அறுவை சிகிச்சை தவிர்க்க..

என் மனைவிக்கு மூச்சுத் திணறல், பிளேட்லெட் குறைபாடு இருந்தது. அதற்குத் தக்க வைத்தியம் செய்யப்படுகிறது.

என் மனைவிக்கு மூச்சுத் திணறல், பிளேட்லெட் குறைபாடு இருந்தது. அதற்குத் தக்க வைத்தியம் செய்யப்படுகிறது. தற்சமயம் முதுகு தண்டு வடத்தில் ஜவ்வு நகர்ந்து தாங்க முடியாத வலி ஏற்பட்டு, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். அறுவை சிகிச்சை அவசியமாகச் செய்ய வேண்டுமா? தசா புக்திகள் சாதகமாக உள்ளதா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? 

வாசகர், சென்னை.

உங்கள் மனைவிக்கு சிம்ம லக்னம், கன்னி ராசி, உத்திரம் நட்சத்திரம். லக்னாதிபதியான சூரிய பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். லக்னாதிபதி, சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் அதாவது ஒரு கேந்திர வீட்டில் இருப்பதும், சுபாவ அசுபக் கிரகங்களுக்கு கேந்திர வீடுகளில் பலம் அதிகம் என்பது ஜோதிட விதி. இதனால் இறுதிவரை குடும்பத்தில் சுகமும், வீடு, வண்டி, வாகன வசதிகள் ஆகியவைகளுக்கும் குறைவு ஏற்படாது.
பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். சூரிய, குரு பகவான்களின் சேர்க்கை சிவராஜ யோகமாகும். 
சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். கேந்திராதிபதி கேந்திர ஸ்தானத்திலும், திரிகோணாதிபதி கேந்திர ஸ்தானத்திலும் அமர்ந்திருப்பது சிறப்பு. 
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் சுக ஸ்தானத்தில், சுய சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். 
தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் சுய சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் தன் மூலத் திரிகோண வீடான துலாம் ராசியை அடைகிறார். 
ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். 
ராகு பகவான் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். ராகு பகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அஷ்டலட்சுமி யோகம் உண்டாகிறது. 
கேது பகவான் அயன, மோட்ச ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். லக்னாதிபதி சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் குரு பகவானுடன் ஒரே பாகையில் அமர்ந்திருப்பது சிறப்பாகும். 
அவருக்கு மூன்று உபாதைகள் உள்ளன என்று கூறியுள்ளீர்கள். அவருக்கு மூச்சுத் திணறல் பிரச்னை, பிளேட்லெட் குறைபாடு, முதுகு தண்டு வடத்தில் ஜவ்வு நகர்ந்தது ஆகிய குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளீர்கள். 
மூச்சுத் திணறலுக்கு புத பகவானும், பிளேட்லெட்டுகளுக்கு செவ்வாய் பகவானும், முதுகு தண்டு வடப் பிரச்னைகளுக்கு சனிபகவானும் காரணமாகிறார்கள். வியாதி என்று எடுத்துக்கொண்டால் ஆறாமதிபதியின் பலத்தை லக்னாதிபதியின் பலத்துடன் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். 
சனி பகவான் சூரிய பகவானின் சாரத்தில் பத்தாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். புத பகவான் சுக ஸ்தானத்திலும், செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்திலும் அமர்ந்திருக்கிறார்கள். இந்த மூன்று கிரகங்களும் லக்னாதிபதியான சூரிய பகவானுடன் ஏதோ ஒரு வகையில் சம்பந்தம் பெற்றிருக்கிறார்கள். இதனால் லக்னாதிபதி ஆறாம் வீட்டுக்கதிபதியை விட சற்று கூடுதல் பலம் பெற்றிருக்கிறார். 
எனவே, அறுவை சிகிச்சை செய்யத் தேவையில்லை. 
அடுத்த மாதம் கோசாரத்தில் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் குரு, சனி பகவான்கள் இணைகிறார்கள். சந்திர ராசிக்கு சனி பகவான் ஆறாம் வீட்டுக்கதிபதி ஆகிறார். 
தற்சமயம் குரு மஹா தசையில் பன்னிரண்டாமதிபதியான சந்திர பகவானின் புக்தி முடியும் தருவாயில் உள்ளது. அதனால் அடுத்த ஆண்டு தொடங்கியவுடன் உடல் ஆரோக்யம் சீரடைந்து விடும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com