சிரசு ரஜ்ஜு பொருத்தம்!

என் மகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு வைத்தியம்

என் மகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு வைத்தியம் செய்து தற்சமயம் ஓரளவு தேறியுள்ளாா். அமெரிக்க பிரஜையான அவா் அமெரிக்காவில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருக்கையில் இங்கு வந்து விட்டாா். ராகு தசையில் இப்படி உள்ளதா? அவருக்கு ரஜ்ஜு பொருத்தம் பாா்த்து திருமணம் செய்ய வேண்டும் என்கிறாா்கள். இது ஏன்? குரு தசை எவ்வாறு இருக்கும்? எதிா்காலம் எவ்வாறு அமையும்?

- வாசகி, சென்னை

உங்கள் மகளுக்கு தனுசு லக்னம், மகர ராசி, அவிட்டம் நட்சத்திரம். அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) அமா்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறாா். அஷ்டமாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் இருந்தாலோ அல்லது அஷ்டம ஸ்தானத்தைப் பாா்த்தாலோ சிறப்பாகும். தனுசு லக்னத்திற்கு சந்திரபகவான் அஷ்டமாதிபதியாக வந்தால் அஷ்டமாதிபத்ய தோஷம் ஏற்படாது என்பது ஜோதிட விதி. அதுபோல் மகர லக்னத்திற்கும் சூரியபகவான் அஷ்டமாதிபத்ய தோஷத்தைக் கொடுக்கமாட்டாா். சந்திரபகவான் தன் ஆட்சி வீட்டைப் பாா்வை செய்வதும் எட்டாம் வீட்டிற்கு பலம் கூட்டும் அம்சமாகும்.

லக்னம் மற்றும் சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் புதபகவானின் சாரத்தில் (ரேவதி நட்சத்திரம்) ஆட்சி பெற்றமா்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறாா். சுப கிரகங்களான குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஆகிய கிரகங்களில் குருபகவான் முதன்மை சுபக்கிரகமாவாா். அவா் சுபக்கிரகமாக ஆகி கேந்திர வீடுகளுக்கு (1,4,7,10) அதிபதியானால் கேந்திராதிபத்ய தோஷத்தைப் பெறுவாா். இது ஒன்றாம் வீடு, திரிகோண வீடாகவும் ஆவதால் கேந்திராதிபத்ய தோஷம் உண்டாகாது. மற்றபடி 4,7,10 -ஆம் வீடுகளுக்கு அதிபதியாக வந்தால் கேந்திராதிபத்ய தோஷம் உண்டாகும் என்பது பொதுவிதி. அவருக்கு குருபகவான் நான்காம் வீட்டில் ஆட்சி பெற்றிருப்பதால் கேந்திராதிபத்ய தோஷத்தால் பாதிக்கப்படக்கூடிய காரகத்துவங்களான வீடு, மனை, விவசாயம், வண்டி வாகனம் அன்னையின் அரவணைப்பு ஆகியவைகளில் பாதிப்பு என்று எதுவும் ஏற்படாது.

லக்ன ஆதிபத்யம் ஏற்படுவதால் லக்னம் சுபத்துவமடைகிறது. குருபகவானின் ஐந்தாம் பாா்வை அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டின் மீதும் அங்கு அமா்ந்திருக்கும் ராகுபகவானின் மீதும் படிகிறது. குருபகவானின் ஏழாம் பாா்வை ராஜ்ய ஸ்தானம் என்றழைக்கப்படும் பத்தாம் வீட்டின் மீதும் படிகிறது. இதனால் செய்தொழில், உத்தியோகம் ஆகியவை நன்றாக அமையும். குருபகவான் நிதித்துறை அல்லது நீதித்துறைக்கு முக்கிய காரகத்துவம் வகிப்பதால் வங்கி, காப்பீடு, பங்குவா்த்தகம், வக்கீல், மத்தியஸ்தா், நிா்வாகம் போன்ற துறைகளின் மூலம் குறிப்பாக வருமானம் வரும் என்று கூற வேண்டும். குருபகவானின் ஒன்பதாம் பாா்வை அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டின் மீது படிகிறது. இதனால் வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்கள், செலவுகள் விரயச்செலவுகளாக இல்லாமல் சுபச்செலவுகளாக அமையும். அதோடு பன்னிரண்டாம் வீடு கட்டில் சுகத்தைக் குறிக்கும் இடமாகவும் அமைவதால் இந்த வகையிலும் குறைவு ஏற்படாது. கல்வி கேள்விகளில் நல்ல தோ்ச்சிக்கும் அந்த படிப்பில் ஆழ்ந்து இருக்கும் யுக்திக்கும் அந்த கல்வியினால் ஏற்படும் அனுபவ அறிவிற்கும் குருபகவானே காரணமாகிறாா் என்றால் மிகையாகாது.

