என் மகன் அரசு மருத்துவர். தற்சமயம் மேற்படிப்பு படித்து வருகிறார். பூர்வபுண்ணியம் எவ்வாறு உள்ளது? செவ்வாய், சனி, சுக்கிரன் ஆகிய கிரகங்களின் பலம் எவ்வாறு உள்ளது? மக்களுக்கு சேவை செய்து மருத்துவத் துறையில் சாதனை செய்வாரா? திருமணம் எப்போது நடைபெறும்? மருத்துவம் படித்த பெண் அமைவாரா? காலசர்ப்ப யோகம் இருக்கிறதா? வெளிநாடு செல்வாரா? எதிர்காலம் எப்படி இருக்கும்? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? - வாசகர், வந்தவாசி

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், தனுசு ராசி, பூராடம் நட்சத்திரம். அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் லக்னத்தில் சுக்கிரபகவானின்

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், தனுசு ராசி, பூராடம் நட்சத்திரம். அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் லக்னத்தில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். லக்னம் மற்றும் சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் தைரிய முயற்சி வைராக்ய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சுய சாரத்தில் (பூரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். குருபகவானின் ஐந்தாம் பார்வை களத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டின் மீதும், ஏழாம் பார்வை பாக்கிய ஸ்தானத்தின் மீதும் ஒன்பதாம் பார்வை லாப ஸ்தானத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் புத, சுக்கிர பகவான்களின் மீதும் படிகிறது.
 பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அயன, மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் சூரியபகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். பூர்வபுண்ணியாதிபதியான கிரகம் உச்சம் பெற்று இருப்பது என்பது பல பிறவிகளில் செய்த புண்ணியத்தால் விளைவது என்று புரிந்து கொள்ள வேண்டும். பூர்வபுண்ணிய ஸ்தானம் மற்றும் ஸ்தானாதிபதி வலுத்திருந்தால் பூர்வீக வழியில்அனுகூலம், நல்ல அறிவுக்கூர்மை, ஞாபக சக்தி, செல்வம், செல்வாக்கு, புத்திர சிறப்பு, மேற்படிப்பில் ஏற்றம் சமுதாயத்தில் பெயர் புகழ் உண்டாகுதல் ஆகிய நற்பலன்கள் உண்டாகும்.
 பூர்வ புண்ணிய புத்திர காரகரான குருபகவான் ஐந்தாம் வீட்டிற்குக் காரகராக ஆவதால் குருவருளும் திரு(செல்வம்)வருளும் நிரம்ப கிடைக்கும். பொதுவாக நல்லொழுக்கத்தைக் குறிக்கும் வீடாக இது அமைகிறது. செவ்வாய்பகவான் இருக்கும் வீட்டிற்கு இரண்டு புறமும் சுபக்கிரகங்கள் இருப்பதால் சுபகர்த்தாரி யோகம் உண்டாவதும் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதிக்கு வலு சேர்க்கிறது. அதோடு, செவ்வாய்பகவான் அயன ஸ்தானாதிபதியாகவும் ஆகிறார். அயன ஸ்தானம் கட்டில் சுகத்தைக் குறிக்கும் வீடாக அமைந்து அந்த வீட்டில் குடும்பாதிபதியும், குடும்ப ஸ்தானத்தில் அயன ஸ்தானாதிபதியும் பரிவர்த்தனை பெற்று இருப்பதால் குடும்ப வாழ்க்கை, சயன சுகம் இரண்டும் சிறப்பாக அமையும் என்றும் கூற வேண்டும். அயன ஸ்தானத்திற்கு இருபுறமும் சுபகிரகங்கள் இருப்பதால் சுபகர்த்தாரி யோகமும் உண்டாகிறது.
 பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டுக்கதிபதியான சூரியபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (அஸ்த நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், தைரிய, முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் அயன, மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சுய சாரத்தில் (அனுஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார். குடும்பாதிபதி ராசியில் சுயசாரத்தில் அமர்ந்திருப்பதும் நவாம்சத்தில் உச்சம் பெற்றிருப்பதும் அவரின் குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு உத்திரவாதம் தரும் அமைப்பாகும்.
 ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் லாப ஸ்தானத்தில் குருபகவானின் சாரத்தில் (விசாக நட்சத்திரம்) மூலதிரிகோணம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான துலாம் ராசியை அடைகிறார். அவருக்கு ஆறாமதிபதி ராசி, நவாம்சம், சாரம் ஆகிய மூன்று நிலைகளிலும் அதிபலம் பெற்றிருப்பதால் இந்த இரண்டு வீடுகளில் காரகத்துவங்களும் சிறப்பாக வேலை செய்யும் என்று கூறவேண்டும்.
 ஆறாம் வீட்டிற்கு ஒரு சிறப்பான சக்தி பிறக்குமானால் சலனமற்ற உள்ளம் அமைவதுடன் மற்றையோருக்குத் தொண்டு செய்கின்ற மனப்பான்மையும் அமையக்கூடும். ஏனெனில் ஆறாம் வீட்டை சர்வீஸ் வீடு அதாவது சேவை செய்யும் வீடு என்றும் அழைப்பார்கள். "பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது' என்பார்களே அதற்கொப்பாக, ஆறாம் வீடு வலுத்தவர்கள் எதிர்ப்புகளைக் கண்டு அஞ்ச மாட்டார்கள். பொதுவாக, இத்தகையோர் பெரிய கடன், நோய், உபாதைகளுக்கும் உள்ளாக மாட்டார்கள்.
 களத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் ராகுபகவானின் சாரத்தில் (சுவாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். தொழில் ஸ்தானாதிபதி லாப ஸ்தானத்தில் அமர்ந்திருந்தால் செய்தொழிலில் ஏற்றங்கள் உண்டாகும். ராகுபகவானின் சாரத்தில் அமர்ந்திருப்பதால் ஏற்றங்களுடன் மாற்றங்களும் உண்டாகும். ராகுபகவான் பயணக் கிரகமாகவும் ஆவதால் தொழில் நிமித்தமாக அடிக்கடி பயணங்களையும் செய்ய வேண்டி வரும்.
 ராகுபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் புதபகவானின் சாரத்தில் (ரேவதி நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். கேதுபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (சித்திரை நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார்.
 புத, சுக்கிர பகவான்களின் இணைவு லக்னத்திலோ, கேந்திர, திரிகோண ஸ்தானங்களிலோ அல்லது 3, 6, 10, 11 ஆகிய உப ஜய ஸ்தானங்களிலோ ஏற்பட்டு குருபகவானின் பார்வையை பெற்றிடில், சகலகலா வல்லவர்களாகின்றார்கள். பொதுவாக, மருத்துவத்துறைக்கு சுக்கிர, குரு, சனி, செவ்வாய், கேதுபகவான்களின் பலம் சற்று அதிகமாக இருக்க வேண்டும். அதோடு புத்திகாரகரான புதபகவானின் அருளும் இன்றியமையாதது. அவருக்கு புதபகவான் பத்தாம் வீட்டோனாகி சுக்கிரபகவானுடன் இணைந்து குருபகவானின் பார்வையை பெறுவதால் மருத்துவத் துறையில் உச்சநிலையை எட்டுவார்.
 பத்தாம் வீட்டோன் சர ராசியில் வலுத்திருப்பதாலும் செவ்வாய்பகவான் மற்றொரு சர ராசியில் உச்சம் பெற்றிருப்பதாலும் சனிபகவான் நீர் ராசியில் அமர்ந்திருப்பதாலும் வெளிநாடு சென்று பொருளீட்டும் வாய்ப்பும் உள்ளது. களத்திர ஸ்தானாதிபதி களத்திர காரகருடன் பலம் பெற்று அமர்ந்திருப்பதால் அவர் சார்ந்த துறையிலிருந்து சம அந்தஸ்திலுள்ள பெண் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் அமைந்து திருமணம் கைகூடும். புத்திர பாக்கியம் சிறப்பாக அமையும். இது காலசர்ப்ப யோக அமைப்பு ஜாதகமாக ஆவதால் 32 வயதிற்கு மேல் சுப பலன்கள் கைகூடும். எதிர்காலம் வளமாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப் பெருமானையும் வழிபட்டு வரவும்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com