Enable Javscript for better performance
மத அரசியல்-44: ஆசீவக மத நூல், ஐம்பூதக் கோட்பாடு, தருக்கவியல், எண்ணியக் கோட்பாடு, தந்திர உத்தி- Dinamani

சுடச்சுட

  

  மத அரசியல்-44: ஆசீவக மத நூல், ஐம்பூதக் கோட்பாடு, தருக்கவியல், எண்ணியக் கோட்பாடு, தந்திர உத்தி

  By C.P.சரவணன்  |   Published on : 03rd January 2019 03:36 PM  |   அ+அ அ-   |    |  

  asee_iyen

   

  ஆசீவக மத நூல்

  ஆசீவக மதக் கொள்கைகளைக் கூறும் நூலுக்கு 'நவ கதிர்' என்பது பெயர். இந்த நூலில் நில அணு, நீர் அணு, தீ அணு, வளி அணு, உயிர் அணு என்னும் ஐம்பொருளைப்பற்றிக் கூறியுள்ளதென்பர். கருமை, நீலம், செம்மை, பொன்மை, வெண்மை, தூய வெண்மை என்னும் ஆறுவகைப் பிறப்பு உண்டென்பதும் தூய வெண்மைப் பிறப்புத்தான் மிக உயர் நிலைப்பிறப்பென்பதும், இப்பிறப்பினை அடைந்தவர்தாம் வீட்டுலகம் சேர்வர் என்பதும் இந்த மதக்கொள்கை. எண்பத்து நான்கு லட்சம் மகா கல்பகாலம் வரையில் உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறந்திறந்து உழலுமென்றும், அந்தக் காலம் கடந்ததும் அவை வீடுபேறடையுமென்றும் இந்த நியதி மாறி உயிர்கள் வீடுபேறடையாவென்றும் கொண்டது இந்த மதம் என்பர். இந்த நியதிக்கு நூலுருண்டை உதாரணமாகக் கூறப்படும். ஒரு நூலுருண்டையைப் பிரித்தால், நூல் எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவு வரையில்தான் அது நீளுமே தவிர, அதற்குக் குறைவாகவோ அதிகமாகவோ நீளாதது போல, உயிர்கள் யாவும் மேற்சொன்ன நியதிக்குக் கட்டுப்பட்டே நடக்கும். நல்லறிவு பெற்று நல்ல செயல்களைச் செய்பவன் விரைவில் வீடுபெறான்; அவனுக்கு நியமிக்கப்பட்ட காலம் வரையில் அவன் பிறந்து இறந்து உழன்றே ஆகவேண்டும். மோட்சமடையும் நிலையிலிருக்கும் ஒருவன் கால நியதியைக் கடந்து, தீய கருமங்கள் செய்து மீண்டும் பிறந்திறந்து உழல விரும்பினாலும், அவன் அவ்வாறு செய்ய இயலாது என்பதும், அவனுக்கு ஏற்பட்ட நியதிப்படி அவன் வீடுபேறடைந்தாகவேண்டும் என்பதும் இம்மதக் கொள்கைகளில் சிலவாம்.

  நவகதிரையன்றி, 'ஆதித்தியம்' என்னும் நூலும் இந்த மதத்தாருக்குண்டென்று தெரிகின்றது. இது, 'ஆசீவக சங்க சமயத்தவருக்கு ஆதித்தியமென்பதொரு நூலுண்டு. மற்றது ஆதித்தனைப்பற்றியிருக்கும்; அது சோதி சாத்திரமெனவுணர்க. அன்றியேயும், ஆதித்தனைப் போல மீண்டும் அவர் வான மண்டல வரவுடையாரெனப் படுவர்' என்று கூறும் தக்கயாகப் பரணி (183-ஆம் தாழிசை) உரைப் பகுதியினால் அறியப்படும் என்பார் மயிலை, சீனி. வேங்கடசாமி

  ஐம்பூதக் கோட்பாடு (Doctrine of Five Energy)

  ஐம்பூதக் கோட்பாடு தமிழரின் மெய்யியல் காட்சிப் பொருளின் அடிப்படையில் உருவானது. இது தேகவாதம் என்று னும் அதாவது கண்ணுக்குப் புலனாகும் பொருள்களைப் பற்றிய அறிவு - பின்னர் அதைப்பற்றிய ஆய்வு எனத் தொடங்கியது. அதன் காரணமாகவே மெய்யியலைக் காட்சி’ என்றனர்.

  திருக்குறள்,

  இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
  மாசறு காட்சி யவர்க்கு

  எனச் சுட்டுவதும், புறநானூற்றில்,

  ‘..... ...... .......... திறவோர்
  காட்சியிற் றெளிந்தன மாகலின் 
  எனவும்,
  ‘ஐய மறாஅர் கசபீண்டு காட்சி’ 

  எனவும் குறிப்பதும் மெய்யியல் என்ற அடிப்படையிலேயாகும். எந்தப் பொருள் கண்ணுக்குப் புலனாகின்றதோ அந்தப் பொருளே உள் பொருளாகும். அதாவது தோற்றமுடைய பொருளையே காணமுடியும் என்பது அதன் கருத்து. அதன் காரணமாகவே மனித உடம்பை - காணத்தக்க உள்பொருள் - உண்மைப்பொருள் - எனும் அடிப்படையில் ‘மெய்’ என்றனர். மெய்யை - மனித உடம்பை அடிப்படையாகக் கொண்டு அமைந்த காரணத்தால் - அக்கோட்பாட்டை ‘மெய்யியல்’ என்றனர். அந்த வகையில் இந்திய மெய்யியல்களுக்கெல்லாம் மூல ஊற்றாக அமைந்த கோட்பாடு ‘தேக வாதம்’ எனப்பட்டது. ஆனால்,மெய்யியல் என்பது சரியான சொல்லல்ல, காட்சியியல் என்பதே சரி என்கிறார் முனைவர்.நிர்மல் செல்வமணி

  பொருள் திணைகளில் ஏழாவதாக இடம்பெறும் இன்மை மிகச் சிறந்த அறிவியலின் வெளிப்பாடாகும். உயிர்களின் திரிவாக்கக் கோட்பாட்டை (Theory of Evolution) விளக்கும் நுட்பத்தைக் கொண்டது.இவ் இன்மை தொல்காப்பியரால் அதே பொருளில் சுட்டப்பட்டிருப்பதை முதன் முதல் வெளிப்படுத்திய பெருமை கோ. வடிவேலு செட்டியார் அவர்களுக்கே உரியதாகும். இவ் இன்மையை முன்னின்மை, பின்னின்மை, ஒன்றில் ஒன்றின்மை, முற்றுமின்மை என நான்காக வகைப்படுத்தும் அகத்தியத் தருக்க நூற்பா. இவ்இன்மை எனும் கருத்தியலின் மூல வடிவமாகவே தொல்காப்பியரின்,

  ‘ஒன்றறி வதுவே யுற்றறி வதுவே’

  எனத் தொடங்கும் நூற்பா அமைந்துள்ளது. படிமுறைக் கோட்பாட்டை விளக்கும் வகையில் அமைந்த அந்நூற்பா தமிழ் அறிவு மரபின் அடையாளச் சின்னங்களுள் ஒன்றாகும்.”

  3400 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பாடலைப் பாருங்கள்.

  “ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே;
  இரண்டு அறிவதுவே அதனோடு நாவே;
  மூன்று அறிவதுவே அவற்றோடு மூக்கே;
  நான்கு அறிவதுவே அவற்றோடு கண்ணே;
  ஐந்து அறிவதுவே அவற்றோடு செவியே;
  ஆறு அறிவதுவே அவற்றோடு மனனே;
  நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.

   

  ஐந்தின் சேர்க்கை (Combination of Five Elements)

  ஐம்பூதங்கள் ஆகியவைகளின் சேர்கையினால் ஆனது இப்பிரபஞ்சம் மற்றும் அனைத்து  ஜீவராசிகள். ஆகாயம், காற்று, தீ, நீர் மற்றும் மண் ஆகிய கூட்டுப் பொருட்களின் பகுதிகள் பஞ்சீகரணத்தினால், பிரபஞ்சம் மற்றும் சீவராசிகள் தோன்றின. இதற்கு ’ஐந்தின் சேர்க்கை” என்று பொருள்.  பிரபஞ்சம் மற்றும் ஜீவராசிகள், ஆகாயம் முதலிய பஞ்சபூதங்கள், குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து உருவாகும் பருப்பொருளின்  (Matter) தோற்றத்திற்கு பஞ்சீகரணம் என்பர்.

  பூமி (பகுதி) செயல்படா சூக்கும பஞ்சபூதங்களின் கலவையினால் எவ்வாறு செயல்படும் ஜட பூமி (ஸ்தூல பூமி) உருவாகிறது எனில் = ½ பங்கு சூக்கும பூமி + 1/8 பங்கு நீர் + 1/8 பங்கு நெருப்பு + 1/8 பங்கு காற்று + 1/8 பங்கு ஆகாயம் - இந்த விகிதத்தில் பஞ்ச சூக்கும பூதங்களின் கலவையினால் (பஞ்சீகரணத்தினால்) செயல்படும் இந்த ஜட பூமி உருவாகிறது. இது போன்ற கலவையால் (பஞ்சீகரணத்தால்) மற்ற ஜடமான பஞ்ச பூதங்களான காற்று, நெருப்பு, நீர் ஆகிய ஜட பூதங்கள் உருவாகிறது.

