வெளிநாடு செல்லும் யோகம்!

எனக்கு இந்த ஆண்டு குரு ஒன்பதில் இருந்தது. ஆனால் திருமணம் நடக்கவில்லை. தற்சமயம் 31 வயதாகிறது. வெளிநாடு செல்லும் யோகம் உண்டா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? 


எனக்கு இந்த ஆண்டு குரு ஒன்பதில் இருந்தது. ஆனால் திருமணம் நடக்கவில்லை. தற்சமயம் 31 வயதாகிறது. வெளிநாடு செல்லும் யோகம் உண்டா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? 

வாசகர், சென்னை. 

உங்களுக்கு கும்ப லக்னம், மேஷ ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னாதிபதி அயனஸ்தானாதிபதி சனி பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சுக பாக்கியாதிபதியான சுக்கிர பகவானுடன் இணைந்து இருக்கிறார். 
தன லாபாதிபதியான குரு பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்திலமர்ந்து, ஐந்தாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும் அங்கு நீச்ச பங்கராஜயோகம் பெற்று அமர்ந்திருக்கும் களத்திர நட்பு ஸ்தானாதிபதியான சூரிய பகவானையும் (சிவராஜ யோகம்), செவ்வாய் பகவானையும் (குருமங்கள யோகம்), புத பகவானையும் பார்வை செய்கிறார். 
குரு பகவானின் ஏழாம் பார்வை லாப ஸ்தானத்தின் மீதும் அங்கமர்ந்திருக்கும் சனி, சுக்கிர பகவான்களின் மீதும், ஒன்பதாம் பார்வை லக்னத்தின் மீதும் படிகிறது. செவ்வாய் பகவான் நவாம்சத்தில் உச்சம் பெற்றும், புத பகவான் மிதுன ராசியில் ஆட்சி பெற்று இருப்பதும் சிறப்பு. 
களத்திர நட்பு ஸ்தானாதிபதி நீச்சம் பெற்றிருப்பது குறை என்றாலும், குரு பகவானின் பார்வை குறையைப் போக்கிவிடும் அம்சமாகும். தற்சமயம் அயன ஸ்தானத்திலமர்ந்திருக்கும் ராகு பகவானின் தசையில் புத பகவானின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் கைகூடும். 
குரு பலம் மட்டுமே திருமணத்தை நடத்தி விடும் என்று கூற முடியாது என்பதை முன்பே எழுதியிருக்கிறோம். தசாபுக்தி அந்தரங்கள் சாதகமாக அமையும் காலத்தில் திருமணம் கைகூடும். 
பலருக்கும் குருபகவான் பலம் குறைந்த காலகட்டத்தில் கூட திருமணம் நடக்கிறது. மற்றபடி பயண கிரகமான ராகு பகவான் பன்னிரண்டாம் வீட்டில் சர ராசியில் இருந்து தசையை நடத்துவதால் வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகம் திருமணத்திற்குப் பிறகு உண்டாகும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும், பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com