எனக்கு 39 வயதாகிறது. நான் மருத்துவம் சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிந்து வந்தேன். ஆனால் என் மனம் பங்கு வர்த்தகத் துறையில் ஈடுபடவே விழைகிறது. பகுதி நேரமாக செய்து வருகிறேன். முழு நேரத் தொழிலாகச் செய்யலாம் என்று முடிவெடுத்து அதை செய்யத் தொடங்கியுள்ளேன். இது சரியான முடிவா? எனக்கு சிறப்பான யோகங்கள் உள்ளதாகக் கூறினார்கள். லக்னம் மற்றும் பத்தாம் வீடு எவ்வாறு உள்ளது? தனித்து செய்யவே விரும்புகிறேன். என் குடும்ப எதிர்காலம் எவ்வாறு உள்ளது? - வாசகர், சென்னை

உங்களுக்கு விருச்சிக லக்னம், மீன ராசி, பூரட்டாதி நட்சத்திரம். பாக்கியாதிபதியான சந்திரபகவான் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் குருபகவானின் சாரத்தில் (பூரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து

உங்களுக்கு விருச்சிக லக்னம், மீன ராசி, பூரட்டாதி நட்சத்திரம். பாக்கியாதிபதியான சந்திரபகவான் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் குருபகவானின் சாரத்தில் (பூரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான கடக ராசியை அடைகிறார். பாக்கியாதிபதி ராசியில் பூர்வபுண்ணிய ஸ்தானத்திலும் நவாம்சத்தில் ஆட்சி பெறுவதும் சிறப்பான தன யோகம் என்று கூறப்பட்டுள்ளது. அதுவும் அவர் பூர்வபுண்ணியாதிபதியின் சாரத்தில் அமர்ந்திருப்பதும் உன்னதமான அமைப்பாகும். ஒரு திரிகோணாதிபதி மற்றொரு திரிகோண ராசியில் அமர்ந்திருப்பதும் சிறப்பு. லக்னம் மற்றும் ருணம் ( கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி)  ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். செவ்வாய்பகவான் நான்காம் பார்வையாக லக்னத்தையும் ஏழாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும் எட்டாம் பார்வையாக பூர்வபுண்ணிய ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். லக்னாதிபதி லக்னத்தைப் பார்ப்பது அனைவருக்கும் நலமே செய்யும். இதனால் லக்னம் என்கிற உயிர் ஸ்தானம் பூஷ்டியாகும். இரண்டாம் வீட்டிற்கும்; ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். குருபகவானின் ஐந்தாம் பார்வை தன் ஆட்சி வீடான தன ஸ்தானத்தின் மீதும், சுகஸ்தானத்தின் மீதும் ஆறாம் வீட்டின் மீதும் படிகிறது. தன ஸ்தானத்தை தனாதிபதி பார்வை செய்வதால் பொருளாதாரத்தில் எக்காலத்திலும் தொய்வு ஏற்படாது என்று கூறவேண்டும். 
செவ்வாய், குரு பகவான்கள் லக்னம், பூர்வபுண்ணியம் ஆகிய இரண்டு திரிகோணங்களுக்கு அதிபதியாகி தொழில் ஸ்தானமான  உச்ச கேந்திரத்தில் இணைந்திருப்பது சிறப்பாகும். அதோடு இவர்களின் இணைவு குருமங்கள யோகத்தையும் கொடுக்கிறது. இதில் மற்றொன்றையும் பார்க்க வேண்டும். குரு, செவ்வாய் பகவான்களின் இணைந்த பார்வை சுக ஸ்தானத்தின் மீது படிகிறது. செவ்வாய்பகவான் பத்தாம் வீட்டில் திக்பலம் பெறுவார். இதுவும் தொழில் ஸ்தானத்திற்கு வலுக்கூட்டும் அம்சமாகும். 
தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சூரியபகவானின் சாரத்தில் (உத்திரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். சனிபகவானும் தன் மூலதிரிகோண வீடான கும்பராசியைப் பார்வை செய்கிறார். களத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான  பன்னிரண்டாம்  வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் ஆறாம் வீட்டில் சுய சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் நீச்சமடைகிறார். எட்டாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் ராகுபகவானின் சாரத்தில் (சதய நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் இருக்கும் நிலை) அமர்ந்திருக்கிறார். தொழில் ஸ்தானாதிபதியான சூரியபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் குருபகவானின் சாரத்தில் (பூரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். சூரியபகவான் உச்ச கேந்திராதிபதியாகி திரிகோண ராசியில் அமர்ந்திருப்பது சிறப்பு. அதோடு, தர்மகர்மாதிபதிகள் (ஒன்பதாமதிபதியும் பத்தாமதிபதியும் இணைந்து இருப்பது) பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் பூர்வபுண்ணியாதிபதியான குருபகவானின் சாரத்தில் இணைந்து சிறப்பான தர்மகர்மாதிபதி யோகத்தைக் கொடுக்கிறார்கள். கேதுபகவான் சுக ஸ்தானத்தில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். ராகுபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார்.
