எனக்கு வயது 51 ஆகிறது. மூன்று மாதங்களாக பின்பக்கம் ஊரல் இருந்து வருகிறது. இது எப்படி வரும் என்றால் இரவில் படுக்கும் போது ஊரல் இருக்கும், பகலில் இருக்காது. இந்த ஊரல் கொசு கடித்தால் அரிக்குமே அதுபோல் இருக்கிறது. இந்த நோய்க்கு ஆயுர்வேத மருத்துவம் ஏதேனும் உள்ளதா?
-கா.திருமாவளவன்,
திருவெண்ணெய்நல்லூர்.
இரவின் குளிர்ச்சியால் கபதோஷத்தினுடைய சில குணங்களாகிய நெய்ப்பு, கனம், மந்தம், வழவழப்பு போன்றவை உடலில் ஏற்றமடைந்து, இரத்தத்தின் வழியே தோலைச் சென்றடைவதால், நீங்கள் குறிப்பிடுவது போல் ஊரல் ஏற்படக்கூடும். கபம் சீற்றமடைவதற்கான காரணங்களை ஸுஸ்ருதர் எனும் முனிவர், தான் இயற்றிய ஸுஸ்ருத ஸம்ஹிதை எனும் ஆயுர்வேத நூலில் குறிப்பிடுகிறார்.
பகல் தூக்கம், உடற்பயிற்சியே இல்லாத சோம்பலான வாழ்க்கை, சோம்பலுடன் படுத்திருப்பதில் ஆர்வம், இனிப்பு, புளிப்பு, உப்பு, குளிர்ச்சி, நெய்ப்பு, எளிதில் செரிக்காதவை, வழவழப்பு, கொசகொசப்பு நிறைந்த உணவு வகைகளில் நாட்டம், பார்லி, உளுந்து, கோதுமை, எள்ளு, மாவுப்பொருட்கள், தயிர், பால், பாயசம், கரும்புச்சாறிலிருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகள், நீரில் வாழும் பிராணிகளின் மாமிசம், தாமரைத்தண்டு, இனிப்பான பழங்கள், கொடியினத்தைச் சார்ந்த பழங்கள், ஒன்றோடு ஒன்று பொருந்தாத உணவு வகைகள், முன் உண்ட உணவு செரிக்காத நிலையில் அடுத்த உணவைச் சாப்பிடுதல் ஆகியவை கபம் சீற்றமடைவதற்கான காரணங்களாகக் குறிப்பிடுகிறார்.
சீற்றமுறும் குணங்களே செயல் வடிவமாக உருமாறி மனிதர்களை நிலைகுலையச் செய்கின்றன. அதனால் அவற்றை உடல் உட்புறங்களிலிருந்து பிரித்தெடுத்து வாந்தி சிகிச்சையின் மூலம் வெளியேற்றும் போது, தோல் உபாதைக்கான தீர்வு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
உபாதையை அழுத்தி அமர வைக்கும் மாத்திரை மருந்துகளால் பக்கவிளைவுகளே அதிகம் ஏற்படும். மேலும் தகுந்த காரணங்கள் கிடைத்ததும் அவை மறுபடியும் தூண்டப்படுகின்றன.
சரக்கொன்றைப் பட்டையை சுமார் 15 கிராம் எடுத்து சிராத்தூள் போல் சீவி, ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு 500 மி.லி. ஆகக் குறுகியதும் வடிகட்டி தயாராக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு நாளில் 2-3 வேளை சிறிது சிறிதாகக் குடித்து வரவும். ஆரக்வதாதி கஷாயம் சுமார் 15 மிலி எடுத்து 60 மி.லி. வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து ஒரு வில்வாதி குளிகையை அரைத்துச் சேர்த்து காலை, மாலை வெறும் வயிற்றில் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலமாக, உங்களுக்கு ஏற்பட்டுள்ள உபாதை குறைய வாய்ப்பிருக்கிறது. தினவு ஏற்படாத வண்ணம் இந்த கஷாயம் உதவிடக்கூடும்.
மத்திய வயதுடைய உங்களுக்கு, குடலை அப்பழுக்கற்றதாக வைத்திருக்க வேண்டிய நிர்பந்தம் இருப்பதால், திருவிருத்லேஹ்யம் மற்றும் மாணிபத்ரம் எனும் லேகிய மருந்தை, பதினைந்து தினங்களுக்கு ஒரு முறை காலையில் வடித்த கஞ்சி செரித்து, மதியம் பசி எடுத்துள்ள நிலையில், இரண்டு மருந்தையும் ஒன்றாகக் கலந்து சுமார் 20-25 கிராம் அளவில் நக்கிச் சாப்பிடவும். நன்றாக பேதி ஆன பிறகு, மதியம் மிளகு, சீரகம், பூண்டு போட்டு தயாரித்த ரசம், சூடான புழுங்கலரிசிச் சாதத்துடன் கலந்து, சுட்ட அப்பளத்துடன் சாப்பிடவும். அதிக அளவில் பேதியானால், கெட்டியான தயிர்சாதம் சாப்பிட்டால் பேதி நின்றுவிடும்.
தோல் உபாதைகளைத் தவிர்க்க நீங்கள் பயன்படுத்தும் படுக்கை, துணி விரிப்புகள், தலையணை உறை, உள்ளாடைகள் அனைத்தும் நன்றாக தோய்த்து வெயிலில் காயபோட்டு பயன்படுத்தவும். குளிக்கக்கூடிய தண்ணீரில் வேப்பிலை, அருகம்புல் போட்டுக் காய்ச்சி, உடலெங்கும் தூர்வாதி கேரதைலம் எனும் மூலிகைத் தேங்காய் எண்ணெய் தேய்த்து 12 மணி நேரம் ஊறிய பிறகு காலையில் குளிக்கவும். கொசுத் தொல்லையைத் தவிர்க்க கொசு வலையைப் பயன்படுத்தவும்.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை } 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய விளையாட்டு ஆணையத்தில் விளையாட்டுப் பயிற்சியாளர் பணி: 27-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!
குழந்தைத் தொழிலாளர்களா? திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!
ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!
ரொனால்டோ இரட்டை கோல்: 5-0 கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது போர்ச்சுகல்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



