பாலகுமாரனின் ‘மெர்க்குரிப் பூக்கள்’!

ஆகப்போவது அத்தனைக்கும் பொறுப்பை ஏற்கவோ தாங்கிக் கொண்டு தாண்டிச் செல்லவோ முடியாதவர்களுக்கு புத்தியும் அறிவும் குறிப்பிட்ட எல்லையில் சைக்கிள் போல ஸ்டாண்ட் இட்டு நிறுத்தி வைக்கப் படுதலே சால உத்தமம்
பாலகுமாரனின் ‘மெர்க்குரிப் பூக்கள்’!
Published on
Updated on
2 min read

மெர்குரிப் பூக்கள் ஒவ்வொரு கதாபாத்திரமும் அதனதன் இயல்பில் அப்படி அப்படியே பதிந்து நிற்கிறது மனதில் .

சாவித்ரியும் மன்னியும் வைராக்யக்காரர்கள் போல சித்தரிக்கப் பட்டுள்ளனர். பெண்கள் பெரும்பான்மையும் இங்கு அப்படித்தானே! அவர்களிடத்தில் போலித் தனம் இல்லை வேஷம் இல்லை. இன்ன விஷயம் இப்படித் தான் அதைக் கடந்து வந்தால் ஆகப்போவது அத்தனைக்கும் பொறுப்பை ஏற்கவோ தாங்கிக் கொண்டு தாண்டிச் செல்லவோ முடியாதவர்களுக்கு புத்தியும் அறிவும் குறிப்பிட்ட எல்லையில் சைக்கிள் போல ஸ்டாண்ட் இட்டு நிறுத்தி வைக்கப் படுதலே சால உத்தமம் என்ற நிஜத்தை அறிந்தவர்களாக அவர்கள் இருப்பதில் கண்ணாடி பார்த்துக் கொள்வதைப் போலத்தான் உணர வேண்டியதாக இருக்கிறது.

சியாமளி ஆரம்பத்தில் பயமுறுத்துகிறாள். அவள் நியாயம் அவளுக்கு! அதை தவறென்று சொல்லல் ஆகுமோ!? குழந்தை கூட ரெண்டாம் பட்சம் என அவளை எண்ண வைத்தது எது? தண்டபாணி என்ன மனிதனய்யா அவன்? அட அசடே !என்ற எண்ணமே மேலோங்குகிறது. மளிகைக்கடை கல்லாப் பெட்டியில் பொங்கிக் குலுங்கும் சில்லரைகளாய் இப்படிப் பட்ட கணவர்கள் நிறைந்த தேசம் தானே நம்முடையது. மனைவியைப்புரிந்து கொண்டு அவளைக் கொண்டாடுவது என்பது கன கஷ்டமான காரியம் தான் போலும். இடம் கொடுத்தால் உச்சந்தலையில் ஏறி உட்கார்ந்து கொள்ளக் கூடும் என்று எவர் போதித்திருப்பார்கள் அவர்களுக்கு? அம்மாக்களா? அப்பாக்களா? ஆயின் அவர்களே இப்படிப் பட்ட கணவர்களுக்கு பிரதிநிதிகள். பிறகு சியாமளி அவனை நொந்து கொண்டு வெறுத்து பிரயோஜனம் என்ன?!

சியாமளி, சங்கரனுடன் பேசும் இடங்கள் எல்லாம் அவளது நியாயத்தை புத்திக்கு உரைத்தாலும் கடைசியில் அவள் சங்கரனுக்கு எதிராக முற்றாக வெறுத்து கதவடைக்கையில் எஞ்சும் நிம்மதியே பரிபூரணமாகத் தெரிகிறது. தொடர்ந்து கலவரத்துடனே படித்துக் கொண்டு கடக்கையில் இவ்விடம் ஒரு சின்ன சந்தோசம் எழுவதை தவிர்க்க இயலவில்லை. இதுவே சியாமளிக்கு நல்லது என்று ஆட்டு மந்தை சமூகத்தின் அடுத்த வாரிசாய் சொல்லிக் கொள்ள முடிகிறது.

அவள் சங்கரனுடன் ரயிலேறிப் போயிருந்தாலும் தண்டபாணி அவளது குழந்தை மற்றும் மன்னியின் உலகம் ஒன்றும் ஸ்தம்பித்து நின்றிருக்கப் போவதில்லை. அவரவர் பாடு நிகழ்ந்து கொண்டே தான் இருந்திருக்கும். ஆனால் ஊர் வாய்க்கு மெல்ல அண்டா நிறைய அவல் கிடைத்திருக்கும். சியாமளி அப்படிப் போனதற்கு மன்னியை விடுங்கள் அவளது பெண் சிலுவை சுமக்க நேர்ந்திருக்கும். இதைச் சியாமளி உணர அவளுக்கு மன்னி வேண்டியிருந்திருக்கிறாள்.

ரங்கசாமியின் அம்மா தொழிற்சாலை அடித்து நொறுக்கப்பட்ட பின்பு அவரைத் தேடிக் கொண்டு வந்து கடைசியாக பேசுகையில் கண்ணாடிக் குவளை விழுந்து நொறுங்கும் சப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது உள்ளுக்குள்ளே. நாம் எதை எதையோ நமது உடமை என்று நினைத்துக் கொண்டு ரொம்பத் தான் அதைக் கட்டி காப்பாற்றி காபந்து பண்ணிக்கொள்ள பார்க்கிறோம், விளைவுகளோ படு பூஜ்யமாய் நம்மைப் பார்த்து சிரிக்கையில் பல குற்றச்சாட்டுகளுக்கு நாம் பொறுப்பேற்க வேண்டியவர்களாய் ஆகிறோம்.

கணேசன், சாவித்ரியோடு நிறைவாய் குடும்பம் நடத்தி விட்டு எதற்காக சாகிறோம் யாரால் சாகடிக்கப் படுகிறோம் என்பதே அறியாமல் செத்துப் போகிறான். இந்தக் கதையில் பரிபூர்ணமானவனாக இவனைத் தான் எண்ண வேண்டியிருக்கிறது.

அடுத்தவன் மனைவியின் மீது காதல் கொள்ளும் சங்கரன். உணர்ச்சி மேலிடப் பேசிப் பேசியே போராட்டத்தை முடுக்கி விட்டு ஒரு வகையில் கணேசன் சாவிற்கு காரணமானவனாகிப் போன கோபாலன், மனைவியைக் கொண்டாடத் தெரியாத, அதைக்  கற்றுக் கொண்டிருக்காத தண்டபாணி .

அப்பா சேர்த்த சொத்தை மேலும் மேலும் பெருக்கிக் கொள்ளும் ஆர்வம் கூடிப் போய் கல்யாணம் குடும்பம் குழந்தைகள் என்ற பந்தத்தின் சுவை அறியக் கூட மறந்து போன ரங்கசாமி.

இவர்கள் எல்லோரும் எதனெதன் பொருட்டோ கதையில் எஞ்சி நிற்கையில் கணேசனுக்கு எல்லாம் நிறைவாய் கிடைத்த காரணத்தால் தான் அவனது வாழ்வை விதி அப்படி முடித்ததோ !?

மெர்க்குரிப் பூக்கள் முன்பே வாசித்த அனுபவம் இருப்பவர்கள் கூட மீண்டும் ஒருமுறை வாசிக்கலாம். வயது ஏற, ஏற ஒவ்வொரு நாவலும் தரும் அனுபவங்களும் மாறித்தான் போகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com