

விஞ்ஞானி ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் சுயசரிதையான ‘அக்னிச் சிறகுகள்’ புத்தகத்தைச் சமீபத்தில் படித்தேன். இந்த நாட்டின் ஒவ்வொரு மாணவனும் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
ராமேஸ்வரம் பகுதியில் மசூதித் தெருவில் பிறந்து, வானத்தில் வேலி கட்டிய ஒரு தனி மனிதனின் வெற்றி தோல்விகளை மட்டும் இப்புத்தகம் சொல்லவில்லை. நவீன இந்தியாவினுடைய விஞ்ஞானக் கட்டமைப்பின் ஏற்ற இறக்கங்களும், தொழில்நுட்ப முன்னணியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியும், அதன் போராட்டமும் நம் கண் முன்னே விரிகிறது.
இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஏவுகலம், எஸ்.எல்.வி. -3 திட்டம், அக்னி திட்டம் இவற்றில் கலாமின் அனுபவம், உழைப்பு, ஈடுபாடு, வெறித்தனமான உழைப்பு இவற்றை உணர முடிகிறது.
விண்வெளி, பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி, அணுசக்தி என்ற மூன்று விஞ்ஞான அமைப்புகளிலும் பணியாற்றி தோல்விகளின்போது துவண்ட உள்ளம். மறுபடியும் மலர்ந்த நேர்த்தி… புத்தகம் முழுவதும்.
சுய சிந்தனை ஆற்றலும், தன்னம்பிக்கையும் இவரது சாதனையின் ஆணிவேர்கள். வேலையில் ஒரு பரவசம், ஈர்ப்பு, தன்முனைப்பு, லட்சியம், தேசிய வேட்கை, ஒரு தேடல் இவரிடம் இருந்ததால்தான் ‘வானம் நம் வசப்பட்டது’.
இவருக்கு மெய்ஞானமும், விஞ்ஞானமும் ஒன்றாகப்பட்டது. புத்தகம் முழுமையும் பூந்தூறலாய் இவரின் அறிவுரைகள். இறையாண்மையை வலியுறுத்தும் வாசகங்கள்.
வெற்றிகரமான சாதனைக்கு நான்கு அடிப்படை அம்சங்கள் அவசியம் என்று கூறுகிறார். இலக்கு நிர்ணயம், ஆக்கப்பூர்வமான சிந்தனை, கற்பனைக் கண்ணோட்டம் மற்றும் நம்பிக்கையே அவை.
கலாமின் கடும் உழைப்பும், நம்பிக்கையும் பல சமயங்களில் வியர்த்தனமானதைப் படிக்குபோது அவருடைய நொறுங்கிப்போன உள்ளத்தையும், வேதனையையும் படித்து நாமும் வேதனைப்படுகிறோம்.
இந்த தேசத்தின் மீது அவர் கொண்டுள்ள பக்திக்கும், நேசத்திற்கும் ஏது எல்லை?. தொழில்நுட்ப நிர்வாகத்தில் இவ்வளவு சிக்கல்களா? உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களுக்கு எவ்வளவு பிரச்னைகள் என்றும் புரிகிறது. இவரது நிர்வாகக் கண்ணோட்டம் முரண்பாடில்லாதது.
’’ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கும் கூட்டுத் திட்டங்கள், எல்லாவித சக்திகளையும் ஒன்று திரட்டிக் கொள்வது, மனிதர்கள், ஆதாரங்கள், கால அட்டவணைகள், செலவினங்கள் முதலியவற்றையெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புப்படுத்திக்கொள்வது’’ இது கலாமின் தலைமை.
புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் நமக்கு காற்றின் வேகம், செயல்திறன், விமானக் கட்டமைப்பின் வடிவமைப்பு, இடையூறுகள்…. போன்ற பல விஷயங்கள் மனதில் பதிகின்றன.
பத்தடி அகலமும், பன்னிரண்டடி நீளமும் கொண்ட அறையில்தான் இவரது வாசம். நம் தாயகத்தின் பெருமை, நம் பாதுகாப்பு, நம் பெட்டகம் தனக்கென்று ஒரு குடும்பத்தை ஏற்படுத்திக்கொள்ளவில்லை. எதையும் சம்பாதிக்காத இவர், கோடானுகோடி இந்திய மக்களின் மரியாதையையும், அன்பையும் சம்பாதித்துள்ளார். இந்திய விண்வெளி வரலாற்றில் தனக்கென ஒரு தனி இடத்தையே சம்பாதித்துக் கொண்டுள்ளார். கோடானுகோடி இந்திய மனங்களில் கோயில் கொண்டுள்ளார்.
இவருக்கு இன்னொரு இலக்கிய முகம் உண்டு. அந்த முகத்தின் வனப்பையும் பல இடங்களில் நம்மால் தரிசிக்க முடிகிறது. இந்திய அறிவியலின் மேன்மைக் கதையை, சோதனைகளின் சாதனைக் கதையை, உழைப்பையே உணவாகக் கொண்ட உத்தமரின் கதையை இந்திய இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டும். எம்.ஐ.டி. உருவாக்கிய அப்துல் கலாமைப்போலப் பல கலாம்கள் உருவாக்கப்பட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.