   

  ஐந்தின் சேர்க்கையின் விளைவுகள் 

  ஆகாயம் 

  முதலில் ’ஆகாயம்’ (விண்வெளி) எனும் பூதம் ’ஒலி’ எனும் ஒரே குணத்துடன் தோன்றியது. ஆகாயத்திற்கு தன்னில் அனைத்து ஜடப்பொருள்களுக்கு இடமளிக்கும் தன்மை உள்ளது. ஆகாயம் மற்ற நான்கு பூதங்களான காற்று, தீ, நீர் மற்றும் மண் ஆகியவைகள் தோன்றக் காரணமாக உள்ளது. ஆகாயம் எனும் பூதத்தை யாராலும் தொட முடியாது பார்க்கவும் முடியாது. ஆகாயத்தை எவராலும் தொட முடியாது, குளிர், வெப்பம், உலர்தல், மணம் போன்ற குணங்கள் அற்றது. ஆகாயம் என்பது வெற்றிடம் ஆகும். எனவே ஆகாயம் எனும் பூதம் எதனாலும் கரைபடாதது. 

  காற்று 

  ’ஆகாயம்’எனும் பூதத்தின் ஒரு பகுதியிலிருந்து ’காற்று’(வாயு) எனும் பூதம், ’தொடு உணர்வு’ (ஸ்பர்சம்) எனும் குணத்துடனும், ஆகாயத்தின் சொந்த குணமாக ஒலி எனும் குணத்துடனும் தோன்றியது. எனவே காற்று தன் சொந்த குணமான தொடு உணர்வுடன், ஆகாயத்தின் ஒலி எனும் குணத்துடன் இரண்டு குணங்கள் கொண்டுள்ளது. காற்று எனும் பூதத்தின் இயல்பு ஒரு பொருளை உலர்த்தும் சக்தி படைத்தது. 

  நெருப்பு 

  காற்று எனும் பூதத்தின் ஒரு பகுதியிலிருந்து ’தீ’எனும் பூதம் ’உருவம்’(ரூபம்) எனும் குணத்துடன் தோன்றியது. அத்துடன் ஆகாயம் மற்றும் காற்றின் குணங்களான ஒலி மற்றும் தொடு உணர்வு குணங்களுடன் தன் சொந்த குணமான உருவம் எனும் குணத்துடன் ’தீ’எனும் பூதம் மூன்று குணங்கள் கொண்டுள்ளது.

  நீர்

  தீ எனும் பூதத்தின் ஒரு பகுதியிலிருந்து திரவ நிலையில் உள்ள ‘நீர்’ எனும் பூதம் ’சுவை’எனும் குணத்துடன் உண்டானது. அத்துடன் ஆகாயம், காற்று, தீ எனும் பூதங்களின் குணங்களான ஒலி, தொடு உணர்வு மற்றும் உருவம்  எனும் மூன்று குணங்களுடன் தன் சொந்த குணமான சுவை எனும் குணத்துடன், நான்கு குணங்களுடன் நீர் எனும் பூதம் விளங்குகிறது.

  நிலம் 

  நீர் எனும் பூதத்திலிருந்து ’நிலம்’ எனும் பூதம் ’வாசனை’ எனும் குணத்துடன் தோண்றியது. அத்துடன் ஆகாயம், காற்று, தீ, நீர் எனும் நான்கு பூதங்களின் குணங்களான ஒலி, தொடு உணர்வு, உருவம் , சுவை எனும் நான்கு குணங்களுடன், தன் சொந்த குணமான வாசனை எனும் குணத்துடன் ஐந்து குணங்களைக் கொண்டது மண்  எனும் பூதம்.

  தேகம் (Body)

  மனித உடம்பைத் தேகம் என்றனர் வடமொழியாளர். தமிழர் உருவாக்கிய ‘மெய்யியல், அதன் காரணமாக வடமொழியாளர்களால் ‘தேக வாதம்’ என்றாயிற்று. மேலும் தந்திரம் என்பது அதன் தலையாய பண்புகளால் தேக வாதத்தின் முடிவாகக் கருதப்பட்டது. அதாவது காணப்படும் பொருண்மிய வடிவம் கொண்ட மனித உடலானது அண்டத்தின் நுண்ணிய வடிவமே என்பதை வற்புறுத்தியது தந்திரமாகும். அத்துடன் மனித உடம்பிற்கும் அண்டத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் உள்ளன என்பதை அக்கோட்பாடுகள் வற்புறுத்தி வந்ததும் தெளிவாகிறது.

  அண்டமும் பிண்டமும் (Space and Flesh)

  இப்பேரண்டம் என்பது அணுக்களின் திரட்சியால் உருவானது. அணு ‘கரு’ நிலையில் ஏற்பட்ட சிதைவில் பெரிய அளவிலான வெப்பம் உருவானது. அதனை அடுத்து காற்று தோன்றியது. காற்று வெப்பத்தில் மோதியதால் தீயாகிய பூதம் தோன்றியது. தீயை அடுத்து மழை - பனி - தோன்றின. பின்னர் நிலமாகிய பூதம் தோன்றியது எனப் பரிபாடல் இப்பேரண்டத்தின் தோற்றத்தினை விவரிக்கும். இதன் அடிப்படையில்தான் தொல்காப்பியரும்,

  நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்துங்
  கலந்த மயக்கம் உலகம்............. 

  எனக்கூறுவார். நிலம், நீர், தீ, வளி, விசும்பு ஆகிய ஐந்து பூதங்களையும், ‘ஐம்பெரும் பூதங்கள்’ எனக்குறிக்கும் புறநானூறு.

  இப்பூதக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவானதே எண்ணியம், உலகாய்தம் ஆகிய மெய்யியல்களாகும். எண்ணியம், இப் பேரண்டத்தை, அதன் கண் தோன்றியுள்ள பல்வேறு உயிர் உள்ள, உயிர் இல்லாப் பொருள்களின் தோற்ற ஒடுக்கங்களை விரிவாகப் பேசுகின்றது. முதலில் ‘மான்’ (மகத்து) என்னும் பெரியது தோன்றியது; ‘மான்’ என்பது அறிவைக் குறிப்பது. அவ் அறிவிலிருந்து ‘விசும்பு’ (வானம்) வெளிப்பட்டது. விசும்பிலிருந்து வளி பிறந்தது. வளியிலிருந்து தீ வெளிப்பட்டது. தீயிலிருந்து நீர் எழுந்தது. நீரிலிருந்து மண் பிறந்தது. வான், வளி, தீ, நீர், மண் ஆகிய ஐம்பூதத் திரட்சியின் வாயிலாக ‘உள்ளம்’ (மனம்) பிறந்தது; எனும் பொருளில் அமைந்த எண்ணியக் கருத்தை மணிமேகலை பின்வருமாறு விளக்கக் காணலாம்.

  ........... .......... ............ சித்தத்து
  மானென் றுரைத்த்த புத்த்தி வெளிப்பட்டு
  அதன்க்கண் ஆகாயம் வெளிப்பட்டு, அதன்க்கண்
  வாயு வெளிப்பட்டு, அதன்க்கண் அங்கி
  யானது வெளிப்பட்டு, அதன்க்கண் அப்பின்
  தன்மை வெளிப்பட்டு, அதின்ம்மண் வெளிப்பட்டு
  அவற்றின் கூட்டத்தின் - மனம் வெளிப்பட்டு 

  என்பது அதன் கூற்று. மேற்காட்டிய பாடற்பகுதியில் ‘ஐம்பூதங்களின் சேர்க்கையால் ‘மனம்’ வெளிப்பட்டது. எனும் பொருளில் அமைந்த ‘அவற்றின் கூட்டத்தின் - மனம் வெளிப்பட்டு’ எனும் பாடலடி உயிரின் தோற்றத்தை விளக்குவதாகும். மேலும், அணு - ஐம்பூதங்களாகப் பெற்ற வளர்ச்சி - இவ்வளர்ச்சியின் தொகை மாற்றங்கள் - அம்மாற்றங்களின் விளைவால் ஏற்பட்ட உயிர்த்தொகுதிகள் ஆகிய அனைத்துக் கூறுகளையும் எண்ணியக் கோட்பாடு விரிவாக ஆராய்ந்துள்ளது. இதனை,.... அகம் என்னும் தமிழ்ச் சொல்லிற்கு “உள்ளம்” அல்லது ‘உயிர்’ என்னும் பொருள்கள் உண்டு..

  அத்தகைய அகந்தையின் பிறப்போடு, விசும்பினால் செவியில் எழுகின்ற செவியொலியும், வளியினால் மாந்தரின் மெய்க்குத் தோன்றும் ஊறு எனப்படும் தொடுஉணர்வும், தீயினால் கண்ணுக்குப் புலனாகும் ஒளியும், நீரினால் நாவில் தோன்றும் சுவையும்; நிலத்தினால் மூக்கின் வழியாய் நுகரப்பெறும் “நாற்றமும்” முதலான புலனுணர்வுகள் எழுந்தன. சுருங்கச் சொல்லின், காது, மெய், கண், நாக்கு, மூக்கு முதலான புலனுறுப்பு;புகள் ஐந்தும் ஒலி, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் எனப்பெறும் உணர்ச்சிகள் ஐந்தும் தோன்றின. அவற்றுடன் செயல்பாட்டிற்குரிய வாய் (மொழி), கைகள், கால்கள், எருவாய் (anus), குய்யம் (பெண் அல்லது ஆண் உறுப்பு), முதலான ஐவகை வினையுறுப்புகளும் பிறந்தன.

  ஐம்பூதக் கோட்பாட்டின் கூட்டுறவில் உயிர் எப்படித் தோற்றம் கொள்கிறது? 

  ‘... ஆத்திப் பூவும் கருப்புக் கட்டியும் இட்டு வேறுசில பொருட்களையும் அதனுடன் சேர்த்திடின் மதுவாகிய ‘பானம்’ பிறக்கின்றது. அதுபோன்றே நால்வகைத் தனிமங்களாலும் சிலவகை உறவுகளில் ஒன்றுபடத் தன்னுணர்வு பிறக்கின்றது. தனிமங்களின் கூட்டு அழிபடுகையில் அவையாவும் வெவ்வேறாகப் பிரிந்துவிடுகின்றன. பறையின் ஒலி பையப் தேய்ந்து இறுதியில் அழிவது போல, அவையாவும் மீண்டும் தத்தம் மூலப்பொருட்களுடன் கலந்து ஒன்றிவிடுகின்றன’. இக்கருத்தை,

  தாதகிப் பூவும் கட்டியும் இட்டு,
  மற்றும் கூட்ட, மதுக்களி பிறந்தாங்கு
  உற்றிடு பூதத்து, உணர்வு தோன்றிடும்
  அவ்வுணர்வு அவ்வ் பூதத்து அழிவுகளின்
  வெவ்வேறு பிரியும் பறையோ சையிற்கெடும் 

  என விளக்கும் மணிமேகலை.

