என் மகனுக்கு 24 வயதாகிறது. ஆடிட்டர் படிப்பு படிக்கிறார். நான்கு முறை இண்டர் எழுதியும் வெற்றி பெறவில்லை. இவருடன் சேர்ந்தவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து படித்து தேர்ச்சி பெற்று விட்டார்கள். இவனுக்கு நன்றாகப் படிக்கும் நண்பர்களின் உதவி கிடைக்குமா? ஆடிட்டர் ஆகும் யோகம் உள்ளதா? எப்போது தேர்ச்சி பெறுவார்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகி, மேற்கு மாம்பலம்

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், மகர ராசி, அவிட்டம் நட்சத்திரம் முதல் பாதம். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில்

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், மகர ராசி, அவிட்டம் நட்சத்திரம் முதல் பாதம். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். எந்த கிரகமும் தன் ஆட்சி, உச்ச வீடுகளைப் பார்வை செய்வது சிறப்பு என்பதை அனைவரும் அறிந்ததே. தனாதிபதி அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீடான புதையல் ஸ்தானத்திலிருந்து தன் ஆட்சி வீடான கடக ராசியை, தன ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்.
 லக்னத்திற்கும், சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். புதபகவானின் பார்வையும் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டின் மீதும் படிகிறது. தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கு அதிபதியான சூரியபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (திருவோண நட்சத்திரம்)அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (மூலம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார்.
 ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். ஆறாமதிபதி மூன்றாம் வீட்டில் அமர்ந்து இருப்பதால் விபரீத ராஜயோகம் உண்டாகிறது என்றும் புரிந்து கொள்ள வேண்டும். அதோடு தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் செவ்வாய்பகவான்அமர்ந்திருப்பதும் சிறப்பு என்று கூறவேண்டும்.
 களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் கர்ம ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் ஆறாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (அனுஷம் நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமர்ந்திருக்கும் நிலை) அமர்ந்திருக்கிறார். அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் பாக்கிய ஸ்தானத்தில் ராகுபகவானின் சாரத்தில் (சதய நட்சத்திரம்) தன் மூலதிரிகோண ராசியில் அமர்ந்திருக்கிறார். பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பது குறிப்பிட்ட பாவத்திற்கு வலுகூட்டும் அமைப்பாகும். ராகுபகவான் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் சுயசாரத்தில் (சுவாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். கேதுபகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார்.
 பொதுவாக, படிப்புக்கு இரண்டாமிடமும் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, வாழ்க்கைக்குகந்த தொழில் சாந்த படிப்பு ஆகியவைகளுக்கு நான்காம் வீட்டின் பலம் இன்றியமையாததாகும். பூர்வபுண்ணிய ஸ்தானத்தைப் புத்திர ஸ்தானத்திற்கும் மேலாக புத்தி ஸ்தானம் என்றும் அழைக்கிறார்கள். அவருக்கு இரண்டாம் வீட்டுக்கதிபதியான சந்திரபகவான் எட்டாம் வீட்டிலிருந்து இரண்டாம் வீட்டைப் பார்வை செய்கிறார். நான்காம் வீட்டுக்கதிபதியான புதபகவான் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப்பெற்று எட்டாம் வீட்டில் சூரிய, சந்திரபகவான்களுடன் இணைந்து மறைவு பெறுகிறார். " மறைந்த புதன் நிறைந்த மதி நிறைந்த நிதி' என்பது ஜோதிட வழக்காகும். இதனால் அவருக்கு புதபகவானின் அருள் உண்டு என்று புரிந்து கொள்ள வேண்டும். அதோடு, அவரே லக்னாதிபதியுமாகி எட்டாம் வீட்டில் மறைவு பெறுகிறார்.
 எந்த ஒரு பாவத்தின் பலத்தை அறிய அந்த பாவத்தை ஒன்றாம் வீடாகக் கொண்டு பலத்தைக் கணக்கிட வேண்டும். மற்றபடி நான்காம் வீட்டை ஒன்றாம் வீடாகக் கொண்டு பார்த்தோமானால் அந்த வீட்டுக்குரிய புதபகவான் நான்காம் வீட்டிற்கு ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருப்பது சிறப்பாகும். அதனால் அவர் எடுத்துக்கொண்டுள்ள ஆடிட்டர் படிப்பை வெற்றியுடன் முடித்து விடுவார். நல்ல நண்பர்கள் கிடைக்க நான்காம் வீட்டின் பலத்தையும் பார்க்க வேண்டும். விதி வீடு என்பது ஐந்தாம் வீடாகும். இதன் பலத்தையும் கொண்டு நல்ல நண்பர்கள் அமைவார்கள் என்பதையும் அறியலாம். அவருக்கு ஐந்தாம் வீட்டுக்கதிபதி ஏழாம் வீட்டில் அமர்ந்து லக்னமான உயிர் ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்.
 களத்திர ஸ்தானமான ஏழாம் வீடு நட்பு ஸ்தானம் என்பதை அனைவரும் அறிந்ததே. இதனால் அவருடைய படிப்பிற்கு உதவும் நல்ல நண்பர்கள் அமைந்து அவர்களுடன் இணைந்து படித்து வெற்றியடைவார் என்று கூறவேண்டும். அதேநேரம் ஐந்தாம் வீட்டில் (புத்தி ஸ்தானத்தில்) ராகுபகவான் அமர்ந்து நான்காம் வீட்டை நோக்கிப் பயணப்படுவதும் மூன்றாம் வீட்டில் செவ்வாய்பகவான் அமர்ந்து நான்காம் வீட்டை நோக்கிப் பயணப்படுவதும் குறை. இது நான்காம் வீட்டிற்கு பாபகர்த்தாரி யோகம் உண்டாவதை உணர்த்துகிறது.
 அதேநேரம் புதபகவான் அமர்ந்திருக்கும் எட்டாம் வீட்டிற்கு இருபுறத்திலும் திரிகோணாதிபதிகளான சுக்கிர, சனிபகவான்கள் அமர்ந்திருப்பது எட்டாம் வீட்டிற்கு குறிப்பாக, புதபகவானுக்கு சுபகர்த்தாரி யோகம் உண்டாகிறது. அதனால் சிறிது கஷ்டப்பட்டாலும் ஆடிட்டர் ஆகிவிடுவார். இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப்பிறகு தொடங்கும் குருமகா தசையில் சுய புக்தி முடிந்தவுடன் முழுமையான பட்டயக் கணக்காளராகி விடுவார். பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றிருப்பதால் வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உண்டாகும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com