Enable Javscript for better performance
மத அரசியல்-49: கௌமாரம்- Dinamani

சுடச்சுட

  

  மத அரசியல்-49: கௌமாரம்

  By C.P.சரவணன்  |   Published on : 21st January 2019 05:26 PM  |   அ+அ அ-   |    |  

  murugan-vel-


  கௌமாரம் (Kaumaram)

  கௌ என்ற எழுத்துக்கு மயில் என்று பொருள். முருகன் மயில்வாகனன் என்பதால் இச்சமயம் கௌமாரம் எனப் பெயர் பெற்றது. முருகப் பெருமானை முழுமுதற் கடவுளாக கொண்டு வணங்கும் சமயம் கௌமாரம் என்று சொல்லப்படுகிறது. முருகு என்றால் அழகு, இளமை, மணம், தெய்வம் ஆகிய பொருள்படும். முருக வழிபாடு தொடர்பான சான்றுகள் ஏறக்குறைய தொல்காப்பிய காலத்திலிருந்து தமிழ்ச் சமுதாயத்தில் இருந்து வந்த ஓர் வழிபாடு என்கிறார் முனைவர் கி.கந்தன். 

  உணவை உற்பத்தி செய்யும் காலத்தில் அல்ல, உணவைத் தேடி அலையும் காலத்தில் தோன்றிய கடவுள் முருகன். இயற்கையை வணங்கிய காலத்தின் நீட்சி இது. கடவுளை வணங்க ஒரு உருவம் தேடினார்கள் மக்கள். அப்போதுகூட மனித உருவம் ஒன்றை அவர்கள் வணங்க முயலவில்லை. உணவைத் தேடி மிருகங்களை வேட்டையாடவும், அம்மிருகங்களிடமிருந்துத் தங்களைக் காக்கவும் அவர்கள் உற்பத்தி செய்திருந்த உற்பத்திக் கருவி ‘’வேல்’’ தான். அதனால் வேலை வணங்க ஆரம்பித்தார்கள். வேலைப் பயன்படுத்துபவன் வேலன்! இந்த வேலன் தான் பின்னர் முருகன், முதல் உருவ வணக்கம் வேலில்தான் தோன்றியது. சமூக வளர்ச்சியில் இதுதான் சாத்தியம்!

  முருகனுக்குத் தந்தை சிவன் என்பதும், தாய் பார்வதி என்பதும், அண்ணன் பிள்ளையார் என்பதும், வள்ளியைக் களவு மணம் புரிந்ததும், கற்புமண மனைவியாக தெய்வயானை ஆக்கப்பட்டதும் பின்னால் காலம் உருவாக்கிய கதைகள்.

   

  இலக்கியச் சான்றுகள்

  கி.பி 3 மற்றும் 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பரிபாடல் மற்றும் திருமுருகாற்றுப்படையில் முருகன் தொடர்பான செய்திகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாகப் பரிபாடலில் முருகனின் பிறப்பு தொடர்பான நிகழ்வுகள் விளக்கப்பட்டுள்ளன. திருமுருகாற்றுப்படையில் முருகனின் இருப்பிடங்களாகத் திருப்பரங்குன்றம், திருசாரல், திருவாவினன் குடி, திருஏரகம், குன்றுதோராடல் மற்றும் பழமுதிர்சோலை ஆகிய இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையைத் தொடர்ந்து முருகன் தொடர்பான செய்திகள் திருஞானசம்பந்தர் மற்றும் நாவுக்கரசர் தேவாரப்பதிகங்களில் இடம்பெற்றுள்ளன.

  சேயோன் குன்றில் மேல் அமர்ந்தவனாகவும் அழிக்கும் தொழிலை செய்யும் கடவுளாக முறையே தமிழ் சங்க இலக்கியங்களும் தமிழ் நாட்டார் கூத்துகளும் எடுத்து இயம்புகின்றன. சேயோன் என்பது குழந்தை எனும் பொருளில்வரும் . தமிழரின் முதல் பெண்தெய்வமான கொற்றவையின் மகன் என்பர். இதனை திருமுருகாற்றுப்படையில் "கொற்றவை சிறுவ" "பழையோள் குழவி" குறிப்பிட்டுள்ளதைக் காணலாம்.

