சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2025: மகரம்

மகர ராசிக்காரர்களுக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை விரிவாக தெரிந்துகொள்வோம்.
மகர ராசி
மகர ராசி
Published on
Updated on
3 min read

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

மனசாட்சிக்கு விரோதமான காரியங்களை செய்யாத மகர ராசி அன்பர்களே, நீங்கள் வானத்தில் கோட்டை கட்டுபவர்கள். பிறருக்கு கொடுத்து கொடுத்தே மகிழ்ச்சியடைவீர்கள். பொதுவாக நீங்கள் சாதுவானவர். சாதனையாளர்களாக வலம் வந்து மற்றவர்களுக்கு பயன் தருபவர்கள். எப்படி இருக்கப் போகிறது இந்த சனிப்பெயர்ச்சி..

கிரகநிலை

இதுவரை உங்களது தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி தைரிய வீரிய ஸ்தானத்திற்கு செல்கிறார்.

மூன்றாம் பார்வையால் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், எழாம் பார்வையால் பாக்கிய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் அயன சயன போக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

ஏழரைச் சனியின் ஆரம்பத்தில் இருக்கிறீர்கள். விரையஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் உங்களை எதிலும் நிதானமாகவும், அளவெடுத்துச் சிறப்பாகவும் செயல்பட வைப்பார். இதனால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசி, காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். இல்லத்தில் திருமணம், குழந்தைப் பிறப்பு போன்ற சுப காரியங்கள் நடக்கும். பூர்வீக சொத்துக்கள், சிரமமில்லாமல் கை வந்து சேரும். ஆலயத் திருப்பணிகளிலும், தர்ம காரியங்களிலும் ஈடுபடுவீர்கள்.

வருமானம், எதிர்பார்ப்பிற்கும் அதிகமாகக் கிடைக்கும். தேக ஆரோக்யம் சீராக இருக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து வரும் நல்ல செய்திகள் உங்களின் செவிகளைக் குளிர்விக்கும்; ஆதாயமும் நல்கும். உங்களின் சுய முயற்சியின் அடிப்படையில் செயற்கரிய காரியங்களைச் செய்வீர்கள்.

உங்களால் சகோதர, சகோதரிகளுக்கும் நன்மை உண்டாகும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவீர்கள். உங்களின் கருத்துக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும். உங்கள் மீது சுமத்தப்பட்ட வீண் பழிகளில் இருந்தும், வழக்குகளில் இருந்தும் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு விடுபடுவீர்கள்; அதற்கான இழப்பீடுகளும் கிடைக்கும்.

புத்தி தெளிவுடன் சனி பக்வான சில சந்தர்ப்பங்களில் அவசர புத்தியைக் கொடுப்பார். எதிர்பாராத விதத்தில் தீயவர்களின் தொடர்பும் ஏற்படும். இதற்காக அஞ்சத் தேவையில்லை. நீங்கள் ஓய்வெடுக்காமல் உழைத்துக்கொண்டே இருப்பீர்கள். அதனால் நற்பலன்களும் உள்ளன. செய்தொழிலில் தினமும் வருமானம் வந்துகொண்டே இருக்கும். சிலருக்குப் புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். மற்றவர்களைத் தலைமை தாங்கி வழி நடத்திச் செல்லும் அளவிற்கு உயர்வீர்கள்.

கல்வி, கேள்விகளில் அரிய சாதனைகள் புரிய வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். செல்வத்தோடு செல்வாக்கும் உயரும். எதிர்பாராத இடங்களிலிருந்து தக்க உதவிகளைப் பெறுவீர்கள். உங்களின் தன்னம்பிக்கை உயரும். பேச்சில் வசீகரமும், நடையில் கம்பீரமும் ஏற்படும். தத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபட மனம் விழையும். உங்களின் செயல்களை முறைப்படுத்திச் செய்வீர்கள்.

 உத்யோகஸ்தர்கள், அனைத்து வேலைகளையும் குறித்த காலத்திற்குள் முடித்து, மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கு உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்வீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். சக ஊழியர்களுக்கும் உதவி செய்வீர்கள்.

வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். கூட்டாளிகளை அரவணைத்துச் சென்று காரியங்களைச் செய்யவும். புதிய சந்தைகளை நாடிச் செல்லும்போது கவனமாக இருக்கவும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும்.

அரசியல்வாதிகளைத் தேடிப் புதிய பதவிகள் வரும். செய்கின்ற காரியங்களில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். பொதுநலனோடு இயைந்த சமுதாய நலன் சார்ந்த எண்ணங்களைச் செயல்படுத்த முனைவீர்கள். தொண்டர்களை அரவணைத்துச் சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். மறைமுக எதிர்ப்புகள் அகலும்.

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்குத் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனாலும் உங்கள் சுய கௌரவத்துக்குப் பங்கம் ஏற்படாது. சக கலைஞர்களின் உதவியால் உங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள்.

பெண்மணிகள், குடும்பத்தில் அனுகூலமான சூழ்நிலையைக் காண்பீர்கள். உங்கள் உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்கள் பாசத்தோடு பழகுவார்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். பெரியோரின் ஆலோசனைப்படி நடந்துகொண்டு, குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டாலும் தப்பித்துக்கொள்வீர்கள்.

மாணவமணிகள், படிப்பில் சிறப்பான கவனம் செலுத்துவீர்கள். பாடங்களை முன்னதாகவே படித்து முடித்து, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்; எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவீர்கள். விளையாட்டுகளில் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். பெற்றோர்கள் உங்களுக்குப் பக்க பலமாக இருப்பதால் முயற்சிகளைத் தீவிரப்படுத்தலாம்.

உத்திராடம் 2, 3, 4 பாதம்

தலைமை தாங்கி துணிச்சலுடன்  எதையும் செய்வீர்கள். செலவு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில்  செல்லும் போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கூடுதல் கவனம் தேவை.  வீண் தகராறு ஏற்படலாம். செலவை  குறைப்பதன் மூலம் பணத்தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும்.

திருவோணம்

பணிபுரியும் இடங்களில் எச்சரிக்கையுடன்  இருப்பது நல்லது. குறிப்பாக எந்திரங்களை இயக்கும் போது கவனம் தேவை. மேலிடத்தின் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தில் குதூகலமான சுப பலன்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே பந்தபாசம் அதிகரிக்கும். குழந்தைகளின் மூலம் மனம் மகிழும்படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது.

அவிட்டம் 1,2 பாதம்

மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தை குறைப்பது நன்மையை தரும். கலைத்துறையினருக்கு கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள்.  கடன் பிரச்சனை தீரும்.  இதுவரை இருந்த இறுக்கமான நிலை மாறும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. மாணவர்களுக்கு மற்றவர்களுடன் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. கல்வி பற்றிய மனக்கவலை ஏற்பட்டு விலகும்.

பரிகாரம்

ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க  வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.

சிறப்பு பரிகாரம்

அருகம்புல்லை அருகிலிருக்கும் சாத்தி விநாயகருக்கு வழிபடவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்

“ஓம் ஸ்ரீம்கணபதயே நம” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், சுக்கிரன்

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு

அதிர்ஷ்ட கிழமைகள்:  திங்கள், செவ்வாய், வெள்ளி 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com