பழம்பெரும் எழுத்தாளர் தேவனின் ‘லஷ்மி கடாட்சம்’ நாவல் விமர்சனம்...

எனக்கு தேவனின் எழுத்து நடை ரொம்பப் பிடித்து போனது எதனாலோ? சிலருக்கு அதில் ஆட்சேபம் இருக்கலாம், ஆனால், எனக்கு அவரின் பிராமணத் தமிழில் ஏதோ ஒரு வசீகரம். 
பழம்பெரும் எழுத்தாளர் தேவனின் ‘லஷ்மி கடாட்சம்’ நாவல் விமர்சனம்...
Published on
Updated on
2 min read

ஒரு கல்லூரி விடுமுறை நாளில் தான் நான் பழைய எழுத்தாளர் தேவனின் "லக்ஷ்மி கடாட்சம்" நாவலை வாசித்து முடித்தேன். கல்கியின் "பொன்னியின் செல்வனை" போல மூன்று மிகப் பெரிய புத்தகங்கள் முதலில் கொஞ்சம் போர் அடித்தாலும் போகப் போக கதையின் போக்கு என்னை ஈர்த்துக் கொண்டது.

இரண்டே நாட்களில் முழு நாவலையும் முடித்து விட்டேன்.

கதை ஒன்றும் புதுமையானதில்லை... ஆனாலும் கதை சொல்லும் நேர்த்தி இருக்கிறதே அதில் இருக்கிறது ஒரு கதாசிரியரின் சாமர்த்தியம்.

எனக்கு தேவனின் எழுத்து நடை ரொம்பப் பிடித்து போனது எதனாலோ? சிலருக்கு அதில் ஆட்சேபம் இருக்கலாம், ஆனால், எனக்கு அவரின் பிராமணத் தமிழில் ஏதோ ஒரு வசீகரம். 

சரி நாவலுக்கு வருவோம்.

இந்தக் கதையின் நாயகி  ‘காந்தா மணி’

நாயகன் ‘துரை சாமி’

அந்தக்கால திரைப்படங்களில் வரும் ‘ரங்காராவ்’ போல இந்த நாவலில் ஒரு கதாபாத்திரம் உண்டு. அவர் ‘கங்காதர முதலியார்’

அப்புறம் வில்லனின் நல்ல நண்பர் ‘சிங்காரம்’

கதைச்சுருக்கம்...

காந்தாமணி தனது சிற்றன்னையின் கொடுமையிலும் நற்பண்புகளோடு வளர்ந்து வந்த ஒரு நல்ல பெண்மணி. அவளது வாழ்வைப் பாழாக்க நினைக்கும் சிற்றன்னையிடமிருந்து முன்னெப்போதோ ஒருமுறை பால்ய காலத்தில் உடன் விளையாடிய நண்பனான துரைசாமியின் மீது ஏற்பட்ட பரிவு கலந்த காதலால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு தனியே வாழத் தொடங்குகின்றனர்.

அப்போது சித்தியின் மூலம் மீண்டும் வில்லனால் காந்தாமணியின் வாழ்வில் சூறாவளி! அந்த சூறாவளியை எதிர்கொண்டு மீள்வதற்குள் காந்தாமணி, துரைசாமியின் வாழ்வில் விதி விளையாட ஆரம்பித்து அவர்களது ஒரே மகள் குழந்தை மீனாக்ஷி பிறந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் பிரிய நேரிடுகிறது.

துரைசாமி பணப் பற்றாக்குறையால் பர்மா செல்கிறான், அங்கே ‘லக்ஷ்மி கடாட்சத்தால்’ ஸ்ரீமான் கங்காதர முதலியார் எனும் பெரிய மனிதரை சந்திக்கிறான், அவரது தயவால் வாழ்கையிலும் முன்னேறுகிறான்... 

பலன் என்ன?

பணம் நிறைய சேர்த்துக் கொள்ள முடிந்தாலும் குடும்பம் இந்தியாவில் என்ன கதி ஆனது எனத்தெரியாமல் கலங்குகிறான்... இப்போதைப் போல அன்று செல்போன் வசதிகளோ... இன்டர்நெட் வசதிகளோ கிடையாதே!