  பூதங்கள் ஐந்து எனும் தமிழ் மரபுக்கு மாறாக, நான்கே பூதங்கள் எனக் கூறுவது வட மரபாகும். வெளியாகிய ஆகாயத்தைக் காண முடியாது என்பதால் வடமரபில் அதனை ஒரு பூதமாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அனைத்துப் பூதங்களும் தோன்றவும், வளரவும் காரணமாக இருப்பது வெளியாகிய ஆகாயம் என்பதால் அதனையும் ஒரு பூதமாகத் தமிழ் மரபில், ஏற்றுக்கொண்டனர். அதனால் வானத்தையும் சேர்த்து ‘ஐம்பெருபூதத்தியற்கை’ என ஆராய்ந்தனர்.

  இவ்வாறு அண்ட வெளியின் தோற்றத்திற்குக் காரணமாகிய ஐம்பூதங்களின் சேர்க்கை - உயிர்களின் - குறிப்பாக மாந்தர் இனத்தின் தோற்றத்திற்கும் காரணமாக இருப்பதால் ‘அண்டத்தையும் பிண்டத்தையும்’ அதாவது அண்ட வெளியையும் மாந்த உடலையும் ஒன்றெனக் கூறினர். அக்கருத்தின் அடிப்படையில் தோன்றியதே ‘அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும்’ எனும் உலகுரை ஆகும். அண்டங்களின் தோற்றத் திற்கு அடிப்படையாக அமைந்த அணுக்கருவைப் ‘பரமாணு’ என்பர். இப் பரமாணுவை - தேகவாதத்தின் அடிப்படையில் உருவான தந்திர நூலார் ‘பக்தி’யின் வடிவமாகக் குறிப்பர். இதனை,

  அண்டத்தி னுள்ளே அளப்ப்ரி தானவள்
  பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
  குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
  கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்க்ளே

  எனத் திருமந்திரமும் குறிக்கும்.

  ‘அளத்தற்கு அரிய பொருளாய் அனைத்து அண்டங்களிலும் பரவி நிற்பவளும், உடம்பினுள்ளே தானே பரவெளியை அமைத்துள்ளவளும் ஆகிய சக்தியின் தன்மைகள் பலவற்றை ஓம குண்டத்தில், மந்திரம், கிரியை, பாவனைகளால் காண முற்படுகின்றனர். ஆயினும், உடம்பினுள்ளே அவள் பொருந்தி நிற்றலை அவர்கள் அறிந்தார்கள் இல்லை’ என்பது அப்பாடலின் பொருளாகும். தேகவாதம் வைதிகத்திற்கு எதிரானது என்பதை விளக்கும் சிறந்த சான்றாகவும் அப்பாடல் அமைந்துள்ளது. ‘உலகம் மாயை, வாழ்வும் மாயை, பிரம்மம் ஒன்றே நிலையானது’, எனக்கூறிய மாயாவாதிகளை மறுத்த பொருண்மியக் கோட்பாடாகவும் தேக வாதம் திகழ்ந்தது. இதனை,

  உடம்பார் அழியில் உயிரார் அழிவார்
  திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
  உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
  உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே 
  உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
  உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
  உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான் என்
  றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே

  எனவரும் திருமந்திரப் பாடல்களால் தெளியலாம். அண்டத்திற்கும் மனித உடம்பிற்கும் இடையே நிலவும் ஒற்றுமையைத் தந்திரநூல்கள் விரிவாக விளக்கியுள்ளன.

  இதுபற்றி ஆராய்ந்த தி.கணேசர், “எமது உடலில் உள்ள பொருள்கள் யாவும் பிரபஞ்சத்திலும் உள்ளன. தந்திரக் கோட்பாட்டின்படி உடலும், பிரபஞ்சமும் ஒரே தன்மையான பொருட்களைக் கொண்டு ஒரே தத்துவ அடிப்படையில் அமைக்கப் பெற்றதால் ஒரே சக்தி ஒரே விதத்த்தில் தொழிற்பட வேண்டும்.ஆகவே உடலிற் பொதிந்துள்ள சக்தியை முழுவதும் வெளிப்படுத்தி, எமது கட்டுப்பாட்டுக்குள் இயக்கு வித்தால், இயற்கைச் சூழலின் ஆற்றலைப் பெருக்கி எமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து எமக்கு வேண்டிய வகையில் தொழிற்படுத்த முடியும். மனித உடல் போன்ற மிக நுட்பமான பொறியினை ஒருவரும் உருவாக்கிவிட முடியாது.

  பேரண்டமும் இதுபோன்ற நுட்பமானதொரு, பொறியே. இவை இரண்டிலும் பொதிந்துள்ள சக்திகளுக்கு இடையே உள்ள தொடர்பும் உறவும் பிரமிக்கத் தக்கவை. இந்த உறவினைப் புரிந்து அதன் அடிப்படையில் செயற்பட்டு, அவ் ஆற்றல்களை எமக்கு அடிமையாக்குவதே தந்திரச் சாதனைகள் எனப்படும். இச்சாதனைகளுக்கான அடிப்படை நோக்கம் தேகவாதம் அல்லது உடலை வணங்குதல் எனப் பண்டோபாத்தியாயாவின் மேற்கோளைக் காட்டி விளக்குவார்.

  பேரண்டத்திற்கும் மனித உடம்பிற்கும் இடையேயுள்ள ஒற்றுமைக் கூறுகளை விளக்கிய இவ் அறிவியல் இருபெரும் கிளைகளாகக் கிளைத்தது. ஒன்று மருத்துவம் மற்றது வான் இயற்பியல். இவ் இருபெரும் அறிவியல் மரபுகளும் கடவுள் மறுப்பை அடிப்படையாகக் கொண்ட பொருண்மைக் கோட்பாடுகளாகும்.

  மருத்துவம் (Medicine)

  உடம்பை மையமாகக் கொண்ட இவ் ஆராய்ச்சி மருத்துவத்தின் அடித்தளமாக அமைந்தது. உடம்பில் உள்ள மூன்று தாதுக்களில் (நாடிகளில்) ஏற்படும் முரண்பாடுகள் - ஏற்றத்தாழ்வுகள் நோய்களுக்கான காரணிகளாக அமைந்தன.

  மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
  வளிமுதலா எண்ணிய மூன்று 

  எனும் வள்ளுவர் கூற்றில் அவ்வுண்மையைக் காணலாம்.

  தேகவாதம் எனும் கொள்கையே,உடற்கூறியல் (Anatomy) உடல் தொழிலியல் (Physiology) மற்றும் வேதியியல், மருந்தியல் முதலானவை தோன்றி வளர்வதற்கு வேண்டிய நிலைகளை அமைத்து கொடுத்தது. மூளையின் தொழிலை, ஓரளவு தெளிவாக அறிய முனைந்தவர்கள் தந்திரக்கோட்பாட்டினரேயாவர். இந்திய மருத்துவக் கலையின் அடிப்படை நூல்களை ஆக்கிய சரகரும், சுசுருதரும் அறிவின் இருப்பிடம் - உணர்வின் மூலம் இருதயமே என நம்பினர். கிரேக்க அறிஞரான அரிஸ்டாட்டிலும் இவ்வாறே கருதினார். ஆனால் தந்திர இலக்கியங்கள் உணர்வின் இருப்பிடம் மூளை’ எனத் தேக வாதத்தின் அறிவு மரபை அடையாளம் காட்டுவார் தி. கணேசர். மேலும், இத்தேகவாதம் மருத்துவத் துறைக்கு எந்தெந்த வகையில் உதவியது என்பதையும் விரிவாக ஆய்ந்துரைக்கின்றார்.

  உடல் மெய்யானது எனும் பொருள் முதல் வாதக் கண்ணோட்டமே, உடல் பற்ற்றிய ஆராய்ச்சியில் அவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டியது. மாறாக, ஆன்மீக வாதிகள், உயிர் ஆன்மா என்ப்பவற்ற்றின் மெய்யியல் விசாரணையில் இறங்கியதால் உடலுக்கு முக்கியத்தும் அளிக்கத் தவறினர். அத்துடன் தந்திரமானது ஏற்கனவே கூறியபடி மக்கள் கோட்பாடாக மலர்ந்ததால், சமுதாயத்தின் கீழ்ப்படியில் உள்ள மக்களிடம் பரவிக்கிடத்தது. இறந்த உடலைத் தீண்டுவதோ ஆராய்வதோ இவர்களால் ஆபாசமாகக் கருதப்படவில்லை. தந்திரத்தில் கூறப்படும் சவச் சாதனை எனும் முறையும் உடலை ஆராய்வதற்கு உதவியது. உயர்மட்டத்தினர் இறந்த உடலைத் தீண்டுவதற்கு மறுத்தமை மருத்துவ அறிவியல் வளர்ச்சிக்குப் பெருந்தடையாகவே அமைந்தது. கல்கத்தா மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்ட போது மாணவர்களைச் சேர்ப்பது பெரும்பாடாக இருந்ததென அறியும்போது இந்திய ஆன்மீக வாதத்தின் தாக்கம் தெளிவாகின்றது என்பது அவரின் கூற்றாகும்.

