என் மகனுக்கு 37 வயதாகிறது. ஐந்து வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. பெண்ணிற்கு திருமணத்திற்கு முன்பே ஒருவருடன் நட்பு இருந்திருந்ததால் அந்த நபர் தாலி கட்டியவுடன் மண்டபத்திலேயே கலாட்டா செய்து பெண்ணை அழைத்துச் சென்று விட்டார். விவாகரத்து கேஸ் முடிய மூன்று வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. தற்சமயம் தீவிரமாக மறுமணத்திற்குப் பெண் தேடிக் கொண்டிருக்கிறோம். உள்ளூரில் மருந்து சம்பந்தப்பட்ட தொழில் செய்கிறான்.பெங்களூர் போன்ற பெரிய நகரத்திற்குச் சென்று இதேத் தொழிலைச் செய்யலாமா? தொழிலில் வளர்ச்சி உண்டாகுமா?

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், மகர ராசி, உத்திராடம் நட்சத்திரம். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சூரியபகவானின்

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், மகர ராசி, உத்திராடம் நட்சத்திரம். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சூரியபகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். சந்திரபகவானின் பார்வை தைரிய ஸ்தானத்தின் மீதும் படிகிறது. லக்னம் மற்றும் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சூரியபகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார்.
 ஒரு திரிகோணாதிபதி மற்றொரு திரிகோண ராசிக்குச் செல்வது நன்மை பயக்கும் அம்சமாகும். மேலும் துர்ஸ்தானத்திற்கு (ஆறாம் வீட்டிற்கு) அதிபதியும் பாக்கிய ஸ்தானத்திற்குச் செல்வதால் ஆறாம் வீட்டின் அசுபப் பலன்களும் பெருமளவுக்குக் குறைந்து விடும் என்றும் புரிந்து கொள்ள வேண்டும். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். இரண்டாவது திரிகோணாதிபதியும் உச்ச திரிகோண ராசியை அடைவது சிறப்பு. முதல் இரண்டு திரிகோணாதிபதிகளும் மூன்றாம் திரிகோணத்தில் அமர்வது சிறப்பு. அதோடு புத, சுக்கிர பகவான்களின் இணைவை மகாவிஷ்ணு - மகாலட்சுமி யோகம் என்றும் பலமுறை எழுதியிருக்கிறோம். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கு அதிபதியான சூரியபகவான் லக்ன சுபராகி பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியில் உச்சமடைகிறார். அனைவரின் இனிமையான மணவாழ்க்கைக்கு சுக ஸ்தானமும் சுக ஸ்தானாதிபதியும் சுப பலத்துடன் இருக்க வேண்டும்.
 களத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் சந்திரபகவானின் சாரத்தில் (அஸ்த நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியில் நீச்சமடைகிறார். செவ்வாய்பகவானுக்கு இரண்டு ஆதிபத்யங்கள் உள்ளன. களத்திர ஸ்தானாதிபதி நவாம்சத்தில் நீச்சம் பெறுவது சிறு குறை என்று பார்க்க வேண்டும். அதேநேரம் அயன ஸ்தானாதிபதி நவாம்சத்தில் நீச்சம் பெறுவதில் குறையில்லை என்றும் புரிந்து கொள்ள வேண்டும். பாக்கிய ஸ்தானமான (உச்ச திரிகோணம்) ஒன்பதாம் வீட்டிற்கும் தொழில் ஸ்தானமான (உச்ச கேந்திரம்) பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் தர்மகர்மாதிபதியாக பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (சித்திரை நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டில் ராகுபகவானின் சாரத்தில் (சுவாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். ராகுபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (புனர்பூச நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். கேதுபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சூரியபகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். கேதுபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சூரியபகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார்.
 பொதுவாக, திருமணப்பொருத்தம் பார்க்கும்பொழுது 25 சதவீதம் நட்சத்திர பொருத்தத்திற்கும்; 75 சதவீதம் ஜாதக பொருத்தத்திற்கும் கொடுக்க வேண்டும். குறிப்பாக, வரனுக்கு (ஆண்) சுக்கிரபகவானின் பலத்திற்கும் வதுவுக்கு (பெண்) செவ்வாய்பகவானின் பலத்திற்கும் ஏற்ற சமதோஷம் அமைந்திருக்க வேண்டும். திரிகோண ஸ்தானங்கள் இருவருக்கும் வலுவாக அமைந்துவிட்டால் மணவாழ்க்கை சீரும் சிறப்புமாக அமையும். இதில் லக்னம் ஒரு கேந்திரம் மற்றும் திரிகோண ஸ்தானமாக ஆவதால் சுபக்கிரகங்களை சற்று கவனமாக பார்க்க வேண்டும். ஏனெனில் சுப கிரகங்கள் கேந்திர ராசிகளுக்கு அதிபதியானால் கேந்திராதிபத்ய தோஷம் உண்டாகிவிடும். மற்றபடி லக்னம், குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீடு, களத்திர ஸ்தானமான ஏழாம் வீடு ஆகிய மூன்று முக்கியமான வீடுகளுக்கு சமமான பொருத்தம் அமைந்தாலே மணவாழ்க்கையில் பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படாமல் காக்கப்படுவார்கள்.
 அடுத்ததாக சுகம், அஷ்டமம் மற்றும் அயன ஸ்தானங்களுக்கு சமதோஷம் பார்க்க வேண்டும். இதில் சுக ஸ்தானம் இருவருக்கும் சம பலத்துடன் இருக்க வேண்டும். அவருக்கு பாக்கிய ஸ்தானத்தில் பலமான நான்கு கிரகங்கள் உள்ளன. தொழில் ஸ்தானாதிபதியும் தொழில் காரகரான செவ்வாய்பகவானுடன் இணைந்திருக்கிறார். இதனால் அவருக்கு உள்ளூரிலேயே தங்கி தொழில் செய்வது அவ்வளவு நன்மையை தராது. அவரை இதே தொழிலை வேறு ஊருக்கும் சென்று விரிவுபடுத்தி நடத்தினால் நன்மை. அதாவது, வெளியூரில் முக்கால் பங்கு உள்ளூரில் கால் பங்கும் செய்ய வேண்டும். பாக்கிய ஸ்தானம் வலுவாக உள்ளதால் இரண்டிலும் வருமானத்திற்குக் குறைவு ஏற்படாமல் லாபம் உண்டாகும். வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகளும் தேடி வரும். இதன்மூலம் அந்நிய செலாவணியும் கிடைக்கும் யோகமுள்ளது. அதனால் எதிர்காலத்தில் தொழிலதிபர் என்று பெயர் பெறுவார். அவர் சார்ந்துள்ள மருந்து துறை அவர் ஜாதகத்திற்கு ஏற்றதாகவே அமைகிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள படித்த பெண் அமைந்து மறுமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com