  தொல்காப்பியம் அகத்திணையியல் “சேயோன் மேய மைவரை உலகமும்” என்பதற்கு முருகவேள் மேவிய மைவரை உலகமும் என இளம்பூரணர் உரை எழுதுகிறார்.

  மறியப் புதைத்த மறம்கெழு பெருமான் நீர்மாக் கொன்ற சேயோன் குன்றமும் கல்வியும் - கல்லாடம்:85

  பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க! புறத்தார்க்குச் சேயோன் தன் பூம் கழல்கள் வெல்க! – திருவாசகம்

   

  படைகள்

  பலதேவர்கள் வழங்கிய பதினொரு படைகளும் முருகனிடம் இருந்தன. சேவலும் மயிலும் எழுதிய கொடிகளே முருகனுக்குரியன. யானையையும் மயிலையும் ஊர்தியாக உடையவர் செவ்வேள். கடுவனிளவெயினனாரும், நல்லழிசியாரும் பாடிய பாடல்களால் முருகனுடைய யானை ஊர்தியின் பெயர், ‘பிணிமுகம்’ என்பதனை அறியலாம்.

   

  முருக வணக்கம்

  குறிஞ்சி நிலமக்கட்குக் கடவுள் முருகன். முருகவழிபாடடைப் பற்றித் திருமருகாற்றுப்படை, பரிபாடல் முதலிய நூல்கள் விரித்துக் கூறுகின்றன. பாமரர் முதல் ஞானிகள் வரையில் ஒவ்வொருவரும் தத்தம் அறிவுக்கு எட்டிய வரையில் முருகக் கடவுளைப் பலவாறு வழிபட்டனர். திருமுருகாற்றுப்படையின் பழமுதில் சோலையிற் குறத்தியர் செய்து போந்த வழிபாடே மிகப்பழமையுடையது.

  ‘கோழிக்கொடியை நட்டுச் சிறிய திணையரிசியைப் பூக்களோடு கலந்து பலியாகத் தூவி மறியறுத்து ஊர்கள்தோறும் எடுக்கும் தலைமையுடைய விழாவிடத்து முருகக் கடவுள் எழுந்தருளுவார்”.

  ‘அன்பர் ஏத்துமிடத்தும், படிமத்தான் இழைத்த வெறியாடுகளத்தும், காட்டிலும், பொழிலிலும், அழகிய ஆற்றிடைக் குறையிலும், ஆறு களிலும், குளங்களிலும், நாற்சந்தியிலும், கடம்படியினும், ஊர்க்கு நடுவே எல்லோரும் இருக்கும் மரத்தடியிலும், அம்பலத்திலும், ஆதீண்டு குற்றியிலும் முருகக் கடவுள் எழுந்தருளுவார். குறமகள் ஊருக்கு நடுவே கோழிக் கொடி நட்டு, அவ்விடத்தை முருகனுக்குக் கோயிலாக அலங்கரித்து நெய்யையும், வெண்சிறு கடுகையும் நெற்றியிடத்தே அப்பி, சிறு மந்திரங்களை ஓதி வணங்குவாள்: வணங்கி அழகிய மலர்களைச் சிந்தி இரண்டு வேறு நிறமுடைய ஆடைகளை ஒன்றின் மேல் ஒன்றாக உடுத்து, சிவந்த நூலைக்கையிற் காப்பாகக் கட்டி, வெண்பொறி தூவுவாள்: தூவிக்கொழுத்தகிடாயின் இரத்தத்தோடு கலந்த வெள்ளரிச்யைப் பலியாக இட்டுத் தானியங்களையும் பலியாகத்தூவிப் பசியமஞ்சளோடு சந்தனத்தைத் தெளித்துக் குளிர்ந்த செவ்வரி மாலையையும் நந்தியா வர்த்த மாலைகளையும் ஓரளவாய் அசையும்படி தூக்குவாள்: மலைப் பக்கத்திலுள்ள ஊர்களைப் பசியும், பிணியம் வருந்தாமல் இருக்கும்படி வாழ்த்துவாள்: நறிய தூபங் கொடுத்து, அருவியின் ஒசையுடைய பல வாத்தியங்கள் ஒலிக்க, சிவந்த பூக்களையும் சிவந்த தினையையும் பரப்பி, முருகன் வரும்படி வழிபடுவாள். 