  உடலை மையமாக வைத்துத்தொடங்கிய இம்மருத்துவம் வைதிகர்களின் கருமக் கோட்பாட்டிற்கு எதிரானது என்பதையும் நாம் இங்கே கருத்தில் கொள்ளவேண்டும். மனிதன் செய்யும் ‘பாவ - புண்ணியங்களுக்கு’ ஏற்பவே பிறவிகள் அமைகின்றன. அவரவர் துய்ப்பதற்குக் காரணமான நுகர்வுகளும் அமைகின்றன என்பது வைதிக நெறியாகும். மனிதன் தான் செய்த பாவங்களுக்குக் கழுவாய் தேடாமல் இறந்துவிட்டான் என்றால் அவன் ‘வீட்டுலகை எய்த முடியாது என்பதுடன் நரகத்திலும் உழல்வான்’ என்றும் கூறிய வைதிகம், ஜீவன் தான் செய்த நல்வினை தீவினைகளுக்கு ஏற்ற பிறவிகளில் (உடல்களில்) உயிரைத் தானே புகுத்துகிறான்; வினைகளுக்கு ஏற்பத்தானே அச்செயலையும் புரிகின்றான். மற்றொருவர் அதைச் செய்ய முன்வருவதில்லை. தீவினைகளைப் புரிவதில் சுதந்திரமுள்ளவன் அவற்றிற்கான தீயபிறவிகளையும் தனக்குப் பிடிக்காவிடினும் தானே ஏற்கிறான். தான் செய்த வினைப்பயனை தான் தான் அனுபவிக்க வேண்டும்.எனும் கூற்றில் அவ்வுண்மையைத் தெளியலாம். இத்தகைய ‘கருமத்தை’த் தேகவாதிகள் ஏற்கவில்லை, என்பதுடன் கடுமையாகக் கண்டிக்கவும் செய்தனர். உடம்பைப் பேணவேண்டிய தேவையையும் வற்புறுத்தினர்.

  உடலினை மெய் என ஏற்றுக்கொண்ட தமிழ்நாட்டுத் தந்திரக்கோட்பாட்டினரான சித்தர்கள் தீராத நோய்கள் என எதுவும் இல்லை என்றும், மக்கள் மாறாத இளமையுடன் வாழமுடியும் எனவும் நம்பினர். கர்ம நோய்களைத் தீர்க்க முடியாது, அவற்றை அடைந்தோர், அந்நோய்களின் கொடுமையை அனுபவித்துத்தான் தீரவேண்டுமெனும் வைதிகர்களின் கொள்கையைச் சித்தர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்கள் இவ்வுலகில் யாதொரு துன்பமும் இல்லாமல் இன்பத்துடன் வாழமுடியும், துன்பம் இன்றி என்றும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு வழியுண்டு என்பது சித்தர்களின் முடிவு’ என்னும் தி. கணேசரின் கூற்று எண்ணத்தக்கது.

  சித்த மருத்துவம் அல்லது ஆயுள் வேதம் பெற்ற வளர்ச்சி சில சிந்தனையாளர்களுக்குப் பெரும் உறுத்தலாகவே இருந்தது. அம்மருத்துவர்களின் சிந்தனையும் செயலும் நால்வண்ண வகுப்பினையுடன் உடன்படவில்லை என்பதே அதற்கான காரணம். அம் மருத்துவத்திற்கு இயல்பாய் அமைந்து நின்ற குடியாட்சி உணர்வே அத்தகைய எதிர்ப்ப்பிற்குக் காரணம் எனலாம். அதனைக் கருதியே சில சமற்கிருத சட்ட நூல்கள், மருத்துவர்களைப் பொல்லாதவர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும் கருதின. மருத்துவன் அல்லது அறுவை ‘மருத்துவனிடமிருந்து பெறப்படுகின்ற உணவு இழிவானது; அதனை உயர் சாதியினர் ஏற்கக் கூடாது’ என ஆபச்தம்ப ( Apasthamba Sastra) சட்ட நூல் கூறுகிறது. மருத்துவனிடமிருந்து பெறுகின்ற உணவு வேசியிடமிருந்து பெறுகின்ற உணவுபோல் கேடானது என வசிட்டரின் அறநூலும் கூறுகின்றது. மேற்சொன்ன சட்ட நூல்கள் யாவும் மனுநூலுக்கு முந்தியவை. மருத்துவனிடமிருந்து பெற்ற உணவு சீழாகிய குருதியைவிட இழிவானது என மனுநூலும் கூறுகிறது. மருத்துவர்களைப் போன்ற தூய்மையற்றவர்கள் வேள்விச் சடங்குகளில் பங்கெடுப்பதால் அவ்வேள்வியின் தூய்மையே கெட்டுவிடும் என அம்மனுநூல் கூறுகின்றது. மருத்துவம் செய்து பிழைக்கின்ற உயர்சாதியினர் இருபிறப்பாளனாக இருக்கத் தகுதியற்றவன் என வசிட்டர் கூறுகின்றார். 

  உணவின் பிண்டம் (Flesh of Food)

  ஐம்பூதங்களின் கூட்டுறவால் ஆனதே இவ்வுடலும் உயிரும் என ஆய்ந்துணர்ந்த இவ் அறிவர்கள், அப்படி அமைந்த இவ் உடம்பை வளர்ப்பது உணவே என்றும் உரைத்தனர். அவ் உணவும் உழவன் மண்ணையும் - நீரையும் இணைத்து உருவாக்கிய உழைப்பின் விளைவு என்றும் விளக்கினர். சங்கப்புலவராகிய குடபுலவியனார்,

  நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்
  உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
  உண்டி முதற்றே யுணவின் பிண்ட்டம்
  உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
  நீரு நிலனும் புணரி யோண்
  டுடம்பு முயிரும் படைத்திசி னோரே (புறம். 18:18)

  என விளக்குவார். ஐம்பூதங்களினால் உருவானது இம் மானிட உடம்பு; அதனை வளர்ப்பது உணவு; அந்த உணவோ, நிலமும் நீரும் இணைந்த இணைப்பால் வருவது, என்பதே அப்பேருண்மையாகும். இதனால் நிலனும் நீரும் எவ்வளவு இன்றியமையாதன என்பதை உணரலாம். நிலமும் நீரும் உணவுப்பொருளை உருவாக்க மட்டுமா செய்கின்றன? மனிதனுக்கு வேண்டிய மருந்துப் பொருட்களையும் சேர்த்தல்லவா விளைவிக்கின்றன. அதனால் அவ்விரண்டின் தூய்மையும் கூட தனிக் கவனத்தைப் பெருகின்றன. ஒரு நாட்டின் பாதுகாப்பில் நீரும் நிலனும் வகிக்கும் பங்களிப்பை,

  மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
  காடும் உடைய தரண்

  எனக் குறிப்பார் வள்ளுவர்.

  இந்த நான்குமே மருந்திற்கான மூலிகைகள் வளர்தற்கான நிலைக்களன்களாகவும் இருப்பன. மண்ணின் தன்மை பயிர்க்குளவாகுதலால் மூலிகைகளை விளைவிக்கும் இடம் மிகுந்த கவனத்திற்கு உரியதாகிறது. மருத்துவ முறைகள் தொடங்கியபோதே மண்-நீர் ஆகியவற்றின் தேர்வும் தொடங்கிவிட்டதைச் சரக சம்கிதை நன்கு உணர்த்துகின்றது.

  ..... நிலம் போன்ற ஐம்பெரும் பூதங்களிலும், குணங்களில் நான்கில் ஒருபகுதி அழிந்தது. அதனால் பயிர்களில் நைப்புத்தன்மை, தூய்மை, சுவை, வீரியம், விபாகம், பிரபாகம், குணம் இவற்றில் நான்கில் ஒருபங்கு குறைவுபட்டது. இவ்விதக் குறைபாடுகள் உள்ள உணவு வகைகளை உண்டதினால் முன் காலத்தில் போலில்லாமல் மனிதர்களுடைய உடலில் வாதம் சடராக்கினி இவற்றின் குறைவு ஏற்பட்டது. அதன் காரணமாகக் காய்ச்சல் முதலான நோய்கள் தோன்றின. ஆகவே மக்களுடைய ஆயுளும் முறையாகக் குறைவுபடத் தொடங்கியது. இவ்வாறு ஒவ்வொரு யுகத்திலும் அறத்தின் நான்கில் ஒரு பகுதி குறைவுபட்டு ஐம்பெரும் பூதங்களிலும் ஒவ்வொரு பகுதி குறையத் தொடங்கியது. இவ்விதம் ஒவ்வொன்றின் ஒவ்வொரு பகுதியும் குறைபாடு அடைந்து உலகம் அழிகிறது’என்பது அதன் கூற்றாகும்.

  ‘சுற்றுச் சூழல் மாசடைகின்றபோது உயிர் இனங்களும் பாதிப்பிற்குள்ளாகின்றன’ என விளக்குவதன் வாயிலாகச் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வின் தேவை விளக்கப்படுகிறது. நோய்களுக்கான காரணங்களை விளக்கும் சரக சம்கிதை,
  கேடடைந்த காற்று
  கேடடைந்த நீர்
  கேடடைந்த நாடு
  கேடடைந்த பருவம் (காலம்) 

  எனப் பகுத்து விரிவாக ஆராய்ந்துள்ளது. கேடடைந்த காற்று, நீர், நிலம், காலம் இந்நான்கின் மாறுபாடுதான் ஒரு நாடு அழிவடைவதற்குக் காரணம் எனச் சிறந்த மருத்துவர்கள் கருதுகின்றனர். இயற்கையான நிலைமையிலுள்ள காற்று, நீர், நிலம், காலம் இவை நாட்டிற்கு நன்மை பயப்பவை என அறிஞர்கள் கருதுகின்றனர். கேடடைந்த காற்று, நீர், நிலம், காலம் இவற்றால் நாட்டை அழிக்கக் கூடிய நோய்கள் தோன்றிடின் முறைப்படி சேகரித்து, வைத்திருக்கும் மூலிகைகளைப் பயன்படுத்தினால் நோய்களின் பயம் ஏற்படாது.

