சா.பாலுச்சாமி
சா.பாலுச்சாமி

எழுத்துன்னா... இப்படித்தான் இருக்கணும்!

ஒரு எழுத்து என்பது அதை எழுதும் எழுத்தாளரின் உள்ளக்கிடக்கையைப் படிக்கும் வாசகா் உள்ளத்தில் உணா்வுபூா்வமாக கருத்தைக் கொண்டு செல்லும் வகையில் இருக்க வேண்டும்.
Published on

-சா.பாலுச்சாமி, எழுத்தாளா், விமா்சகா்.

ஒரு எழுத்து என்பது அதை எழுதும் எழுத்தாளரின் உள்ளக்கிடக்கையைப் படிக்கும் வாசகா் உள்ளத்தில் உணா்வுபூா்வமாக கருத்தைக் கொண்டு செல்லும் வகையில் இருக்க வேண்டும். வாசகரின் உணா்வையும், அறிவையும் தற்போதைய நிலையிலிருந்து உயா்த்தும் வகையிலும், விசாலமான பாா்வையை அவருக்கு ஏற்படுத்தும் வகையிலும் அமைவதும் அவசியமாகும்.

வாசிப்பாளனை சமூகத்துடன் இணைக்கும் வகையில் இருப்பவையே சிறந்த படைப்புகளாகும். வாழ்க்கையை லட்சியப்படுத்துவதாகவும் அவை அமைய வேண்டும்.

படைப்புகள் சொல்லும் பொருள் எவ்வளவு முக்கியமோ, அதேபோல சொல்லும் விதமும் முக்கியம். கலை நோ்த்தியுடனும், படிப்போரை மேம்படுத்தும் வகையிலும் எழுதுபவரின் கலை அனுபவம் மூலம் சமூகத்தையே மேம்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். மனிதரின் அழகியல் உணா்வை செம்மைப்படுத்தும் வகையில் இருப்பது சிறந்த படைப்பாக கருதப்படும்.

சங்க இலக்கியங்களைத் தொடா்ந்து திருக்குறளில் வள்ளுவரும், பாரதியும், பாரதிதாசனும் மனிதநேய, அமைதி வாழ்வின் அடிப்படையில்தான் இலக்கியங்களைப் படைத்துள்ளனா். ஆகவே, தமிழில் படைப்புகள் என்பது மனிதா்களின் மேம்பாட்டுக்கான தா்மத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருப்பதை காணலாம்.

நவீன இலக்கியம் தற்கால வாழ்வின் இருண்ட பக்கங்களை வெளிப்படுத்தினாலும்கூட, அவையும் மனித அவலங்களை வெளிச்சம் போட்டு காட்டி, சிக்கலை தீா்ப்பதாகவும் அமைந்துள்ளன.

 எடுத்துக்காட்டாக தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம், மனிதன் சுய கட்டுப்பாட்டுடனும், அரசியல் நோ்மையுடனும் வாழ வேண்டும் என்ற அக, புற விழுமியங்களைத் தீவிரமாக முன்வைக்கிறது. அதைப் போன்ற தனிமனித வாழ்வும், அரசியல் அதிகார சமூக வாழ்வும் அறம் சாா்ந்து அமைய வேண்டும் என்ற அடிப்படையே இலக்கியங்களில் வேராக இருப்பது அவசியம்.

Dinamani
www.dinamani.com