  (முருகாற்றுப்படை)

  ‘பெரிய போரிடத்துச் சூரபன்மாவைக் கிளையோடு அழித்த சுடர் விடுகின்ற வேற்படையும்டையோய் கறையில்லாத கார்கால்தது வெண்மேகம் எழுந்தாலன்ன நறிய அகில் முதலியவற்றின் புகையை விரும்பினோய் ஆறுமுகமும், பன்னிரண்டு தோளுமுடையாய் அழகிற் பிறரை வென்ற வள்ளியது நலத்தை நயந்தோய் பிரிந்த கணவர் மீண்டு வந்து புணர்ந்து, பின் நீங்காதுறைதற் பொருட்டு வரம் வெண்டி மகளிர் யாழை மீட்டு நின்னைப் பாடுகின்ற பாட்டை விரும்பினோய் பிறந்த ஞான்றே நின்னை எதிர்த்து இந்திரன் முதலாகிய தேவர் அஞ்சிய நிறப்புடையோய் இருபிறப்பினையும் அப் பிறப்பான் வந்த இரண்டு நாமத்திணையும், இளகிய நெஞ்சத் திணையும், ஒப்பில்லாத புகழினையுமுடைய அந்தணருடைய வைதிக ஒழுக்கத்தினைப் பொருந்தினோய் நின்னையாங்கள் மேனி அடுத்தடுத்து வழிபாடுவதன் பயன், அவ் வழிபாடுகள் மென்மேலும் நின் புகழினும் பலவாருதலோயாகும்”. 

  (பரிபாடல்)

  களவுக் காலத்தே காதலனை நினைந்து மெலியுங் குறச் சிறுமியை முருகன் வருத்தியதாகத் கருதி வெறியாட்டெடுப்பதும் குன்றவாணர் வழக்கு வெறியாடும் முருகபூசை செய்வோன், படைத்துச் செம்மறிக்குட்டியறுத்துச் செந்நெற் பொரி சிதறி வணங்கிச் சிறுமியின் நெற்றியைத் தடவி விடுதலே வெறியாட்டெடுப்பதின் விபரமாகும்.

   

  முருக வழிபாடு

  வெறியாட்டு என்ற நிகழ்ச்சி அல்லது விழா என்பதைக் கொண்டாடினார்கள். இதைப் பற்றியக் குறிப்பு அணங்குடை முருகன், அணங்கு பெண்கள், நெடுவேல் அணங்குறு மகளிர் போன்ற பல இலக்கியங்களில் உள்ளன. முருகனை வேண்டி செய்யப்படும் அப்படிப்பட்ட வழிபாடுகளை முருகு ஆற்றுப்படுத்தல், முருகு அயர்தல், வெறி, வெறியயார்டல், வெறியாட்டு என்பார்கள். ஐந்குருண்ணூறு என்பதில் நூறு செய்யுட் பத்திகளில் பத்து செய்யுட் பத்திகளில் வெறியாடலைக் குறித்து கூறப்பட்டு உள்ளது. அதைப் பற்றியும், வேலனைப் பற்றியும் நற்றிணை, குறுந்தொகை, அகநானுறு, முருகாற்றுப்படை போன்ற சங்க இலக்கியங்களிலும் கூறப்பட்டு உள்ளன.

  வெறியாட்டில் ஆலய பூசாரியே வேலன் என்பவராக உள்ளார். அவர் முருகனின் வேலினை கையில் கொண்டு இருப்பார். நச்சினார்க்கினியர் என்ற பெயரில் வர்ணனை தரும் வர்ணனையாளர் கூறுவார்'' பிள்ளையின் வேலை ஒரு சின்னமாக எடுத்துக் கொண்டு வருவதினால் அவரே வேலன்''.