  நாடு, காலம், காற்று, நீர் இவை கேடடைவது நோய்கள் தோன்றுவதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றது. எனச் சூழலின் தூய்மையை வற்புறுத்துகின்றது. இப்பேரண்டம் ஐம்பூதங்களால் ஆனது; அதைப்போன்றே மனித இனமும் ஐம்பூதங்களின் சேர்க்கையால் உருவானது. ஐம்பூதங்களில் ஏற்படும் குற்றங்குறைகள் மனித இனத்தை மட்டுமின்றி இப்பூவுலகையே பாதிப்பிற்கு உள்ளாக்கிவிடுகின்றன. இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் வள்ளுவர்,

  சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
  வகைதெரிவான் கட்டே உலகு 

  எனக் கூறினாரென எண்ணத் தோன்றுகின்றது. ஓரறிவுயிரை முதலாகக் கொண்டு உருவான இந்த உயிரினத் தொகுதிகளைக் காப்பாற்ற வேண்டின் சூழலியலைக் காப்பாற்ற வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் நம்முன் உள்ளது. இதனை மறந்தால் எதிர்காலம் இருண்டுவிடும் என்பதில் ஐயமில்லை. இச்சூழலியல் பற்றிய அறிவியலே தமிழர் வகுத்த திணைக்கோட்பாடாக மலர்ச்சி பெற்றது. வான் இயற்பியலை முதல் பொருளாகவும், மனித இனப் பெருக்கத்திற்கான அடிப்படையாகிய இன்பியற் கோட்பாட்டை உரிப்பொருளாகவும் வகுத்தளித்த தமிழர், சூழலியலைக் கருப்பொருளாக வடிவமைத்தனர்.

  தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
  செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
  அவ்வகை பிறவும் கருவென மொழி 

  என்பது கருப்பொருள் இலக்கணம். தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை ஆகியவற்றுடன் மனிதனின் முயற்சியோடும், கலையுணர்வோடும் இணைந்த உழைப்பு, அதாவது தொழில், பறை, யாழ் மற்றும் அவற்றுடன் இணைந்த பூ, நீர், ஆகியவற்றையும் கருப்பொருளாகக் கொண்டனர். இக் கருப்பொருள் பற்றிய சிந்தனை மரபே, இயற்கையைப் போற்றிப் பாதுகாக்கவேண்டிய எண்ணத்தை இவர்கட்கு ஊட்டியிருக்கவேண்டும். அந்த எண்ணத்தின் வெளிப்பாடுகள்தாம்,

  நும்மினும் சிறந்தது நுவ்வை யாகுமென்று
  அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
   

  எனும் பாடலடிகள் என்பதை நாம் மனங்கொளவேண்டும். இத்தகு சிந்தனை மரபுதாம் திணைக்கோட்பாட்டினை உயிர்ம நேயத்தின் அடையாளமாக உயர்த்துகிறது, தமிழ் மரபின் பெருமைகளையும் பறை சாற்றுகிறது.

  ஒருவர் கருத்திலிருந்து மற்றவர் மாறுபாடு கொள்ளுதல் எனும் பொருளில் உருவான தமிழ்ச் சொல்லே தருக்கம் என்பதாகும். வாதத்தில் பெற்ற வெற்றியினால் ஏறபடும் பெருமிதமும் சிறப்பும் கருதி இச்சொல் ‘தருக்கம்’ (பெருமிதம்) எனக் காரணப்பெயராகவும் அமைந்தது என்பார் ர.கா.முருகவேள். வாதமேடையில் சொற்களை அளந்து பேசும் முறையினை விளக்கியதால் இதற்கு ‘அளவை’ என்றும் பெயர் உண்டு.

  உலகத்துப் பொருள்களையெல்லாம் எண்ணல். எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நால்வகை அளவினால் அளந்தறியுமாறுபோல, உயரிய நுண்பொருள்கள் பலவற்றையும் மனத்தின் எண்ணி, மாசற அளந்துணர்ந்து கொள்ளுதற்குக் கருவியாதல் பற்றித் தருக்கநூல் ‘அளவைநூல்’ எனவும் வழங்கப்பெறும். அளவைகளும் பொருந்துமாறுகளும் ஆகிய நல்லாற்றான் நாடி அவையஞ்சா மாற்றங் கொடுத்து, வெல்லுஞ்சொல் இன்மையறிந்து சொல்லி, அவையத்து முந்தியிருந்து, தோலா நாவின் மேலோராகத் தருக்கு (பெருமிதம்) மிக்க நிலையில் வீற்றிருக்கச் செய்யும் மாட்சிமை உடையதாகலின் அளவைநூலைத் தருக்கநூல் எனப் பண்டைச் சான்றோர்கள் சிறப்பித்து வழங்குவோராயினர் எனும் விளக்கங்கள் மேற்கூறிய கருத்தினை விளக்கும்.

  எண்ணூல், அளவைநூல், தருக்கநூல் என்பவற்றைப்போலவே தருக்கத்தைக் குறிக்கும் மற்ற தமிழ்ச் சொற்கள் ‘ஏரணம்’ (Logic) ஆகும். ‘எண் என்பது தருக்க நூல்களுக்கும் எழுத்தென்பது இலக்கண நூலுக்கும் பெயர்.ழகும் அணியும் பெறப் பயன்படுத்தும் இலக்கணமாதலின் தருக்கம், அழகு எனும் பொருளில் ஏரணம் எனவும் வழங்கலாயிற்று. அளவை, தருக்கம், ஏரணம் எனப்பல சொற்கள் தமிழில் வழக்காறு பெற்றிருந்தமை, தமிழுக்கும் தருக்கத்திற்கும் இருந்த தொடர்பினைப் புலப்படுத்தக் காணலாம். இவ்வாறு தமிழில் பெருவழக்காறு பெற்றிருந்த தருக்கம் வடமொழியில் செல்வாக்குப் பெறத்தொடங்கியது எப்போது? எப்படி? என்பது குறித்து இனிக் காணலாம்.

  நிலம், நீர, தீ, வளி, விசும்பு எனும் ஐம்பெரும் பூதங்களின் இயல்புகளை அறிவியல் நோக்கில் ஆராய்ந்த சிந்தனைப் பள்ளியே ஐந்திரம் என்பதாகும். தொல்காப்பியர் ஐந்திரம் நிறைந்தவர். இதனை பனம்பாரனார்.

  “மல்குநீர் வரைப்பின் ஐந்திரம்
  நிறைந்த தொல்காப்பியன்.........”

  எனப் பாராட்டுவார் ‘மல்குநீர் வரைப்பின் ஐந்திரம்’ எனும் அடிக்கு உரை எழுதிய இளம்பூரணர்.

  ‘மிக்க நீரையுடைய கடலாகிய
  எல்லையையுடைய உலகின் கண்ணே
  இந்திரனாற் செய்யப்பட்ட ஐந்திர
  வியாகரணத்தினை..............’

  என விளக்குவார். இவ்விளக்கம் குறித்து, நூல்கள் அனைத்தும் உலகில் உள்ள மக்களுக்காக உலகில் உள்ளோரால் மட்டுமே இயற்றப்படுபவைதான். அப்படியாயின், ‘உலகின்கணணே இந்திரனாற் செய்யப்பட்ட’ என்ற இளம்பூரணரின் பொருள்விளக்கம் முரண்போலத் தோன்றுகின்றது. ஆனால் ‘மல்குநீர் வரைப்பின்’ என்ற தொடருக்குக் ‘கடலால் சூழப்பட்ட உலகினது ஐந்து திரங்கள் ’ என்று ‘அது’ வெனும் ஆறன் உருபைப் பயன்படுத்தும்போது பொருள் சிறக்கின்றது.ஆறாம் வேற்றுமையை,
  ஆறாகுவதே
  அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 
  தன்னினும் பிறிதினும் இதனது இதுவெனும் 
  அன்ன கிளவிக் கிழமைத் ததுவே (வேற். 18)

  என விளக்குவார் தொல்காப்பியர். சேனாவரையர், எனவே, ஆறாவது கிழமைப் பொருட்டென்றும், அக்கிழமை தன்னான் வந்த தற்கிழமையும் பிறிதான் வந்த பிறிதின் கிழமையும் என இரண்டென்றும் கூறியவராம். தன்னென்றது தன்னோ டொற்றுமையுடைய பொருளை, பிறிதென்றது தன்னின் வேறாகிய பொருளை என்று உரை விளக்கம் தருவார்.

  இவ்வாறு மல்குநீர் வரைப்பினது ஐந்திரம் எனப் பொருள்காணின், ‘கடலால் சூழப்பட்டது உலகம் அவ்வுலகம் ஐந்து கூறுகளால் அருதாவது ஐந்தன் திரங்களால் அமைந்துள்ளது என்ற விளக்கம் கிடைக்கின்றது. எனும் ஆய்வுரை கருதத் தக்கதாய் உள்ளது. நிலம், நீர்,தீ, வளி, விசும்பு எனும் ஐந்து பூதங்களால் ஆனது இவ்வுலகம் என்பதே தொல்காப்பியரின் கோட்பாடு ஆகும். இதனைத் தொல்காப்பியர், நிலந்தீ நீர்வளி விசும்போடைந்தும் கலந்த மயக்க முலகமாதலின் எனக் கூறுவதால் உணரலாம். இத்தகைய ஐந்திரக்கோட்பாடு கற்றறிந்த அறிஞர்களால் போற்றப்பட்ட பெருமைக்குரியதாக இருந்தது. சஞ்சயன், திருதராட்டினரிடம் இதுபற்றிக் கூறுவது இங்கே குறிக்கத் தக்கதாகும்.

