என் மகனுக்கு ஆடிட்டர் படிப்பு ஏற்றதா? நல்ல வேலை கிடைக்குமா? அல்லது வேறு துறையில் ஈடுபடலாமா?
-வாசகர், கோவை
உங்கள் மகனுக்கு மீன லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். லக்னம், தொழில் ஸ்தானாதிபதி குரு பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் லாப, அயன ஸ்தானாதிபதியான சனி பகவானுடன் இணைந்திருக்கிறார்.
குரு பகவானின் ஐந்தாம் பார்வை களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டின் மீதும், ஏழாம் பார்வை பாக்கிய ஸ்தானத்தின் மீதும், அங்கமர்ந்திருக்கும் சந்திர (கஜ கேசரி யோகம்) பகவானின் மீதும், ஒன்பதாம் பார்வை லாப ஸ்தானத்தின் மீதும், அங்கமர்ந்திருக்கும் கேது பகவானின் மீதும் படிகிறது. சந்திர பகவானின் ஆட்சி வீடான கடக ராசியில் செவ்வாய் பகவான் நீச்சம் பெற்று, பரிவர்த்தனையும் பெற்றிருப்பதால் சந்திர, செவ்வாய் பகவான்கள் இருவருக்கும் நீச்ச பங்க ராஜ யோகம் உண்டாகிறது.
பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் செவ்வாய் பகவானுடன், சுக களத்திர நட்பு ஸ்தானாதிபதி புத பகவானும், சூரிய, ராகு பகவான்களும் இணைந்திருக்கிறார்கள். தைரிய, அஷ்டமாதிபதியான சுக்கிர பகவான் ஆறாம் வீடான சிம்ம ராசியில் விபரீத ராஜ யோகம் பெற்றமர்ந்திருக்கிறார். அவருக்கு ஆடிட்டர் படிப்பு ஏற்றதே. தற்சமயம் சுக்கிர மஹா தசையில் சந்திர புக்தி நடப்பதால் தொடர்ந்து படித்து வரச் சொல்லவும். தேர்ச்சி அடைந்தவுடனே நல்ல வேலை கிடைத்துவிடும். பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும், தாயாரையும் வழிபட்டு வரவும்.