'வந்தார்கள் வென்றார்கள்': சரித்திரம்கூட இனிக்கிறது! - பாரதி பாஸ்கர்

மதன் எழுதிய ’வந்தார்கள் வென்றார்கள்’ மொகலாய அரசர்களைப் பற்றிய ஒரு கட்டுரைத் தொகுப்பு. மதனின் எழுத்துப் பாணி அவரின் கார்ட்டூன்களை ஒத்தது. நேரடியாக விஷயத்தைச் சொல்லும் பாணி அது.
வந்தார்கள் வென்றார்கள் / பாரதி பாஸ்கர்
வந்தார்கள் வென்றார்கள் / பாரதி பாஸ்கர்

எழுத்து என்றாலே என்னைப் பொறுத்தவரை சிறுகதை என்ற வடிவம் மட்டுமே வசீகரித்துள்ளது. செகாவின் பிரசித்தி பெற்ற சிறுகதைகளில் தொடங்கி, சிறுகதை என்கிற சொர்க்கத்தின் ஆச்சரிய அறைகளைத் திறந்து காட்டிய ஜெயகாந்தனின் ‘அக்னிப்பிரவேசம்’ ஈறாக, ஜானகிராமனின் ‘பரதேசி வந்தான்’-இல் தொடங்கிப் பாலகுமாரனின் ‘கொட்டாலும் ஆண்மக்கள்’ வரை, புதுமைப்பித்தனின் ’சாபவிமோசன’த்தில் ஆரம்பித்து சுஜாதாவின் ‘நகரம்’ வரை வாழ்க்கையை, மனிதர்களை நான் அறிந்ததும் சிறுகதைகளில்தான். என் வாழ்க்கையின் முழுமையான நிமிடங்களாக நான் நினைப்பதும் இந்தச் சிறுகதைகளில் முழுகிப்போன நிமிடங்களைத்தான்.

இப்படி வெறிபிடித்த சிறுகதை ரசிகையான எனக்கு கட்டுரை… அதுவும் வரலாற்றுக் கட்டுரை ஒன்றைப் படிக்கும் வாய்ப்பு வந்தது. மதன் எழுதிய ’வந்தார்கள் வென்றார்கள்’ மொகலாய அரசர்களைப் பற்றிய ஒரு கட்டுரைத் தொகுப்பு. மதனின் எழுத்துப் பாணி அவரின் கார்ட்டூன்களை ஒத்தது. நேரடியாக விஷயத்தைச் சொல்லும் பாணி அது.

‘’அவர்கள் வந்தார்கள். குதிரைகள் கனைத்தன. வாட்கள் மின்னின’’ என்றே சரித்திரக் கதைகளையும் ‘அசோகர் மரம் நட்டார்; சாலைகளை அமைத்தார்’ என்று பாடங்களையும் படித்துப் புளித்த நமக்கு சரித்திரம்கூடத் திருப்பங்கள் நிறைந்த சிறுகதை போல இனிக்கிறது மதனின் கைவண்ணத்தில். ‘சரித்திரத் தேர்ச்சி கொள்’ என்றான் பாரதி. வரலாற்றை இவ்வளவு சுவாரஸ்யமாகச் சொல்லும் ஆசிரியர்கள் கிடைத்தால்தான் இந்தத் தேர்ச்சி சாத்தியம். சரித்திரம் என்பதற்காக நீண்ட நீண்ட வாக்கியங்கள் கிடையாது. பதினேழு முறை இந்தியாவுக்குத் தொடர்ந்து படையெடுத்துப் பெரும் செல்வத்தைக் கொள்ளையடுத்துச் சென்ற சுல்தான் கஜினியில் ஆரம்பித்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் நாடு கடத்தப்பட்ட கடைசி மொகலாய மன்னர் பகதூர்ஷா வரை நிகழ்ந்த சம்பவங்களை, வாழ்ந்த மன்னர்களை விளக்கும் இந்தப் புத்தகம் தமிழ்ப் புத்தக வரிசையில் ஒரு மைல் கல்தான்.

