அஷ்ட லட்சுமி யோகமும் அஷ்ட மகா நாக யோகமும்... 

என் மகனுக்கு 16 வயதாகிறது. சென்ற ஆண்டு திடீரென்று ஓடமுடியாமல் போய், பிறகு நடக்கும் போது பலமுறை விழுந்து விடுவார்.

என் மகனுக்கு 16 வயதாகிறது. சென்ற ஆண்டு திடீரென்று ஓடமுடியாமல் போய், பிறகு நடக்கும் போது பலமுறை விழுந்து விடுவார். இது நரம்பு, சதை சம்பந்தப்பட்ட நோய் என்று மருத்துவர்கள் கூறினார்கள். தற்சமயம் வைத்தியம் பார்க்கிறோம். சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருடைய ஜாதகம் எப்படி உள்ளது. இது எப்பொழுது குணமடையும். ஆயுள் எவ்வாறு உள்ளது. எதிர்காலம் எவ்வாறு அமையும்?

-வாசகர்

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், மகர ராசி, உத்திராடம் நட்சத்திரம். பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியான சந்திர பகவான், தைரிய முயற்சி வைராக்ய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் தொழில் ஸ்தானாதிபதியான சூரிய பகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். 

பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்வதால் திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நிறைவேறும். சாதாரணமாக வாழ்ந்து வந்தவர்கள் திடீரென உயர்ந்த நிலையை எட்டி விடுவார்கள். 

உள்நாட்டு, வெளிநாட்டு விவகாரங்களும் அனுகூலமாக முடியும். மூன்றாம் வீட்டைக் கொண்டு உள்நாட்டுப் பயணங்களையும், ஒன்பதாம் வீட்டைக் கொண்டு நெடுந்தூரப் பயணங்களையும் அறிய முடியும். 

பாக்கிய ஸ்தானம் வலுத்திருப்பதால் வெளிநாடு சென்று வசிக்கும் யோகம் உண்டாகும் என்று உறுதியாகக் கூறலாம். சந்திர பகவான் உடல் காரகராகவும் 
ஆவதால் உடல்நிலை அற்புதமாகக் காணப்படும். பொருளாதாரமும் மேன்மையுடன் காணப்படும். ஸ்பெகுலேஷன், லாட்டரியின் மூலமாகவும் கணிசமான தொகை கைக்கு வரக்கூடும். 

கடினமான சூழ்நிலையிலும் உற்சாகமான மனநிலை இருக்கும். தந்தையின் வாழ்க்கைத் தரமும் சிறப்பாக அமையும். சந்திர பகவான் தாய் காரகராகவும் ஆகி அவர் பித்ரு காரகரான சூரிய பகவானின் சாரத்தில் அமர்ந்திருக்கிறார். 

பாக்கியாதிபதி தொழில் ஸ்தானாதிபதியின் சாரத்தில் அமர்ந்திருப்பதும் ஒருவகையான தர்மகர்மாதிபதி யோகமாகும். மனோகாரகராகவும் ஆவதால் சந்திர பகவான் மனோ தைரியத்தையும் கூட்டுவார். உறுதியான முடிவுகளையும் எடுப்பார். 

லக்னம் மற்றும் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் ருணம் ரோகம் சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். 

லக்னாதிபதி ஆறாம் வீட்டிற்குச் செல்வது குறையென்றாலும், அவரே ஆறாம் வீட்டிற்கும் அதிபதியாவதால் ஆறாம் வீடு சுப பலம் பெறுகிறது என்று கூறவேண்டும்.

அதோடு துர்ஸ்தானாதிபதியான ஆறாம் வீட்டுக்கதிபதி ஆறாம் வீட்டிலேயே மூலத்திரிகோணம் பெற்று அமர்ந்திருப்பது விபரீத ராஜ யோகத்தைக் கொடுக்கும். 

செவ்வாய் பகவானின் நான்காம் பார்வை பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டின் மீதும், ஏழாம் பார்வை அயன மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் கேது பகவானின் மீதும், எட்டாம் பார்வை லக்னத்தின் மீதும் படிகிறது. லக்னாதிபதி லக்னத்தைப் பார்ப்பது சிறப்பாகும். 
ஆறாம் வீட்டில் ராகு பகவான் சுக்கிர பகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். கேது பகவான் அயன மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் குரு பகவானின் சாரத்தில் (பூரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். 

ஆறாம் வீட்டில் ராகு பகவான் அமர்ந்திருப்பது அஷ்ட லட்சுமி யோகமாகும்.


அதோடு ஆட்சி பெற்றுள்ள செவ்வாய் பகவானுடன் இணைந்திருப்பதால் அஷ்ட மஹா நாக யோகமும் உண்டாகிறது. ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான் வறுமையை விரட்டுவார். வளமையை அதிகப்படுத்துவார். 

பகை, எதிர்ப்பு, வம்பு, வழக்கு விவகாரங்கள் எதுவானாலும் வெற்றி உண்டாகும். கடன் தொந்தரவுகளும் உடனடியாகத் தீர்ந்து விடும். நீண்ட நாள் பிணிகளும் விலகி, ஆரோக்யம் அபிவிருத்தி அடையும். 

