சி வளமையையும் கண்டு, ஊழ்கியால் மதிக்கப் படும் அவரது குரு மரபினர் (ஏற்கெனவே ஒளியுடல் பெற்றவர்கள்) இவ்வூழ்கியை எதிர் கொண்டு வரவேற்பர் என்ற நம்பிக்கை. இன்றைய மெய்யியலார் மலர்ப் பல்லக்கில் தேவர்கள் எதிர் கொண்டு அழைத்துச் செல்வர் என்று கூறுவதும் இந்த நம்பிக்கையின் தழுவலே.

5. காரிருள் (Last Great Cloud)

இறுதி நிலையினை அடையுமுன் (தமர் திறக்கு முன்) உயிர் வளியின் அழுத்தம் கூடக் கூட ஏற்படும் ஒரு அழுத்த நிலையினால் கடும் காரிருளும் மேகமும் சூழ்ந்தது போல் தோன்றுமாம். அப்போது உறுதியாக ஊழ்கத்தினைத் தொடர வேண்டும். இதுவே மிகவும் கடுமையான நிலை என ஊழ்க மெய்யியல் வரைவு செய்கின்றது.
 
6. நிறையாவழிகையமிழ்தூற்று (Last Sprinkling Scent)

உயிர்வளி மேலழுத்தலால் அண்ணம் என்று சொல்லப்படும் உள்நாவிற்குப் பின்புறம் ஒரு சிறு புழை யானையின் தும்பிக்கை போன்ற சிறு சவ்வின் முனையில் தோன்றி ஐய நீரைச் சுரக்கும். இதுவே ஊழ்கிகள் அமிழ்தம் என்று சொல்வதாகும். இந்த அமிழ்தம் இனிப்புச் சுவை உடையதென்றும் இதனை யுண்டால் உடல் எளிதில் அழியாதென்றும் உணவோ, நீரோ அவர்களுக்குத் தேவைப் படாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அமிழ்தம் ஊறிக் கொண்டிருக்குமே ஒழிய எதிலும் வழித்து நிரப்ப இயலாது. அவ்வளவு நுண்புழையில் மிகச் சிறிய ஊறலாக அமையும் இந்த நிலையடைந்த பின் கவலைகளும் துன்பங்களும் இல்லை என்பர்.

7. தடைக்கல் தகர்ப்பு அல்லது தமர் திறப்பு (Last Battle with stones)

ஊழ்கம் முற்றுப் பெறும் நிலை இது. மேலெழுப்பப்பட்ட உயிர்வளி அமிழ்த ஊற்றைக் கடந்தபின் ஒரு சிறு தமர் திறக்கும். இது கண்ணின் பின்புறம் உள்ளதாகக் கூறுவர். அந்தத் தமர் உடைந்தபின் உயிர்வளியும் உயிர்ப்பும் தாமரை மலர் போன்ற இதழினையுடைய உயிர்ப்பெரு வெளியில் சென்றடையும் என்றும் இதனால் ஒளியுடல் கிட்டும் என்றும் இதுவே வீடுபேறு எனவும் கூறப்படும். இந்தத் தாமரை மலரில் 1008 இதழ்கள் உள்ளதாக ஊழ்க காட்சியியல் கூறுகிறது.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

8. ஐயன் நிலை அடைதல் (Attain Divine / Iyen)

இந்த நல்வெள்ளை நிலையினை அடைந்தவர் ஐயனாராகக் கருதப்படுவார் என்பது ஆசீவக மெய்யியல் கோட்பாடு.

இவ்வாறு பல்வகைச் சிறப்புக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கிய ஆதித் தமிழரின் மெய்யியல் பின்னர் வந்த சமயங்களால் விழுங்கப்பட்டு திரிவாக்கம் பெற்று வெவ்வேறு பெயர்களுடன் உருமாற்றம் பெற்றது. இன்று ஆதித் தமிழரின் மெய்யியல் பதித்துள்ள சுவட்டின் தடங்கள் புழுதி மண்டி மறைந்து கிடக்கின்றன. அவற்றை மீட்டெடுத்து அறிவு நிலையில் மேம்பட்டு உயர வழிகாண வேண்டியது ஆய்வாளர்தம் கடமையும் பொறுப்புமாம்.

References: 
ஆய்வுக் கட்டுரைகள் By ஆதி.சங்கரன்
‘மெய்ம்மை’ by அகன்.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com