  மகாராசரே! கற்றறிந்தவர்கள் உலகத்தில் உள்ள எல்லாப் பொருட்களும் இந்த மகா பூதங்கள் என்றும், சமமாயிருப்பவைகள் என்றும் சுருக்கமாகச் சொல்கிறார்கள். ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் இவையெல்லாம் மேன்மேல் ஒன்றுக்கொன்று ஒவ்வொரு குணத்தால் மேம்பட்டிருக்கின்றன. அவைகளுள் பூமியே தலைமைப் பெற்றுள்ளது என ஐம்பூதக் கோட்பாட்டின் பரவலையும் சிறப்பையும் கூறக்காணலாம்.

  இந்திய மெய்யியல் வரலாற்றிற்கு மட்டுமின்றி உலக மெய்யியல் வரலாற்றிக்கும் ஐம்பூதக்கோட்டை வழங்கியவர்கள் தமிழர்களே. இதற்கான மிகவும் தொன்மையான சான்றாகத் திகழ்வது புறநானூற்றில் இரண்டாம் பாடலாகும்.

  மண்டிணிந்த நிலனும்
  நிலனேந்திய விசும்பும்
  விசும்பு தைவரு வளியும்
  வளித் தலைஇய தீயும்
  தீ முரணிய நீரு மென்றாங்
  கைம்பெறும் பூதத் தியற்கை போல (பாடல் 2:1-6)

  எனும் பாடற்பகுதி ஐம்பெரும் பூதத்து இயற்கையை விவரிக்கும் இவ் ஐம்பெரும் பூதங்களின் இயல்பினை ‘இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல் எனும்’ தொல்காப்பிய நூற்பாவின் உரையில்.

  ‘நிலம் வலிது, தீ வெய்து, நீர் தண்ணென்றது, வளி யெறிந்தது, விசும்பு அகலியது’. எனச் சேனாவரையர் விளக்குவார்.

  அறிவியல், தருக்கவியல் ஆகிய இரண்டின் அடிப்படையில் உருவான இவ் ஐந்திர மெய்யியலைக் கற்கவேண்டி கி.மு.7 ஆம் நூற்றாண்டளவில் வடநாட்டிலிருந்து பலரும் தென்னாடு வந்துள்ளனர் என்பதைப் பௌத்த நூலான அவதான சாதகம் குறித்துள்ளது. கி.மு.7 ஆம் நூற்றாண்டளவில் தோன்றிய கபிலர், இவ் ஐந்திரக் கோட்பாட்டில் வேத எதிர்ப்பையும் கடவுள் மறுப்பையும் இணைத்துள்ளார். அதனால் ஐந்திரம் மூன்று கிளைகளாகப் பிரிகிறது. அவை எண்ணியம் - ஓகம்- உலகாய்தம் என்பன.

  இந்தக் காலக்கட்டத்தில் உருவான நூல்களே திருக்குறளும் மருத்துவ நூலான சரக சம்கிதையும் ஆகும். தமிழ் மருத்துவ நூலைச் சரகர் எனும் மருத்துவ அறிஞர் வடமொழியில் சுலோக வடிவில் இயற்றியதாகவும், இந்தச் சுலோகங்களை வகைப்படுத்தி கி.பி.முதல் நூற்றாண்டளவில்தான் எழுத்து வடிவமாக்கினார் என்றும் அந்நூலின் வரலாறு வருகிறது. வாய்மொழியாக வழங்கப்பட்ட அந்நூலில் எழுத்து வடிவம் பெற்ற நூலுக்குரிய இலக்கணங்கள்- தருக்கமுறைக்கான வரையறைகள் யாவும் விளக்கமாகக் கூறப்பட்டிருப்பதால், சரக சம்கிதையின் மூலவடிவம் எழுத்துக்களைக் கொண்ட ஓர் இந்திய மொழிக்கு உரியதாக இருந்துள்ளது என்பது உறுதியாகிறது. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இந்திய மொழிகளில் எழுத்துவடிவம் பெற்றிருந்த ஒரே மொழி தமிழே என்பதால் சரக சம்கிதையின் மூலவடிவம் தமிழுக்குரியது என்பது தெளிவாகிறது. சரகசம்கிதையையும்-தொல்காப்பியத்தையும் ஒப்பிட்டு ஆய்வு செய்தபோது, தொல்காப்பியம் மூலநூலாகவும் சரக சம்கிதை வழிநூலாகவும் அமைந்துள்ளமை புலனாயிற்று.

  எண்ணியக் கோட்பாடு

  சரகசம்கிதை, எண்ணியத்தின் பெயரைச் சுட்டியும் சுட்டாமலும் எண்ணியக் கோட்பாட்டை விரிவாகக் கூறிச்செல்கிறது. ஆனால் தொல்காப்பியமோ ஓரிடத்தில் கூட எண்ணியத்தையோ, அல்லது ஓக - உலகாய்தத்தையோ பெயர் சொல்லி சுட்டவில்லை. ஆனாலும் இந்திய மெய்யியல் ஆராய்ச்சி அறிஞர்கள் குறிப்பாக பொருள்முதற் சிந்தனையாளர்கள் எண்ணியத்தின் மூலவடிவத்திற்கு அதாவது (வடமொழியாளர் நிரீச்சுரசாங்கியம் என்பர்) கடவுள் மறுப்புச் சாங்கியத்திற்கு உரியன என்றும், ஓக, உலகாய்த மெய்யியல்களைச் சார்ந்தவை என்றும் எவற்றையெல்லாம் வகைப்படுத்தியுள்ளனரோ அவற்றையெல்லாம் தொல்காப்பியம் விரிவாகவும் செறிவாகவும் குறித்துள்ளது.

  • படிமுறைக்கோட்பாடு (Theory of Evolution)
  • ஐம்பூதக்கோட்பாடு (Theory of Universe)
  • அளவையியல் கோட்பாடு (Theory of Logic)
  • காரண - காரியக் கோட்பாடு (Theory of Cause and Effect)
  • இன்பியல் கோட்பாடு (Theory of Hedonism)

  ஆகிய அறிவுசார் துறைகளைக் குறிப்பிடும் இடங்கள் எல்லாம்,

  ‘நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே’
  ‘என்ப’
  ‘என்மனார் புலவர்’
  ‘நுனித்தகு புலவர் கூறிய நூலே’

  எனத் தொல்காப்பியம் சுட்டுவது மேலே குறிப்பிட்ட ஐந்திர மரபைச் சார்ந்த மூலவர்களை எனலாம். எண்ணிய, ஓக, உலகாய்த மெய்யியல்கள் தனித்தனி பெயரால் தனித்தனி அமைப்புகளாகச் செயல்பட்டுள்ளன. அப்படி அவர்கள் தனி அமைப்புகளாகச் செயல்பட்ட போதும் மூலக்போட்பாடுகள் பெரும்பாலும் ஒன்றாகவே இருக்கின்றன. உயிர் பற்றிய கருத்தில்தான் எண்ணியம் - ஓகம் இரண்டும் உலகாய்தத்தோடு மாறுபட்டுள்ளன. மற்றபடி அவற்றுள் வேறுபாடுகள் இல்லை. அம்மூன்று கோட்பாடுகளும், வேதங்களையும், வேத வழிப்பட்ட சடங்குமுறைகளையும் கடவுளையும் மிகக் கடுமையாகச் சாடியுள்ளன. ஆனால் தொல்காப்பியத்தில் வேத - வைதிககடவுள் மறுப்புக்கான அடிப்படைக் கருத்துக்கள் இருந்தும் அவற்றைப் பெயர் குறித்து மறுக்கவில்லை. இதற்கான காரணங்களை ஆராய்ந்தபோது, தொல்காப்பியர் காலத்தில் வேதப்பண்பாடு தனித்துச் சுட்டும் தகுதியைப் பெறவில்லை.

  வேதங்கள் மூன்றாகவோ நான்காகவோ வகுக்கப்படாமல் இருக்கு (ரிக்) வேதம் ஒன்று மட்டும் தொகுக்கப்பட்டிருந்தது. அப்படித் தொகுக்கப்பட்டதும் தமிழ்நாட்டில்தான். இருக்குவேதம் தொகுக்கப்பட்டபோது அதனை எழுத்து வடிவில் கொணரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அம்முயற்சியில் ஈடுபட்டவர் அதங்கோட்டாசான். துணை நின்றவர் தொல்காப்பியர். வேதமொழிக்கு எழுத்தை அறிமுகப்படுத்தவும், அமைத்துக் கொள்ளவும் மேற்கொண்ட முயற்சியின் வெளிப்பாடே தொல்காப்பியம். அதனால்தான் பனம்பாரனார் ‘மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி’ என அந்த வரலாற்றைப் பதிவு செய்துள்ளார். இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கி.மு. 14-ம் நூற்றாண்டு என்பதால், தொல்காப்பியர் காலமும் கி.மு. 14-ஆம் நூற்றாண்டு என்பது உறுதி.

  அந்நூற்றாண்டில் வேதப்பண்பாடு என ஒன்று உருவாகவில்லை என்பதாலும், வைதிகர்களே தமிழைச் சார்ந்து நின்றதாலும், தொல்காப்பியருக்கு அவர்களையோ அவர்களின் பண்பாட்டையோ எதிர்க்கவேண்டிய தேவை ஏற்படவில்லை. எனும் உண்மைகள் புலனாயின. மேலும், பிற்காலத்தில் இந்தியா முழுமையிலும் பரவிய எண்ணிய - ஓக- உலகாய்தம் உள்ளிட்ட வைதிக எதிர்ப்பிற்கான மூலநீருற்றே தொல்காப்பியமாக உள்ளது. இதனால் இந்தியாவில் மட்டுமன்றி உலக மொழிகள் என்ற அடிப்படையிலும் எழுதப்பட்ட முதல் நூல் தொல்காப்பியம் என்ற பெருமிதம் ஏற்படுகிறது.