இந்த யோகத்தால் செய்தொழிலில் முன்னேற்றமும், வருமான உயர்வும், வசதிப் பெருக்கமும் நிரந்தரமாக உண்டாகும் என்றால் மிகையாகாது. 

தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பூரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார்.

குரு பகவானின் ஐந்தாம் பார்வை தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டின் மீது படிகிறது.

இதனால் எதிர்வரும் சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றல் உண்டாகும். 

பொருளாதார வசதி மேன் மேலும் பெருகிக்கொண்டே போகும்.  

குரு பகவானின் ஏழாம் பார்வை சுக ஸ்தானமான நான்காம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் சூரிய பகவானின் மீதும் படிகிறது. தொழில் ஸ்தானத்தை ராஜ்ய ஸ்தானம் என்று கூறுவார்கள்.  ராஜ்ய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் தன பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான குருபகவான் சுகஸ்தானமான நான்காம் வீட்டில் அமர்ந்திருக்கும் ராஜ்யாதிபதியைப் பார்வை செய்கிறார்.  இதனால், முழுமையான சிவராஜ யோகம் உண்டாகிறது. 

ஸ்திர சொத்து வகையில் அடிக்கடி பலன் பெறக் கூடிய வாய்ப்பு உண்டாகும். வண்டி வாகனங்களையும் அடிக்கடி மாற்றியமைக்க வாய்ப்புண்டாகும்.

குரு பகவானின் ஒன்பதாம் பார்வை ஆறாம் வீடான வெற்றி ஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் செவ்வாய் ராகு பகவான்களின் மீதும் படிகிறது.

செவ்வாய் பகவானை குரு பகவான் பார்வை செய்வதால் குரு மங்கள யோகமும், ராகு பகவானைப் பார்வை செய்வதால் அஷ்ட லட்சுமி யோகமும் சிறப்பாக வேலை செய்யும்.

தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் அஷ்டமஸ்தானமான எட்டாம் வீட்டில் ராகு பகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மகர ராசியை அடைகிறார். 

சனி பகவானின் மூன்றாம் பார்வை தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் குரு பகவானின் மீதும், ஏழாம் பார்வை தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தின் மீதும், பத்தாம் பார்வை பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் உச்சம் பெற்றிருக்கும் சுக்கிர பகவானின் மீதும் படிகிறது. இதனால் தீர்க்காயுள் உண்டு.

களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், அயன மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் புத பகவானின் சாரத்தில் (ரேவதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். 

பொதுவாக ஏழாமதிபதி ஆட்சி உச்சம் பெற்று ஏழாமிடம் சுத்தமாக (கிரகங்கள் இல்லாமல் இருப்பது) இருந்தால், அந்த ஜாதகருக்குப் போற்றுதற்குரிய களத்திரம் (கணவன்/மனைவி) அமைவார். திருமணத்திற்குப் பிறகு நல்ல புகழுடன் விளங்குவார் என்றும் கூறப்பட்டுள்ளது. 

அதோடு பல வழிகளில் செல்வம் சேரும். அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சந்திர பகவானின் சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். 

தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கதிபதியான சூரிய பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் செவ்வாய் பகவானின் சாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார்.

உங்கள் மகனுக்கு நரம்பு, சதை சம்பந்தப்பட்ட நோயாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக சொல்லியிருக்கிறீர்கள்.  புத பகவான் நரம்புக்கும் அந்த நரம்புகளுக்கு கட்டளை இடும் மூளையையும், சதைக்கும் குரு பகவான் காரகத்துவம் பெறுகிறார்.

நிரந்தர உபாதைகளுக்கு ஆறாம் வீடு, ஆறாமதிபதியும் அசுப பலம் பெற்று அமர்ந்திருக்க வேண்டும். 

புத பகவானும் குரு பகவானும் சுப பலம் பெற்று இருக்கிறார்கள். 

லக்னாதிபதி ஆறாமதிபதியுமாகி  ஆறாம் வீட்டில் வலுத்து பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி மற்றும் பூர்வ புண்ணிய காரகரான குரு பகவானால் பார்க்கப்படுவதால் அவருக்கு நீங்கள் செய்து வரும் வைத்தியத்தில் உடலுபாதை உறுதியாகத் தீர்ந்து விடும். 

மேலும், தற்சமயம் செவ்வாய் பகவானின் தசையில் குரு பகவானின் புக்தி நடக்கிறது. அஷ்ட வர்க்கத்தில் லக்னத்திற்கு 37 பரல்களும், ஆறாம் வீட்டிற்கு 28 
பரல்களும் கிடைக்கிறது.

இதனால் லக்னம் ஆறாம் வீட்டை விட கூடுதல் பலம் பெற்றிருக்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டும். 

இன்னும் இரண்டரை ஆண்டுக்குள் முழுமையாக நலம் பெற்று விடுவார். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com