எனக்கு 71 வயதாகிறது. நிம்மதி இல்லாமல் தவிக்கிறேன். சம்பாதித்த பணம் அனைத்தும் செலவாகிவிட்டது. கடனும் அதிகமாகிவிட்டது. கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கி நின்றான் இலங்கை வேந்தன் என்பது போன்ற உணர்வில் உள்ளேன். என் ஜாதகப்படி கடன் எப்பொழுது அடையும்? இயற்கை மரணம் எப்போது ஏற்படும்? சனி வக்கிரம் பெற்று வக்கிர குருவால் பார்க்கப்படுவதால் தான் சனி தடைபடுத்துகிறதா? கடைசி வரை விரயாதிபத்யம்தானா? லாபாதிபத்யம் வேலை செய்யுமா? எப்போது நிம்மதி வரும்? - வாசகர், சென்னை

உங்களுக்கு மீன லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான சந்திரபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் சுக்கிரபகவானின்

உங்களுக்கு மீன லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான சந்திரபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியில் நீச்சமடைகிறார். பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானாதிபதியான சந்திரபகவான் சற்று பலம் குறைந்திருக்கிறார் என்பது இதன்மூலம் புரிந்துகொள்ள வேண்டும். லக்னம் மற்றும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (அனுஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். "ஓடிவனுக்கு ஒன்பதில் குரு' என்பது வழக்கு. அதோடு குருபகவான் நன்மை செய்யும் வீடு ஒன்பதாம் வீடாகும் என்பது அனைவரும் அறிந்ததே. தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (பூரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியில் (மூலத்திரிகோண வீடு) பலமாக அமர்ந்திருக்கிறார்.
 மறைவு ஸ்தானங்களான மூன்று, எட்டாம் வீடுகளுக்கு அதிபதியான சுக்கிரபகவான் பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து இருப்பது விபரீத ராஜயோகமாகும். ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கு அதிபதியான சூரியபகவான் லக்னத்தில் சனிபகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியில் நீச்சம் பெறுகிறார். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் களத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் அயன நட்பு ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் ராகுபகவானின் சாரத்தில் (சதய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியில் நீச்சமடைகிறார். ராசியில் பலம் பெற்ற கிரகங்கள் நவாம்சத்தில் பலம் குறைந்தால் சுப பலன்கள் குறையும் என்று கூற வேண்டும்.
 உங்களுக்கு சூரியபகவான் சத்ரு ஸ்தானாதிபதியாகி நவாம்சத்தில் நீச்சம் பெற்றிருப்பது நன்மையே பயக்கும். புதபகவான் கேந்திர ஆதிபத்ய தோஷத்திற்கு ஆட்பட்டு பலம் குறைந்து இருப்பதும் சிறப்பாகும். இப்படி பல விதங்களில் ஆராய்ந்து ஒரு கிரகத்தின் வலிமையை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் பூர்வ
 புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் சுய சாரத்தில் (பூரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். ராகுபகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். கேதுபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (அனுஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார்.
 பொதுவாக, "நிம்மதி' என்கிற சொல்லுக்கு நான்காம் வீட்டைக்கூற வேண்டும். இந்த வீடு வலுத்திருந்தால் குடும்பத்தில் நிம்மதி நிறையும் என்பது பொது விதி. இத்துடன் லக்னமும் லக்னாதிபதியும் வலுவாக இருக்க வேண்டும். கடன் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையில் நிம்மதி குறைந்து போவதற்கு ஆறாம் வீட்டின் அசுப பலமும் முக்கிய காரணமாகும். உங்களுக்கு ஆறாம் வீட்டுகதிபதி லக்னமான உயிர் ஸ்தானத்தில் இருக்கிறார். சத்ரு ஸ்தானாதிபதி உயிர் ஸ்தானத்தில் இருப்பதை குறை என்று கூறினாலும் அவருக்கு நவாம்சத்தில் பலம் குறைந்திருப்பதாலும் லக்னாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து லக்னத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் ஆறாமதிபதியான சூரியபகவானையும் பார்வை செய்வதாலும் உங்களுக்கு நிம்மதி இழப்பு என்பது தற்காலிகமானதே ஆகும் என்று கூறவேண்டும்.
 உங்களுக்கு சனிபகவான் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் வக்கிரம் பெற்று அமர்ந்திருப்பதோடு, குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் வக்கிரம் பெற்று அமர்ந்திருக்கிறார்கள். பொதுவாக, குருபகவான், சூரியபகவான் இருக்கும் பாகையிலிருந்து 150 பாகைகள் விலகியதும், சனிபகவான் சூரியபகவான் இருக்கும் பாகையிலிருந்து 120 பாகைகள் விலகியதும் வக்கிரமடைவார்கள். கிரகங்கள் வக்கிரமடையும் காலங்களில் நேர்கதியை விட்டு பின்னோக்கி நகரும் நிலையை அடைவார்கள். வக்கிரமடைந்த கிரகங்கள் பலமிழக்கிறார்கள் என்று ஒரு கருத்து உள்ளது. அதைத்தான் நீங்களும் கேட்டுள்ளீர்கள். வக்கிரமடைந்த கிரகங்கள் சராசரிக்கும் சற்று கூடுதலான பலம் பெறுகின்றன என்பது அனுபவ உண்மை. அதாவது அந்த கிரகங்கள் தான் வக்கிரம் பெற்று சஞ்சரிக்கும் வீட்டின் பலத்துடன் தனக்கு முன் வீட்டின் பலத்தையும் சேர்ந்து பலன்களை வழங்குவார் என்று கூறவேண்டும். அதே நேரம் ஒரு கிரகத்திற்கு உண்டான ஆதிபத்யங்களை இது பாதிக்காது என்று கூற வேண்டும். அதாவது ஒரு கிரகத்திற்கு இரண்டு வீடுகளின் ஆதிபத்யங்கள் இருந்தால் அவைகளை மாற்றி அமைத்து விடும் சக்தி வக்கிர கிரகத்திற்கு இல்லை. அதாவது, உங்களுக்கு சனிபகவான் பன்னிரண்டாம் வீட்டிற்கும் பதினொன்றாம் வீட்டிற்கும் ஆதிபத்யம் பெற்றவராகிறார்.
 பொதுவாக, சனிபகவான் பிற்கூறில்தான் பலனளிப்பார் என்பதால் முதலில் விரயாதிபதியம் வேலை செய்யும். இரண்டாம் பகுதியான பிற்பாதியிலே தான் லாபாதிபத்யம் வேலை செய்யும். உங்களுக்கு இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையில் சனிமகா தசையில் சூரிய புக்தி நடக்கும். அதற்குப்பிறகு லாபாதிபத்யம் வேலை செய்யும். அதனால் படிப்படியாக பொருளாதார நிலைமை வளர்ச்சியடையத் தொடங்கும். பாக்கிய ஸ்தானத்தில் குருபகவானின் பார்வை சனிபகவானின் மீது படிவதும் சுபமே. இதில் வக்கிரப் பார்வைக்கு பலம் குறைவு இல்லை என்று கூற வேண்டும். மற்றபடி தீர்க்காயுள் உண்டு. எதிர்காலம் வளமாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானையும்; பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானையும் வழிபட்டு வரவும்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com