வதிலை பிரபாவின் ‘மரம் சுமக்கும் யானைகளின் பிளிறல்’ நூல் விமர்சனம்!

‘மகாகவி’ எனும் இதழாசிரியரும், ஓவியா பதிப்பகத்தின் பதிப்பாளருமான கவிஞர் வதிலை பிரபா.. எழுத்தாற்றல் மிக்கவர் என்பது, அவரை அறிந்த பலருக்கும் தெரியும். அவரை அறியாத சிலருக்கு அவரின் நூல்களை வாசித்தால்
வதிலை பிரபாவின் ‘மரம் சுமக்கும் யானைகளின் பிளிறல்’ நூல் விமர்சனம்!
Published on
Updated on
2 min read

நூல்: மரம் சுமக்கும் யானைகளின் பிளிறல் 
ஆசிரியர்: வதிலை பிரபா 
பக்:112 
விலை ரூ.100, 
வெளியீடு: ஓவியா பதிப்பகம், திண்டுக்கல்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகிலுள்ள போ.அணைக்கரைப்பட்டி எனும் ஊரைச் சொந்த ஊராகக் கொண்டிருந்தாலும், தான் வசித்து வரும் ஊரான திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு எனும் ஊரின் சுருக்கப் பெயரான வதிலையை தன் பெயருக்கு முன்னால் இணைத்துக் கொண்டுள்ளார். இவர், இதுவரை 300க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 250 க்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிதைகளையும், 20 க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், ஏராளமான கட்டுரைகளையும், விமர்சனங்களையும் எழுதியுள்ளார். 

இவரின் சமீபத்திய நூலான ‘மரம் சுமக்கும் யானைகளின் பிளிறல்’ கவிதைத் தொகுப்பை வாசிக்க நேர்ந்தது. திரைப்பட இயக்குநர் அகத்தியனின் அணிந்துரையோடு மிக நேர்த்தியாக வெளியாகியுள்ள இந்நூல், இயற்கை சார்ந்த ஒரு அற்புதமான படைப்பு.

உணர்ந்து எழுதப்படும் வரிகள்.. வாசகனையும் வலிகளுக்கு உள்ளாக்கும் என்பதை தெரிந்தே கவிஞர் தன் முகவுரையில் சொல்லுகிறார், நீங்கள் ஒவ்வொரு கவிதையையும் வாசித்துவிட்டுக் கடக்கும் போது உங்களோடு ஒரு யானையோ, மரமோ, நதியோ, வனமோ, குளமோ, சமுத்திரமோ கடக்கலாம் என்று. 

அப்படி எளிதாக நாம் எதையும் கடந்து சென்று விடமுடியாதபடி கவிதையின் சொற்கள் நம்மைக் கட்டிப் போடுகிறது.. பக்கத்துக்குப் பக்கம் இயற்கையின் நேசிப்பை வெளிப்படுத்தியிருக்கும் கவிஞர் உள்ளம். சில இடங்களில் யானையின் பிளிறல் போல் கவிதை வரிகளை உரக்கச் சொல்லி வாசகனுக்கு சம்மட்டி அடியும் கொடுத்திருக்கிறது. கவிதை என்பது ஒரு சங்கீத பாஷை, சங்கீத பாஷை தெரிந்தவனுக்கு காட்டுப் புயலின் ஓசைக்கு வார்த்தை கோர்க்கவும் தெரியும் என்பதை ஆங்காங்கே நிரூபித்திருக்கிறார்.

ஒரு மரத்தைப் பிடுங்கி 
பென்சில் தருகிறாய்!
அதன் கிளைகளை வீழ்த்தி
தாள்கள் தருகிறாய்!
அழகிய மரம் வரைய வேண்டும் 
என்ற உன் பேராசையை 
எப்படி நிறைவேற்றுவேன்.. 

- என்ற கவிதையில் மட்டுமல்லாமல் நூல் வீதியெங்கும் காடுகளைப் பற்றியும் மரம் செடி கொடிகள் பற்றியும் மிகுந்த கவலை கொண்டிருக்கிறார். அவன் மரத்தை தின்று கொண்டிருக்கிறான் என்ற கவிதையில் முத்தாய்ப்பாய் மறுபுறம் வனம் இவனை தின்று கொண்டிருக்கிறது என்று காடு வளர்ப்பின் அவசியத்தை உரக்கச் சொல்லுகிறார். 

நதிகளைப் பற்றியும் குளங்களைப் பற்றியும் கவிஞர் ஆங்காங்கே வர்ணித்திருக்கிறார். நீர் சொட்டச் சொட்ட அவன் நதியை வரைந்து கொண்டிருக்கிறான் என்ற ஒரு கவிதையின் நிறைவில் அவனால் வரையப் பெற்ற நதியோ அங்கில்லை
இன்னொரு முறை வரையலாம்.. 
மணல்களற்ற நதியொன்றை 
என்று சொல்லும் போது தற்கால சூழலுக்கு ஏற்ற வரிகளாகவே தோன்றுகிறது..

வனங்களையும் நீர் நிலைகளையும் பேண வேண்டிய அவசியத்தை உணர்த்தியிருக்கும் இந்நூல் காலத்தின் தேவை. வாங்கி வாசியுங்கள் வாசிப்போடு நின்று விடாமல் ஒவ்வொரு தனிமனிதனின் சமூக பொறுப்பை உணர்த்தும் இந்நூலின் படி இயற்கையை நேசிப்போம்! இனிய வாழ்வுதனைப் பெறுவோம்.

திருமலை சோமு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com