'வால்காவிலிருந்து கங்கை வரை': மலைக்க வைக்கும் அறிவுப் பெட்டகம்! -அகிலன் கண்ணன்

அறிஞர் அண்ணா அவர்களின் பல கூட்டங்களில் ராகுல்ஜியின் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’, நூல் பற்றிப் பேசிய செய்திகளைப் படிக்க நேர்ந்தது.
வால்காவிலிருந்து கங்கை வரை / அகிலன் கண்ணன்
வால்காவிலிருந்து கங்கை வரை / அகிலன் கண்ணன்

என் தந்தை அமரர் அகிலனின் நூலகத்தில் பற்பல துறைப் புத்தகங்கள் ‘என்னை எடுத்துப் படி’ எனத் தூண்டும். பள்ளியிறுதி நாள்களில் நான் எடுத்துப் படித்த முழுப் புத்தகங்கள் பாரதியார் கவிதைகள், காந்தியின் சத்தியசோதனை போன்றவை.

இவற்றிடையே ‘அன்பு நண்பர் அகிலனுக்கு வாழ்த்துகளுடன் கண.முத்தையா’ என்று கம்பீரமான எழுத்துக்களில் முன்பக்கத்தில் எழுதப்பட்டிருந்த ராகுல்ஜியின் ’பொதுவுடமைதான் என்ன?’ நூலைப் படித்தேன். இச்சமயத்தில் வீட்டருகே குடியிருந்த நண்பர்(ன்) பாலகுமாரன் ’ஜீன் பால் சாத்ரே’யை அறிமுகப்படுத்தினார். அறிஞர் அண்ணா அவர்களின் பல கூட்டங்களில் ராகுல்ஜியின் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’, நூல் பற்றிப் பேசிய செய்திகளைப் படிக்க நேர்ந்தது. படித்தவர்கள் எல்லாம் அந்த நூலைப் பற்றிப் பேசக் கேட்டதும் ’பொதுவுடமைதான் என்ன’ நூலும், என்னை ’வால்காவிலிருந்து கங்கை வரை’ நூலைப் படிக்கத் தூண்டின.

அன்றிலிருந்து இன்று வரை அந்த நூல் எனக்குள் ஏற்படுத்திய தாகம் மிகச் சிறந்த அனுபவமாகும். மனித சமுதாய நாகரீக வளர்ச்சியைத் தெரிந்துகொள்ளவும் உலக அரசியல் சரித்திரத்தின் பின் புலனைப் புரிந்துகொள்ளவும் பார்வையை விசாலப்படுத்தவும் அந்த நூல் தந்துள்ள அறிவுப் பகிர்தலும் ஆதாரப் பூர்வமான நிலை நிறுத்தல்களும் என்னை பிரமிக்க வைத்தன.

சமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சி, நாகரீகம் முதலியன பற்றிச் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் 20 கதைகளாக எழுதியுள்ளார் ராகுல்ஜி. சரித்திரம் சலிப்பை ஏற்படுத்தும் எனும் பொதுவிதியைத் தகர்க்கக் கதை வடிவில் அதைத் தந்துள்ளார்.

காலங்காலமாக மக்களின் மனவெளிப்பாட்டை, செயல் வடிவங்களை மருளச்செய்யும் உண்மைகளை அப்படியே நிதரிசனமாகச் சொல்லும் கதைகள் இவை.

நிஷா, திவா, அமிர்தாஸ்வன், புருகூதன், புருதானன், அங்கிரா, சுதாஸ், பிரவாஹன், பந்துலமல்லன், நாகதத்தன், பிரபா, சுபர்ணயெளதேயன், துர்முகன், சக்ரபாணி, பாபா நூர்தீன், சுரையா, ரேக்கா பகத், மங்கள சிங், சபதர், சுமேர் என்று கதை மாந்தர் வடிவில் சரித்திரத்தைச் சுவைபடக் கூறுகிறார். காந்தி வரை வருகிறார்.

பந்துலமல்லன், மக்கள் விருப்பத்தை, வெறுப்பை உணர்ந்து இந்தச் சமயத்தில் நான் தேவையில்லை. ’’குசீனாராவுக்குப் பந்துலனின் சேவை தேவையாயிருக்கும்போது அவன் எங்கிருந்தாலும் சரி… உடனே இங்கு வந்துவிடுவான்’’ என்று தான் வளர்ந்த பூமியை விட்டுப் பயணமாவதைப் படிக்கும்போது தலைமையின் தலைமைப் பண்பை உணர்கிறோம். அங்கங்கே தற்போது கால நிகழ்வுகள் பற்றிய ராகுல்ஜியின் விமர்சனங்கள் மின்னல் கீற்றுகளாகவும் பளிச்சிடும். இப்புத்தகத்தில் அன்றைய அரசியல், சரித்திரம் ஆதாரங்களுடன் படம்பிடித்துக் காட்டப்படுகின்றன.

’36 மொழிகள் தெரிந்த அறிஞர் ராகுல்ஜி, 150 நூல்களை எழுதியவர். அவரது இந்த நூலைத் தமிழில் மொழிபெயர்த்துப் பதிப்பித்தவர் அமரர் கண.முத்தையா.

‘உலகத்தில் எத்தைனையோ பாஷைகளில் உள்ள தர்க்க ரீதியிலான மொழியாராய்ச்சி, மண், கல், தாமிரம், பித்தளை, இரும்பு, இவைகளிலே எழுதப்பெற்றும் செதுக்கப்பெற்றும் உள்ள சரித்திரம், இலக்கியங்கள், எழுத்து வடிவம் பெறாத பாடல்கள், கதைகள், பலநாட்டின் பல பழக்க வழக்கங்கள், புதைபொருள்கள் இவைகளில் இருந்ததெல்லாம் ஆதாரங்கள் தேடப்பட்டு’ இந்த நூலை எழுதியுள்ளார் ராகுல சாங்கிருத்தியாயன்.

திருமழிசையில் தங்கித் தமிழ் கற்ற இவர் இம்மொழி பெயர்ப்பைத் தமிழிலேயே படித்து அங்கீகரித்துள்ளார்.

ராகுல்ஜி இந்த மக்களை இம்மக்களின் மேம்பாட்டை எவ்வளவு நேசித்திருந்தால், இந்த அறிவுப் பெட்டகத்தை நமக்குத் தந்திருப்பார் என மலைக்க வைக்கும் புத்தகம் இது. 1949 முதல் இன்று வரை 23 பதிப்புகள் கண்டுள்ள அரிய நூல் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’, இந்தியாவில் ராகுல்ஜியின் பெயர் புழங்கும்வரையில் தமிழகத்தில் அவரது வால்காவிலிருந்துகங்கை வரை நூலும் அதை மொழிபெயர்த்துப் பதிப்பித்த தமிழ்ப்புத்தகாலய நிறுவனர் கண.முத்தையாவின் நினைவும் போற்றப்படும் இதே நூல்கள் சில ஆதிக்க சக்திகளால் அண்மையில் தெருவில் வீசி எறியப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு போற்றுதலுமே இந்த நூலில்  உண்மைக்குச் சான்று.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com