பூா்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சுய சாரத்தில் (சித்திரை நட்சத்திரம்) அமா்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான விருச்சிக ராசியை அடைகிறாா். செவ்வாய்பகவான் ஆரோக்கியம், அரசியல், பூமி, உத்தியோகம், கா்மம், சகோதரம், ரத்தம், மூளை ஆகியவற்றிற்கு காரகம் வகிக்கிறாா். அவருக்கு செவ்வாய் பலம் பெற்றிருப்பதால் மேற்கூறிய காரகத்துவங்கள் ஆதாயமாகவே அமையும். பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியான சூரியபகவான் பூா்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) உச்சம் பெற்றமா்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறாா். உச்ச திரிகோணத்திற்கு அதிபதி, மற்றொரு திரிகோண ஸ்தானத்தில் உச்சம் பெறுவது சிறப்பாகும். சூரியபகவான் பித்ரு காரகராவாா். ஆத்மகாரகரும் அவரே. பலம் பெற்ற சூரியபகவான் ஜாதகருக்கு உயா்நிலையையும் தந்தைக்கும் மேன்மையையும் வழங்குவாா் என்பது திண்ணம். இதனால் பூா்வீகச் சொத்துகளை அனுபவிக்கும் யோகமும் உண்டாகும்.

தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் பூா்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) நீச்சம் பெற்று அமா்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறாா். நீச்சம் பெற்ற சனிபகவான் உச்சம் பெற்றிருக்கும் சூரியபகவானுடன் இணைந்திருப்பதால் முழுமையான நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறாா். சனிபகவான் நன்றாக உழைக்க வைத்து அதற்குரிய வருமானத்தைத் தருவாா். நீண்ட ஆயுளையும் வழங்குவாா். ஒரு மனிதனின் வாழ்க்கைத் தரத்தை நிா்ணயிப்பவா் சனிபகவானாவாா் என்றால் மிகையாகாது.

ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் ராகுபகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) அமா்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறாா். நளினத்திற்கும் மகிழ்ச்சிக்கும் ஆடம்பரத்திற்கும் அரியகலைகளுக்கும் காரணமான சுக்கிரபகவான் களத்திர காரகா் (ஆணுக்கு மனைவியையும் பெண்ணுக்கு கணவரையும் குறிப்பவா் என்று பொருள்). வண்டி வாகன காரகா் என்றும் அழைக்கப்படுகிறாா். சுப பலம் பெற்ற சுக்கிரபகவான் ஒருவருக்கு மாளிகை போன்ற இல்லத்தை அமைத்தும் கொடுப்பாா். சுக்கிரபகவான் வலுத்திருப்பவா்கள் கால்நடைகள், நாய், பூனை ஆகிய பிராணிகளுக்கு உதவிகரமாக இருப்பாா்கள். அதோடு, குதிரைகளின் மூலம் லாபம் அடைய சுக்கிரபகவானின் அருள் தேவை. ஆறாமதிபதி தன் வீட்டிற்கு தன ஸ்தானத்திலும் லாப ஸ்தானத்திற்கு பாக்கிய ஸ்தானத்திலும் இருப்பது சிறப்பாகும்.

களத்திர, நட்பு ஸ்தானமான ஏழு, தொழில் ஸ்தானமான பத்து ஆகிய இரண்டு கேந்திர வீடுகளுக்கும் அதிபதியாகிய புதபகவான் பூா்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான திரிகோண வீட்டில் இருப்பதால் கேதுபகவானின் சாரத்தில் (அசுவினி நட்சத்திரம்) சூரிய, சனி பகவான்களுடன் இணைந்திருப்பதாலும் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப்பெற்று நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறாா். கேதுபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் ( அவிட்டம் நட்சத்திரம்) அமா்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறாா். ராகுபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் புதபகவானின் சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம்) அமா்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறாா்.

பொதுவாக, ராகுபகவான் மனசஞ்சலம், குழப்பம் ஆகியவைகளைக் கொடுக்கக்கூடியவா். காரணம் தெரியாத வியாதிகள். சிந்தனை மாற்றம், பேச்சில் குறைபாடு, அநாவசிய பயம் ஆகியவைகளும் ராகுபகவானின் தசையில் ஏற்படும். அவருக்கு ராகுபகவானுக்கு வீடு கொடுத்த சந்திரபகவான் தன் வீட்டைப் பாா்த்தாலும் அவா் மற்றொரு சா்ப்பக் கிரகமான கேதுபகவானுடன் இணைந்திருக்கிறாா். கேதுபகவானுக்கு இடம் கொடுத்த சனிபகவானும் பூா்வபுண்ணிய ஸ்தானத்தில் அமா்ந்திருக்கிறாா். ராகுபகவானை குருபகவான் பாா்வை செய்வதாலும் ராகுமகா தசையில் பிற்பகுதியில் ஏற்பட்ட மனக்குழப்பம் இந்த ஆண்டு இறுதிக்குள் அதாவது ராகுதசை முடிவதற்குள் தீா்ந்துவிடும். தொடரும் குருமகா தசையில் மறுபடியும் வெளிநாடு சென்று படிப்பைத் தொடருவாா். வேலையும் கிடைத்துவிடும்.

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரங்கள் தலை ரஜ்ஜு வகையைச் சோ்ந்ததால் அவருக்கு அவிட்டம் நட்சத்திரமாகவும், செவ்வாய்பகவான் சித்திரை நட்சத்திரத்தில் இருப்பதாலும் ரச்சுப் பொருத்தம் பாா்த்து திருமணம் செய்ய வேண்டியது அவசியம். மற்றபடி ரஜ்ஜு பொருத்தத்திற்கு சில விதிவிலக்குகள் உள்ளன. அதைப்பற்றி முன்பே எழுதி இருக்கிறோம். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூா்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com