
புரசைவாக்கம் வெள்ளாளர் தெரு 119-ஆம் நம்பர் வீடு அந்த நாளில் மிகவும் பிரபலம். (நம்பர் -10, டெளனிங் ஸ்டீரீட் மாதிரி) வாசல்பக்க போர்ஷனில் எழுத்தாளர் ஜ.ரா.சுந்தரேசன். பிரம்மச்சாரிக் கதாசிரியர். நான் நாலாம் கிளாஸ் படிக்கும் மாணவி.
நிறையக் குழந்தைகள் கதைப் புத்தகங்களும், வார இதழ்களும் அவரிடமிருந்து தான் ‘சுட்டு’க் கொண்டு வந்து, ரகசியமாய்ப் படிப்போம். தவிர என் தாத்தா ஆர்.பாலசுப்பிரமணியம் அந்த நாளைய நடிகராதலால் அவர் படப்பிடிப்பிற்காக வீட்டில் மனப்பாடம் பண்ண எடுத்து வரும் வசனங்களையும் படிப்பேன்.
என் தமிழ் இப்படித்தான் வளர்ந்தது. எனது ஒன்பது வயதில் தாத்தா புதுவீடு கட்டி, கிரகப்பிரவேசம் செய்ய, பணக்கார மனிதர்களுக்கே உரிய தோரணையுடன் வீட்டில் சமையலுக்கு மாமி…. வேலைக்காரி… அவள் மகள்… அவளது கணவனே ரிக்ஷா ஓட்டும் வேலையையும் கவனித்துக் கொண்டிருந்தார். (கார் கிடையாது).
சமையற்கார மாமி பெயர் சுப்பு. கிராமத்துப் பெண்மணி. தமிழ் எழுதவோ, படிக்கவோ தெரியாது.
புத்தகங்களைப் படித்துச் சொல்லச் சொல்லி மனசுக்குள் கதைகளை வாங்கிப் பழகியவள். அப்போதே கல்கியும், தேவனும், தி.ஜானகிராமனும், நா.பார்த்தசாரதியும் மாமிக்குப் பாடம்.
ஆனாலும் இன்னமும், இன்னமும் வாசிக்கச் சொல்லிக் கேட்பதே ஒரு சுகமாய்….
அப்படித்தான் சுப்பு மாமிக்காகக் கல்கியின் பொன்னியின் செல்வன் படிக்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில், அதாவது நான் பிறக்கும் முன்பே ஓவியர் சந்திராவின் எழில்மிகு சித்திரங்களுடன் வெளிவந்த ‘பொன்னியின் செல்வன்’, அதற்குப் பிறகு ஓவியர் மணியத்தின் அற்புதமான படங்களுடன் வெளிவந்துகொண்டிருந்தது.
எனக்குப் பொன்னியின் செல்வன் படித்துப் புரிந்து கொள்கிற அளவுக்கு வயசில்லை. எப்படி சுப்பு மாமியின் அகத்துக்காரர் அனுப்பும் கடிதங்களை மாமிக்குப் படித்துச் சொல்வேனோ அதே மனோபாவத்தில்தான் கல்கியின் அற்புதமான இந்தக் காவியத்தையும் படித்துச் சொன்னேன். கண் தெரியாதவர்களுக்கு ஒரு வாசிப்பாளர் எப்படி வாசித்துச் சொல்வாரோ அது போல.
ஆனால் எனது ஒன்பதாவது வயதில் ஒருநாள் பகல் உணவுக்குப் பிறகு பள்ளிக்கூடத்தில் மிச்சமிருந்த நேரத்தில் பள்ளி மைதானத்தைச் சுற்றி வந்தபோது என் கால்பூட்ஸ் ஒலி, குதிரையின் குளம்புச் சத்தமாகவும், நான் அக்குதிரையில் கம்பீரமாய் பவனி வரும் வந்தியத்தேவனாகவும் ஒரு க்ஷணத்தில் மாறினேன். அந்த நினைப்பு மிகவும் சுகமாக இருந்தது. மனசுக்குத் தெம்பாகவும் உற்சாகமாகவும் இருந்தது. நாடு, நகரங்களையெல்லாம் பார்த்தபடி, குதிரையில் வலம்வரும் வந்தியத்தேவனும், தஞ்சை நெடுஞ்சாலையின் விஸ்தீரணமும், நந்தினியும், வானதியும், ஆவ்ழார்க்கடியானும் படுவேகமாக எனக்குள் உருப் பெற்று வர, நான் பள்ளிக்கூடத்து மர மாடிப் படிக்கட்டுகளில் குளம்போசை கேட்க (பூட்ஸ் கால்தான், வேறென்ன…) ஏறி இறங்கி மெய்மறந்து வகுப்பறையின் வாசலில் போய் நின்றபோது ஆங்கில வகுப்பு முடிந்து, கணக்கு வகுப்பு ஆரம்பமாகியிருந்தது!.
பொன்னியின் செல்வன் சரித்திரக் கதை இலக்கணத்திற்கே ஒரு புதுப்பாணி. சாதாரணமாய்க் கி.மு., கி.பி., இத்தனாவது வருடம், இத்தனாவது தலைமுறை என்றெல்லாம் கொஞ்சம் வறட்டுத்தனமாக இருக்கிற, படிக்கும்போதே மனதைச் சோர்வுறச் செய்கிற கதைகளிலிருந்து இது மிக மிக வித்தியாசம்.
ரொம்பவும் எளிமையான எழுத்து நடை. பத்து வயது பெண்ணானபோது நான், எனது ஆர்வத்திற்காகவே ‘பொன்னியின் செல்வ’னை இரண்டு முறை படித்துவிட்டேன். தெளிந்த நீரோடை போன்ற கதைப்போக்கு, ஏகப்பட்ட கதாப்பாத்திரங்கள்….. இருந்தாலும், எங்கேயும் குழப்பமே இல்லை. காதல்; நாட்டுப்பற்று, வர்ணனை, ராஜதந்திரம், மெலிதான நகைச் சுவை, நடுநடுவே கல்கிக்கே உரிய சின்னச் சின்ன முத்திரைகள்.
ஒன்பது வயதிலிருந்து ஆரம்பித்து இத்தனை வருடங்களில் குறைந்த நூறு முறையாவது ’பொன்னியின் செல்வ’னைப் படித்திருப்பேன். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் அப்பொழுதுதான் படிப்பது போலப் புதுசாய்த் தோன்றும். சில நாள்களில் நான் எழுதுவதைக் கூட மறந்து சாப்பாடு தூக்கத்தைத் துறந்து இதிலேயே ஒன்றியிருந்ததும் உண்டு.
ஓவியர்கள் சந்திரா, மணியம், மணியம் செல்வன், பத்மவாசன்… இப்படி அந்தந்தத் தலைமுறை ஓவியர்களும் ’பொன்னியின் செல்வ’னுக்குப் போட்டி போட்டுக்கொண்டு வரையும் ஓவியங்களைப் பார்ப்பதும் கூட ஒரு சுகம்.
என்னதான் சொல்லுங்கள்… இதைப் படித்தவர்களுக்குத்தான் என் உணர்ச்சிகள் தெரியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.