
திருவள்ளுவர் ’தேடல்’ என்னும் உத்திக்கு வழி வகுத்துள்ளார். ’நான் சொல்லும் உண்மைகளைத் தேடுங்கள்’ என்பது போலக் கூறினாலும், அதை எளிமையாக, மூலத்தைச் சில முறை படித்த அளவிலேயே விளங்க வைத்துள்ளார். ’நவில்தொறும் நூல் நயம்’ தோன்றுமென்பார் அவர்.
திருக்குறளுக்கு இரண்டு சிறப்புகள் கூறலாம். ஒன்று, ஒரே உண்மையைப் பல கோணத்தில் பார்க்க வைப்பது. மற்றொரு சிறப்பு. திருக்குறள் யாப்பு வடிவம், படித்ததும் மனதிற்குள் போய்ப் பதியும்படி இருப்பது.
குறளுக்கு கவிஞர் சிற்பி உரையைச் ’சிற்பியின் பார்வையில் குறள்’ என்று கூறிவிடலாம். பெரிதும் மரபைச் சிதைக்காது தழுவியிருந்தாலும், தம் பார்வைத் தனித்தன்மையைப் பல குறள்களில் வெளிப்படுத்துகிறார். சில இடங்கள் திருவள்ளுவர் அருகே நம்மைக் கொண்டு செல்கின்றன. வள்ளுவர் உள்ளம் இதுவெனத் தெளிவுறுத்த முயல்வது புலனாகிறது. நல்ல வேளையாக, இன்று சில ’அரைகுறைகள்’ திருக்குறளைச் சிதைப்பதையே புதுமை காண்பது என எண்ணுவதை இவர் பின்பற்றிவிடவில்லை.
பெரும்பாலும் சிற்பியின் உரை இரண்டு வரிகளில் – இரு வாக்கியங்களில் அடங்கிவிடுகிறது. தேவைப்படும்போது மட்டும் அடைப்புக்குள் சிறு விளக்கம் இடம் பெறுகிறது. தாம் ஒரு கவிஞராக இருந்து உரையெழுதுகிறோம் என்பதை இவரது மொழிநடை புலப்படுத்துமிடம் பலவுள.
எழுமை, எழுபிறப்பு என்பதை இவர் ஏழு தலைமுறை என்று கொள்கிறார். ‘ஊழ்’ பற்றிய இவரது விளக்கம் புதுமையாக மட்டுமன்றிப் பொருத்தமாகவும் படுகிறது.
’எண் குணத்தான்’ என்பதற்குத் ’தன்வயத்தனாதல் முதலான எட்டுக் குணங்கள்; முன்னே சொன்ன எட்டுக் குறள்களிலுள்ள எட்டுக் குணங்கள் எனப் பலவாறு கூறப்படும். இவர் ’எண்ணத் தகுந்த பெருங்குணங்கள்’ என எழுதுகிறார் (9). பாராளுமன்றத்திற்குப் பல வாயில்கள் இருப்பினும் சென்றடைவது ஒரே அரங்கம்தானே? ’சாலைகள் எல்லாம் ரோம் நகரை நோக்கி அழைத்துச் செல்வனவே’ எனும் ஆங்கிலப் பழமொழியும் நினைவிற்கு வருகிறது.
’வாழ்நாள் வழியடைக்கும் கல்’ எனும் குறள் சற்று இடர்பாடானது. பிறவியறுதலென்பர் பரிமேலழகரும் பிறரும். வாழ்நாளை வீழ்நாளாக்கிவிடாமல் அதன் போக்கை மாற்றி அமைக்கும் அணை எனத் திரு.வி.க.வும் பிறர் சிலரும் எழுதியுள்ளனர். சிற்பி, ’வாழும் நாளின் வழியைக் காட்டும் அடையாளக் கல்’ என எழுதுகிறார். முற்காலத்திலும் ஒரு மைல் என்பதை ஒரு கல் தொலைவு எனக் கூறிவந்துள்ளனரல்லவா?(38)
’தாய் மகனைச் சான்றோன்’ எனக் கேட்டத் தாய் என்பதற்கு ’தன் மகன் பொன்னால், பொலிவால் சிறந்தவன் எனப் பேசப்படுவதை விட, சான்றோன் எனப் புகழப்படுவதே ஒரு தாய்க்குப் பெருமகிழ்ச்சி தரும்’ என இவரெழுதுவது மரபு மாறாத புதுமை இல்லையா?(60).
’கள்வர்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளர்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு’. (290).
இது சற்றுக் கடினமாக குறள். ‘களவில் ஈடுபடுபவர் நித்தநித்தம் செத்துப் பிழைப்பர்.’ களவு கருதாதார் அனைத்து இன்ப வானுலக வாழ்வும் எளிதில் பெறுவர். (புத்தேள் உலகு என்பது ‘உடோப்பியா’ போன்றதோர் உயர்வு நவிற்சிக் கற்பனை). திருவள்ளுவர் அருகே நம்மைக் கொண்டு செலுத்தும் உரை இது. அவரது உள்ளம் உணர்ந்த விளக்கமும் இதுவே.
’இனையார் இவரெமக்கு இன்மையாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு’ (790) ’புனைதலாவது வெளிப்படப் பேசும் பூச்சுப் பேச்சு’ என்பது இவரது கவிநயவுரை.
திருவள்ளுவருக்கு ஹோமம், வேள்வி இவற்றில் நம்பிக்கையில்லை. ’அவிசொரிந்து ஆயிரம் வேட்டலை’ அவர் ஒப்பவில்லை. அவர் காலமோ, தமிழ் மன்னர்கள் வேள்வி ஆசையில் மூழ்கிக் கிடந்த காலம். வடக்கே இவ்’வைதிகத்தை’ எதிர்த்த புத்த பெருமான், தோளில் ஆட்டுக்குட்டியைப் போட்டுக்கொண்டு வேள்விச்சாலைகளில் புகுந்து, வேள்வியில் உயிர்க் கொலையைத் தடுத்து, நேரடி அறப் போராட்டமே செய்தார்.
’பரிந்தோம்பிப் பற்றற்றோம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.’ (88)
’அடுப்பு நெருப்பேற்றி விருந்தோம்புதலே உண்மையான வேள்வி. அதைச் செய்ய முடியாதவர்கள் தாம் பற்றறுத்துவிட்டோம் என்று யாக நெருப்பைப் பற்றவைத்துத் துன்புறுவார்கள்.
கண்காணாதவர்களுக்கு அனுப்புவதை விடக் கண்கண்ட விருந்தினர்களுக்கு ’வேள்வி’ செய்க என்னுமிதில் நகையாடல் கலந்த அங்கதமும் இருப்பதை, உரைவீச்சு உணர்த்துகிறது.
சிற்பியின் திருக்குறள் உரை, திருக்குறளுக்கான உரைக் களஞ்சியத்திற்கு மேலும் ஒரு புது வரவு என்பதைப் பல இடங்கள் மெய்ப்பிக்கின்றன. நம் வாழ்க்கையில் வைத்து, உரைத்துப் பார்க்க வழிகாட்டும் உரைகளில் இதுவும் ஒன்று எனில் மிகையாகாது.
(தினமணி கதிரில் 30.12.2001 அன்று வெளியானது)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.