கிரகநிலை
தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - பஞசம ஸ்தானத்தில் சனி, ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) - லாப ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள்
கிரக மாற்றங்கள்
06.03.2026 அன்று பஞசம ஸ்தானத்தில் இருந்து சனி பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26.05.2026 அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருந்து குரு பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13.11.2026 அன்று ராகு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13.11.2026 அன்று கேது பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்
இந்த வருடம் தெளிவான மனநிலை இருக்கும். இக்கட்டான சூழ்நிலையில் சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராகச் சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும்.
தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். ஆனாலும் லாபம் அதிகரிக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வதன்மூலம் கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். துணிந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். அதன் மூலமாகப் பல நன்மைகளையும் பெறுவீர்கள் புத்தம் புதிய விஷயங்களைப் புகுத்திப் பல லாபங்களைப் பெறுவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்கப் பெறுவார்கள். ஆனால் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தைரியமான நடவடிக்கைகளால் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்வீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு பணியிட மாற்றம் வந்து சேரும்.
குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டு பேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாகப் பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாகப் பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும்.
பெண்களுக்கு எதிலும் சாமர்த்தியமாகச் செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். மாங்கல்ய ஸ்தானம் பலமாக இருப்பதால் கண்டிப்பாகத் திருமணமாகாத பெண்களுக்குத் திருமணம் நடைபெறும் குழந்தைச் செல்வம் கிடைக்கும்.
கலைத்துறையினருக்குக் கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டி இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை
அரசியலில் உள்ளவர்களுக்குக் கோபமாகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். எந்த ஒரு சூழ்நிலையிலும் பொறுமை நிதானம் அவசியம் வார்த்தைப் பிரயோகம் மிக மிக முக்கியம்
மாணவர்களுக்கு செயல்திறத்தை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களைப் படிப்பது நல்லது. மேற் கல்வி சம்பந்தமாக இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கும்
சித்திரை 3, 4 பாதங்கள்
இந்த வருடம் வேலைப் பளு குறைந்து காணப்படுவார்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக் கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும். நீங்கள் எதிர்ப்பவர்களை வெற்றி கொள்வீர்கள். பணவரத்து அதிகரிக்கும். எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.
சுவாதி
இந்த வருடம் மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையைத் திறமையுடன் செய்து முடித்துப் பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்திலிருந்த டென்ஷன் நீங்கும் கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
விசாகம் 1, 2, 3 பாதங்கள்
இந்த வருடம் எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லா காரியங்களும் நல்ல படியாக நடக்கும். எடுத்துக் கொண்ட வேலைகளிலிருந்த பிரச்சனைகள் தீரும். ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். வீண் செலவு ஏற்படும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். எதிலும் கவனமாக இருப்பது நன்மை தரும். பணவரத்தை அதிகப்படுத்தும். பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும்.
பரிகாரம்: நரசிம்மருக்கு பானகம் நிவேதனம் செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி
அதிர்ஷ்ட ஹோரைகள்: சுக்ரன் - சனி - புதன்
எண்கள்: 4, 6, 9
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.