ஏனென்றால் கதை நிகழும் காலகட்டம் விடுதலைக்கு முன்பு என நினைக்கிறேன். இப்படிச் செல்லும் கதையின் போக்கில் துரைசாமி பல்வேறு இன்னல்களையும் தாண்டி மறுபடி தன் குடும்பத்தை அடைந்து சந்தோஷிக்க நினைக்கும்போது மறுபடி வில்லன் வந்து தன் வேலையைக் காட்டுகிறான்.

அதனால் துரைசாமி தன் மனைவி காந்தாமணியை சந்தேகிக்கத் தொடங்குகிறான். கணவன் தன்னோடு இல்லாத காலகட்டத்தில் காந்தாமணி பல்வேறு கஷ்டங்களை அனுபவிக்கிறாள். பணத்தின் வழியாக அவளை அடைய நினைக்கும் வில்லன் அது முடியாமல் போகவே அவள் செல்லும் இடங்களுக்கெல்லாம் பின் தொடர்ந்து சென்று அவளை வாழ விடாமல் தொடர்ந்து துயரங்களுக்கு உட்படுத்துகிறான் .

எல்லாம் முடிந்து இனியாவது நல்வாழ்க்கை கிட்டும் என ஆறுதலடைய விடாமல் கடைசி முயற்சியாக காந்தாமணியின் நடத்தை பற்றி அவளது கணவனிடம் இல்லாத பொல்லாத நடக்காத விசயங்களைக் கூறி அவனை சஞ்சலத்திற்கு உட்படுத்துகிறான் வில்லன்.

துரைசாமியும் இயல்பில் நல்ல மனிதனே! இங்கே காந்தாமணி கணவன் தன்னை விட்டுப் பிரிந்த பின் வயிற்றுப் பாட்டிற்காகவும், தன் குழந்தை மீனாக்ஷியின் நலனுக்காகவும் தனக்கு இயல்பாகவே கடவுள் கிருபையால் லபித்த சாரீர வளத்தால் பாடகியாகி விடுகிறாள். நல்ல நல்ல தெய்வீக பாடல்கள் இவள் பாடி வெளிவந்தவை எல்லாம் நன்றாக விற்பனை ஆனதால் இசைத்துறையில் உச்சத்திற்குச் செல்கிறாள் காந்தாமணி.

இந்த நேரத்தில் மறுபடி ஒன்று சேர முடியாமல் வில்லன் இருவர் மனதையும் நஞ்சாக்கி விட முயல்கிறான் .இறுதியில் கங்காதர முதலியார் ,சிங்காரம் போன்ற நல்ல மனம் படைத்தவர்களின் உபாதேசத்தின் பின் தம்பதிகள் ஒன்று சேர்வதே "லக்ஷ்மி கடாட்சம் " நாவல் .

இதில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம், நாயகி காந்தாமணியை விடவும் கங்காதர முதலியார் தான்;

அவரது கொள்கை சரியோ... தவறோ? 

“பணம் பெட்டியில் நிரம்ப நிரம்ப அதை அள்ளி அள்ளி வெளியில் விட்டுவிட வேண்டும் அப்பா... அது வியாபார நிமித்தமாகவோ... பிறருக்கு உதவும் நிமித்தமாகவோ இருக்கலாம், பணம் பெட்டியில் வெறுமே பொங்கி வழிய... வழிய உள்ளே வைத்துப் பூட்டவே கூடாது. பெட்டி காலியானால் தான் திரும்பத் திரும்ப நிரம்பும்... நிரப்ப வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வரும்" 

இதுவே அவர் தன்னை அண்டி வருவோருக்கு சொல்லும் உபதேசம்.

இப்படி ஆரம்பம் முதலே நன்றாகத்தான் போகிறது நாவலின் ஓட்டம்!

உங்களுக்கும் இஷ்டமிருந்தால் ஒரு முறை வாசித்துப் பார்க்கலாம்.

நான் வாசித்தது அல்லயன்ஸ் வெளியீடு என்று நினைக்கிறேன். இதையும் என் அம்மாவின் அரசுப் பள்ளி நூலகத்தில் இருந்து பெற்று தான் வாசித்தேன்.

நாவல்: லஷ்மி கடாட்சம்
ஆசிரியர்: தேவன்
பக்கங்கள்: 872
விலை: ரூ730
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com