ஸ்மார்ட் ஃபோன் செயலிகளை காரில் இணைப்பதால் தரவுகள் திருடப்படும் அபாயம்
By DIN | Published On : 28th May 2022 05:26 PM | Last Updated : 28th May 2022 05:27 PM | அ+அ அ- |

கோப்புப் படம்
உயர்தர கார்களான டெஸ்லா, நிசான், ரினால்ட், ஃபோர்டு, வோக்ஸ்வேகன் கார்களில் மூன்றாம் தரப்பு ஸ்மார்ட் ஃபோன் செயலிகளை இணைப்பதன் மூலம் கார் உரிமையாளர்களின் தரவுகள் திருடப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று (மே 27) வெளியான அறிக்கை ஒன்றில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அதிலும், இது போன்று காரில் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஐந்தில் ஒன்றில் அந்த செயலியை தொடர்பு கொள்ளும் தகவல் எதுவும் கொடுக்கப்படவில்லை. இதனால் அந்த செயலி குறித்து புகார் தெரிவிப்பதும் கடினமான ஒன்றாக உள்ளது.
காஸ்பர்ஸ்கையின் (kaspersky) இணைக்கப்பட்ட செயலிகள் என்ற அறிக்கையில் கார்களை ஸ்மார்ட் ஃபோனுடன் இணைக்க 69 மூன்றாம் தரப்பு செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய காஸ்பர்ஸ்கையின் பாதுகாப்புத் தலைவர் செர்ஜி சோரின் கூறியதாவது, ” இணைக்கப்பட்ட உலகத்தின் நன்மைகள் ஏராளமாக உள்ளன. இருப்பினும், நாம் இது போன்ற தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருபவை என்பதையும், அதனால் அதிக அளவில் ஆபத்து உள்ளன என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். துரதிர்ஷ்டவமாக தரவுகள் என வரும் போது இது போன்ற செயலியை உருவாக்குபவர்கள் அதற்கு பொறுப்பேற்றுக் கொள்வதில்லை. இந்த செயலியைப் பயன்படுத்துபவர்கள் தங்களது தனிப்பட்ட சுய விவரங்களை பகிர்ந்து கொள்கின்றனர். அவ்வாறு அவர்கள் பகிர்ந்து கொள்ளும் தரவுகள் சட்ட விரோதமான இணையத்தின் (dark web) மூலம் தவறானவர்களின் கைகளுக்குச் செல்வதற்கு வாய்ப்புள்ளது.” என்றார்.
இணையத்தினைப் பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் உங்களது தரவுகளை மட்டுமல்லாது உங்களது வாகனத்தினையும் அவர்கள் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடியும். வாகனங்களைக் கட்டுப்படுத்தும் செயலிகளின் மூலம் பயனாளர்கள் அவர்களது வாகனங்களை தொலைவிலிருந்தே இயக்க முடியும். காரின் கதவினை திறப்பது, மூடுவது, தட்பவெப்பநிலையை மாற்றியமைப்பது போன்ற செயல்களை இந்த செயலிகளின் உதவியால் தொலைவிலிருந்தே செய்ய முடியும்.
கார் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கென ஒரு நம்பகமான செயலியை உருவாக்கியிருக்கும் போதிலும், மூன்றாம் தரப்பு செயலிகள் பயனாளிகளிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அதற்குக் காரணம் காரினைத் தயாரிக்கும் நிறுவனங்களே அறிமுகம் செய்யாத பல்வேறு சிறப்பு அம்சங்களை இந்த மூன்றாம் தரப்பு செயலிகள் பயனாளர்களுக்கு தருவதே ஆகும்.
மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தும் அனைத்து விதமான கார் பயனார்களிடமும் காஸ்பர்ஸ்கை தனது ஆய்வினை மேற்கொண்டது. அதில் முதல் ஐந்து இடங்களில் டெஸ்லா, நிசான், ரினால்ட், ஃபோர்டு, வோக்ஸ்வேகன் போன்ற கார்களிலேயே இது போன்ற செயலிகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. அதேசமயம், இந்த செயலிகள் பாதுகாப்பானவை இல்லை எனவும் ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்றாம் தரப்பு செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் (Google play store) 2 லட்சத்து 39 ஆயிரத்திற்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. எப்படி பயனாளர்கள் மூன்றாம் தரப்பு செயலியை நம்பி தங்களது தரவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது ஆச்சார்யமாக இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.