  தருக்கவியல் (Logic / Argumentation)

  தருக்கவியல் மூன்று கூறுகளைக் கொண்டது அவை, 1. காரியாபினி விருத்தி 2. பரிக்சா 3. வாதவிதி என வகைப்படுத்துவார் சதீசு சந்திரா. இந்த மூன்றையும் தொல்காப்பியம்,

  1. தொழில் முதல்நிலை
  2. தேர்வு
  3. தந்திர உத்தி

  எனக் குறிப்பார். இம்மூன்றனுள், தொல்காப்பியர் குறிப்பிடும் தொழில் முதல்நிலை என்பது சிறப்பியம் எனும் மெய்யியலின் அடிப்படையாக அமைந்துள்ளது. ஒருவேளை வைசேடிக மெய்யியலின் தொடக்க காலத்தில் அம் மெய்யியலுக்கு உரியதாக அது இருந்திருக்கலாம். என்பது சதீசு சந்திராவின் கூற்று. வடமொழியில் அமைந்துள்ளதாகக் கருதப்படும் சைசேடிகம் எனும் மெய்யியலை உருவாக்கியதுடன் அதற்கான நூலை இயற்றியவராகவும் போற்றப்படுவர் கணாதர் ஆவார். இக் கணாதர் எனும் வடமொழிப்பெயர் கணி ஆதன்- எனும் தமிழ்ப் பெயரின் சிதைவாரும். கனி - கணியர் எனும் சொற்கள் தொடக்கத்தில் தமிழ் வானியல் அறிஞர்களைக் குறித்த ஒரு பொதுப் பெயராகும். பின்னாளில் கி.மு.ஆறாம் நூற்றாண்டில் ஆசீவகம் நிறுவனம் தோன்றிய பின்னர் ஆசீவக வானியல் அறிஞர்களைச் சுட்டும் சிறப்புப் பெயராக மாறியது.

  கணி ஆதனின் இச்சிறப்பியம், பக்குடுக்கை நன்கணியாரின் இயல்புக் கோட்பாட்டிலிருந்து உருவானதாகும். தருக்கத்தையும் அணுவியலையும் உள்ளடக்கிய இச்சிறப்பியமே வடமொழியில் “சிறப்பானது” எனும் பொருளில் வைசேடிகமாக மொழிமாற்றம் பெற்றுள்ளது. இச்சிறப்பியத்தை ஆசீவக மெய்யியலாகவே கருதுவார் குணா. வைசேடியமாக மொழிமாற்றம் பெற்ற சிறப்பியத்திற்குரிய இக் காரியாபினிவிருத்தியைச் சரக சம்கிதை மருத்துவர்களின் இலக்கணமாக வரையறுக்கின்றது. தொல்காப்பியத்தின் “தொழில் முதல்நிலை” என்பது எட்டுக் கூறுகளை உள்ளடக்கியதாகும் . இதனை,

  “வினையே செய்வது செயப்படு பொருளே
  நிலனே காலம் கருவி யென்றா
  இன்னதற் கிதுபய னாக வென்னும்
  அன்ன மரபின் இரண்டொடுந் தொகைஇ
  ஆயெட் டென்ப தொழில்முதல் நிலையே”

  எனச் சொல்லதிகாரம் வேற்றுமை இயலில் விளக்குவார் தொல்காப்பியர். இத்தொழில் முதல்நிலையைச் சரகசம்கிதை, மருத்துவர்கள் அறிந்துகொள்ளவேண்டியவை எனும் தலைப்பில் விளக்குகின்றது. தொல்காப்பியம், சரகசம்கிதை ஆகிய இருநூல்களில் இடம்பெற்றுள்ள இத்தொழில் முதல்நிலை பற்றிய ஒப்பாய்வு குறிக்கத்தக்கதாகும்.

  செயல்களின் முதல்நிலைகளைத் தொல்காப்பியர் எட்டாக வகைப்படுத்த, சரகசம்கிதை ஆசிரியரோ அவ் எட்டோடும் முயற்சி, துணைக்கருவி ஆகிய இரண்டையும் சேர்த்து பத்தாகக் குறித்துள்ளார். எந்த ஒரு செயலுக்கும் மனித முயற்சி இருந்தாக வேண்டும். முயற்சியின் வெளிப்பாடுதான் இயக்கம். எனவே ஒரு செயல், வடிவம் கொள்ளுதல் என்பதே முயற்சியின் வெளிப்பாட்டினால்தான் என்பது வெளிப்படை. அத்துடன் கருவி என்று கூறிய பின்னர் துணைக்கருவி என்ற ஒன்று தேவையில்லை. ஆகத் தொல்காப்பியர் குறிப்பிடும்,

  • வினை
  • செய்து
  • செயப்படுபொருள்
  • நிலன்
  • காலம்
  • கருவி
  • இன்னதற்காக
  • இதுபயன்

  ஆகிய எட்டும் மூலவடிவமாக (Original source) அமைந்து நிற்றல் வெளிப்படை. சம்கிதை ஆசிரியர் குறிப்பிடும் முயற்சியும், துணைக்கருவியும்கூட அவ்வெட்டனுள் அடங்கிவிடுதல் தெளிவு. அத்துடன் ‘ஆயெட் டென்ப’ என்பதால் இவ்வரையறை தொல்காப்பியரால் அமைக்கப்பட்டதன்று என்பதும் அவருக்கு முன்பே வரையறுக்கப்பட்டவை என்பதும் தெளிவாகிறது. எனும் விளக்கம் இந்திய அறிவு மரபிற்கெல்லாம் மூலவடிவமாக விளங்குவது தொல்காப்பியம் என்பதை உறுதிப்படுத்தக் காணலாம். தேர்வு தருக்கத்தின் அடிப்படை நோக்கம் உண்மை காணுதல் ஆகும். மாறுபட்ட கருத்துக்களைக்கொண்ட இருவர் வாதிடும்போது மாறுபாடுகளுக்கான காரணங்களைக் களைந்து உண்மையை நிலைநாட்ட மேற்கொள்ளும் வழிமுறைகளைத் ‘தேர்வு’ என்பர். தேர்வின் வாயிலாக உண்மைப் பொருளைத் துணிந்து கண்டறிவதால் தொல்காப்பியர் இதனை ‘துணிவு’ என்பர்.

  மறுதலைக் கடாஅ மாற்றமு முடைத்தாய்
  தன்னூ லானும் முடிந்த நூலானும்
  ஐயமும் மருட்கையுஞ் செவ்விதின் நீக்கித்
  தெற்றென ஒரு பொருள் ஒற்றுமை கொளீஇத்
  துணிவொடு நிற்றல் என்மனார் புலவர்

  என்பது நூற்பா. பேராசிரியர்,இளம்பூரணர் முதலான உரையாசிரியர்கள் இந்நூற்பாவிற்கு உரையின் இலக்கணம் என்ற நிலையில் பொருள் கண்டனர். எனினும் இவையாவும் பேச்சுக்கலைக்கான இலக்கணமாக இருந்து பின்னர் உரைக்கான இலக்கணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பதே உண்மை. மேற்காட்டிய நூற்பாவுக்கு, உரையாவது, மறுதலைக்கடா, மாற்றமும் உடைத்தாக, ஐயப்பட்டு நிற்றலும் மருண்டு நிற்றலும் நீக்கி, தன்னூலானாதல், அப்பொருண் முடிவுறக் கூறின நூலானாதல் தெளிய ஒரு பொருளை ஒற்றுமைப்படுத்துதல், இதுவே பொருளெனத் துணிதல்’ என இளம்பூரணர் தரும் விளக்கம் எண்ணத்தக்கது. இதனால்

  • எதிரி வினா எழுப்புதல்
  • அவ்வினாவிற்கு உரிய விடைகளைத் தனது நூல், அல்லது அப்பொருள் குறித்த பிறநூல்களில் இருந்து மேற்கோள் காட்டி விடைகூறல்.
  • ஐயம் மருட்கை இவற்றை முற்றாகக் களைதல்.
  • பின்னர் இதுவே முடிந்த முடிபெனத் துணிதல்.
  எனும் நான்கு கூறுகளைக் கொண்டது துணிவு என்பது தெளிவாகும். இந்நான்கையும் வடமொழியாளர், ஆப்தோபதேசம் - மேற்கோள் (அல்லது) முதல்நூல் பிரத்தியட்சம் - காட்சி அனுமானம் - உய்த்தறிவு யுக்தி - தொடர் ஆய்வு - உத்தி என வகைப்படுத்தி இந்நான்கு கூறுகளையும் கொண்டதே ‘தேர்வு’ என்பர்.

  தந்திர உத்தி

  இந்தியத் தருக்கவியல் வரலாற்றின் மூலவடிவங்கள் அனைத்தும் தமிழுக்கு மட்டுமே உரியன என்பதை உணர்த்தும் சான்றுகளில் தலையாயது ‘தந்திர உத்தி’ ஆகும். தந்திரம் என்ற தமிழ்ச் சொல்லிற்கு “நூல்” என்பது பொருள்”. “உத்தி” என்ற தமிழ்ச் சொல்லிற்கு முறை என்பது பொருள். இரு தமிழ்ச் சொற்களும் நூல் எழுதும் முறை எனப்பொருள் தந்தாலும் அவையும் கூட பேச்சுக்கலைக்கான வரைவிலக்கணம் என்பதே உண்மை. இத்தகைய வரைவிலக்கணத்தைக் கொண்டதே தந்திர உத்தி தமிழ்ச்சொற்களான இவற்றை வடமொழியாளர் தந்திரயுக்தி என்று அழைத்தனர். இத்தந்திர உத்தியின் வரலாற்றை உபநிடதங்களில் இருந்தும். ஆரண்யங்களில் இருந்தும் தொடங்குவார் சதீசுசந்திரா. கி.மு.900- த்திலிருந்து கி.மு.500 வரையிலான காலகட்டத்தில் தோன்றியதாகக் கருதப்படும் தைத்ரேய ஆரண்யம் எனும் நூலில் காணப்படும்

  • சுமிர்தி
  • பிரத்தியட்சம்
  • ஐதிகம்
  • அனுமானம்

  முதலான சொற்கள் தருக்கவியலுக்குரியனவாகக் குறிக்கப்படுவதை அவர் எடுத்துக் காட்டுவார். அத்துடன் கி.மு.நான்காம் நூற்றாண்டிற்கு உரியது என நம்பப்படும் கௌடில்யரின் பொருள்நூலில் குறிக்கப்பட்டுள்ள 32 தந்திர உத்தியையும் எடுத்துக்காட்டி விரிவாக ஆராய்கின்றார்.