  கழுத்தில் பச்சை நிற இலைகளினால் ஆன மாலை, நாரை, காட்டு மல்லிகை மற்றும் வெண்தழை அதாவது வெள்ளை இலைகளையும் மாலைப் போல அணிந்து கொண்டு அவர் மீது முருகன் ஆக்ரமித்துக் கொண்டு உள்ளது போல சாமியாடி நடனம் ஆடுவார். அவருடைய மார்பு முழுவதும் சந்தானம் பூசப்பட்டு இருக்கும். அப்படி சாமி ஆடுபவரை படிமட்டன் என்பார்கள். அந்த விழாவைக் கொண்டாடும் இடத்தை வெறியார்களம் என்பார்கள். அந்த விழா நடு இரவில் வீடுகளில் உள்ள முற்றம், அதாவது வீடுகளுக்குள் உள்ள திறந்த வெளிக் கூடத்தில் நடக்கும். அதில் ஒருபுறத்தில் கடல் மண்ணைக் கொண்டு வந்து கொட்டி அலங்கரித்து இருப்பார்கள்.

  அதன் ஒரு பக்கத்தில் சேவல் கொடி நடப்பட்டு இருக்கும். அந்தக் கொடி மரத்தின் மீது மலர் மாலைகளினால் அலங்கரித்து, மணம் மிக்க ஊதுபத்திகளையும் ஏற்றி வைத்து இருப்பார்கள். அது முருகனை வரவேற்று அமரச் செய்யும் இடம் ஆகும். அவருடைய வாகனம் மற்றும் அவரது யானையையும் சேர்த்து போற்றி புகழ்ந்து இசைகள் இசைக்கப்படும். கடம்பு அமர் நெடுவேல், புலவரை அறியட புகழ் புட்ட கடம்பு அமர்ந்து.

  அங்குள்ள மரத்தில் கட்டப்பட்டு உள்ள ஆட்டை வெட்டி அதன் ரத்தத்தை தினை என்ற தானியத்துடன் கலந்து, அதை பரப்பி வைத்து, பலி எனும் பெயரில் மாமிசத்தைப் படைப்பார்கள். பாடல்களை பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் முருகனைப் போற்றி பாடுவார்கள். மலர்களைத் தூவியும் அவரை வணங்குவார்கள்.

  குறவாப் பெண்கள் நடத்தும் வெறியாட்டு நிகழ்ச்சியைப் பற்றி விரிவாக முருகாற்றுப்படையில் கூறப்பட்டு உள்ளது. அவற்றைத் தவிர மேலும் சில விளக்கங்களும் அதில் தரப்பட்டு உள்ளன. அந்த நிகழ்ச்சி நடைபெறும் இடமோ அச்சம் தரும் வகையில் இருக்கும். முருகனை அழைக்கும்போது அந்த இடத்தை நன்கு அலங்கரித்து வைத்தும், பல விதமான உணவுகளைக் கொடுத்தும், இசைகளை இசைத்தும் வழிபாடுகள் நடைபெறுகின்றன். சம்பிரதாயமாக சேவல் கொடி ஏற்றப்படுகிறது, அதன் மீது நெய்யும், வெள்ளை எள்ளையும் கொண்டு திலகம் இடுகிறார்கள், மந்திரங்களை கூறிக் கொண்டே பூக்களால் அர்ச்சனை செய்கிறார்கள். மேலே குறிப்பிட்டுள்ள முறையில் செய்யப்படும் வழிபாடு முருகனை மலைவாழ் மக்கள் வணங்கிய விதத்தை எடுத்துக் காட்டுகிறது என முனைவர் சண்முகம் பிள்ளை குறிப்பிடுகிறார். 

   

  முருகனும் தமிழும்

  முருகப்பெருமான் தமிழ் கடவுள். சங்க காலத்தில் இருந்தே தமிழர்கள் முருகனை வணங்கி வருகின்றனர். முருகன் ‘ஓம்’ எனும் பிரணவப் பொருளாகவும் விளங்குகிறான். பழமைக்கும் பழமையாய், புதுமைக்குப் புதுமையாக முருகன் திகழ்கிறான். முருகு என்ற சொல்லில் மு-மெல்லினம், ரு-இடையினம், கு-வல்லினம். எனவே தமிழே முருகன், முருகனே தமிழ் என்பார்கள். முருகன் ‘ஓம்’ எனும் பிரணவப் பொருளாகவும் விளங்குகிறான். பிரணவம் என்றால், ‘சிறந்த புதிய ஆற்றலைத் தருவது’ என்று பொருள். முருகன் தன்னை நாடி, தேடி வருபவர்களுக்கு புதிய ஆற்றலை வற்றாமல் கொடுக்கிறான்.

  தந்தைக்கு ‘ஓம்’ என்னும் பிரணவப் பொருளை முருகப் பெருமான் உணர்த்தியதாக வரலாறு உண்டு. ஓம் என்பது அ, உ. ம என்ற மூன்றெழுத்தின் சேர்க்கையால் உண்டானது. அ-படைத்தல் உ-காத்தல், ம-ஒடுக்கல் என முறையே பொருள்படும். அ, உ, ம என்னும் மூன்றும் இணைந்து உண்டான ஓம் எல்லா எழுத்துகளுக்கும் எல்லா ஓசைகளுக்கும் எல்லா நூல்களுக்கும் மூலமாக உள்ளது. முருகு என்ற மூன்றெழுத்துகளிலும் அ, உ, ம மூலமாக உள்ளதால் முருகன் ஓம்கார வடிவாக உள்ளான். குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று கூறுவார்கள். முருகனுக்குப்படை வீடு ஆறு. 

  அவை திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர்சோலை, திருத்தணி ஆகும். முருகப்பெருமான் அகத்தியருக்கு தமிழ் கற்றுக் கொடுத்ததாகவும், மதுரை தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராகவும் வீற்றிருந்து தமிழ் வளர்த்ததாகவும் கூறப்படுகிறது.

   

  முருகனின் வேலிற்கும் விந்தணுவிற்கும் உள்ள விஞ்ஞான தொடர்புகள்

  இன்றைய நவீன யுகத்தில் மேலை நாட்டினர் அதிநவீன விஞ்ஞானக் கருவிகளை கொண்டு உயிர்களின் பிறப்பு எப்படி நிகழ்கிறது என்று தெரிந்து கொண்டதற்கு முன்பாகவே, நம் நாட்டுச் தெரிந்து  முனிவர்களும் எவ்வித விஞ்ஞானக் கருவிகளின் உதவியுமின்றி தங்களின் தவ ஆற்றலால் இதை பற்றி அறிந்துவைத்துள்ளனர். அதற்கு சான்றாக விளங்குகிறது நமது மூத்த சித்தனான முருக பெருமானின் கையில் இருக்கும் வேல். முருகனின் வேலுக்கும் ஆணின் விந்தணுவிற்கும் பல தொடர்புகள் உண்டு என்கிறார் முனைவர் வே.பாண்டியன்.

  உலகின் எல்லா உயிர்களிலும் ஆணினமும்,பெண்ணினமும் இணைந்து தான் வாழ்கின்றன. அப்படி இணைந்து வாழும் பொழுது இந்த இவ்விரு இனங்களும் உடலால் இணைவதால் தான் உலகில் புதிய உடலால் பிறக்கின்றன. அதிலும் பிற எல்லா உயிர்களைக் காட்டிலும் மனிதப் பிறப்பு தனித்தன்மை வாய்ந்ததாகும். காரணம் மனிதன் சிந்திக்கும் திறன் வாய்ந்தவன். ஆதலால் மனிதனும் தன் இனம் எப்படி பிறக்கிறது என்று பல நூற்றாண்டு ஆராய்ந்து வந்துகொண்டிருக்கிறான். இன்று தொலைநோக்கியின் வழியாக ஒரு ஆணின் விந்தணு எவ்வாறு பெண்ணின் கருமுட்டையை துளைத்துக் கொண்டு சென்று, அம்முட்டை கருக்கொண்டு, சிறிய மனித சிசுவாக உருவாவதை நாம் காண முடியும். நம் தமிழ் கடவுளான முருகப்பெருமானின் “வேல்” இதைத் தான் உணர்த்துகிறது. மக்கள் தொகை குறைந்திருக்கும் காலத்தில் ஆணும், பெண்ணும் இணைந்து உயிர்களை உருவாக்கத் தூண்டுகோலாகவும், போர்க்காலத்தில் வேலைக் கொண்டு எதிரிகளின் உடலைத் துளைத்து உயிரைப்போக்கும் வீரத்திற்குத் தூண்டுகோலாகவும், முருகப்பெருமானின் வேலைத் நமக்குத் தூண்டுகோலாக இருக்கும் வகையில் நம் முன்னோர்கள் அமைத்திருந்தனர். மேலும் கருமுட்டையை ஊடுருவும் விந்தணுவினால் நன்மக்கள் தோன்றுவதற்கான சொல்லாக “வெற்றி வேல், வீர வேல்” என்ற சொல்லை நம் முன்னோர்கள் உண்டாகியிருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே முருகனைத் தொழுவோம் நன்மக்கட்பேறு பெறுவோம். 