சில பத்திகளைப் பார்ப்போம்:

‘’45 வருஷங்கள் ஆட்சி செய்த பின்பும் அக்பர் ஆரோக்கியமாக இருக்கவே, மகன் சலீமிற்கு (ஜஹாங்கீர்) ஒரு சுய பச்சாதாபமே வந்துவிட்டது. ஜோதிடர்களை அழைத்து, ‘பாதுஷாவை அவதாரம் என்று சொல்லுகிறார்களே. அப்பா இறக்கவே மாட்டாரா’ என்று விசாரித்ததாகக் கேள்வி’’ என்று மதன் எழுதும்போது நிகழ்காலத்தின் பாதையில் 1,000 வருஷங்களுக்கு முந்தைய சரித்திரம் கூட அண்மையாகத் தோன்றுகிறது. (எல்லாக் காலத்திலும் திறமையான தலைவர்களுக்குத் தலைவலி பிள்ளைகளால்தான் என்றும் தோன்றுகிறது.)

‘’1546-இல் ஆண்ட ஷெர்ஷா மன்னர் வங்கத்தையும் பஞ்சாபையும் இணைத்து 2,000 மைல்களுக்கு மேல் நீளமான சாலையை அமைத்தார். ‘அதைத் தான் இன்றும் நாம் பயன்படுத்துகிறோம்’’ என்று மதன் எழுதியதைப் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்கிறோம். நம் பேட்டைகளில் நேற்று பெய்த மழையில் முந்தாநள் போட்ட ரோடுகள் காணாமல் போகிற அதிசயம் ஷெர்ஷாவிற்கு தெரியுமோ என்னவோ.

ஒளரங்கசீப் கொடுங்கோலராய் இருந்தாலும் அவர் உயில் என்ன தெரியுமா? ‘’என் கைகளால் தைக்கப்பட்ட குல்லாய்களை விற்ற பணம் நூறு ரூபாய்  இரண்டு அணாக்கள் தலையணைக்கடியில் இருக்கிறது. உடலைப் போர்த்தும் துணி வாங்க அதைப் பயன்படுத்துங்கள். இந்த நாடோடியின் கல்லறை எளிமையானதாக இருக்க வேண்டும். அழகோ, ஆடம்பரமோ கூடாது. ஊர்வலம், இசை எதுவும் தேவையில்லை.’’

இன்று வார்டு கவுன்சிலர்கள் கூட பதவியில் இருக்கும்போது செய்துகொள்ளும் வசதிகளை ஒளரங்கசீப்பின் உயிலோடு சேர்த்து நினைத்துப் பார்த்தால் கொஞ்சம் மலைப்பாகத்தான் இருக்கிறது.

இறுதி மன்னர் பகதூர்ஷா தனது மாளிகையைக் கூட்டிப் பெருக்கக் கூட ஆளில்லாமல் வறுமையில் உழன்றார். உள்ளே வந்து கால் பதித்துவிட்ட ஆங்கிலேய ஆட்சி, 1858-இல் குற்றவாளி என்று தீர்ப்புச் சொல்லி அவரை ரங்கூனுக்கு நாடு கடத்தியது. பர்மாவை நோக்கிப் போன கப்பலில் கண்ணீருடன் பகதூர் ஷா கவிதை எழுதினார். ‘நான் நேசித்த எல்லாமே எங்கே போனது. இது இலையுதிர்க்காலம் இழந்தது. பூந்தோட்டம் தன் அழகையெல்லாம். நான் இன்று மின்னிய பழம்பெருமையின் மிஞ்சிய வெறும் நினைவு.

இது பகதூர்ஷாவின் கவிதையா அல்லது வாழ்க்கைச் சாபமான முதுமை பற்றிய மானுடப் புலம்பலா?’

‘வரலாற்றை மறந்தவர்கள் அதையே திரும்ப வாழச் சபிக்கப்பட்டவர்கள்’ என்று ஒரு பொன்மொழி உண்டு.

அரசியல், சூழ்ச்சி, துரோகம், கொடுங்கோல், தலைமைத் தகுதி, பாசம், கொலை எல்லாம் நிறைந்த இந்த 500 ஆண்டுகால வரலாறு ஒவ்வொரு விதத்திலும் இன்றைய அரசியலையும் ஞாபகப்படுத்துவதுதான் விந்தை. ஒருவேளை சரித்திரத்தைச் சரியாக அறியாமல், போன குற்றத்தினால் தானோ அதையே நாம் திரும்பத் திரும்ப வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

படித்து முடித்ததும் மகனுக்காக உயிர் கொடுத்த பாபரும், ஹிந்து – முஸ்லிம் உறவுக்காக 50 ஆண்டு உழைத்த அக்பரும், ஒரே நாளில் தில்லி மக்கள் 2 லட்சம் பேரைக் கொன்ற நாதிர்ஷாவும், கண்ணீரோடு கப்பலில் போன பகதூர் ஷாவும் நம் நினைவில் நீங்காது பதிகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com