உங்கள் மகளுக்கு தனுசு லக்னம், கடக ராசி. இரண்டாம் வீட்டில் செவ்வாய்பகவான் உச்சம். மகர ராசியில் செவ்வாய்பகவான் இருப்பது செவ்வாய்தோஷம் இல்லை. களத்திர ஸ்தானாதிபதியான புதபகவான் ராசியில் லக்னத்தில் இருந்தாலும் பாவப்படி குடும்ப ஸ்தானத்தை அடைகிறார். பொதுவாக, லக்னப்படி செவ்வாய்தோஷம் பார்க்கும் வழக்கம் உள்ளது என்றாலும் ராசிப்படியும் சுக்கிரபகவான் படியும் செவ்வாய் தோஷத்தைப் பார்க்க வேண்டும். செவ்வாய் தோஷத்திற்குண்டான விதிவிலக்குகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படி செய்யாமல் பொதுவாக, 2,4,7,8,12 -ஆம் இடங்களில் தோஷம் என்று கொள்ளக்கூடாது. சுக்கிரபகவான் ராசியில் குடும்ப ஸ்தானத்தில் இருந்து நவாம்சத்தில் நீச்சமடைகிறார். இதனால் ஆறாமதிபதி லக்னாதிபதியை விட பலம் குறைந்திருக்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும். மற்றபடி இது குறை இல்லை. அவருக்கு தற்சமயம் சுக்கிரபகவானின் புக்தி இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் நடக்கும். அவருக்கு ஹம்ஸ யோகம், சிவராஜ யோகம், சந்திரமங்கள யோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளன. அவருக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் தூரத்து உறவில் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.