விரைவில் குணமடைவார்!

என் கணவருக்கு  திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவர் ஜாதகம் எவ்வாறு உள்ளது?  எப்போது குணமடைவார்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?


என் கணவருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவர் ஜாதகம் எவ்வாறு உள்ளது? எப்போது குணமடைவார்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

வாசகி, சென்னை.

உங்கள் கணவருக்கு மிதுன லக்னம் தனுசு ராசி மூலம் நட்சத்திரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கு அதிபதியான சந்திர பகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் கேது பகவான் சாரத்தில் (மூலம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான கடக ராசியை அடைகிறார். தன ஸ்தானத்தைக் கொண்டு அதிர்ஷ்டம், பொருளாதார அபிவிருத்தி, கல்வி, வாக்கு, சாஸ்திர ஞானம், வேகமாகச் செயல்படுதல், கொடுக்கல் வாங்கல், வருமானத்திற்கு சீரிய முயற்சிகள், உண்மை பேசுதல், ஸ்திர புத்தி, முகம், நாக்கு, நகம், அன்னியரால் பேருதவி, தான்யச் சேர்க்கை ஆகியவற்றை அறிய முடியும். தனாதிபதி களத்திர நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து லக்னத்தைப் பார்வை செய்வதால், மேற்கூறிய அனைத்தும் சிறப்பாக வேலை செய்யும் என்று கூற வேண்டும்.

வாழ்க்கைத்துணைவியாலும், உறவினர்கள், நண்பர்களாலும் ஆதரவு, நன்மை, பெருமை ஆகியவையும் உண்டாகும். சந்திர பகவான் தனு (உடல்) காரகராகவும் ஆவதால் உடல் ஆரோக்கியமும் சீரும் சிறப்புமாக இருக்கும். லக்னம் மற்றும் சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் ஆட்சி உச்சம் மூல திரிகோணம் பெற்று சூரிய பகவானின் சாரத்தில் (உத்திரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்பராசியை அடைகிறார். அனைத்து லக்னங்களுக்கும் லக்னாதிபதியின் பலம் சுபத்துவமாக அமைந்திருக்க வேண்டும் என்பது ஜோதிட விதி. புத பகவான் சுபகிரகமாகி கேந்திர வீடுகளுக்கு (ஒன்று மற்றும் நான்காம் வீடுகள்) அதிபதியாக வருவதால், கேந்திராதிபத்ய தோஷம் உண்டாகும். அதே நேரம் அவர் லக்னாதிபதியாக வருவதாலும் அவர் சுபாவ அசுப கிரகமான சூரிய பகவானுடன் இணைந்திருப்பதாலும், கேந்திராதிபத்ய தோஷம் நீங்கி விடுகிறது. புத பகவான் கல்வி, நுண்ணிய கலை ஆகியவற்றிற்கும் காரணமாக ஆவதாலும் மாதுல (மாமன்)காரகராக ஆவதாலும் அன்னை வழி உறவினர்களாலும் மிகுந்த நன்மைகளையும் பெறுவார் என்றும் கூற வேண்டும். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கு அதிபதியான சூரிய பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் செவ்வாய் பகவான் சாரத்தில் (சித்திரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான சிம்ம ராசியை அடைகிறார். பொதுவாக புத ஆதித்ய யோகம் சிறப்பென்றாலும், அதிலும் இந்த யோகம், லக்னம், நான்காம் வீடு மற்றும் எட்டாம் வீடுகளில் ஏற்பட்டாலும் மிகவும் சிறப்பானதாகும் என்று கூறப்பட்டுள்ளது. அதனால் இந்த யோகத்தால் கணிதம் சம்பந்தப்பட்ட கல்விகளிலோ அல்லது கல்விக்கு அப்பாற்பட்ட துறைகளிலோ ஈடுபட்டு தனித்தன்மையைப் பெற்றிருப்பார் என்று கூற வேண்டும். இது ஓர் அனுபவ உண்மையும் கூட.

தைரிய ஸ்தானமான மூன்றாம் வீடு அஷ்டம ஸ்தான மான எட்டாம் வீட்டிற்கு அஷ்டமமாக (எட்டாவதாக) பாவாத்பாவம் அடிப்படையில் அமைகிறது. இந்த மூன்றாம் வீட்டுக்கு அதிபதியான சூரிய பகவான் ராசியிலும், நவாம்சத்திலும் அதிபலம் பெற்றிருப்பதால் தீர்க்காயுள் என்று கூற வேண்டும். பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் கேது பகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். இந்த ஐந்தாம் பாவத்தைக் கொண்டு குழந்தைகள், குழந்தைகளின் ஒற்றுமை, பிதாமஹர் (தந்தையின் தந்தை அதாவது ஒன்பதாம் வீட்டிற்கு ஒன்பதாம் வீடு, ஒன்பதாம் வீடு தந்தையைக் குறிக்கும் என்பதால், அந்த வீட்டுக்கு ஒன்பதாம் வீடு பாட்டனாரைக் குறிக்கும் என்று அறிய வேண்டும்), புத்தி, பயிற்சி, மனக்கூர்மை, செல்வம், செல்வாக்கு, சமுதாயத்தில் உண்டாகும் பெயர், புகழ் ஆகியவற்றையும் குறிக்கும்.