  அரசியல் நெறிகளைக் கூறும் பொருள்நூலின் இறுதி அத்தியாயத்தில் 32 வகையான கலைச்சொற்களைத் ‘தந்திரஉத்தி’ அல்லது அறிவியல் அடிப்படையிலான ‘வாதமுறைகளின் அமைப்பு’ எனக் குறித்துள்ளார். இதே பட்டியல் சரக சம்கிதை, சுசுருத சம்கிதை என்ற இரண்டு மருத்துவ நூல்களிலும் காணப்படுகிறது. இத்தந்திர உத்தி கௌடில்யராலோ அல்லது அவ்விரு சம்கிதைகளின் ஆசிரியர்களாலோ தொகுக்கப்பட்டிருக்க முடியாது என்பது உறுதி. மாறாக இவை பட்டிமன்றங்களில் தமது கருத்துக்களை அறிவின் அடிப்படையில் நிலைநாட்ட யார் விரும்பி இருப்பாரோ அவர் அல்லது அவர்களால்தான் இது தொகுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது அவரின் முடிவாகும்.

  தருக்கம் தொடர்பான அடிப்படையான சொற்கள் யாவும் தமிழ்ச்சொற்களைக் கொண்டே அமைந்துள்ளன என்பதும் இங்கே கவனிக்க வேண்டியதாக உள்ளது. தருக்கம் பற்றிய நூல்களை ஏது சாத்திரம் என்பர். காரண- காரிய முறையினை உணர்த்தும் இச்சொல் தொல்காப்பியரால் பல இடங்களில் ஆளப்பட்ட பெருமைக்குரியதாகும் இன்னான் ஏது ஈங்கென வரூஉம் எனவும், ஏது நடையினும் எடுத்துக்காட்டினும் எனவும் வரும் இடங்கள் அதற்கான சான்றுகளில் சில இத்தந்திரஉத்தி யாவும் தருக்கவியலுக்குரியவை என்பதைத் சிசுருத சம்கிதையின் வழியாக விளக்குவார் சதீசு சந்திரா. சிசுருத சம்கிதை, ‘தந்திர உத்தி’யின் வாயிலாகப் பட்டி மன்றத்தில் ஒரு வாதி, தன் எதிரிகளை மிக எளிதாக வீழ்த்தித் தன் பெருமைகளை நிலைநாட்ட முடியும் என்று தெளிவாக வரையறை செய்கின்றது. ஏது சாத்திரம் என்னும் அளவைஇயல் துறையில் வாதத் தன்மைகளையும், பட்டிமன்ற நெறிமுறைகளையும் வகைப்படுத்தி அமைந்த நூல்களில் ‘தந்திர உத்திக்கு’ ஈடான பழமையான நூல் எதுவும் இல்லை.என்பது அவரின் முடிவாகும்.

  இவ்வாறு பட்டிமன்ற நெறிமுறைகளை விளக்கும் தந்திர உத்தியைத் தொல்காப்பியர் நூலுக்குரிய இலக்கணமாகக் கூறுகின்றார். அவ்விலக்கணமும் தமிழர்மரபின்படி முன்னோர்களால் தொகுக்கப் பட்டதாகவும் அவர் குறிப்பால் உணர்த்துகின்றார். அந்நூற்பா. ஒத்த காட்சி உத்திவகை விரிவிப்பின் எனத் தொடங்கி, இனத்திற் சேர்த்தி யுணர்த்தல் வேண்டும். நுனித்தகு புலவர் கூறிய நூலே என அமையும். தொல்காப்பியர் 32 என வரையறை செய்த தந்திர உத்தியைச் சரக சம்கிதை அவற்றுடன் இரண்டைக் கூடுதலாகக் சேர்த்துக் கொண்டு 34 எனக் குறித்துள்ளது. இத்தந்திர உத்தியைச் சரக சம்கிதை, சிசுருதசம்கிதை முதலான மருத்துவ நூல்களும் கௌடில்யரின், பொருள் நூலும் எடுத்துக்காட்டியுள்ள போதிலும், அத்தந்திர உத்தி அவர்களுக்கு - வட மொழியாருக்கு உரியன அல்ல எனச் சதீசு சந்திரா உறுதி செய்கிறார். அதே நேரத்தில் தமிழ்கூறு நல்லுலகத்தின் வாழ்வையும் செய்யுளையும் ஆராய்ந்து தொல்காப்பியத்தை இயற்றிய தொல்காப்பியரோ, அதனைத் தமிழ் ‘நூலுக்குரிய இலக்கணமாக’ வரையறை செய்கின்றார். மேலும் சரக சம்கிதை கி.மு.6- ஆம் நூற்றாண்டில் பாடல் வடிவில் தொகுக்கப்பட்டு ஏறத்தாழ கி.பி.முதல் நூற்றாண்டில்தான் எழுத்து வடிவம் பெற்றது. வாய்மொழிப்பாடல்களால் அமைந்திருந்த நிலையில், எழுதப்படும் குறிப்பிடும் மெய்யியல் கோட்பாட்டிற்குரிய பல செய்திகள், எண்ணியம்,ஓகம், உலகாய்தம் ஆகிய கோட்பாடுகளுக்குரியனவாகச் சரக சம்கிதை குறிப்பிடுகின்றது.

  இம்மூன்றுகோட்பாடுகளும் ஐந்திர மரபின் சிந்தனை மரபிலிருந்து கிளைத்தவை. அதனாலும் தொல்காப்பியத்தின் காலம் சரக சம்கிதைக்கு மிகவும் முந்தியது என்பது தெளிவு. தொல்காப்பியர் நூலுக்குரிய குற்றங்களாக, 1. கூறியது கூறல் 2. மாறுகொளக் கூறல் 3. குன்றக் கூறல் 4. மிகைபடக் கூறல் 5. பொருளின்றிப் பேசுதல் 6. தெளிவின்றிப் பேசுதல் 7. கேட்போர்க்கு இனிமை பயக்காது கூறல் 8. முடிவில்லாமல் சொற்களைக் கூறிச் செல்லுதல். 9. தானே ஒரு பொருளைக் கருதிக்கொண்டு பேசுதல். 10. பொருள் அறியமுடியாதபடி பேசுதல். என வரையறை செய்வார். இவற்றைச் ‘சிதைவு’ என்பார் தொல்காப்பியர. வாதில் எதிரியை வீழ்த்த முனையும் ஒருவர், இத்தகைய குற்றங்கள் இல்லாமல் பேச வேண்டும் அப்படியில்லாமல் குற்றம் ஏற்படுமாறு பேசினால் வாதில் தோற்பதுடன் மீளாப்பழியும் ஏற்படும் என்றும் எச்சரிப்பதே அந்நூற்பாவின் நோக்கம். தொல்காப்பியர் குறிப்பிடும் இச் சிதைவை வள்ளுவர் ‘சோர்வு’ என்பார். ஆக்கமும் கேடும் அதனான் வருதலால் காத்தோம்பற் சொல்லின்கட் சோர்வு என்பது குறள். இவ்வாறு தமிழ் மரபில் சிதைவு, சோர்வு என்பவற்றை வடமொழியாளர் தோ‘ம் என்றும் நிக்கிரகஸ்தானம் என்றும் மொழியாக்கம் செய்துகொண்டனர். இதனை நியூனம் எனவும் குறிப்பர். தமிழ்மரபில் குற்றங்களைப் பத்தாகக்கூற, வடமொழியாளர் அவற்றை ஐந்தாகக் சுருக்கிக்கொள்கின்றனர். தமிழில் இருப்பவற்றைக் கூட்டியும் குறைத்தும் கொள்வது அவற்றின் மூலவடிவத்தை அடையாளம் காணமுடியாதபடிச் செய்வதற்கேயாம்.

  தமிழரின் தருக்கவியல் மட்டுமின்றி, தமிழர் உருவாக்கிய அறிவுசார் நெறிகள் அனைத்தும் வடமொழியில் உள்வாங்கப்பட்டுள்ளன. தமிழின் ‘மயங்கா மரபின் எழுத்து முறையே’ வடமொழிக்கும் அதன் வழியாக, அதன் கிளை மொழிகளுக்கும் உரிய எழுத்து வடிவமாக மாறியது. தமிழன் வகுத்தளித்த எண்ணியம் வடமொழியில் சாங்கியமானது உலகாய்தம் லோகாயதமாயிற்று சிறப்பியம் வைசேடிகமாயிற்று, ஓகம், நியாய சாஸ்திரமாயிற்று. இவ்வாறு வடமொழி வடிவம் கண்ட அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்தினால் தமிழின் கொடையை வெளி உலகிற்கு அடையாளம் காட்டமுடியும். 

  References
  1.   தேகவாதம் எனும் ஐம்புதக் கோட்பாடு முனைவர் க.நெடுஞ்செழியன்
  2.   இந்திய தருக்கவியலில் தமிழின் கொடை முனைவர் க.நெடுஞ்செழியன்
  3.   உலகாயதம்_தேவிபிரசாத் சட்டோ பாத்யாயா 
  4.   தமிழர் மெய்யியல்_குணா -
  5.   தாந்தீரீகமும் மானுடத் தத்துவமும்_ தி.கணேசர் 
  6.   சரகசம்கிதை 

   

  தொடரும்...

  C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai