மத அரசியல்-52: அத்வைதம்

மத அரசியல்-52: அத்வைதம்
Published on
Updated on
4 min read

அத்வைதம் (Advaita)

அத்வைதம், விஷிஸ்டாத்வைதம், துவைதம் ஆகிய மூன்றுமே வேதாந்தத்தின் பிரிவுகளாக அமையும் மெய்யியல் என்பர். கி.பி.2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பத்ராயணர் (Badrayan) என்பவர் எழுதிய “பிரம்ம சூத்திரம். என்ற நூலில் உபநிடதங்களின் கருத்தைத் தொகுத்தமைத்தார். ப்ரம்ம சூத்திரம் 555 சூத்திரங்களை உள்ளடக்கியதாக இருந்தது. இதில் மூலப் பொருள் ஒன்றே என்றார். இதேபோல் கன்மத்தை விட ஞானமே முக்கியமானது என்றார். இதற்குப் பின் வந்த உரையாசிரியர்கள், ஓர் அடிப்படையான மெய்யியலை உருவாக்கித் தந்தனர். அப்படித் தந்தவர்களில் முதலாவது வருபவர் சங்கரர் ஆவார். அத்வைதம் (அ + துவைதம், அத்துவிதம்) - அதாவது இரண்டற்ற நிலை. சீவன் (ஜீவாத்மா) என்பதும் இறைவன் (பரமாத்மா) என்பதும் ஒன்றுதான்; வேறல்ல என்றும் சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மா விளங்குகின்றது என்றும் கூறும் தத்துவம்.

ஆதிசங்கரர்

கி.பி. 788-820 ஆம் காலத்தே ஆதிசங்கரர் வாழ்ந்தவர். இவர் கேரளத்திலுள்ள (அன்றைய சேர நாடு) காலடி எனுமிடத்தில் சிவகுரு - ஆரியாம்பாள் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இவரது காலம் கி.மு மூன்றாம் நூற்றாண்டு எனவும் ஒரு வாதம் இருக்கிறது. தமது எட்டாம் அகவையில் துறவறம் மேற்கொண்ட சங்கரர், கௌடபாதரின் சீடரான கோவிந்த பகவத்பாதரிடம் வேதாந்தம் மற்றும் இதர தத்துவங்கள் பயின்று சங்கர பகவத்பாதர் என்று அழைக்கப்பட்டார். முதன்முதலில் அத்வைத தத்துவத்தைத் தொகுத்து எழுதி வைத்தார். இவர் யாருக்கும் உபதேசிக்கவோ பிரசாரம் செய்யவோ இல்லை.

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சங்கராசாரியாரால் உண்டாக்கப்பட்ட 'மாயாவாத மதம்' என்றும் 'ஏகான்மவாத மதம்' என்றும், 'ஸ்மார்த்த மதம்' என்றும், சொல்லப்படுகின்ற 'அத்வைத மதத்தின்' அடிப்படையான கொள்கை மகாயான பௌத்த மதத்திலிருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவில் சிறந்த ஆன்றோர் கூறுகின்றார். அத்வைத மதத்தை உண்டாக்கின சங்கராச்சாரியர், பௌத்த குரு ஒருவரிடம் பயின்ற மாணவர் என்றும் சிலர் கூறுவர். அங்ஙனம் அன்று, சங்கராச்சாரியரின் குரு கோவிந்த பாதர் என்றும், கோவிந்த பாதரின் குரு கௌட பாதர் என்றும் பௌத்தர் என்றும் வேறு சிலர் கூறுவர். அன்றியும், பௌத்த மதத்தின் பிரிவுகளான விஞ்ஞானவாத, சூனியவாத மதங்கள் அதிகமாகப் பரவியிருந்த சௌராஷ்டிர தேசத்தில் சங்கரர் கல்வி பயின்றார் என்றும், அங்குப் பயின்றபடியினால்தான் சூனியவாத பௌத்தத்தினின்று மாயாவாதக் கருத்தினைப் பெற்றுக்கொண்டார் என்றும் மற்றும் சிலர் கூறுவர். இவர் எவ்விடத்தில் யாரிடத்தில் கல்வி பயின்றார் என்னும் ஆராய்ச்சியில் புகவேண்டுவதில்லை. இவர் தமது மாயாவாதக் கொள்கையைப் பௌத்த மதத்தினின்று பெற்றுக்கொண்டார் என்பதுமட்டும் உறுதியே. ஏனென்றால், வைணவ ஆச்சாரியருள் தலை சிறந்தவரும் ஸ்ரீபாஷ்யம் அருளிச்செய்தவருமான ராமானுஜர், சங்கராச்சாரியரின் அத்வைத மதத்தைப் 'பிரச்சன்ன பௌத்தம்,' அதாவது மாறுவேடம் பூண்டுவந்த பௌத்தம் என்று கூறியிருக்கிறார். துவைத மதத்தின் தலைவராகிய மாதவாச்சாரியரும் அவ்வாறே சங்கரரின் அத்வைத மதத்தைப் 'பிரசன்ன பௌத்தம்' என்று கூறியிருக்கிறார். பதுமபுராணத்தின் உத்தரகாண்டத்திலும் சங்கரரின் மாயாவாத மதம் பிரசன்ன பௌத்தம் என்றே கூறப்படுகிறது. இதனால், அத்வைத மதத்தின் அடிப்படையான கொள்கைகள் பௌத்த மதத்திலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பது நன்கு விளங்குகிறது.

மேலே காட்டிய ஐந்து கொள்கைகளும் பௌத்த மதத்தைச் சார்ந்தவை என்பதும், அக்கொள்கைகள் இந்து மதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்றளவும் நிலைபெற்றிருக்கின்றன என்பதும் விளக்கப்பட்டன. இதினின்று நாம் அறியக்கிடப்பது யாது? இந்துமதம் பௌத்த மதத்தை தன்னுள்கொண்டுவிட்டது. ஆனால், பௌத்தமதக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு இன்றளவும் கையாண்டுவருகின்றது என்பதே. பௌத்த மதம் தோல்வியுற்றது. ஆனால், அதன் கொள்கை வெற்றி பெற்றது.

அத்வைத கொள்கை

இந்திய மெய்யியலில் உலகம், உயிர், இறைவன் ஆகிய மூன்று பொருள்கள் பற்றிய விளக்கங்களிலேயே வேதாந்தங்கள் வேறுபடுகின்றன. சங்கரர் இவ்வுலகிற்கு ஒரு மூலப்பொருள் உண்டு என்று கூறுகிறார். ஒன்று என்பதே உண்மை. பல உண்டு என்ற கூற்றுகள் உண்மையல்ல என்பது அவர் கருத்து.
பிரம்மமோ சித்துப் பொருள். சித்துப் பொருளிலிருந்து ஜடப் பொருள் எப்படித் தோன்றும் என்கிறார். பிரம்மம் உலகாக மாறுவதாகக் காணப்படுகிறதே தவிர, உண்மையில் படைப்புத் தொழில் எதுவும் நடைபெறவில்லை. ஒன்று இன்னொன்றாக மாறாமல் மாறிவிட்டதாக காணப்படும் நிலையை விவர்த்தவாதம் என்பர்.

‘அத்வைதம்’ என்பதன் பொருள், ‘இரண்டாகத் தோன்றும் எவையும் இரண்டல்ல, ஒன்றே’ என்பதாம். அதாவது தெய்வம் ஒன்றுதான். அதை எந்தப் பெயராலும் அழைக்கலாம். பெயரில் என்ன இருக்கிறது? அந்தத் தெய்வம் உன்னிடத்திலும் இருக்கிறது, என்னிடத்திலும் இருக்கிறது. ஏன் உலகப் பொருள்கள் அனைத்திலும் உள்ளது. அனைத்து சீவன்களிலும் உள்ளது. அதாவது அசையும் அசையாப் பொருள்கள் அனைத்திலும் இருப்பது. அப்படியாயின் எல்லாச் சாதியிலும் மதத்திலும் இருப்பதுதானே? எல்லோரிடமும் இருப்பவர் இறைவன் என்றால் வேற்றுமைக்கு இடம் ஏது? இறைவன் ஒருவனே உண்மைப்பொருள். மற்றவையெல்லாம் நிழல்களே என்பது  அத்வைதம்.

மாயை பற்றி சங்கரர்

1.இறைவனின் சக்தியாகவும் மாயை கருதப்படும்
2.இருப்பதை மறைக்கும் இயல்பு மாயைக்கு உண்டு. இது ஆவரணம் எனப்படும்.
3.அதேபோல், இல்லாததை தோற்றிக்காட்டும் இயல்பும் உண்டு, இதை விஷேபம் எனப்படும்.
4.பரமாத்மா பல ஜீவாத்மாவாகக் கொள்வது ஆவித்தை என்ற அஞ்ஞானம்.
5.மாயை சத்துவ குணத்தால் தோன்றுவது, அவித்தை ராஜச, தாமஸ குணங்கள் என்பர்.