   

  முருகன் ஆலய வழிபாடுகள்

  தமிழகத்திலும் தமிழர்கள் வாழும் பிற இடங்களிலும் அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் நடைபெறும் பல்வேறு வகையான வழிபாடுகள் உள்ளன.

   

  காவடி எடுத்தல்

  காவடியின் தோற்றம் சிந்து சமவெளி காலத்தில் உருவாகியிருக்கலாம் என சான்று கிடைக்கிறது. சிந்துவில் கிடைத்த சித்திர வடிவ எழுத்துகளில் காவடி எடுப்பதை போன்ற தோற்றமும் உள்ளது. கா+அடி என்பது காவாகச் சுமக்கப்படும் (முருகப்பெருமானின்) திருவடி. கா என்பது இருபுறமும் தொங்கும் சுமை. "காவடியாட்டம்" என்பது "காவடி", "ஆட்டம்" என்னும் இரு சொற்களின் சேர்க்கையால் உருவானது. காவடி என்பது ஆட்டத்துக்கான கருவி என்பதால், இவ்வாட்டத்தின் பெயர் அதற்கான கருவியின் அடியாக எழுந்தது எனலாம். "காவடி" என்னும் சொல் "காவுதடி" என்பது மருவி உருவானதாகக் கருதப்படுகின்றது. காவடியாட்டத்துக்கான பின்னணி இசைக் கருவிகளாக நாதசுரமும், தவிலும் விளங்குகின்றன. பால் காவடி பன்னீர்க் காவடி, மச்சக் காவடி, சர்ப்பக் காவடி, பறவைக் காவடி, தூக்குக் காவடி என காவடி பல வகைப்படும்.

   

  அலகு குத்துதல்

  அலகு குத்துதல் என்பது தமிழ் கோயில் திருவிழாக்களில் பால் செம்பு, காவடி போன்றன எடுப்போர் தம் வாயில் கூரிய உலோக ஊசிகளால் குத்திக் கொள்ளுவது ஆகும். இந்த அலகு குத்துதல் காவடி, பால் செம்பு எடுக்கு முன்னர் பூசை செய்து தீபாரதனை காட்டிய பின் நடைபெறும். பக்தரின் வாயில் ஒரு கன்னத்திலிருந்து மற்றொரு கன்னத்தை நோக்கி சிறிய ஊசியால் குத்தி விடுவார்கள். ஊசியின் ஒரு முனை திரிசூலம் அல்லது வேல் போல் இருக்கும். மற்றொரு முனையை ஒரு கன்னத்தில் குத்தி, மற்றக் கன்னத்தின் ஊடாக எடுப்பார்கள். அந்த முனையில் வேல் அல்லது திரிசூலம் சொருகுவார்கள். சில நேரங்களில் நாக்கை வெளியே எடுத்து மேலிருந்து கீழ் நோக்கிக் குத்துவதுமுண்டு. அலகு குத்துதல், நாக்கு அலகு, முதுகு அலகு, காவடி அலகு, வாயலகு, வயிற்று அலகு, அலகு நடனம் என பல வகைப்படும்.