பொதுவாக, ஒருவருக்கு லக்னாதிபதி ஒருவர் மட்டுமே பலம் பெற்றிருந்தால் போதுமானது. மற்ற இரண்டு திரிகோணாதிபதிகள் ஏறத்தாழ பலம் குறைந்திருந்தாலும் வாழ்க்கை என்னும் படகு பெரிய பாதிப்பு என்று எதுவும் இல்லாமல் இக்கரையிலிருந்து மறுகரைக்குச் சென்று விடும். உங்களுக்கு செவ்வாய்பகவான் லக்னாதிபதியாகிறார். அவர் உடல் உறுதிக்கும், மன உறுதிக்கும் காரகராகிறார். வீரம் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைவதால் போட்டி பந்தயங்களிலும் வெற்றி பெறச் செய்வார். ரத்தத்திற்கு காரகம் பெறுவதால் மிகப் பெரிய அறுவை சிகிச்சை நிபுணராகச் செய்வார். இவர் பூமிகாரகராக ஆவதால் செவ்வாய்பகவான் வலுத்தவர்களுக்கு அசையாச் சொத்துகள் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும் நிலத்தில் முதலீடு முதலீடு செய்தால் எக்காலத்திலும் நஷ்டம் என்று எதுவும் ஏற்படாது. செவ்வாய்பகவான் நெருப்பு கிரகமாவார். அதனால் உணவு சம்பந்தப்பட்ட தொழில்கள், மளிகை தாமிரம் போன்ற தொழில்கள் மூலமும் வருமானம் கிடைக்கும்.
உங்களுக்கு செவ்வாய்பகவான் பத்தாம் வீட்டில் திக்பலம் பெற்று வலுவாக அமர்ந்திருப்பதால் செய்தொழில்  ஏற்றமாகவே அமையும். செவ்வாய்பகவானுடன் பத்தாம் வீட்டிற்குக் காரகத்துவம் உடைய சனிபகவானும் இணைந்திருக்கிறார். இவர்களுடன் சனிபகவானைப் போல் பலன் கொடுக்கும் ராகுபகவானும் அமர்ந்திருக்கிறார். இவர்களோடு அனைத்திற்கும் முத்தாய்ப்பாக குருபகவானும் பத்தாம் வீட்டில் சிறப்பான பலத்துடன் அமர்ந்திருப்பதால் குருபகவான் சம்பந்தப்பட்ட தொழிலையும் செய்யலாம். குருபகவான் தன காரகராகி தனம் சம்பந்தப்பட்ட இனங்களிலிருந்து வருமானம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல், பங்கு சந்தை, பொருள்கள் சந்தை, பொன் ஆகியவற்றில் குருபகவானின் பங்கு உண்டு. குறிப்பாகச் சொல்லப்போனால் பணம் சம்பந்தப்பட்ட இனங்கள் அனைத்திலும் குருபகவானின் காரகத்துவம் உண்டு என்று கூறவேண்டும். விவசாயத்தில் மஞ்சள் நிறப் பொருள்களாலும் வருமானம் ஈட்டலாம். பெட்ரோலியப் பொருள்களுக்கும் குருபகவானே காரணமாகிறார். தொழில் ஸ்தானம் வலுவாகவே உள்ளதால் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களிலிருந்தும் வருமானம் கிடைக்கும். நீதித்துறை மற்றும் பொதுத்தொண்டு, அறக்கட்டளைகளை நிர்வகிப்பவர்களுக்கு குருபகவானின் அருள் இயற்கையிலேயே உண்டு.
பொதுவாக, குரு, செவ்வாய், சந்திர பகவான்கள் வலுத்திருப்பதால் சுயதொழில் செய்யலாம்.  கேதுபகவான் சுகஸ்தானமான நான்காம் வீட்டில் (கேந்திரம்) செவ்வாய்பகவானின் சாரத்தில் வலுவாக அமர்ந்திருப்பது சிறப்பு.  செவ்வாய்பகவானின் பலனை தரக்கூடிய சக்தி கேதுபகவானுக்கு உண்டு. (குஜவத் கேது என்பது ஜோதிட வழக்கு) மேலும் செவ்வாய்பகவானுக்கு பத்தாம் வீட்டோடு தொடர்பு உள்ளதாலும் கேதுமகா தசையில் தொழில் ரீதியாக முன்னேற்றம் காண
முடியும். ராகுபுக்தி முடிந்தவுடன் அதாவது, அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப்பிறகு சிறப்பான வளர்ச்சி உண்டாகும். விநாயகப் பெருமானையும் முருகப்பெருமானையும் கேது மகா தசை முழுவதும் வழிபட்டு வரவும். எதிர்
காலம் வளமாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com