கோசம்

கோசம் என்றால் “உறை” எனப்படும். அதாவது, பிரம்மம் நோக்கி ஆன்மாவை செல்லவிடாமல் தடுப்பது, சுற்றி மறைத்துக் கொள்வது கோசம் ஆகும். இதில் பஞ்சகோசம் என கோசம் ஐந்து வகைப்படும்.

1.அன்னமய கோசம்
அன்னமயம் என்பது, தோல், குருதி, நரம்பு, தசை, எலும்பு, மூலை ஆகிய உடலைக் குறிப்பது. உடல் ஒரு மறைப்பாகிவிடுதல்.

2.பிராணமய கோசம்
கன்மேந்திரியங்கள் கூடி நிற்கும் நிலையே பிராணமய கோசம் எனப்படும். வாக்கு, கால், கை, அபானம், குறி என்ற ஐந்துமே கன்மேந்திரியங்கள் ஆகும். இவை பிராணனுடன் கூடி நிற்கும் நிலையாகும்.

3.மனோமய கோசம்
மனம், அந்தக் கரணம் ஒன்றுடன், புத்தியை நீக்கிவிட்டு கூடி நிற்கும் நிலையேயாகும்.

4.விஞ்ஞான கோசம்
புத்தியும், ஞானேந்திரியமும் கூடி நிற்கும் நிலை.

5. ஆனந்தமயக் கோசம்
மனோரீதியானதும், விஞ்ஞானநிலையும், அறியாமையில் கிடந்து அழுத்தி, தேக நிலையிலிருந்தல் ஆனந்த மயகோசமாகும்.

சங்கரரும் கனகதாரா ஸ்தோத்திரமும்

ஒருநாள் ஆதிசங்கரர் ஒரு வீட்டுக்குச் சென்று பிக்ஷை கேட்டார். அவரோ வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்பவர். ஆதிசங்கரர் அந்த வீட்டுக்குச் சென்றபோது அவர் வெளியில் சென்றிருந்தார். வீட்டில் அவருடைய மனைவி மட்டும் இருந்தாள். வாசலில் வந்து பிக்ஷை கேட்ட பாலக சங்கரனைப் பார்த்தபோது, சாட்சாத் சிவபெருமானே பாலகன் வடிவில் வந்து பிக்ஷை கேட்பது போல் தோன்றியது. பால்வடியும் முகத்துடன் நின்றிருந்த சங்கரனுக்கு பிக்ஷையிட எதுவும் இல்லையே என்ற தவிப்புடன் அவள் வீடு முழுவதும் தேடிப் பார்த்தாள். அவளுடைய கண்களில் ஒரு தட்டில் உலர்ந்த நெல்லிக்கனி இருப்பது தென்பட்டது.  பிக்ஷையிடத் தகுதியில்லாத பொருளாக இருந்தாலும், அன்பின் மிகுதியால் அந்த நெல்லிக்கனியை எடுத்து வந்து பாலக சங்கரனின் தட்டில் போட்டாள். தன்னுடைய நிலையை நினைத்து வேதனையில் துடித்தாள். 

அந்தப் பெண்மணியின் அன்பில் மகிழ்ந்த சங்கரர், அந்தப் பெண்மணியின் வறுமை தீரவேண்டி, மகாலக்ஷ்மியை பிரார்த்தித்து ஸ்லோகங்களைப் பாடினார். அந்த ஸ்லோகங்களே 'கனகதாரா ஸ்தோத்திரம்' ஆகும். சங்கரரின் பிரார்த்தனைக்கு இரங்கிய மகாலக்ஷ்மி அவருக்கு தரிசனம் கொடுத்தாள். மகாலக்ஷ்மியை நமஸ்கரித்த சங்கரர், தமக்கு நெல்லிக்கனியை பிக்ஷையிட்ட பெண்மணியின் வறுமை நீங்கச் செய்யவேண்டும் என்று வேண்டினார்.