   

  பால்குடம் எடுத்தல்

  பால்குடம் எடுத்தல் என்பது  கௌமாரம், சாக்தம் வழிபாடுகளில் இந்த பால்குடம் எடுத்தல் முக்கியத்துவம் பெறுகிறது. வேண்டுதல்கள், நேர்த்திக் கடன், குடும்ப வழமை போன்ற காரணங்களால் பால்குடம் எடுக்கின்றார்கள்.

   

  முடி இறக்குதல் 

  இதனை சாமானியனுக்கும் புரியும் படி கூறினால் மொட்டை போடுவது. தலைமுடி என்பது பெருமை மற்றும் ஆணவத்தை குறிக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதனை கடவுளுக்கு காணிக்கையாக அளிப்பதன் மூலம், நம் செருக்கும், ஆணவமும் நம்மை விட்டு நீங்கும் என நம்பப்படுகிறது. உங்களை ஒட்டு மொத்தமாக கடவுளுக்கு அர்பணிக்கும் ஒரு முயற்சி. பிறப்பு மற்றும் மறுபிறவி மீது இந்துக்களுக்கு நம்பிக்கை உண்டு. கடந்த ஜென்மத்தில் இருந்த பந்தங்களின் தொடர்பை துண்டிப்பதற்காகவே குழந்தைகளுக்கு முதல் மொட்டை போடப்படுகிறது. அப்படி தலையை மொட்டை அடிப்பதால் அக்குழந்தை இந்த பிறப்பில் புதிய வாழ்க்கையை தொடங்குகிறது.

   

  பாத யாத்திரை 

  நடந்து கொண்டே கடவுளை மனதில் நினைத்துக்கொண்டும் மந்திரத்தை உச்சரித்துக்கொண்டும் சிறுகச்சிறுக கடவுளை நெருங்குவதே பாத யாத்திரை ஆகும்.பாத யாத்திரை என்பது அனைத்து கடவுள்களுக்கும் மேற்கொள்ளலாம் என்றாலும் அதிகமாக முருகப்பெருமானை வழிபடவே மேற்கொள்ளப்படுகிறது.

   

  பழநி பாத யாத்திரை

  தை பூசம் அல்லது பங்குனி உத்திரத் தருவிழாவின் பொழுது தை மாதம் அல்லது பங்குனியில்  இந்த பாத யாத்திரையை செய்கின்றனர். ஒரு குறிப்பிட்ட இடத்தில் அனைவரும் வந்து சேர்ந்த பின் முருகன் பாடல்களைப் பாடிக் கொண்டும், அரகரா, அரகரா, வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, ஞான தண்டாயுதபாணிக்கு அரோகரா, என்று கோஷங்களை எழுப்புகிறார்கள். அதற்குப் பிறகு அந்தப் பகுதியில் உள்ள நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட தண்ணீர் குடத்தை அவர்களின் தலை மீது வைக்கின்றார். அதைத் தீர்த்தக் காவடி என்று கூறுகின்றனர். பாத யாத்ரீகர்களின் குழு முருகனின் பாடல்களைப் பாடியவாறே நடக்கத் துவங்குகின்றனர். நாள் ஒன்றுக்கு சுமார் 25-30 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடக்கின்றனர். அநேகமாக தைப் பூசம் அல்லது பங்குனி உத்திரத்தில் பழனியை சென்று அடையும் வகையில் நடந்து பழனி மலை அடிவாரத்தில் தங்குகின்றனர். அங்குள்ள சண்முக நதியில் குளித்தப் பின் மலையில் உள்ள முருகனை தரிசித்து அந்த புனித தண்ணீரை காணிக்கையாக தண்டாயுதபாணிக்கு செலுத்திய பின் அவருடைய அருள் கிடைக்க வேண்டுகின்றனர்.

  தமிழர்கள் பெரும்பாலும் முருகப் பெருமானை வணங்கி வருகின்றனர். தமிழகத்தில் மட்டுமல்லாமல் சுமத்ரா, இலங்கை, ஜாவா,  போர்னியா போன்ற நாடுகளிலும் முருக வழிபாடு இருந்து வருகிறது.