இந்த வீட்டுக்கு அதிபதியான சுக்கிர பகவான் பன்னிரண்டாம் வீட்டோனாகி ஐந்தாம் வீட்டிற்கு பதினொன்றாம் வீட்டிலும், பன்னிரண்டாம் வீட்டிற்கு நான்காம் வீட்டிலும் இருப்பதும், விபரீத ராஜயோகம் (பன்னிரண்டாம் வீட்டிற்கதிபதி மூன்றாம் வீட்டில் இருப்பது) பெற்றிருப்பதும் சிறப்பாகும். இதனால் மேற்கூறிய காரகத்துவங்கள் நன்றாக வேலை செய்யும் என்றும் கூற வேண்டும்.

ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் ராகு பகவானின் சாரத்தில் (சதய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். ஆறாம் வீட்டுக்கதிபதி ஒன்பதாம் வீட்டில் இருப்பதால், வாழ்க்கையில் பெரிதாக கடனோ, வியாதியோ, விரோதிகளோ ஏற்படாது. செவ்வாய் பகவான் ஆறாம் வீட்டிற்கு நான்காம் வீட்டிலும், பதினொன்றாம் வீட்டுக்கு பதினொன்றாம் வீட்டிலும் இருப்பதால் மேற்கூறிய காரகத்துவங்கள் அனைத்தும் நன்மையாகவே முடியும் என்று உறுதியாகக் கூறலாம்.

களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பூரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். குருபகவானின் ஐந்தாம் பார்வை களத்திர நட்பு ஸ்தானமான தன் மூல திரிகோண வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் சந்திர பகவவானின் மீதும் (குரு சந்திர யோகம்) படிகிறது. எந்த கிரகமும் தன் ஆட்சி உச்ச மூல திரிகோண வீடுகளைப் பார்வை செய்வது சிறப்பாகும் என்பது அனைவரும் அறிந்ததே. குருபகவானின் பார்வை ஏழாம் வீட்டின் மீது படிவதால் தரும குணம், உலக ஞானம் ஆகியவை கை வரப் பெறும். பல பயணங்கள் செய்கின்ற வாய்ப்பும், அனைவரையும் தன் வசப்படுத்துகின்ற காந்த சக்தியும் உண்டாகும். சந்திர பகவானை குரு பகவான் பார்வை செய்தால் மனநிலை சீரடையும். கற்பனை வளம் ஓங்கும். கலைத்துறையில் ஆழ்ந்த அறிவு உண்டாகும். உடல் ஆரோக்கியம், தாய் நலம் இறுதிவரை சீராகவே செல்லும். குரு பகவானின் ஏழாம் பார்வை பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும்செவ்வாய் பகவான் மீதும் (குரு மங்கள யோகம்) படிகிறது. செவ்வாய் பகவானின் பார்வையும் குரு பகவானின் மீதும் படிவதும் சிறப்பாகும். இதனால் அரசாங்கம், இராணுவத்தில் உன்னத பதவி, பொறியியலில் தேர்ச்சி, வீடு, வாகனம், விவசாய நிலங்கள் ஆகியவற்றின் சேர்க்கையும் உண்டாகும்.

குரு பகவானின் ஒன்பதாம் பார்வை லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டின் மீதும் படிகிறது. அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் குணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் சுய சாரத்தில் (அனுஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். சனி பகவான் ஆயுள் காரகராகி தன் மூன்றாம் பார்வையினால் ஆயுள் ஸ்தானத்தைப் (தன் ஆட்சி வீடு) பார்வை செய்வதால், ஆயுள் பலம் கூடும் என்று புரிந்து கொள்ள வேண்டும். அதோடு எட்டாமதிபதி ஆறாம் வீட்டில் விபரீத ராஜ யோகம் பெற்றமர்ந்திருப்பதும் சிறப்பாகும். ராகு பகவான் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானத்தில் சனி பகவானின் சாரத்தில் (அனுஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். ராகு பகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பதால், அஷ்ட லட்சுமி யோகம் உண்டாகிறது. கேது பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சூரிய பகவானின் சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்பராசியை அடைகிறார்.

அவருக்கு லக்னாதிபதி சுக ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருப்பது சிறப்பு. ஆறாமதிபதி ஒன்பதாம் வீட்டில் குரு பகவானின் பார்வையைப் பெற்றமர்ந்திருக்கிறார். ஆறாம் வீட்டிலும் சனி, ராகு பகவான்கள் அமர்ந்திருக்கிறார்கள். மூன்றாம் வீடு தொண்டைப் பகுதியைக் குறிக்கிறது. நான்காம் வீடு மார்பையும், ஐந்தாம் வீடு இதயத்தையும் குறிக்கிறது. நுரையீரலை புத பகவானும், இதயத்தை சூரிய பகவானும் நிர்வகிக்கிறார்கள். மூன்றாம் வீட்டில் குரு சுக்கிர பகவான்களும், நான்காம் வீட்டில் சூரிய பகவானும் அமர்ந்திருக்கிறார்கள். தற்சமயம் குரு மஹா தசையில் சனி பகவானின் புக்தியில் சனி பகவானின் அந்தரம் நடக்கிறது. கோசாரத்திலும் இராசிக்கு இரண்டாம் வீட்டில் குரு சனி பகவான்கள் பலம் பெற்றுச் சஞ்சரிக்கிறார்கள்.

பொதுவாக திடீரென்று உண்டாகும் நோய்களுக்கு ராகு பகவான் காரணமாகிறார். மேலும் காரணம் கண்டுபிடிக்க முடியாத நோய்களுக்கும் ராகு, கேது பகவான்களே காரணமாகிறார்கள். சனி பகவானைப் போல் ராகு பகவான் பலன்களைக் கொடுப்பார் என்றும் உள்ளது. அவருக்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. இன்னும் ஒரு வாரத்திற்குள் முழுமையாக குணமடைந்துவிடுவார். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com