அதற்கு மகாலக்ஷ்மி, ''சங்கரா, இவர்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்பதற்கு பூர்வஜென்ம வினைதான் காரணம். பூர்வ ஜென்மத்தில் இந்தப் பெண் குசேலனின் மனைவியாக இருந்தவள். இவளுடைய கணவன் குசேலன் கண்ணனின் அருளால் அளவற்ற செல்வத்தைப் பெற்று வந்தான். ஆனால், செல்வம் தந்த செருக்கில் இவர்கள் இருவருமே அதை முறையான வழிகளில் பயன்படுத்தவில்லை. மேலும் கண்ணனின் அருளால் பெற்ற செல்வத்தில் ஒரு சிறிதும் தான, தர்ம காரியங்களுக்குப் பயன்படுத்தவில்லை. அதன் பயனாகவே இந்தப் பிறவியில் இவர்கள் வறுமையை அனுபவிக்க நேர்ந்தது. இதில் என்னால் ஆவது ஒன்றுமில்லை'' என்றாள்.

உடனே சங்கரர், ''தேவி, தாங்கள் சொல்வது உண்மையாகத்தான் இருக்கும். அதை நான் மறுப்பதற்கு இல்லை. ஆனால், எப்போது தங்களின் கடைக்கண் பார்வை இந்தப் பெண்ணின்மீது பட்டுவிட்டதோ, அப்போதே அவர்களின் வினைப்பயன்கள் தீர்ந்துவிட்டதே. இனி நீங்கள் அவர்களின் வறுமை நீங்க அருள்புரிவதில் தடை என்ன இருக்கிறது?'' என்று கேட்டார்.

சங்கரரின் சமத்காரமான பேச்சில் மகிழ்ந்த மகாலக்ஷ்மி அந்த வீட்டில் தங்க நெல்லிக்கனிகளாகப் பொழிந்தாள். ஆக, இந்த நிகழ்ச்சியின் மூலம் நமக்குக் கிடைக்கக்கூடிய செல்வங்கள் அனைத்துமே இறைவனின் அருளால்தான் என்பதை உணர்ந்து, பெற்ற செல்வத்தை முறைப்படி பயன்படுத்தி, தான தர்மங்கள் செய்தால், எப்பிறவியிலும் வறுமை நம்மை வாட்டாது.

கனகதாரா ஸ்தோத்திரத்தை, தமிழில் கவிதை வடிவில் கவிஞர் கண்ணதாசன் பாடியுள்ளார்.

சங்கரர் எழுதிய நூல்கள்

பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதைக்கு விளக்கவுரை அளித்து அவை போதிக்கும் அத்வைத வேதாந்தம் அதாவது இரண்டற்றது என்கிற அத்வதை தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர். மேலும் விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற சமய நூல்களுக்கும் இவர் விளக்கவுரை நிருவியுள்ளதாக பொதுக் கருத்து உள்ளது. கீதா பாஷ்யம்,  ஈசாவாஸ்ய-கேன (பத/வாக்ய பாஷ்யங்கள் இரண்டு)-கட-பிரஷ்ன-முண்டக-மாண்டூக்ய-ஐதரேய-தைத்திரீய-பிருகதாரண்யக-சாந்தோக்ய ஆகிய பத்து உபநிடதங்களுக்கு அவரிட்ட பாஷ்யங்கள், ‘உபதேச சாஹச்ரி’ சிவானந்த லஹரி, கோவிந்தாஷ்டகம், பஜ கோவிந்தம், சித்தாந்த சாங்கியம், விவேகசூடாமணி, ஆத்மபோதம், உபதேச சாஹஸ்ரி, கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரஹ்மண்ய புஜங்கம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

சங்கரர் நிறுவிய அத்வைத பீடங்கள்

ஆதி சங்கரர் தன் 32 வயது அளவுக்குள் கிழக்கு திசையில் பூரியில் கோவர்த்தன பீடத்தை ஸ்தாபித்து, தன் சீடரான ஹஸ்தாமலகரை அங்கு ஜகத்குருவாக நியமித்தார். தென் திசை சிருங்கேரியில் சாரதா பீடத்தை ஸ்தாபித்து தன் சீடரான சுரேஸ்வரரை அங்கு ஜகத்குருவாக நியமித்தார். மேற்கு திசையில் துவாரகையில் காளிகா பீடத்தை ஆரம்பித்து தன் சீடரான பத்மபாதரை அங்கு ஜகத்குருவாக நியமித்தார். வடக்கு திசையில் பத்ரியில் ஜ்யோதிர் பீடத்தை ஆரம்பித்து தன் சீடரான தோடகரை அங்கு ஜகத்குருவாக நியமித்தார். இந்த நான்கு ஆம்நாய பீடங்களில் பரம்பரையாக வருகிறவர்களுக்கு மட்டுமே, ஜகத்குரு என்ற பிருது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதிசங்கரர், தமது 32-ஆம் அகவையில் கேதார்நாத்தில் சமாதி அடைந்தார்.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com