  முருகனின் ஆயுதமாக விளங்கும் வேல் ஞான சக்தியாகவும் வள்ளி இச்சா சக்தியாகவும் தெய்வானை கிரியா சக்தியாகவும் கருதப்படுகிறது. தென் இந்தியாவில் அகத்திய முனிவரால் முதன்முதலாக முருக வழிபாடு தொடங்கப்பட்டது. அதுமுதல் தொடர்ந்து இருந்து வருகிறது. சங்க காலத்து புலவரான நக்கீரர் சுப்ரமணியரின் சிறந்த பக்தர் தன்னுடைய திருமுருகாற்றுப்படையில் சுப்ரமணியர் தனது பக்தர்களுக்கு அருள்பாலித்ததை காட்டும் வகையில் அறுபடை வீடு என்று ஆறு புனித தலங்களைத் தேர்ந்தெடுத்துக் காண்பித்துள்ளார்.

  இவை அறுபடை வீடுகள் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. இவற்றிற்கு தனித்தனியாக பல்வேறு தெய்வீக சக்திகள் உள்ளன.

  •     திருப்பரங்குன்றம்  - உல்லாசம், ஆனந்தம்
  •     திருச்செந்தூர் - நிராகுலம், கவலையின்மை
  •     பழனி - யோகம், தவநிலை
  •     சுவாமிமலை - இதம், சுகமளித்தல்
  •     திருத்தணி - சல்லாபம், இன்பம்
  •     பழமுதிர்ச்சோலை - அற்புதம்

   

  முருகப்பெருமான் தமிழ்கடவுள் என்றே போற்றப்படுகிறார். திரைகடலோடி திரவியம் தேடச் சென்ற தமிழர்கள் சென்ற இடமெல்லாம் முருகனுக்கு கோயில்கள் கட்டி எழுப்பி அங்கெல்லாம் கௌமாரம் பரவச் செய்தனர். ஞான வடிவான முருகப் பெருமானின் சித் என்னும் சக்தியே பிரகிருதி மாயை, மாயைக்கு குசு மாயை என்ற பெயரும் உண்டு. பிரம்மா முதலான படைப்புகளுக்கு காரணம் மாயையே.

  சிவபெருமானின் சத்யோஜாதம், தத்புருஷம் வாமதேவம் அகோரம் ஈசானம் அதோமுகம் என்னும் ஆறு முகங்களின் அம்சமான ஆறு நெருப்பு பொறிகள் சிவனின் நெற்றிக்கண் வழியே வெளிப்பட்டு பரம்பொருளாகிய முருகப் பெருமான் தோன்றினார் என்கிறது கந்தபுராணம்.

   

  நூல்கள்

  திருமுருகாற்றுப்படை கந்தர் அனுபூதி திருப்புகழ் கந்தர் கலிவெண்பா சண்முகக்கவசம் குமரவேல் பதிற்றுப்பத்தாந்தாதி சஷ்டிகவசம் போன்ற நூல்கள் முருக வழிபாட்டிற்குச் சிறந்த நூல்களாக விளங்குகின்றன. அகத்தியர் நக்கீரர் ஒளவையார் அருணகிரிநாதர் குமரகுருபரர் பாம்பன் சுவாமிகள் கிருபானந்த வாரியார் போன்றோர் முருகபக்தியில் சிறந்து விளங்கி, முருகனின் உண்மையான அடியார்களாகத் திகழ்ந்தவர்கள். கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்த புராணம் என்னும் நூல் முருகப் பெருமானின் வரலாற்றை கூறும் அற்புத நூலாக விளங்குகிறது.

  • முருகனின் அடியவர்கள்
  • அகத்தியர்
  • நக்கீரர்
  • ஔவையார்
  • அருணகிரிநாதர்
  • குமரகுருபரர்
  • பாம்பன் சுவாமிகள்
  • கிருபானந்தவாரியார்


   

  References: 

  முருகன் வணக்கத்தின் மறுபக்கம் சிகரம் ச.செந்தில்நாதன்
  முருகன் by முனைவர் கி.கந்தன், துறைத்தலைவர், சிற்பத்துறை.
  பரிபாடலில் முருகன் வரலாறு முனைவர், சி. சேதுராமன்

   

  தொடரும்...

  C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai